Showing posts with label Thinam oru thagaval / இன்று ஒரு தகவல். Show all posts
Showing posts with label Thinam oru thagaval / இன்று ஒரு தகவல். Show all posts

Sunday, January 16, 2022

கல்யானைக்கு கரும்பு தந்த லீலை - ஒரு விழா

 மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல்யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.


மதுரையை தலைநகராகக் கொண்டு அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.


ஒரு பொங்கல் திருநாள் அன்று அமைச்சர்கள், படைவீரர்கள் புடைசூழ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தான் அபிஷேகப் பாண்டியன். கோவிலுக்கு மன்னர் வருவதைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கினர்; ஒருவரைத் தவிர. அதைக் கண்டு மன்னனுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது.


அதற்குள் பணியாள் ஒருவன், ‘மன்னா! இவர் ஒரு சித்தர். சித்து வேலைகள் பலவற்றை நிகழ்த்தி இருக்கிறாராம்’ என்றான்.


தன்னை அலட்சியப்படுத்தியவர் ஒரு சித்தர் என்று அறிந்ததும், அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தான் மன்னன். ஆனால் சித்தர் என்று அடையாளம் காட்டப்பட்டவரிடம் இருந்து மன்னனுக்கு பதில் மரியாதை கிடைக்கவில்லை. இருப்பினும் மன்னனே அந்த சித்தரிடம் பேசினான். ‘தாங்கள் அற்புதங்கள் நிகழ்த்துவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். முதியவரை இளைஞராகவும், இளைஞரை முதியவராகவும், பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் மாற்றுகிறீர்களாமே.. ஊமையை பேச வைக்கிறீர்கள், குருடர்களை பார்க்க வைக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன்! அது உண்மைதானா?’ என்று கேட்டான்.


‘எல்லாம் உண்மையே! எனக்கு எல்லாக் கலைகளும் தெரியும்’ என்றார் அந்த சித்தர்.


இருந்தாலும், மன்னனுக்கு அந்த சித்தரின் அற்புதங்கள் மீது நம்பிக்கை வரவில்லை. அவரை சோதிக்க நினைத்தான்.


‘சரி சித்தரே! உங்கள் அற்புதத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். உங்களால் இப்போது அதை செய்து காண்பிக்க முடியுமா?’ என்றான்.


மன்னன், தன்னையே சோதிக்க நினைப்பதை எண்ணி அவருக்கு கோபம் வந்தது. ‘என்ன... என்னையே சோதிக்கிறாயா?’ என்றார்.


‘ஆமாம்.. அதில் என்ன தவறு இருக்கிறது? நான் உங்கள் அற்புதத்தை நேரில் பார்த்தால் தானே உண்மையை உணர முடியும்’ என்ற மன்னனிடம் ‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றார் அந்த சித்தர்.


‘இந்த கல்லால் ஆன யானை சிலை, கரும்பை உண்ணும்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் கேட்டதை எல்லாம் தருகிறேன்’ என்று, அருகில் இருந்த யானை சிலையை காண்பித்தான். தன் கையில் ஒரு கரும்பையும் எடுத்துக்கொண்டான்.


சித்தர், அந்த யானைச் சிலையை கூர்ந்துப் பார்த்தார். அடுத்த நொடியே அந்த கல் யானை உயிர் பெற்று முன்னோக்கி நடந்து வர ஆரம்பித்தது. அதைப் பார்த்த எல்லோரும் திகைத்துப் போய் நின்றனர். அரசன் அருகில் வந்த அந்த யானை, அவன் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது.


இன்னொரு முறை அந்த யானையை பார்த்தார் சித்தர். உடனே அது, அரசன் கழுத்தில் கிடந்த மாலையை தனது துதிக்கையால் பறித்தது. அரசன் திடுக்கிட்டுப் போனான். மன்னனின் படைவீரர்கள் சிலர் கோபத்தில் சித்தர் மீது பாய வர, அவர்களை நோக்கி கை காண்பித்தார் அவர். அடுத்த நொடியே அவர்கள் அனைவரும் சிலை ஆனார்கள்.


அதன்பிறகு தான், அந்த சித்தர் மாபெரும் மகான் என்று உணர்ந்து கொண்டான் மன்னன். தன்னை மன்னிக்குமாறு அவரது காலில் விழுந்து வேண்டினான்.


அவனை மன்னித்த சித்தர், ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள்?’ என்றார்.


மன்னனும், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைக் கூறி, மழலைச் செல்வத்தைக் கேட்டான். சித்தர், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று அருள்பாலித்தார். அக்கணமே சித்தர் மாயமானார். உயிர்ப்பெற்று வந்த கல் யானை மீண்டும் கற்சிலையாக மாறியது. சிலையாக மாறிய வீரர்கள் உயிர்ப்பெற்றனர்.


அதன் பின்னர் தான், சித்தர் வடிவில் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான், மன்னன். அடுத்த ஒரு வருடத்தில் சொக்கநாதர் அருளியபடியே, அபிஷேக பாண்டியனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தான் விக்கிரம பாண்டியன்.


இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த அற்புதத்தின் படி கரும்பு தின்றதாக கூறப்படும் கல் யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுவாமி சன்னிதிக்கு இடப்புறத்தில் இன்றும் நாம் பார்க்கலாம்.

ஓமிக்ரான்

 ஓமிக்ரான்....எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் 

நாள் 1: லேசான உடல் வலியுடன் லேசான அசௌகரியம், சற்று பலவீனமாக உணர்வீர்கள், ஆனா எப்பவும் போல வேலை செய்வீங்க (பலருக்கும் பரப்புவீங்க) 

நாள் 2: மிகவும் லேசான காய்ச்சல் 4 முதல் 6 மணி நேரத்திற்கு தோன்றும், வறட்டு இருமல் தொடங்கும்

நாள் 3: லேசான காய்ச்சல் வந்தாச்சு , நீங்கள் ஒண்ணோ ரெண்டோ  டோலோ எடுக்கத் தொடங்குங்கள்.. வறட்டு இருமல் அதிகமாகும் 

நாள் 4: காய்ச்சல் வந்தாச்சு உங்கள் நோயெதிர்ப்பு பொறுத்து, நீங்கள் ஒவ்வொரு 4 மணி முதல் 6 மணிநேரம் வரை டோலோவை எடுத்துக்கொள்ள வேண்டும். இருமல் மருந்து சாப்பிடலாம் சிலர் ஆன்டிபயாடிக் சளிக்கு சாப்பிடலாம் 

நாள் 5: காய்ச்சல் கிட்டத்தட்ட போய்விட்டது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

நாள் 6: இங்கிருந்து, நீங்கள் வறண்ட இருமலுடன், மார்பு சளியுடன் சாதாரணமாக வாழ்வீர்கள், சளி சிந்த  கைல துணியோட இருக்கணும் 

டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் லேசானது, ஆனால் மிக வேகமாக பரவுகிறது, இந்திய வாழ்க்கை முறைக்கு, இது குறைந்தது 80% வரை பரவப் போகிறது. அனைத்து இருமல் மருந்து உற்பத்தியாளர்களும் அடுத்த இரண்டு மாதங்களில் சூப்பர் ரிச் ஆகப் போகிறார்கள்

ஒரே நல்ல விஷயம், ஹாஸ்பிடல் அட்மிசன் 99.9%  இருக்காது ..நான் சொல்றது கரெக்ட்டா

கவரிமான்

 



கவரிமான் என்பது மான் இனம் அல்ல, அதன் உண்மையான பெயர் கவரிமா. அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல.

இமயமலையில் வாழும் எருமை வகையை சார்ந்தது. இதையே நமது மக்கள் #கவரிமான் என்று குழப்பிக்கொள்கிறார்கள்.


#கவரிமான் எங்கு வசிக்கிறது..?

முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..?

எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.”

            என்கிறார் திருவள்ளுவர் ( 969ஆம் குறளில் )

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும்....

அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.. ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ? குழப்பமாக இருக்கிறது அல்லவா? அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள்..

அதில் சொல்லப்பட்டு இருப்பது “கவரி மான்" அல்ல #கவரி_மா…

ஆம்.. #கவரி_மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..

அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..

புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது..


"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தண் நிழல் பிணி யோடு வதியும்

வட திசை யதுவே வான் தோய் இமயம்"…

                                          இமயமலைப் பகுதியில் கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு, தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும்...என்பது இதன் பொருள்.. அதாவது, கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல…இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் வியப்பு...

#கவரிமா என்பது மான் வகையைச் சார்ந்தது அல்ல.. #எருமை வகையைச் சார்ந்தது என்பது அடுத்த வியப்பு...

வள்ளுவர் சொன்னது இதைத்தான் ...இந்தக் #கவரி_மா குறித்து

பதிற்றுப் பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன...

முடி சடை போல தொங்கக் கூடிய விலங்கு தான் #கவரிமா…

இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்.. #கவரி என்பதில் இருந்துதான் #சவரி_முடி என்ற இன்றைய சொல் உருவானது..

#மா என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.

சரி.. இந்தக் குறளில் கூறப்பட்டது என்ன?

"பனிப் பகுதியில் வாழும் #கவரிமாவுக்கு ,

அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..

அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ,

மனிதர்களால் வெட்டப்பட்டாலோ குளிரில் வாடி இறந்துவிடும்.." என்பதாகும்

காபி டே

 



கணவர் தற்கொலைக்கு பின்னும் வியாபார சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்திய சாதனை பெண். 


காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா தற்கொலைக்கு பிறகு, அவரது மனைவி மாளவிகா ஹெக்டே அதீத கடனில் தத்தளித்த நிறுவனத்தை தூக்கி நிறுத்தி வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சாதித்துள்ளார்.


பிரபல காபி டே நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த வி.ஜி.சித்தார்த்தா கடந்த 2019ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் 165 நகரங்களில் செயல்பட்டு வந்த முன்னணி நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் பெயரில் அவருக்கு இருந்த கடன்கள் காரணமாக முதலீட்டாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகள், வருமானவரி துறையினரின் குற்றச்சாட்டுகள் என பல காரணங்களால் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.


அவரின் தற்கொலை செய்தபோது, காபி டே நிறுவனத்திற்கு 7000 கோடி ரூபாய் கடன் இருந்தது. இந்த சூழலில் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதிகளவிலான கடன், முதலீட்டாளர்களின் அதிருப்தி என அவருக்கு முன்னால் இருந்த ஏராளமான சவால்களை எதிர்கொண்டு, சிறப்பாக செயல்பட துவங்கினார். துணிச்சலாக அனைத்தையும் சமாளித்த மாளவிகா, 18 மாதங்களில் 3500 கோடி அளவிற்கு அந்நிறுவனத்தின் கடனை குறைத்தார்.

தொடர்ந்து வியாபார சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்திய மாளவிகா, தன் கணவரின் காபி டே நிறுவனத்தின் கடனை பெருமளவு குறைத்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளார். கணவரின் மறைவால் துவண்டு போகாமல், அதீத கடனையும் வென்று சாதித்துள்ள மாளவிகாவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


வாழ்த்துக்கள் மேடம்.

Friday, September 10, 2021

நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவரா?

 


நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.


ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.


திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீது மோதிவிடலாம்.அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.


மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் பொது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான். நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்...!

கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே

 



அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு 

   அதன் கழுத்தில் அலகால் கொத்தும்.

ஆனால் 

மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல்

 பதில் தாக்குதல்

 எதுவும்  நடத்தாமல் இருக்கும்.


அமைதியாக இருந்து தனது 

அடுத்த செயலை செய்ய ஆரம்பிக்கும் 

கழுகு 

எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர உயர

பறக்கத் துவங்கும்.

உயரம் கூட கூட 


காகத்திற்கு சுவாசிக்க முடியாமல் 

 கடும் சிரமம் ஏற்படும் அதனால் 

ஆக்ஸிஜன் குறைந்து 

அது  கீழே விழுந்து விடும்.....


கழுகு செய்யும் புத்திசாலித்தனமான 

      செயல்  இதுதான்..... 


உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்.


நீங்கள் கழுகாக இருக்கப் போகிறீர்களா  

அல்லது 

காகமாக இருக்கப்போகிறீர்களா 

என்பதை நீங்கள் தான்

 முடிவு செய்ய வேண்டும்.... 


படித்ததில்_பிடித்தது 👍👍

கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

 



கோயிலுக்குச் செல்லும் பொழுது...


1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.

3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.

5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும்.

6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.

7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது.

8. கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.

9. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.


கோயிலுக்குள் இருக்கும்பொழுது...


10. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

11. நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.

12. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

13. சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.

14. விநாயகரை  இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.

15. இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

16. பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

17. கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

18. விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

19. சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.

20. ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.

21 மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.

22. நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.

23. நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

24 பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

25. பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.

26. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

27. கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

28. நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.

29. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

30. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.

31. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ  கெடுக்கக்  கூடாது.

32. கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.

33. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

34. வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.

35. கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.

36. கோயில் உள்ளே செல்போன் பேசுதல் கட்டாயம் கூடாது. அணைத்து வைப்பது அனைவருக்கும் சிறப்பு.


தரிசனத்திற்கு முன்னும்.. பின்னும்...


37. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

38. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.

39. தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.

40. கோயிலுக்குள் உறங்கக் கூடாது.

41. கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.


கோயிலுக்கு வெளியே...


42. கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

43. கோயிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி, கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு.

44. கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக்  கால்களைக்  கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகுதான் கழுவ வேண்டும்

45. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக்  கூடாது.

46. அஷ்டமி,நவமி, அமாவாசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

47. கோயில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

48. கோயிலுக்குச் சென்று வந்ததும், குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.

49. கோயிலுக்கு வரும்பொழுதும், திரும்பிச் செல்லும்பொழுதும், நமது மனதில் உள்ள அனைத்து விதமான தீய எண்ணங்களையும் முழுவதுமாக அழித்து விட வேண்டும். எந்த கறை படிந்த எண்ணங்களும் நமது மனதில் இருக்கக்கூடாது.


திருச்சிற்றம்பலம்...🙏

♥#பெண்ணை பெற்ற எல்லா #தந்தைக்கும் இது என் சமர்ப்பணம்♥♥

 



♥"அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!


♥உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.


♥வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.


♥உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.


♥முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான


♥இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.


1) #நேர்மையான #நண்பன்:


♥தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.


2) #உலகை #அறிமுகம் #செய்தவர் :


♥பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.


3) #மகிழ்விப்பவன்:


♥வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.


4) #காவலன் :


♥வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.


5)#நண்பன் :


♥காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் #அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.


6) #சூப்பர் #ஹீரோ :


♥தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.


7) #தைரியம் #அளிப்பவன்:


♥அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.


😎 #இறுதி #வரை #உறுதி:


♥மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.


9)#அப்பா:


♥பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.

Thursday, June 17, 2021

மாலை கல்லூரி உருவான வரலாறு / Evening College

 



மாலை கல்லூரி உருவான வரலாறு..*


ஒரு முறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து...

தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், எனக்கு கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டராம்....

காமராஜர் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு கேட்க...

கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்கு தான் Lab வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணை சேர்க்க இயலாது என்று சொல்ல....

காமராஜர்...

உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள் ?

என்று கேட்டாராம்...

அந்த முதல்வர் 4 பேருக்கு என்று சொல்ல, இன்னும் 4 பேர் வந்தால் என்ன செய்வீர்கள்...

அதற்கு அந்த முதல்வர் இல்லை ஒரு முறை சாதம் செய்து விட்டு இரண்டாம் முறையும் செய்வேன் என்று சொன்னாராம்....

அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக்கூடாது. 3.30 க்கு கல்லூரி முடிந்ததும், இன்னும் 12 பேருக்கு கல்லூரி வைத்து, அதே Lab ஐ பயன்படுத்தலாமே என்று சொல்ல, அப்படி பிறந்தது தான் மாலை கல்லூரி Evening College.


முடியாது என்று சொல்வதை விட தீர்வை நோக்கி பயணிப்பதே மக்கள் பணி என்பதற்கான எடுத்துக்காட்டு தான்...

                                                                    *கர்மவீரர் காமராஜர்.*

Tuesday, February 2, 2021

"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

 "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...  

“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...  

நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...


1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...


2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.


3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.


4. அதிகாலையில் எழ பழகுங்கள்.  

வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.


5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.  

அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.


6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.  

எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.


7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.


8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.


9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.


10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.


11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.


12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.


13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.


14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.


15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.


16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.


17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.


18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.


19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!  

"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."


மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,  

ஆனந்தமாக வாழுங்கள்...  

ஆரோக்கியமாக வாழுங்கள்.

Sunday, February 9, 2020

ரத்தன் டாடா – அசரடிக்கும் மேலாண்மை




டாடா’ என்ற பெயர் தெரியாத இந்தியர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்குப் பல ஆண்டுகளாகத் தொழில்துறையில் நீடித்து இன்றும் உச்சத்தில் இருக்கும் ஒரு தொழில் குழுமம்.
அவர்கள் இல்லாத துறைகளே எனும் அளவுக்கு அவர்களின் சந்தை பரந்து விரிந்து உள்ளது.
ஜே.என்.டாடா
ஜே.என்.டாடா ஆரம்பித்த டாடா நிறுவனம் அதன் பிறகு பல தலைமுறைகளைத் தாண்டி இன்றும் இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவிலும் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.
என்னுடைய தலைமுறைக்கு ஜே.என்.டாடா பெயர் பழக்கமில்லை ஆனால், ஜே ஆர் டி டாடா பெயர் பரிட்சயம். தற்போது (2020) ரத்தன் டாடா.
தாஜ் ஹோட்டல்
ஜே. என். டாடா (ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்) ஒரு விடுதிக்குச் சென்ற போது இந்தியர்களுக்கு அனுமதியில்லை என்று மறுக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஜே. என். டாடா உருவாக்கியதே தற்போது பிரபலமாக உள்ள தாஜ் ஹோட்டல்.
அசர வைக்கும் மேலாண்மை
ஜே. என். டாடா க்கு பிறகு 80 க்கும் அதிகமான டாடா நிறுவனங்களை ஜே ஆர் டி டாடா ஒருவரே மேலாண்மை செய்துள்ளார். மிரட்டியுள்ளார் என்று தான் கூறனும்.
எப்படிச் செய்தார்?! ஒன்றுமே புரியலை. கொஞ்சம் யோசித்துப்பாருங்க.. அலுவலகத்தில் ஒரு வேலை செய்துகொண்டு இருக்கும் போது நமக்கு இன்னொரு வேலையைக் கொடுத்தால், நம்மால் சரியாகக் கவனம் செலுத்த முடியாது.
அப்படியிருக்கையில் இத்தனை நிறுவனங்கள் என்றால், எவ்வளவு பிரச்னை? எவ்வளவு மேலாண்மை? எவ்வளவு சந்திப்புகள்?! யோசித்தால் தலை கிறுகிறுக்கிறது.
நேரம் இல்லை என்று சொல்ல நமக்கெல்லாம் தகுதியே இல்லை.
தலைமுறை பதவியல்ல
டாடா என்ற பெயரைப் பார்த்ததும் தலைமுறையாக ஒவ்வொருவராகப் பொறுப்பை ஏற்று இருப்பார்கள் என்று தான் நான் நினைத்து இருந்தேன் ஆனால், அப்படியில்லை.
டாடா நிறுவனத்தை நிர்வகிக்க டாடா குடும்பத்தினராக இருந்தால் மட்டுமே பொறுப்பை ஏற்று விட முடியாது. அதற்கான தகுதி இருந்தால் மட்டுமே சாத்தியம்.
இப்பதவியில் இருந்த ஜே ஆர் டி டாடா, ரத்தன் டாடா இருவருமே தங்களைப் பல கடுமையான நேரங்களில் நிரூபித்தே இந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள்.
ரத்தன் டாடா
அதிலும் ரத்தன் டாடா பணக்கார வாழ்க்கையை வெறுத்துள்ளார். இதனால், இதில் இருந்து ஒதுங்கி அமெரிக்கா சென்று அங்குச் சாதாரண வாழக்கையை வாழ்ந்துள்ளார்.
அவருடைய பாட்டி உடல்நிலை காரணமாக ஊருக்கு வந்தவர், பின்னர் இங்கேயே பணி புரிய ஜே ஆர் டி டாடா கண்ணில் பட்டு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்.
டாடா நிறுவனத்தில் ரத்தன் டாடா சேர்ந்தாலும், சாதாரணத் தொழிலாளி போலத் தான் இருந்துள்ளார். சொல்லப்போனால் டாடா என்ற பெயரால் நெருக்கடியே அதிகம்.
டாடா என்பது குடும்பப் பெயர். எனவே, நேரடி மகன் கிடையாது ஆனால், ரத்த சொந்தம். இவர்கள் சொந்தத்தைப் படிக்கும் போது யார் யாருக்கு மகன், மகள் என்று குழப்பம் வரும் 🙂 .
ஜே ஆர் டி டாடா ஒரு அரசன் போல இருந்துள்ளார். அவருக்குப் பிறகு பொறுப்பை ஏற்க பலர் இருக்க, யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்திலேயே இதைத் தள்ளிக்கொண்டு வந்துள்ளார்.
இறுதியில் காலமும் சூழ்நிலையும் ரத்தன் டாடா வை சேர்மன் ஆக்கியுள்ளது.
ரத்தன் டாடா சீர்திருத்தங்கள்
தலைமை போட்டி அரசியலில் நிறுவனத்தில் மற்றவர்களின் அரசியல் எல்லாம் படிக்கும் போது சுவாரசியமாக இருந்தது. ரத்தன் டாடா க்கு இப்பதவியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லையென்றாலும், இறுதியில் அவருக்கே வந்துள்ளது.
ஒருவரின் திறமையைச் சோதிக்க வேண்டும் என்றால், நட்டத்தில் ஓடும் நிறுவனத்தைப் பார்க்க டாடா நிறுவனத்தில் வலியுறுத்துவார்கள். இது போல இரு நிறுவனங்களை ரத்தன் டாடா க்கு கொடுத்து ஜே ஆர் டி டாடா அவரைச் சோதித்துள்ளார்.
ரத்தன் டாடா சேர்மன் பொறுப்புக்கு வந்து அமர்வது ஒரு ஒரு திரைப்படம் போலவே உள்ளது.
ரத்தன் டாடா எடுக்கும் நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள் ஆகியவை டாடா நிறுவனத்தை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது. இவரை விமர்சித்தவர்கள், குறைத்து மதிப்பிட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
ஜே ஆர் டி டாடா வின் முடிவை ரத்தன் டாடா நியாயப்படுத்தியுள்ளார்.
தொழிற்சங்கம்
என்னை வியக்க வைத்த ஒரு சம்பவம், ரத்தன் டாட்டா எதிர்கொண்ட தொழிலாளர் பிரச்சனை. ‘ராஜன் நாயர்’ என்ற தொழிற்சங்க தலைவர் டாடா நிறுவனத்தையே மிரட்டியுள்ளார்.
நிறுவனம் அவரைப் பணி நீக்கம் செய்தும், தன்னை மீறி எதுவும் நடந்து விட முடியாது என்று தொழிலாளர்களைத் தன் பக்கம் கொண்டு வந்து போராட்டங்களைத் தூண்டி பல மாதங்கள் நிறுவனத்தையே முடக்கியுள்ளார்.
பின்னர் அவர் எப்படி வழிக்குக் கொண்டு வரப்பட்டார் என்பது சுவாரசியம்.
கேரளாவில் எல்லாத்துக்கும் போராட்டம் செய்வார்கள். அதனால் தான், அங்கு எந்த நிறுவனமும் தொழில் நடத்த முடியாமல், மற்ற மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு நிதி நிறுவனம் தன் கேரள கிளைகளை மூடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
டாடா இண்டிகா & டாடா நானோ
ரத்தன் டாடா, கார் தயாரிக்க வேண்டும் என்று ‘டாடா இண்டிகா’ கொண்டு வந்து வெற்றிப் பெற்றது, அதன் பிறகு ஒரு லட்சத்தில் ‘டாடா நானோ’ கொண்டு வந்தது, அதற்கு மேற்கு வங்கம் அரசியல் பிரச்சனையை ஏற்படுத்தியது என்று பல தகவல்கள் உள்ளது.
டாடா நானோ பெரியளவில் வெற்றி பெறவில்லையென்றாலும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்னுடைய நண்பன் இன்னும் பயன்படுத்துகிறான். நடுத்தர குடும்பத்துக்கு ஏற்றப் பொருத்தமான வாகனம்.
முன்னோக்கிய திட்டங்கள்
தொழில்நுட்பம் மீது ரத்தன் டாடா கொண்டு இருந்த ஆர்வம், எதிர்காலத் தேவைகள் குறித்த கணிப்புகள், நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டிய வழிமுறைகள் என்று பிரம்மிப்பு ஏற்படுத்துகிறார்.
வெளிநாட்டு நிறுவனங்களை மிகப்பெரிய விலைக்குக் கையகப்படுத்தி வெற்றிபெற்றுள்ளார். இவர் கொடுத்த விலையை விமர்சித்தவர்கள் பலர் பின்னர் அதன் வெற்றியைக் கண்டு அமைதியாகி உள்ளனர்.
வெளிநாட்டில் புதிய நிறுவனத்தைத் துவங்கி வாடிக்கையாளர்களைப் பிடிக்கக் காலமெடுக்கும் என்பதால், இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர், அது ரத்தன் டாடா க்கு வெற்றியையும் கொடுத்துள்ளது.
தொழில் செய்யும் அனைவரும், செய்யலாம் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் டாடா நிறுவனம் பற்றியும் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதை எவ்வாறு வெற்றிகரமாகக் கடந்து வந்தார்கள் என்பதையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
நிச்சயம் ஒரு உந்துதலாக இருக்கும்.
சமீப நிகழ்வு ஒன்றில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அவர்கள் ரத்தன் டாடா அவர்களின் காலைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது அனைவராலும் சிலாகித்து பேசப்பட்டது. மேன்மக்கள் மேன்மக்களே!
புத்தகத்தை ஆசிரியர் சொக்கன் சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளார்.

Monday, December 16, 2019

பி.எஃப். பென்ஷன்... யாருக்கு எவ்வளவு?


பிராவிடெண்ட் ஃபண்ட் என்கிற பி.எஃப். என்பது ஓய்வுக்காலத்துக்கான முதலீடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் (ஃபேமிலி பென்ஷன்) வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பென்ஷன் தொகை எவ்வளவு? பென்ஷனுக்கான தகுதி என்ன? என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு விடை தேடி, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சென்னை மண்டல கமிஷனர் எஸ்.டி.பிரசாத்-ஐ சந்தித்துப் பேசினோம்.
''ஒரு தனியார் நிறுவனத்தில் 20 நபர்களுக்கு மேல் வேலை பார்த்தால் கட்டாயம் பி.எஃப். பிடித்தம் செய்யவேண்டும் என்பது அரசின் விதி. இந்த விதியின் கீழ் தொழிலாளரின் சம்பளத்தில் (அடிப்படை மற்றும் டி.ஏ. சேர்ந்தது) 12 சதவிகிதமும், அதே அளவு தொகையை நிறுவனமும் கட்டாயம் தொழிலாளரின் பெயரில் செலுத்த வேண்டும். நிறுவனம் தரும் 12 சதவிகித தொகையில் 8.33% பென்ஷன் திட்டத்திற்காகவும், 3.66%
(அதிகபட்சமாக 6,500 ரூபாய் சம்பளத்தில் மட்டுமே) வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்காகவும் பிரித்து வரவு வைக்கப்படும். இதில் பென்ஷனுக்காக அதிகபட்சம் ஒரு தொழிலாளியின் கணக்கில் மாதம் 541 ரூபாய் மட்டுமே வரவு வைக்கப்படும். இந்தத் தொகையிலிருந்து தொழிலாளி ஓய்வு பெறும்போது மாதா மாதம் பென்ஷனாக கிடைக்கும்.
தொழிலாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1971-க்கு மாற்றாக 1995-ம் ஆண்டு தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு முன் உள்ள திட்டத்தின் கீழ் உறுப்பினர் மரணமடைந்தால் குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1995-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் உறுப்பினருக்கு
50 வயதுக்கு பிறகு விருப்ப ஓய்வு ஊதியமும், 58 வயதுக்குப் பிறகு கட்டாயம் ஓய்வூதியமும் கிடைக்கும். பென்ஷன் பெறுவதற்கு குறைந்தபட்ச தகுதி என்பது வயது மற்றும் பணிக்காலம்தான். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பி.எஃப். கணக்கு வைத்திருப்பதோடு குறைந்தபட்சம் 50 வயதாகி இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் பலருக்கும் பென்ஷன் குறித்த விழிப்பு உணர்வு இல்லாத காரணத் தினால் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குச் செல்லும்போது பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் 10 ஆண்டுகளுக்கு குறைவாக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பென்ஷனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறிப்பிட்ட சதவிகிதத்தில் திரும்பக் கிடைக்கும். (சம்பளத்தில் எவ்வளவு மடங்கு என்பதை மேலே உள்ள அட்டவணையில் பார்க்க).
ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபிறகு வேறு நிறுவனத்திற்கு வேலை மாறுகிறார் அல்லது சொந்த தொழில் செய்கிறார் அல்லது இனிமேல் வேலைக்குப் போகவேண்டாம் என்று முடிவெடிக்கும் சூழ்நிலையில் அவரின் வயது 50-க்கு குறைவாக இருந்தால் பென்ஷன் கணக்கில் இருக்கும் தொகை உடனடியாகக் கிடைக்காது. இதற்கு பதிலாக பி.எஃப். அலுவலகத்திலிருந்து திட்ட சான்றிதழ் (ஸ்கீம் சர்ட்டிஃபிகேட்) வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் எத்தனை வருடம் வேலை பார்த்தீர்கள், உங்கள் கணக்கில் எவ்வளவு பென்ஷன் தொகை உள்ளது, எந்த தேதியிலிருந்து நீங்கள் பென்ஷன் பெற முடியும் என்பது புரியும். இரண்டு, மூன்று திட்டச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அனைத்துச் சான்றிதழ்களையும் பி.எஃப். அலுவலகத்தில் தந்து கூட்டுத் தொகையை பென்ஷனாகப் பெறலாம். சுமார் ரூ.3,500 வரை அதிகபட்சமாக பென்ஷன் கிடைக்க வாய்ப்புண்டு.
பென்ஷன் திட்டத்திற்கு நாமினி நியமன வசதி உள்ளது. இதன்படி ஓய்வூதியம் பெறும் தொழிலாளர் இறந்துவிட்டால் பென்ஷன் தொகை மனைவிக்கு ஆயுள் முழுக்கவும், இரு குழந்தைகளுக்கு அவர்களின் 25 வயது வரைக்கும் பென்ஷன் கிடைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நிரந்தர ஊனம் இருந்தால் ஆயுட்காலம் முழுக்க பென்ஷன் கிடைக்கும்.
ஒரு தொழிலாளிக்கு திருமணம் ஆகாத நிலையில், உறவினர் யாரும் இல்லை எனில் அவர் மரணம் அடைந்தால் அவருடைய பெற்றோருக்கு பென்ஷன் தரப்படும். தொழிலாளர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டாலோ, நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ பென்ஷன் கிடைக்கும். இதுபோன்றோருக்காக மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது.
பி.எஃப். பென்ஷன் பெறுபவர் மரணம் அடைந்தபிறகு அவரது துணைவர் (கணவன் அல்லது மனைவி) அரசு வேலை பார்த்து அதன் மூலம் பென்ஷன் கிடைத்தாலும், அவர்களுக்கு இந்த பி.எஃப். பென்ஷனும் கிடைக்கும்.
பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ஆரம்பம் முதலே எந்த வட்டியும் அரசு வழங்குவதில்லை.

Tuesday, October 15, 2019

இந்திய இளைஞர் கண்டுபிடித்த ஏசி ஹெல்மெட்டுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

சுட்டெரிக்கும் வெயிலில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு தீர்வு காணும் முயற்சியாக இளைஞர் ஒருவர் ஏ.சி. வசதியுடன் இயங்கும் ஹெல்மெட்டை கண்டுபிடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.


நாட்டில் இருக்கும் பல்வேறு பகுதிகள் அதிக வெயில் தாக்கம் கொண்டவையாக உள்ளன. அவற்றில், ஒருசில பகுதிகளில் மட்டுமே குளிர்ந்த வானிலை நிலவுகின்றன. எனினும், பருவநிலை மாற்றம் காரணமாக, குளிர்ந்த பிரதேசங்களிலும் அவ்வப்போது அதிக வெப்பநிலை பதிவாகிறது.

ஏற்கனவே வெயில் அனலாக கொதிக்கும் பகுதிகளில், மேலும் வெப்பம் தகிக்கிறது. கோடை காலத்தில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வெயில் 100 டிகிரியை தாண்டும் சம்பவங்களும் சாதாரணமாக அரங்கேறுகின்றன.

இதனால் பொதுமக்களுக்கு கடும் சிரமங்கள் ஏற்படுகின்றன. வெயிலில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் நிலவுகின்றன. மேலும், ஏசி, ஏர் கூலர் உட்பட பல்வேறு மின்சாதனங்களின் பயன்பாடும் அதிகரிக்கிறது.

வெயில் காலத்தில் வீட்டில் இருப்பவர்கள் எப்படியாவது தப்பித்துவிடலாம். ஆனால், வெளியில் அலைபவர்கள், டூ-வீலர் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் நிலை மேலும் பரிதாபத்தை தரக்கூடியது. அடிக்கும் வெயிலில் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவது, மிகுந்த சிரமத்தை தரக்கூடியது.

இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் விதமாக, இந்திய இளைஞர் ஒருவர் ஏசி-யால் இயங்கும் ஹெலெம்ட் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சந்தீப் என்ற இளைஞர், பொறியியல் பட்டதாரியாவார்.

இவர் ஹெல்மெட்டுடன் பொருத்திக் கொள்ளும் வகையில் ஏசி- இயந்திரத்தை கண்டுப்பிடித்துள்ளார். சிறியளவில் அமைந்திருக்கும் இந்த இயந்திரம் சூடான காற்றையும் வெளியேற்றும் தன்மைக் கொண்டது.

நாட்டில் நிலவும் அனைத்து பருவநிலை மாறுதலின் போது இந்த ஹெல்மெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என சந்தீப் தெரிவித்துள்ளார். எனினும் கோடைக் காலத்தில் இந்த ஏசி ஹெல்மெட் அதிக பயனை அளிக்கும்.

தோள்பட்டையில் ஏசி இயந்திரத்தை மாட்டிக் கொள்ள வேண்டும். பிறகு பையில் இருந்து கிடைக்கும் குழாயை ஹெல்மெட்டுக்குள் விட வேண்டும். பையில் இருக்கும் இயந்திரத்தை இயக்கியவுடன், உடனே குழாய் வழியாக குளிர்ந்த காற்று ஹெல்மெட்டுக்குள் பரவும்.

ஏசி இயந்திரத்தின் மொத்த எடை 125 கிராம். ஹெல்மெட் மற்றும் தோள்பட்டை பையுடன் சேர்க்கும் போது அதிகப்பட்சமாக 1,800 கிராம் எடை வரும். எனினும், ஹெல்மெட்டின் மாடலுக்கு தகுந்தால் போல எடையில் மாறுபாடு இருக்கும்.

பேட்டரி திறனில் இயங்கும் இந்த ஏசிக்கு தோள்பட்டை பையில் தனியாக பிளக்-பாயின்ட் உள்ளது. அதிலுள்ள ஒரு சுவிட்ச்சில் தலைக்கு செல்லும் குளிர்ந்த காற்றின் அளவை கூட்டவும் குறைக்கவும் செய்யலாம்.

குளிர்ந்த பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இந்த இயந்திரம் சூடான காற்றையும் வெளிப்படுத்தும். வாகன ஓட்டிகள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் இடங்களுக்கு ஏற்றவாறு, குளிர்ந்த மற்றும் சூடான மோடுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஏசி இயந்திரம், பைக்கின் பேட்டரியின் மூலம் திறனை பெற்று இயங்கும்.

நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு இளைஞர் சந்தீப் இந்த ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளார். இதுபோல தன்னிடம் எட்டுக்கும் மேற்பட்ட கண்டுப்பிடிப்புகள் இருப்பதாகவும், விரைவில் அவை அடுத்தடுத்து அறிமுகமாகும் என சந்தீப் தெரிவித்துள்ளார்.

Monday, August 19, 2019

சென்னை கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காரணம் என்ன?

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்தன. உயிரொளிர்தல் என்ற நிகழ்வால் கடல் அலைகள் நீல நிறத்தில் இவ்வாறாக மாறுகின்றன.
இது சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, இவை ஏன் ஏற்பட்டன? காரணம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

உயிரொளிர்தல்

மிதவை உயிரிகளால் (Phytoplankton) இவ்வாறான உயிரொளிர்தல் நிகழ்கிறது என்கிறார் கடலுயிர் விஞ்ஞானியான நாராயணி சுப்ரமணியன்.
நாராயணி, "மிதவை உயிரிகள் என்பவை வேறொன்றும் இல்லை. அவை நம் கண்ணுக்குத் தெரியாத பாசி வகைகள்தான். இந்த மிதவை உயிரிகளில் சில ஒளிரும் தன்மை கொண்டவை. பாசிகளின் உள்ளே நிகழும் வேதியியல் மாற்றத்தால் ஒளி உண்டாகிறது" என்றார் இவர்.
ஒரே இடத்தில் கழிவுகள் அல்லது ஊட்டசத்துகள் அதிகமாகும் போது அந்த இடத்தில் மிதவை உயிரிகள் பெருக வாய்ப்புள்ளது என்கிறார்.
"பிற நாடுகளில் உயிரொளிர்தல் நிகழ்வு அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் மிதவை உயிரிகள் கரைக்கு வந்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வு குறைவுதான்" என்கிறார்.
பெருங்கடல்களின் சூழலியலில் இந்த மிதவை உயிரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடல்சார் உணவு சங்கிலியில் இந்த மிதவை உயிரிகள்தான் முதல் படிநிலையில் உள்ளன. கடலுக்கு ஒரு தோற்றம் கொடுப்பதில் இந்த மிதவை உயிரிகளின் பங்கு முக்கியமானது.
சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன், "எப்போதும் மிதவை உயிரிகள் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கும். அவை ஒரே இடத்தில் அதிகமாகத் திரளும் போது அந்த ஒளி நம் கண்ணுக்கு புலப்படுகிறது." என்கிறார்.

குறையும் மிதவை உயிரிகள்

கடல் நீர் வெப்பமடைவதால் இந்த மிதவை உயிரிகள் பல இடங்களில் குறைந்து கொண்டிருக்கின்றன என்கின்றன சில ஆய்வுகள்.
பல வகையான மிதவை உயிரிகள் உள்ளன. நீல நிறத்தை மட்டுமல்ல சில மிதவை உயிரிகள் பச்சை நிறத்தையும் வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தவை.
"கண்ணுக்கு புலப்படும் அளவுக்கு மிதவை உயிரி இருப்பது நல்லதல்ல. அதாவது ஒரே இடத்தில் திரட்சியாக இருப்பது நல்லதல்ல. இவை ஒரே இடத்தில் அதிகம் திரளும்போது அதிக ஆக்சிஜனை எடுத்துக் கொள்ளும். இதனால், பிற கடல் உயிரினங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம்" என்கிறார் அவர்.
இந்த நிகழ்வு தொடர்பாக நித்தியானந்த் ஜெயராமன் மீனவர் ஒருவரிடம் பேசியவற்றை ஃபேஸ்புக் பதிவாக பகிர்ந்துள்ளார். அதில், "கடலில் பல உயிரினங்கள் (பாசி, மீன், கடமா) பயன்படுத்தக்கூடிய ஒரு தொடர்பு முறை இந்த உயிரொளிர்வு . ஒரு சில கோலா (flying fish) வகைகளிலும் செவுள் பக்கத்தில் உயிரொளிர்வு கொண்ட பூச்சி ஒன்றிருக்கும். அது மீன் வாழும் வரை வாழும். மீன் சாகும் பொது, அதுவும் செத்துவிடும். உயிரொளிர்வு தன்மை கொண்ட பாசி (phytoplankton) அலைகளின் கிளர்ச்சியின்போது லூசிபரின் என்ற மூலக்கூறினை பயன்படுத்தி ஒளியை உருவாக்குகின்றன. கடலலைகளில் இது போன்ற பாசி எப்போவும் இருந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது தான் ஒரு நிகழ்வாக காணப்படுகிறது." என்று மீனவர் பாளையம் கூறியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

போட்டோகிரபியில் புது முயற்சி: சூரிய வெளிச்சமே கலர் லேப், இலையில் பிரிண்டிங்

டிஜிட்டல் போட்டோகிரபி நவீனத்தின் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது. நாளொரு தொழில்நுட்பம், பொழுதொரு புதிய கருவி என வேகமெடுத்துப் பறக்கும் இந்தத் தொழிலில் கலைக்கான நிதானமும், வெள்ளந்தியான அழகியலும் கொஞ்சம் குரல் ஒடுங்கித்தான் போகின்றன.
இந்த நிலையில், நின்று நிதானித்து, டிஜிட்டல் கேமிராவில் எடுக்கும் புகைப்படங்களை, ஒரு மிகப்பழைய எளிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கருவிகள் ஏதுமில்லாமல், வெறும் கையால் அஞ்சலட்டை உள்ளிட்டவற்றில் பிரிண்ட் போடும் முறையை பரவலாக்கிவருகிறார் வினோத் பாலுச்சாமி என்ற புகைப்படக் கலைஞர்.


சைனோடைப் பிரிண்டிங் எனப்படும் இந்த முறை மிகப் பழைய முறை என்று கூறும் வினோத் இதற்கு எந்தக் கருவியும் தேவையில்லை. ஓரிரண்டு ரசாயனங்கள் இருந்தால் வெறுங்கையிலேயே பிரிண்ட் போட முடியும் என்கிறார்.
ரசாயனம்கூட ஏதுமில்லாமல் இல்லாமல் இலையில் பிரிண்ட் போடும் முறை இவர் நிகழ்த்தும் இன்னொரு ஆச்சரியம்.
இந்தியா முழுதும் பயணம் செய்தவர். பல மாநிலங்களில் பழங்குடிகளின் வாழ்வை புகைப்படத்தில் பதிவு செய்தவர் வினோத். மதுரை அடுத்த காரியாப்பட்டியை சேர்ந்த இவர் தற்போது வசிப்பது திருவண்ணாமலையில்.
'யா' ஸ்டுடியோ என்ற பெயரில், புகைப்படக் கலையில் புதுமைகளை முயற்சிப்பதோடு, இளைஞர்களுக்கு புகைப்படக் கலையை போதித்தும் வருகிறார்.
இவரது புகைப்பட வகுப்புகள் அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்பு தொடங்கிவிடும். காத்திருப்பதும், கவனிப்பதுமே இவரது வகுப்பின் முதல் பாடங்கள்.
பின்ஹோல் கேமரா (தீப்பெட்டி அல்லது மூடிய அறையின் கதவில் மிக நுண்ணிய ஓட்டை போட்டு அதன் மூலம் பிலிம் உதவியோடு படம் பிடிப்பது), முறையில் கேமராவின் அடிப்படைகளை தமது மாணவர்களுக்கு விளக்கும் இவர், அதே எளிமையோடு படங்களை அச்சிட்டுக் காட்டவேண்டும் என்று முனைந்தபோது சைனோடைப் பிரிண்டிங் முறையை கண்டடைந்ததாக கூறுகிறார்.
"பின்ஹோல் கேமராவிலோ, டிஜிட்டல் கேமராவிலோ படம் எடுத்தாலும், அச்சிட்டுப் பார்க்கும்போதுதான் அது முழுமை அடைகிறது. புதிதாகப் புகைப்படம் கற்பவர்களுக்கு அப்படி அச்சிட்டுப் பார்ப்பதில் ஒரு நிறைவு தோன்றுகிறது. அதிலும் தம் கையாலேயே பிரிண்ட் போடும்போது கிடைக்கிற நிறைவு அலாதியானது. அதனால்தான் சைனோடைப் பிரிண்டிங் முறையை கையாள்கிறேன்" என்று பிபிசி தமிழிடம் கூறினார் வினோத்.
இது எப்படி செயல்படுகிறது என்று கேட்டபோது, "அஞ்சலட்டை, மரம், துணி, சின்ன சிமிழ்கள் என்று பலவிதமான பொருள்களில் இந்த சைனோடைப் முறையில் உங்கள் படங்களை பிரிண்ட் போடலாம். எடுத்துக்காட்டாக, அஞ்சலட்டையில் பிரிண்ட் போடுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் இருட்டறையில் அதில் இரண்டு ரசாயனங்களை கையுறை உதவியோடு பூசவேண்டும்.
முன்னதாக, ஓ.எச்.பி. புரொஜக்டரில் பயன்படுத்தக்கூடிய கண்ணாடி போன்ற தாளில், உங்கள் புகைப்படத்தை பிரிண்ட் போட்டுக்கொள்ளவேண்டும். இப்போது ரசாயனம் பூசிய அஞ்சலட்டை மீது, பிரிண்ட் போட்ட ஓ.எச்.பி. ஷீட்டை ஒட்டிவைத்து வெளியில் எடுத்துவந்து வெயிலில் காட்டவேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்த அட்டையை ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்த நீரில் கழுவி காயவைத்தால் சாம்பல் கலந்த நீல நிறத்தில் உங்கள் புகைப்படம் அஞ்சலட்டையில் அச்சாகியிருக்கும். இது ஓவியத்துக்கும் புகைப்படத்துக்கும் இடைப்பட்ட ஓர் உணர்வைத் தரும்" என்கிறார்.
இளம் புகைப்படக் கலைஞர்களாக உருவெடுத்துவரும் சதீஷ், அருண் போன்ற தம் மாணவர்களும் இந்த முறையில் ஆர்வத்தோடு படங்களை அச்சிடுவதாகக் கூறுகிறார் வினோத்.
நாங்கள் நிறைய அஞ்சலட்டையில் பிரிண்ட் போடுகிறோம். 50 காசு செலவில் புகைப்படங்களை இந்தியா முழுதும் பயணிக்கவைக்க முடியும் என்பதால் இது கிளர்ச்சியூட்டுகிறது.
பின்ஹோல் கேமராவும், சைனோடைப் பிரிண்டும், ஒளியின் பயணம்தான் புகைப்படம் என்ற அடிப்படைக் கருத்தை, தொழில்நுட்பத்தின் மூடுதிரைகள் இல்லாமல், இளைஞர்களின் கண்முன் காட்சியாக நிறுத்திவிடுகிறது என்கிறார் வினோத்.
"அவர்கள் ஒளியின் பயணத்தை, அது நிகழ்த்தும் வித்தையை கண்முன் காண்கிறார்கள். காத்திருப்பதிலும், கவனிப்பதிலும், தமது கையாலேயே முழுவதும் படைப்பதிலும் விவரிக்க இயலாத நிறைவு கிடைக்கிறது. கட்டையில், துணியில்கூட இந்த முறையில் பிரிண்ட் போட முடியும். அட்டையில் பிரிண்ட் போட்டபிறகு, தேனீர் டிக்காஷனில் மீண்டும் நனைத்து காயவைத்தால், பழைய புகைப்படம் போன்ற ஒரு தோற்றம், உணர்வு உங்கள் படத்துக்கு கிடைத்துவிடும்" என்கிறார் வினோத் பாலுச்சாமி.
ஆனால், வினோத்தும் அவரது குழுவினரும் இலையில் ரசாயனம் ஏதும் இல்லாமலே புகைப்படங்களை அச்சிடுகிறார்கள். ஓ.எச்.பி. ஷீட்டில் அச்சிட்ட புகைப்படங்களை சில தேர்ந்தெடுத்த காட்டு இலைகளின் மீது வைத்து வெயிலில் குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் புகைப்படம் அச்சாகியிருக்கும் என்கிறார் வினோத்.
பளபளப்புக்குப் பதிலாக மட்கிய உணர்வுடன் (dull finish) படங்களை படைக்கும் சுவையுணர்வு பல புகைப்படக் கலைஞர்களுக்கும் உண்டு. ஆனால், எளிமையாலும், மட்கிய உணர்வின் மித மிஞ்சிய ஈர்ப்பாலும் தனித்தவொரு கலைவடிவமாகவே உருவெடுக்கும் வினோத்தின் சைனோடைப் அச்சுகள் டாம்பீகத்துக்கு எதிரான எளிமையின் கலகமாகி நிற்கின்றன.

Thursday, May 23, 2019

இந்தியாவில் உண்மையாகவே தண்ணீர் இல்லாமல் போகப்போகிறதா?

நடந்து முடிந்துள்ள 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, நாடுமுழுவதும் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சனை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
2024ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதுமுள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியும், உலகளவிலான தரத்தில் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் 42 சதவீதப் பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று அச்சம் தெரிவிக்கிறது.
நாட்டிலுள்ள அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம் என்பது போன்ற வாக்குறுதிகளை உண்மையிலேயே நிறைவேற்ற முடியுமா?

அபாய நிலை

உலகின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டிருக்கும் இந்தியாவில் வெறும் நான்கு சதவீத நன்னீர் ஆதாரங்களே உள்ளன.
"முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமான தண்ணீர் பிரச்சனையை நாடு சந்தித்து வருகிறது" என்று அரசின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் உண்மையாகவே தண்ணீர் இல்லாமல் போகப்போகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற நாட்டின் 21 நகரங்களில் 2020ஆம் ஆண்டிற்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
அதுமட்டுமின்றி, 2030ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் 40 சதவீத இந்தியர்களுக்கு குடிநீரே கிடைக்காத நிலை ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

வளரும் நகரங்கள்

இந்தியாவின் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் நிலவும் தண்ணீர் பிரச்சனையில் மிகுந்த வேறுபாடு காணப்படுவதாக கூறுகிறார் அசோகா சூழலியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் வீணா ஸ்ரீநிவாசன்.
"நாட்டிலுள்ள நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால், அவற்றிற்கு தேவையான தண்ணீரை உறுதிசெய்யும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை" என்று அவர் கூறுகிறார்.
2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை 60 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஊரகப் பகுதிகளிலுள்ள நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதே நீண்டகால பிரச்சனைக்கு வித்திடக்கூடும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
நாட்டின் 80 சதவீத தண்ணீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. பூமிக்கடியிலுள்ள கல் மற்றும் மண்ணிலிருந்து அது பெறப்படுகிறது.
"பூமிக்கடியில் தண்ணீர் உற்பத்தி ஆவதை விட அதிகமாக அளவு வெளியேற்றப்படுவதே பிரச்சனைக்கு காரணம்" என்று கூறுகிறார் 'வாட்டர்எயிட் இந்தியா' அமைப்பின் தலைமை செயலதிகாரியான மாதவன்.
அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவிலான தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன.
இந்தியாவில் உண்மையாகவே தண்ணீர் இல்லாமல் போகப்போகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஒரு கிலோ பருத்தியை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்காவில் 8,100 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும் நிலையில், இந்தியாவில் 22,500 லிட்டர் தண்ணீர் உபயோகிக்கப்படுவதாக 'வாட்டர் பூட் பிரிண்ட் நெட்ஒர்க்' எனும் அமைப்பு கூறுகிறது.
முந்தைய 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், நாட்டிலுள்ள அனைத்து பிராந்தியங்களில் கண்காணிக்கப்பட்ட 66 சதவீத கிணறுகளின் நீர் மட்டம் கடந்தாண்டு மிகவும் குறைந்து காணப்பட்டதாக அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு பருவநிலை மாற்றமும் முக்கிய காரணம்.
மழை வராததால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்பது போய், தற்போது அதிகளவிலான மழைப்பொழிவு நிலத்துக்கடியில் செல்லாமல் வழிந்தோடி செல்வது முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று கூறுகிறார் சுந்தரம் கிளைமேட் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மிருதுளா ரமேஷ்.
அதே சமயத்தில், உலக வெப்பமயமாதலின் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் வறட்சி என்பது சாதாரண ஒன்றாக மாறி வருகிறது.

நிறுத்தப்பட்ட நிதியுதவி

இந்தியாவில் உண்மையாகவே தண்ணீர் இல்லாமல் போகப்போகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியாவை பொறுத்தவரை தண்ணீர் பிரச்சனை என்பது மாநிலம் சார்ந்த ஒரு விவகாரமாக பார்க்கப்பட்டாலும், குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு நிதியுதவி மாநிலங்களுக்கு வழங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த ஐந்தாண்டுகளாக இந்த நிதியுதவியை நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு நிறுத்திவிட்டது.
அதே சமயத்தில், ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை, இந்தியாவின் ஊரகப் பகுதிகளிலுள்ள ஆறு சதவீத வீடுகளுக்கு மட்டுமே குழாய் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இது தற்போது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல், நாடு முழுவதும் தொழில்துறையிடமிருந்து 'நீர் பாதுகாப்பு' என்ற பெயரில் கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை போதுமானதாக இருக்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, தண்ணீரை மறுசுழற்சி செய்வது, மழைநீரை பாதுகாத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று பல்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !