Showing posts with label Tamil Stories. Show all posts
Showing posts with label Tamil Stories. Show all posts

Thursday, October 22, 2026

பாட்டி சொன்ன பொக்கிஷம்

 ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய தந்தை இறப்பதற்கு முன், “நமது வயலில் ஒரு பெரிய பொக்கிஷம் புதைந்திருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்” என்று கூறினார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு, இருவரும் வயல் முழுவதையும் தோண்டிப் பார்த்தனர். ஆனால் எந்தப் பொக்கிஷமும் கிடைக்கவில்லை.

ஏமாற்றத்துடன் இருந்த அவர்களிடம் பாட்டி, “நீங்கள் வயலை நன்றாக உழுது விட்டீர்கள். இப்போது விதைகளை விதையுங்கள்” என்றார்.

அவர்கள் விதைகளை விதைத்து, நீர் ஊற்றி, பயிர்களைப் பராமரித்தனர். சில மாதங்களில் வயல் முழுவதும் நல்ல விளைச்சல் கிடைத்தது.

அப்போதுதான் தந்தை கூறிய பொக்கிஷம் உழைப்பும் அதன் பலனும்தான் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

நீதி: கடின உழைப்பே உண்மையான பொக்கிஷம்.





புத்திசாலிக் காகம்

 ஒரு வெயில் நாளில் காகம் ஒன்று தாகத்தால் தவித்தது. தண்ணீரைத் தேடி அலைந்தபோது, ஒரு பானையில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டது. ஆனால் தண்ணீர் மிகவும் கீழே இருந்ததால் அதனால் குடிக்க முடியவில்லை.

காகம் சிறிது நேரம் யோசித்தது. அருகில் கிடந்த சிறிய கற்களை ஒவ்வொன்றாகப் பானைக்குள் போட்டது. கற்கள் சேரச் சேரத் தண்ணீர் மேலே வந்தது.

காகம் மகிழ்ச்சியுடன் தண்ணீரைக் குடித்துத் தனது தாகத்தைத் தீர்த்துக்கொண்டது.

நீதி: அறிவையும் பொறுமையையும் பயன்படுத்தினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.





சிறுவனின் சிறிய உதவி

 ஒரு கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும் வழியில், ஒரு பாட்டி காய்கறிக் கூடையைத் தூக்க முடியாமல் சிரமப்படுவதைக் கண்டான்.

பள்ளிக்கு நேரமாகிவிட்டாலும், அருண் பாட்டியிடம் சென்று உதவி செய்தான். கூடையை அவருடைய வீட்டில் சேர்த்துவிட்டு பள்ளிக்குச் சென்றான்.

ஆசிரியர் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டபோது, அருண் நடந்ததைச் சொன்னான். ஆசிரியர் அவனைப் பாராட்டி, “படிப்பது மட்டும் கல்வியல்ல; பிறருக்கு உதவுவதும் சிறந்த பண்பாகும்” என்றார்.

அன்று அருண் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

நீதி: பிறருக்கு உதவுவது மிகச் சிறந்த நற்பண்பு.




Tuesday, November 29, 2022

‘புத்திசாலி பூனையும், அலட்சிய நரியும்’

 ஒரு பூனை ஒரு பெரிய மரத்துக்கும் கீழே நின்னுகிட்டு இருந்திச்சு.

அப்போது  வேட்டைநாய்கள் குறைக்கும் சத்தம் தொலைவுல கேட்டுச்சு. பூனை அதை உற்றுக் கேட்டுச்சு

அந்த மரத்தடிக்கு ஒரு நரியும் வந்திச்சு.
அந்த நரி பூனைக்கிட்ட , ” வேட்டை நாய் சத்தம் கேட்குதே; அதெல்லாம் வந்துட்டா எப்படி தப்பிப்பாயாம்” அப்பிடின்னு கேட்டிச்சு.

அதற்கு பூனை,” நான் உன்னை மாதிரி பெரிய அறிவாளியா? எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்.
இந்த மரத்தின் மீது ஏறி உச்சிக்குப் போய் தப்பிச்சுக்குவேன். அவைகள்லாம் போனதும் மறுபடியும் கீழே இறங்கி வருவேன்” ன்னு பதில் சொல்லிச்சு.
“நீ எப்படி தப்பிச்சுக்குவாய்” ன்னு பூனை நரிகிட்ட திருப்பிக் கேட்டிச்சு.
அதற்கு நரி,”எனக்கென்ன, எனக்கு ஆயிரம் வழி தெரியும்” அப்படின்னு பதில் சொல்லிச்சு.

அப்போ வேட்டைநாய்கள் சத்தம் அருகில் கேட்டதால பூனை மளமளன்னு மரத்தின்மேல ஏறிக்கிச்சு.

வேட்டைநாய்கள் நரியை சூழ்ந்துடுச்சு; கடைசி நேரத்துல ஒன்னும் தோனாமல் நரி மாட்டிக்கிச்சு.
பூனை நரியைப் பார்த்து கேட்டிச்சு, “என்ன நரியாரே, ஆயிரம் வழியில் ஒன்னுகூட நினைவுக்கு வரவில்லையா” அப்படின்னு.


முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை நரியின் நிலைதான். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே தோன்றாது.

புறா சொல்லும் பாடம்

🕊🕊🕊

சில புறாக்கள் ஒரு கோயில் மாடத்துல தங்கியிருந்தன.


வயது முதிர்ந்த ஒரு புறாதான் தலைவர். தினமும் காலையில்  தலைவர் வழி காட்டி அழைச்சிகிட்டு போகுற இடத்துக்கு போய்  இரை சாப்பிட்டுட்டு மாலையில தங்களோட இடத்துக்குத் திரும்பிடும்.
இதைக் கவனித்த  வேடன் ஒருநாள் இரவு கோயில் அருகிலேயே தரையில் நிறைய தானியங்களைத் தூவி , அதன் மேலே ஒரு வலையை அமைத்து நாண்கு மூலையிலும் முளை குச்சி அடித்து வைத்துவிட்டு போனான்.


அதிகாலையில் எல்லா புறாவும் இரைதேடி கிளம்பும் போது கீழே கொட்டிக்கிடக்கும் அந்த தானியங்களைப் பார்த்தன. ” இங்கேயே நம் தேவைக்கும் அதிகமான தானியங்கள் சிதறிக் கிடக்கின்றன; அதனால் நெடுந்தூரம் பறந்து போய் இரை தேட வேண்டாம்” என்று சில இளம் புறாக்கள் கூறின. அதற்கு தலைமைப் புறா,
” இத்தனை நாளில்லாமல் இன்றைக்கு இவ்வளவு தானியமா; எனக்கு இது சந்தேகமாக உள்ளது. மேலும் நம் முயற்சி இல்லாமல் தானே எதுவும் கிடைத்தால் அதில் ஆபத்து இருக்கலாம்; நான் போய் இரைக்கான இடத்தை தேர்வு செய்து வருகிறேன் ” என்றது.


அதற்குள் இளம் வயது புறாக்கள் ஒன்றுகூடி, “சுலபமாக கிடைப்பதை தலைவர் தடுக்கப் பார்க்கிறார்; வாருங்கள் இந்த தானியங்களை சாப்பிடுவோம் ” என்று கூறி எல்லா புறாக்களையும் தானியங்கள் மீது இறங்கச் செய்தன.


அவ்வளவுதான், அடுத்த நொடி புறாக்களின் கால்கள் வலையில் சிக்கிக் கொண்டன. ஆபத்தை உணர்ந்த புறாக்கள் பொறுமையிழந்து சிறகுகளை அடித்தபடி ” ஆபத்து, காப்பாற்றுங்கள்”  கதறத் தொடங்கின.


அப்போது தலைவர் எல்லோரையும் அமைதிப்படுத்தியது. மேலும்

” நான் சொல்வதை இப்போதாவது கவனமாகக் கேளுங்கள், நாம் வேடன் கையில் சிக்காமல் தப்பிக்கலாம். எல்லாரும் இறந்தது போல நடியுங்கள். வேடன் வலையின் நாண்கு மூலைகளிலும் அடித்து வைத்திருக்கும் முளைக்குச்சியை எடுத்ததும் நான் வேகமாகப் பறந்துவந்து வேடன் தலையில் கொத்துவேன்;அவன் வலிதாங்காது கத்துவான். அதை உங்களுக்கான எச்சரிக்கையாக கருதிஎல்லாரும் ஒற்றுமையாக சிறகடித்து வலையுடன் வானத்தில் பறக்க வேண்டும்” என்று திட்டம் கூறியது.

       சிறிது நேரத்தில் வந்து பார்த்த வேடன் தண்ணீரில்லாமல் புறாக்கள் இறந்துவிட்டதாக எண்ணினான். ” அடடா, இவை உயிருடன் இருந்தால் நல்ல விலைக்கு விற்பதால் நிறைய பணம் கிடைத்திருக்கும். பரவாயிலலை இதாவது கிடைத்ததே என்று வலையின் நாண்கு மூலைகளின் முளைக்குச்சிகளை அகற்றினான். தாமதமில்லாமல் தலைமைப்புறா பறந்து வந்து வேடன் தலையில் கொத்தியது . வேடன் வலியில்

” ஆ..அம்மா” என்று கத்தினான். இந்த ஒலியைக்கேட்ட மற்ற புறாக்கள் படபடவென சிறகடித்து வலையுடன் வானில் பறந்தன. அதன் கீழே வேடன் சிறிது தூரம்”ஐயோ..என் வலை.” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

பறந்த புறாக்கள் ஒரு மலையைக் கடந்து சென்றபோது தலைமைப்புறா கீழிறங்க ஆணையிட்டது. அந்த இடத்தில் ஒரு எலி வளை இருந்தது. வலையுடன் புறாக்கள் இறங்கிதைப் பார்த்த எலி உள்ளே ஓடி பதுங்கியது.


தலைமைப்புறா, “எலி நண்பா,நான்தான் உன் புறா நண்பன் வந்திருக்கிறேன். ஆபத்திலிருக்கும் எங்களைக் காப்பாற்று”  என்று கூறியது.  வெளிவந்த எலி , ” நண்பனான  உனக்கு ஆபத்தென்றால் காப்பாற்றலாம்;  என் சிறிய பற்களால் கடித்து எல்லாரையும் விடுவிக்க முடியாது” என்றது.

“நம் நட்புக்காக இவர்களை நீ காப்பாற்றியே ஆகவேண்டும் ” என்றது புறா.

நண்பனின் வேண்டுதலை மறுக்க முடியாத எலி வலையைக்கடித்து எல்லாரையும் விடுவித்தது.

விடுதலையடைந்த புறாக்கள் எலிக்கு நன்றி கூறிவிட்டு பறந்தன.

அன்புக் குழந்தைகளே, இக்கதை மூலம் நாம் பெறும் படிப்பினை:

உழைப்பில்லாமல் வருபவை ஆபத்து உள்ளவை

அனுபவமிக்க வீட்டில் உள்ள பெரியவர் அறிவுரையைக் கேட்கவேண்டும்

ஒற்றுமையே பலமாகும்; அதுவே வெற்றி தரும்.

துன்பநேரத்தில் நண்பனைக் காக்க வேண்டும்.

சிறியவர்களும் சில நேரங்களில் பெரிய உதவியைச் செய்வார்கள்


மீண்டும் ஒரு கதையுடன் சந்திப்போம். 

Saturday, July 24, 2021

முன்னோர்களின் விஞ்ஞானம்

 நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு


அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.


ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்

உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.


மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .





சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?


நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்

கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .


சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?


கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .


அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத

நீரூற்றுக் கிடைக்குமாம்.

விஜயநகர் பேரரசர்கள்


 


ஒரே மொழி பேசக்கொடிய சோழனும் பாண்டியனும் நாட்டின் எல்லைகளை இரண்டாக வகுத்து கொண்டு ஒருவனை ஒருவன் மாறி மாறி அடித்துக் கொண்டு போர்க் களத்தில் செத்து மடியும் வேளையில், தாங்கள் கட்டிவைத்த கோயில்களுக்கும், செய்து வைத்த அற்புதமான ஐம்பொன் திருமேனிகளுக்கும் அப்படியொரு ஆபத்து வந்து சேரும் என்று கனவிலும் அவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள். 


இருவரும் போரிட்டு ஒரு வழியாக சோழன் சுவடே தெரியாமல் சுத்தமாக அழிந்தே விட, பாண்டியன் சற்று பலம் குன்றி இருந்த நேரத்தில் வடக்கில் இருந்து வந்தார்கள் முஸ்லிம் மன்னர்கள், கோயில்கள் அனைத்தும் அடித்து தரை மட்டமாக்கப்பட்டது, சிலைகள் அனைத்து உடைத்து நொறுக்கப்பட்டது, தடுத்தவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. 


அப்படி ஒரு சம்மவத்தை தமிழ் மக்கள் அது வரை பார்த்தததே இல்லை, ஜென்ம விரோதிகளான சோழனும் பாண்டியனும், சாளுக்கியனும், பல்லவனும் மோதிக்கொண்ட போது கூட ஒருவர் நாட்டை மற்றொருவர் கைப்பற்றும் போது அவர்கள் எழுப்பிய கோயில்களை எதிரி நாட்டவர் தொட்டதில்லை, இவர்கள் யார் புதிதாக? 


எங்கிருந்து வந்தார்கள்? 


அது ஒரு குழுப்பமான காலம், தமிழத்தை ஆண்ட மூன்று பெரிய பேரரசும் வீழ்ந்துவிட்டது. யார் இனி நம்மையும் நம் கோயில்களையும் காப்பாற்றப்போகிறார்கள் என்று தலை மீது தமிழ் மக்கள் கை வைத்து அமர்ந்திருந்த நேரத்தில், துங்கபத்தரை நதிக்கரை ஓரத்தில் அற்புதமான ஒரு ஒளி உதயமானது, முஸ்லிம் மன்னர்களிடம் போராடி தமிழகத்தில் இருந்து அவர்களை முழுவதும் விரட்டி, தமிழகம் முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் விஜயநகர் பேரரசர்கள். 


கர்நாடக மாநிலம் ஹம்பியில் அமைந்திருந்தது அவர்களின் தலை நகர் நமக்கு மேலே இருந்ததால் அவர்களைக் கடந்து தமிழகம் வர முடியவில்லை. பெரிய அரணாக இருந்து தடுத்து நம் ஊரில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் கோயில்களை காப்பாற்றியவர்கள் அவர்கள். தமிழகத்திற்கு அது ஒரு பொற்க்காலம் என்றே சொல்லலாம் பாதியில் நின்ற கோயில்களை முழுமையாக்கியது, விண்ணை முட்டும் ராஜ கோபுரங்களை எழுப்பியது, ஆயிரம் கால் மண்டபங்கள் அமைத்தது ,அந்த மண்டபத்தில் நிற்கும் தூண்களில் ஆள் உயர பிரம்மாண்ட அற்புத சிலைகள் செய்தது என அவர்கள் செய்து வைத்துச் சென்ற வேலைகள் ஏராளம், அற்புதமான மனிதர்கள், அவர்களின் வரலாறு நம்மில் பலருக்கு தெரியவே தெரியாது. பண்டைய ரோம் நகரைக் காட்டிலும் பெரிய நகராக விளங்கிய ஹம்பி கடைசியாக முஸ்லிம் மன்னர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டு, அவர்கள் அங்கு எழுப்பி இருந்த அற்புதமான கோயில்கள் அனைத்தும் இடித்து நொறுக்கப்பட்ட எச்சங்களை இன்றும் நாம் காணலாம். தங்கள் கோயில்களை இழந்து அவர்களை அங்கு தடுத்து நிறுத்தி இருக்காவிடில் இன்றைக்கு இங்கும் எதுவுமே இருந்திருக்காது! அந்த அற்புதமான வீரர்கள் இன்றும் நம்முடைய கோயில்களில் குதிரையின் மீதி வீரமாக தாவிக் கொண்டு தான் இருக்கிறார்கள், திரும்பிப் பார்க்க கூட ஆளில்லாமல்!

நீ எதை தேர்ந்தெடுக்க போய்கிறாய்...?




ஒரு ஊரில் சமையல்காரர் ஒருவர் வசித்து வந்தார் பெயர், ராமு. அவர் சமையல் எந்த அளவுக்குச் சுவையானதோ அந்த அளவிற்கு இனிமையானவர். அந்த ஊரில் அவரை அனைவருக்கும் பிடிக்கும் அத்தகைய பண்பாளன். ராமு சிறு வயது முதலே பல கஷ்டங்களை எதிர்கொண்டான்.


சிறு வயதிலே தன் பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டான். நன்றாகப் படிக்கும் மாணவன் எனினும் அன்றாட தேவைக்குக் கூடப் பணம் இல்லாததால், பள்ளி படிப்பைப் பாதியிலே கைவிட்டான். தனக்கு தெரிந்த சமையலை தொழிலாக மாற்றிக் கொண்டான். தற்போது 50 வருடங்களாகக் கோவில் மற்றும் வீட்டு விசேஷங்களுக்குச் சமைத்து பரிமாறி வருகிறான்.  


அவருக்கு ஒரு பெண் குழந்தை, அமுதா வயது 20. தனக்கு பண கஷ்டம் அவ்வப்போது இருந்தாலும், அதை என்றும் தன் மகளிடம் காட்டிக் கொண்டதில்லை. எந்தக் காரணத்தால் அவன் கல்வி தடை பட்டதோ அதே போன்ற பாதிப்பு தன் மகளுக்கு வரக் கூடாது என ஊரிலே சிறந்த பள்ளியில் படிக்க வைத்தான்.


அமுதாவின் புலம்பல்


அமுதா மிகவும் நன்றாகப் படிப்பாள், வகுப்பில் என்றுமே முதல் மதிபெண் பெற்று தேர்ச்சி அடைவாள். அப்பாமீது அதிக அன்பு கொண்டவள் ஆனால் அவரைவிட அதிகம் படித்தவள் எனக் கொஞ்சம் ஆணவமும் கொண்டிருந்தாள்.


’எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம். இந்தச் சின்ன வயதில் எனக்கு இவ்வளவு கடினமான சூழ்நிலையா’ என அமுதா அடிக்கடி புலம்பிக் கொண்டே இருந்தாள். அவற்றை ராமு கவனித்துக் கொண்டே வந்தான்.


‘ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரச்சனை வந்துவிடுகிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்ன வாழ்க்கை இது?’ என நாளுக்கு நாள் அவள் புலம்பல் இன்னும் அதிகரித்து கொண்டிருந்தது.


ஒரு நாள் ராமு அமுதாவை அழைத்து, ‘ஏன் அம்மா இப்படி புலம்பிக் கொண்டே இருக்கிறாய்? கஷ்டங்கள் அனைவருக்கும் பொதுவானது தான். வாழ்க்கை என்றால் கஷ்டங்கள் இருக்கதான் செய்யும். இதற்காக வாழ்கையை வெறுக்கக் கூடாது’ எனப் புரிய வைக்க முயன்றான்.


‘இல்லை அப்பா, உங்களுக்கு ஒன்னும் தெரியாது. இந்தக் காலத்துல எங்களுக்கு 1008 பிரச்சனை இருக்கு. அதெலாம் சொன்ன உங்களுக்குப் புரியாது. நீங்க இன்னும் உங்க காலத்துலையே இருக்கீங்க’ என்றாள் அமுதா.


‘காலம் என்னம்மா காலம், கஷ்டங்கள் என்றும் ஒன்று தான். சொல்லப் போனால் அன்று எனக்குக் கிடைக்காத பல இன்பங்களும் வாய்ப்புகளும் இன்று உங்களுக்கு மிகவும் எளிமையாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாம் என்றும் வாழ்வின் இன்பங்களை எண்ணி பார்க்க வேண்டும் துன்பங்களை அல்ல’ என்று மீண்டும் புத்தி மதி கூற முயற்சித்தான்.


‘அப்பா சமையல் போல எல்லாம் எளிதுன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது’ எனக் கூறினாள் அமுதா. அவள் கொண்ட ஆணவம் ராமு கூறும் உண்மைக்குச் செவி சாய்க்க விடாமல் அவளைத் தடுத்தது.


மூன்று பொருட்கள்


ராமுவிற்கு புரிந்து விட்டது, இனி அமுதாவிடம் பேசிப் பயன் இல்லை என்று. ‘சரி அம்மா. எனக்குப் புரியவில்லை தான். என்னுடன் சமையல் அறைக்கு வா’ என அமுதாவை அழைத்துச் சென்றான் ராமு.


அடுப்பில் மூன்று பாத்திரங்களை வைத்தான். அதில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்தான். ‘என்ன அப்பா செய்றீங்க? எதற்கு என்ன கூட்டிட்டு வந்தீங்க? படிக்க நிறைய இருக்கு நான் போகணும்’ எனப் பொறுமையின்றி தவித்தாள்.


‘சிறிது நேரம் பொறு அமுதா’ என அவளை நிதானப் படுத்தினான் ராமு. ஒரு உருளைக்கிழங்கு ஒரு முட்டை மற்றும் சிறிது காபி கொட்டைகளை எடுத்து வந்தான். ‘அமுதா இந்த மூன்றையும் ஒரு ஒரு பாத்திரத்தில் போடு’ என மூன்று பொருட்களையும் அமுதாவின் கையிலே கொடுத்தான். கொத்திக்கும் நீரில் மூன்று பொருட்களையும் போட்டபின், அடுப்பின் தீயை இன்னும் அதிக படுத்தினான் ராமு. சிறிது நேரம் கழித்து மூன்று பாத்திரங்களையும் எடுத்து உள்ளே போட்ட பொருட்களைத் தட்டில் வைத்தான்.   


‘அமுதா, இதோ இந்த உருளை கிழங்கு இப்பொழுது எப்படி உள்ளது’ என ராமு கேட்க, ‘மென்மையாகி விட்டது அப்பா’ என்றாள் அமுதா.


‘இந்த முட்டை?’  


‘கீழே போட்டால் உடையும் முட்டை, இனி உடையாதது போல அதன் புற பகுதி வலு பெற்று உள்ளது அப்பா.’


‘சரி அமுதா அந்தக் காபியை ஊற்று’


இருவரும் காபியை ஊற்றிக் குடித்தனர். காபியின் சுவை அமுதாவிற்கு இன்பம் அளித்தது.


‘இது எப்படி உள்ளது?’ கேட்டான் ராமு.


‘மிகவும் அருமை அப்பா’ அமுதா சிரித்துக் கொண்டே கூறினாள்.


‘இது தான் வாழ்க்கை அமுதா. வாழ்கையின் துன்பங்கள் வெந்நீரை போலச் சுடும். நாம் கடுமையாக அந்த உருளைக் கிழங்கைப் போல இருந்தால் மென்மையாகி விடுவோம். மென்மையான முட்டையைப் போல இருந்தால் கடுமையாகி விடுவோம். ஆனால், அந்தக் காபி கோட்டைகள்போல வெந்நீரோடு கலந்து அவற்றை ஏற்றுக் கொண்டால், வாழ்க்கையே சுவையாகி விடும். நீ எதைத் தேர்ந்தெடுக்க போகிறாய்?’ என்றான் ராமு.


‘காபி கோட்டைகள். அதுவே வாழ்கையை மகிழ்ச்சியாக வாழுவதற்கு வழி, உணர்ந்துக் கொண்டேன். 


உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதற்கு மன்னித்து விடுங்கள் அப்பா. அறிவுக்கும் கல்விக்கும் சம்மந்தம் இல்லை. நீங்கள் தான் சிறந்த அப்பா!’ எனத் தன் தவறை உணர்ந்து வாழ்வின் உண்மையான ரகசியத்தை மனதால் ஏற்றுக் கொண்டாள் அமுதா.

Friday, May 28, 2021

விதியை மதியால் வெல் ..!

 ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். 

இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். 

அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார்.

 அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார். 

நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றியும் அமைக்கலாம்.

Friday, July 10, 2020

அன்பை வளர்க்கவும், பகைமையை ஒழிக்கவும்

நீதி – அன்பு 

உபநீதி – மன்னிக்கும் மனப்பான்மை

 

பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் வகுப்பறையில் உள்ள குழந்தைகளுடன் ஒரு விளையாட்டை விளையாட தீர்மானித்தார்.

ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையையும், ஒரு பிளாஸ்டிக் பையில், சில உருளைக் கிழங்குகளை அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வரும்படி கூறினார். கிழங்குகள் அனைத்திற்கும் பிடிக்காத ஒருவரின் பெயரை இரகசியமாக சூட்டும்படி கூறப்பட்டது. ஆதலால், ஒவ்வொரு குழந்தையின் பையிலும் அவன் / அவள் வெறுத்த நபர்களுக்கு தகுந்தாற் போல கிழங்குகள் இருந்தன. ஆவலுடன் விளையாட நினைத்த எல்லாக் குழந்தைகளும், தங்களுக்கு பிடிக்காதவர்களின் பெயர்களை கிழங்குகளுக்கு சூட்டி, பைகளில் எடுத்து வந்தனர். சிலரின் பைகளில் இரண்டு கிழங்குகளும், சிலரின் பைகளில் மூன்றும், மற்றும் சிலரின் பைகளில் ஐந்து கிழங்குகளும் கூட இருந்தன. ஒரு வாரத்திற்கு எங்கு சென்றாலும்,  (கழிவறைக்கும் கூட) அந்தப்  பையை தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென்று ஆசிரியர் கூறினார். விளையாட்டு தொடங்கியது.

சில நாட்கள் சென்றதும், அனைத்து குழந்தைகளும் அந்த அழுகிய கிழங்குகளின் துர்நாற்றம் தாங்காமல், புகார் கூற ஆரம்பித்தனர். அதிகக் கிழங்குகளை வைத்திருந்த குழந்தைகளின் பைகள் கனமாக இருந்தன. ஒரு வாரத்திற்குப் பிறகு, விளையாட்டு முடிந்ததைக் குறித்து குழந்தைகள் பெரு மூச்சு விட்டனர். அதிசயமான கிழங்கு விளையாட்டின் விளைவை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன், குழந்தைகள் ஆசிரியரை சூழ்ந்து கொண்டனர்.

ஆசிரியர், “கிழங்குகளை சுமந்த இந்த ஒரு வாரம் உங்களுக்கு எப்படி இருந்தது?” என்று கேட்டார். அனைத்துக் குழந்தைகளும் ஒரு வாரமாக எங்கு சென்றாலும் கனமான, நாற்றமான பைகளை சுமந்ததை குறித்து வெறுப்பு உணர்வை வெளிகாட்டி புகார் செய்தனர்.

ஆசிரியர் பொறுமையாக அவர்களின் புகார்களைக் கேட்டு, விளையாட்டின் குறிக்கோளை நிதானமாக எடுத்துச் சொன்னார்.

ஆசிரியர் கூறியது –  மனதில் ஒருத்தரை வெறுத்தால், இது மாதிரியான சூழ்நிலை தான் ஏற்படுகின்றது. நீங்கள் எங்கு சென்றாலும், இந்த புழுங்கிய நாற்றம், புற்று நோய் போல் பரவுகின்றது. ஒரு வாரத்திற்கு அழுகிய கிழங்குகளின் நாற்றத்தையே தாங்க முடியவில்லையென்றால், காலம் முழுதும் வெறுப்பை மனதில் வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது???

நீதி:

வெறுப்பை மனதிலிருந்து அகற்றி வாழ்ந்தால், காலம் முழுதும் பாவங்களைச் சுமக்காமல் இருக்கலாம். மற்றவர்களை மன்னிப்பது சரியான மனப்பான்மை! முழுநிறைவான மனிதனை நேசிப்பதைக் காட்டிலும், குறைகள் இருக்கும் மனிதனை முழுமையாக நேசிப்பது தான் உண்மையான அன்பு.

 


குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !