Showing posts with label புதிய சிறுகதை. Show all posts
Showing posts with label புதிய சிறுகதை. Show all posts

Wednesday, December 19, 2018

ரலி மிதி வண்டி சைக்கில்

யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லூரூடாக பருத்திதுறைக்கு போகும் வீதியில் 8கி மீ தூரத்தில் கல்வியங்காடு.கிராமம் உள்ளது ஒரு காலத்தில் கள்ளிக்காடாக் இருந்த 700 ஏக்கர் கொண்டதாக ஒருந்த இக கிராமத்தின் பெயர் , காலப் போக்கில் மருவி கல்வியன்காடு ஆயிற்று . இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். கால்நடைச் செல்வங்களாக கறவைப் பசுக்களும், ஆடுகளும் இகிரமத்தில் வளர்க்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் பரராஜசேகர மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த போது கல்வியங்காடு அம்மன்னனின் அவைப் பிரதிநிதியான சூரியமூர்த்தி தம்பிரானின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் அமைந்தது எனக் கல்வியங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது.. கல்வியங்காடு சந்தைக்கு அருகே பல வருடங்களாக பலசரக்கு கடை நடத்துபவர் இராசையா அவரின் மகன் சிவகாந்தன் (காந்தன்) 8 கி மீ தூரம் நடந்து சென்று வண்ணார்பன்னையில் உள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றான். அவ்வளவு தூரம் நடந்து சென்று கல்வி பயில அந்தக் கல்லூரியை தெரிந்து எடுக்க வேண்டிய காரணம், . காந்தனின் தாய் மாமன் சிவலிங்கம் (சிவா) அந்த கல்லூரியில் படித்து,. அதன் பின் கொழும்பு பல்கலைக் கழகம் சென்று படித்து பொறியாளரானவர் 

கொழும்பில் உள்ள வோக்கர்ஸ்(Walkers) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்தார் . தன்னைப் போல் தன். மருமகனும் அக்கல்லூரியில் படித்து பொறியாளராக வரவேண்டும் என்பது அவர் விருப்பம் அதன் விளைவே காந்தன் என்ற சிவகாந்தன் மூன்று கிலோ நிறை உள்ள புத்கங்களை சுமந்து கொண்டு, வியர்வை சிந்த கல்லூரிக்கு படிக்கச் செல்வது அவனுக்கு கிடைத்த தண்டனை . கோப்பாயில் இருந்து வரும் அவனோடு படிக்கும் அவனின் இரு நண்பர்கள் சொந்தத்தில் சைக்கில் வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு போதும் காந்தனை தங்களோடு சைக்கிளில் கல்லூரிக்கு வரும்படி கேட்டதில்லை. 

**** 

யாழ்ப்பாணம், ஒரு விவசாய மாவட்டம். மற்றும் ஒரு பெரிய நடுத்தர மக்கள் தொகை ஆகியவை, பாரம்பரிய சைக்கில் கலாச்சாரத்தி லிருந்து ஒரு மோட்டார் சைக்கில் கலாச்சாரத்துக்கு , மாறியுள்ளது . யாழ்ப்பாண மக்களை சோம்பேறியாக்குவதற்கு புலம்பெயர்ந்தோரரே காரணம் என ஊடகங்கள் குற்றம் சாட்டின. சில பல்கலைக்கழக மாணவர்கள் தமது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில், மோட்டார்-பைக் மூலம் தனது வளாகத்திற்கு செல்கிறார். 1983 இல் உள்நாட்டுப் போரில் வெற்றிபெறுவதற்கு முன், ஒவ்வொரு வீட்டிற்கும் அநேகமாக ராலே பிராண்ட் சைக்கிள் பின்னுக்கு கரியரும், முன்னுக்கு ஒரு பாஸ்கட்டும் இரவில் வெலிங்டன் தியேட்டரில் இரண்டாம் ஷோ போக்குவரத்துக்கு தேவையான வடிவமாக இருந்தது , ஒரு கிராமத்திற்கு சராசரியாக ஒரு மோட்டார்-பைக்கைக் கொண்டது. வடக்கில் மோதல் கணிசமான பகுதியில் சிறிய அல்லது எரிபொருள் இல்லாமல், குடியிருப்பாளர்கள் எல்லா இடங்களிலும் பயணம் செய்ய சைக்கிள்களைப் பயன்படுத்தினர். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிநோச்சிகு பலர் சைக்கிளில் பயணித்தனர். அதே நேரத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் தமது தினசரி போக்குவரத்துக்காக சைக்கிள்களையும் பயன்படுத்தினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் . பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தில் 32 கி மீ தூரத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சைக்கிளில் சென்றார். . உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ஒவ்வொரு வீட்டிலும் யாழ்ப்பாணத்தில் சராசரியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இன்று வரை யாழ்ப்பாணத்தில் சுமார் 7௦௦௦0 மோட்டார் பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 20% க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மோட்டார் பைக்கை வைத்திருக்கிறார்கள்.. முன்னதாக ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் ஒப்பிடும்போது எரிபொருள் நுகர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மக்கள் அன்றாடம் பொருளாதார ரீதியாகவும் பணக்காரர்களாகவும் பணியாற்றியுள்ளனர், அத்தியாவசியமான விடயங்களில் தமது பணத்தை செலவழித்துள்ளனர். இன்று யாழ்ப்பாண இளைஞர்கள் கனடா . அவுஸ்த்ரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் ஈழத்து புலம்பெயர்ந்தோரிடம் இருந்து சும்மா வரும் பணத்தில் வாழ்கின்றனர், மற்றும் சோம்பேறியாகி பொதை மருந்துக்கு அடிமையாகி பாலியல் வன்முறை செய்து வருகின்றனர். குற்ற செயலைப் புரிந்து விட்டு சில மாபியா குழுக்கள் விரைவில் தப்பி ஓட பெரும் உதவியாக மோட்டார் சைக்கில் இருக்கிறது என்பது பலரின் கருத்து 

1965 ஆம் ஆண்டில் 500 ரூபாயுக்கு வாங்கிய பாவித்த ரலி சைக்கில் இராசையா குடும்பத்து சக்குப் போடு போட்டது . இராசையா அசைகடி மகன் பாவிகாதபோது சனி ஞாயிறுகளிலும் விடுதலை தினங்களிலும் யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி சந்தைகளுக்கு பொய் வர அதை பாவித்தார். தோடு மாணவி செல்லம்மாவை பின் வியை கரியரில் ஏற்றிகோடு அடிக்கடி நல்லூருகு போய் வருவார். இராசையா குடும்பத்திற்றகு ரலி சைக்கில் செய்த சேவைக்கு பிரதி உபகாரமாக அதை துடைத்து செயினுக்கு எண்ணை பஊசி புது சைக்கில் போன்ற தொற்றத்தோடு வைத்திருப்பதில் திருப்தி அடைந்தான் காந்தன். எவரும் இரவலுக்கு சைக்கிளை பாவிக்க கேட்டால் அவன் கொடுக்க மறுத்து விடுவான் டயரில் காற்று போய் விட்டால் காற்றடிக்கும் பம்பும் சைக்கிளில் இருந்தது. அல்லாவிட்டால் காற்றடிக் முருகேசு கடையில் 50 சதம் கொடுக்க வேண்டி வரும் சைகிலுக்கு எதாவது பெரிய பிரச்சனை வந்தால் கோப்பாய் - இருபாலை சந்தியில் உள்ள முருகேசுவின் சைக்கில் திருத்துவதும் வாடகைக்கு விடும் கடைக்குப் போவான் .முருகேசு சைக்கில் ரிப்பேர். பஞ்சர் ஓட்டுவது போன்றவற்றில் இருந்து வரும் வருமானத்தோடு ஒரு மணித்தியாலதுக்கு ஒரு ரூபாய் வீதம் சைக்கில் வாடகைக்கு விட்டு வருமானம அவருக்கு வந்தது . பாவித்த சைக்கில்கள் விற்கும் தரகு வேலையும் முருகேசு பார்த்தார் நல்லூர் திருவிழா காலத்தில் வாகனம் பொய் வர தடை(Barrier) போட்ட இடத்துக்கு அப்பால் சைக்கிள்கள் எடுத்து செல்ல முடியாது . அந்த இடத்துக்கு அருகே சைக்கில்கள். செருப்புகள் பாதுகாத்து கொடுக்கும் கடை ஒன்றை தன மகனின் பொறுப்பில் வைத்திருந்தார். நல்ல பிரையாசைக்காரன் 

காந்தன், ரெலி தம்பிக்கு ஏதும் பரச்சனை என்றால் முருகேசுவின் கடைக்கு தம்பியை கூட்டிச் செல்வான். ரலி சைக்கிலை இரபிசையா குடும்பத்தில் ஒருவராக கருதி “ரலி தம்பி” என்று அழைத்தனர் 
ஓரு நாள் காந்தன் முருகேசுவின் கடைக்கு சைக்கிளில் சென்ற பொது: 

“என்ன காந்தன் சைக்கிலை புது சைக்கில் போல வைத்திருகிறீர். கவனமாக பார்க்கிறீர் போல இருக்கு எவ்வளவுக்கு வாங்கினனீர் “? 

“ஓம் அண்ணை மூன்று வருசத்துக்கு பாவித்த சைக்கிலாக அப்பா 1965 இல் வாங்கித் தந்தவர் . எதோ 500 ரூபாய் என்று அப்ப சொன்னது எனக்கு நினைவு இருக்கு.” 

“இப்ப சைக்கிளை விற்கிறது என்றல் சொல்லும் இரண்டு மடங்கு காசு வாங்கித் தான் . இப்ப எல்லோரும் சைக்கில் பாவிக்கிறது குறைவு” 

“நான் என் ரலி தம்பியை விற்க மாட்டேன் அதைப் பற்றி கேளாதையும்”, பதில் சொல்லி விட்டு அங்கு நிற்காமல் காந்தன் போய் விட்டான். 
காந்தனின் மாமா சிவா கனடாவுக்கு புலம பெயர்ந்து பொய் சில வருடங்களுக்குப் பின் ஒரு தடவை 1990 இல் ஊருக்கு வந்த பொது காந்தன் சைக்கிலில் யாழ்ப்பாணம் பல்கலை கழகம் போய் வருவதை கண்டார் . தன் சொந்த செலவில் யமஹா அல்பா (Yamaha Alpha) மோட்டார் சைக்கிலொன்று இரண்டு இலட்சத்துக்கு இராசையா குடும்பத்துக்கு வாங்கிக் கொடுத்தார். அவர் தன மருமகன் காந்தன் தன மகள் மைதிலியை திருமணம் செய்யப் போவதுக்கு கொடுக்கும் சீதனத்தின் அட்சரமாக அந்த மோட்டார் சைக்கிலை வாங்கிக் கொடுத்தார், 

விலை மதிப்பு கூடிய மோட்டார் சைக்கில், இராசையா குடும்பத்தில் குடி புகுந்து ரலி தம்பியை புறகணிக்க வைத்தது ரலி சைக்கில் ஸ்டோர் ரூமில் கவனிப்பார் அற்று கதூசி படிந்து கிடந்தது. 
சிறு வருடங்களுக்கு பின் இராசையாவும் காந்தனும் தங்களின் தேகநலத்தில் மாற்றம் ஏற்றப்ட்டதை கண்டனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அதிகமாக தாகமெடுத்தல் , அளப்பரிய பசி. சோம்பல் . பார்வை குன்றியதைக் கண்டு தம் குடும்ப் வைத்தியரிடம் இருவரும் போனார்கள் . பல பரிசோதனைகளுக்குப் பின் ஒரு நாள் டாக்டர் அவரகள் இருவரையும் அழைத்துப் பேசினார்: இராசையா. 

“ இராசையா உமக்கும் உம் மகனுக்கு நீரழிவு நிலை 2 வியாதி (Diabetes Type 2) இருக்கிராதை பரிசொதனை காட்டுகிறது 

“டாக்டர் இந்த வியாதி எங்கள் பர்மபரையில் இல்லையே:: 

"இருக்கலாம். உங்கள் இருவருக்கும் மோட்டார் சைக்கில் வான்கிய பின் தேகப்பியாசம் முந்திபோல் இல்லை. எடுக்கும் உணவும் மாறு பட்டிருக்கு. சோறு, மா சத்து உள்ள உணவு அதிகம் சாபிடுகிறீர்கள் போல் இருக்கு. இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நீர் சந்தைக்கும் மகன் படிப்புக்கும் எப்படி .போகிறீர்கள் ? நடந்தா அல்லது சைக்கிலிலா: 

“இல்லை கனடாவில் இருக்கும் என் மச்சான் வாங்கி தந்த இரு லட்கசம் பரறுமதியான் மோட்டார் சைக்கிளில் டாக்டர்”. 

“அப்போ நீங்கள் முந்தி வைத்திருந் ரலி சைக்கிலுக்கு என்ன நடந்தது 

“ அதை நாங்கள் இப்போ பாவிப்பதில்லை . எங்கள் வீட்டு ஸ்டாரில் ரூயல் ஒரு மூலையில் கிடக்குது பாவிக்கிறோம்: 

“அங்கு தான் உங்களுக்கு பிரச்சனை . யங்கள் இருவருக்கும் போதுமான தேகப்பியாசம் இல்லை “ 

“டாக்டர் மோட்டார் சைக்கிளில் சொகுசாக, விரைவில் பயணம் செய்யலாம்” 

“சொகுசு வாழ்கையை வருத்தம் தேடி வரும். நீரழிவு வியாதியை பணக்காரர்களின் வியாதி என்றும் சொலவாரகள. இது காலப் போக்கில் நீரகத்தை பாதிக்கும் விவசாயிகளுக்கு இந்த வியாதி குறைவு. காரணம் அவர்கள் வியர்வை சிந்தி வேலை செய்கிறார்கள்; இப்போ வீட்டில் சைக்கில் வைத்து கொண்டு சொகுசாக மோட்டார் சைக்கில் ஓடுகிறீர்கள். அதுவும் ஒரு காரணம் உங்களுக்கு நீரழிவு வருவதுக்கு. இனி மோட்டோர் சைக்கில் பாவிக்காமல் உங்களுடலைய ரெலி சைக்கிளை பாவியுங்கள். ஒரு நாலு மைல்கள் தினமும் அந்த சைக்கிளில் ஓடுங்கள். உங்கள் வேலைக்கு சைக்கிளில் போங்கள் .தூரப் பயணத்துக்கு மோட்டார் சைக்கிலைப் பாவியுங்கள் இதை செய்து ஆறு மாதத்துக்கு பின் பின் என்னை வந்து பாருங்க” என்றார் டாக்டர் 
டாக்டரிடம் இருந்து வீடு திரும்பிய இராசையாவும் காந்தனும் முதலில் செய்த காரியும் ஸ்டார் ரூமுக்குள் கவனிப்பாறற்று கிடந்த ரலி தம்பியை தூசி தட்டி பாவிப்புக்கு ஆயித்தம் செய்தார்கள். இராசையாவின் மனைவி செல்லம்மவுக்கு அவர்கள் செய்வதின் அர்த்தம் புரியவில்லை 
(யாவும் புனைவு)

என் சுதந்திரம் உங்க கையில

டில்லியின் அந்த பரபரப்பான சிக்னலில் வரிசையாகக் கார்கள் நின்றவுடன் வியாபாரம் களை கட்ட ஆரம்பித்தது. 

இன்னும் ஒரு சிக்னல் தான். இந்தியா கேட் போயிடலாம். நாளை மறு நாள் சுதந்திர தினம். அதனால லைட் அலங்காரம் இந்தியா கேட்லேருந்து ராஷ்டிரபதி பவன் வரைக்கும் அழகா இருக்கும். 

பேரனிடம் சொல்லிக் கொண்டே தன் டிரைவர் சீட் கண்ணாடியைக் கீழிறக்கி வெளியே பார்த்துக் கொண்டிருந்தார் சோமசுந்தரம். 

'குப்பாரா லேலோ'. சிறு குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த தம்பதியரை தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தான் பலூன் வியாபாரி ஹிந்தியில். 

அவனுக்குப் பின்னால் 'கிலோனா லேலோ' என தேசியக் கொடி வரையப்பட்ட விளையாட்டுச் சாமான்கள் விற்பவர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். 

முன்புறக் காரிலிருந்த பெண்ணிடம் 
மோக்ரா மோக்ரா என மல்லிகை விற்றுக் கொண்ட்டிருந்தாள் பூக்காரி. 

அத்தனை வியாபாரிகளுக்கும் நடுவில் ஒரு குரல் மட்டும் கணீரென ஒலித்தது. அது பத்து வயது மதிக்கத்தக்க தொப்பி விற்கும் சிறுவனின் குரல். 

வாங்குங்க வாங்குங்க என் சுதந்திரம் உங்க கையில. வில பத்தே ரூபா தான். தெளிவான ஹிந்தியில் கூவிக் கொண்டிருந்தான். அவனின் வித்தியாசமான அறை கூவலினால் ஈர்க்கப்பட்டு ஓரிருவர் அவனைக் கார் அருகே அழைத்து வாங்குவது தெரிந்தது. 

சிக்னல் விழுந்ததால் கிளம்ப வேண்டிய நிர்பந்தம். ஆனால் ஏனோ மனம் மட்டும் சிக்னல் சிறுவனிடமே இருந்ததால் சிறிது தூரத்தில் இருந்த சர்வீஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு பேரனுடன் சிக்னலுக்கு வந்தார் சோமசுந்தரம். 

சுதந்திரப் போராட்டத் தியாகி சண்முகத்தின் மகனானா சோமசுந்தரம் அந்த சிக்னல் சிறுவனுக்கு ஹிந்தியில் அறிவுரை கூற ஆரம்பித்தார். 

இந்தியாவுக்குக் கெடச்ச சுதந்திரம் எல்லாருக்கும் பொது தம்பி. அதனால அத ஒரு பொருள் போல நெனச்சி நீ சொல்றது எனக்கு சரியா படல. உன்னோட சுதந்திரத்த நாங்க எப்போ எடுத்தோம். திருப்பிக் கொடுக்க. 

ஏதோ நீ என்னோட பேரன் மாதிரி இருக்கறனால இத சொன்னேன். நீ சாதாரணமா தொப்பி தொப்பின்னே விக்கலாம். எல்லாரும் வாங்குவாங்க. 

நானும் வேணும்னாலும். என் பேரனுக்காக ஒரு தொப்பி வாங்கிக்கிறேன். 

எதையுமே காதில் வாங்காதது போல் அந்த சிறுவன் பேரன் சமீரைப் பார்த்து 
பிரதர் என் பேரு வைபவ். என் கிட்ட உள்ள இந்த கடைசி ஆறு தொப்பியையும் நீங்களே வாங்கிட்டீங்கன்னா எனக்கு நாளைக்கு ஒரு நாள் லீவு கெடைக்கும். நான் நிம்மதியா தூங்குவேன், குருத்வாரால பண்டாரா(அன்னதானம்) சாப்பிடுவேன், இந்தியா கேட் ல போய் லைட் அலங்காரமெல்லாம் பாத்துட்டு வருவேன். 

என்னோட வீடு அதோ தெரியுதுல்ல. அந்த பிரிட்ஜுக்கு கீழ உள்ள பிளாட்பாரம் தான். நான் இப்போ பூராத்தையும் விக்கலேனா நாளைக்கு காலேல இந்த சாமான் கொடுக்கற ஏஜெண்ட் ஐயா என்னய மறுபடி வேலைக்கு வரச் சொல்லிடுவாறு. அதனால தான் நான் அப்டி சொல்லி வித்தேன். உங்க தாத்தா சொன்னது எனக்கு புரியல. 

நினைச்ச நேரத்துக்கு நினைச்ச இடத்துக்கு போக முடிந்த பேரன் சமீருக்கு இருவரின் பேச்சும் புரியவில்லை. 

தாத்தா இவன் கிட்ட உள்ள எல்லா தொப்பியையும் நாமளே வாங்கிக்கல்லாம். நூறு ரூபாய் கொடுத்தார் தாத்தா. 

மீதி நாப்பது ரூபாய்க்கு நாளைக்கு இந்தியா கேட்ல பானி பூரி சாப்பிடு. சூப்பரா இருக்கும். நான் இப்போ சாப்பிட போறேன். என்ஜாய் யுவர் ஹாலிடே பிரதர். சொல்லிவிட்டு திரும்பி காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சமீர். 

சரிபிரதர் திரும்பவும் சிக்னலில் சந்திப்போம். சந்தோஷத்துடன் நடந்தான் வைபவ். 

சுதந்திரத்தின் புதிய அர்த்தத்தைப் புரிந்தவராக பேரனுடன் நடந்தார் சோமசுந்தரம் தாத்தா.

பறக்கும் ட்ரெயின்

நித்தம் ஒரு பொழுதும் கவலைகள் அவனை ஆட்கொண்டே இருந்தன.. நாளுக்கு நாள் அது பெருகி கொண்டே இருந்ததை தவிர குறைந்த பாடில்லை...ஏன் இந்த கவலைகள் எதற்கு இந்த குழப்ப சூழ்நிலை என ராமுக்கு இன்னும் தெளிந்த பாடும் இல்லை.. இதில் இருந்து எப்படி விடுபடுவது என்றும் தெரியவில்லை.. 

எல்லோரும் போல் தான் நானும் இருக்கிறேன்..எனக்கு ஏன் இந்த வேலை நான் ஏன் இப்படி செய்கிறேன்.."நான் பாட்டுக்கு என் வேலையை பாக்காம,நான் ஏன் இப்படி ஆனேன்",என ஒவ்வொரு பொழுதும் அவனுடைய எண்ணங்கள் சிந்தனைகள் இவ்வாறே ஓடி கொண்டு இருந்தன... 


ஐ. டி கம்பெனியில் வேலையில் அமர்ந்து 6 மாத காலம் கூட முழுவதாய் பூர்த்தி அடையவில்லை...அதற்குள் வாழ்க்கையில் ஏதோ தொலைத்து விட்டாமோ? என்றொரு கவலை ராமுக்கு.. 
ஒரு மாறுதலாக எண்ணி ஏதாவது செய்ய வேண்டும்..என்றொரு சிந்தனையும் இருந்தது.. 

என்ன செய்யவது படித்த படிப்பு,அதற்கு வாங்கிய கடன், அம்மாவின் நகை,அப்பாவின் ஆஸ்துமா போன்றவை ராமுவை இன்னும் அந்த ரோதை கொண்ட நாற்காலியிலே அமர செய்து..அதே லெனவோ டெஸ்க்டாப்,அதே எம்.எஸ் எக்செல்,தினமும் அதே ஒரு சுழற்சி..மறு நாளும் அதே..என அவனுடைய வாழ்க்கை சுழன்று கொண்டு இருந்தது.. 
அந்த 18டிகிரி செல்சியஸ் ஏ.சி குளிரும் அவனுக்கு ஒரு நெருடலாக இருந்தது.. 
மனம் ஒரு இடத்தில் இருப்பு கொள்ளாமல் அங்கும் இங்கும் தடுமாறியது.. 

இவ்வளவு நெருடல்கள் இருந்தும் அவன் வெளிக்கொணர முடியாமல் தினசரி அலுவல்களை தொடர்ந்தான்.. 
பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் ஒரு கபட சிரிப்போடு அனைத்தையும் கடந்து சென்றான் ராம்...அந்த கபட நிலைக்கு காரணம் அவனுடைய கடந்த காலம் குடும்பம்,அப்பா, அம்மா,கடன்...இது எல்லாவற்றிற்காகவும் தான்... 


அது ஒரு திங்கட்கிழமை வழக்கம் போல் சுழற்சியை தொடர,வேக வேகமாக அந்த சப்வேயில் கூட்டத்துடன் கூட்டமாக ஓடி கொண்டு இருந்தான் ராம்..5 ரூபாய் மின்சார ரயில் டிக்கெட் ஓடும் ஒட்டத்திலே ஆன்லைனில் பதிவு செய்தாயிற்று... இவன் போவதற்குள் ட்ரெயின் வந்து விட்டது..செய்வது அறியாமல் கிராசிங்கில் இறங்கி அந்த ட்ரைனை பிடித்தான் ராம்.. 

ஒரு இடம் காலியாக இருக்க வயதான முதியவர் உட்கார போவதற்குள் போய் உட்கார்ந்து காதிலே ஹெட் போனை மாற்றினான்..அவரும் ஒன்றும் சொல்லாது கலியுகம் என்று தலையில் தட்டி கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார்... 

"ராஜாலி நீ காலி"..என பாட்டு ஹெட் போனில் ஒலிக்க பறக்கும் ட்ரெயின் டைட்டில் பார்க் நோக்கி பறந்து கொண்டு இருந்தது..பாட்டு கேட்டு கொண்டும் தனது தலைகளை இசை கேற்ப அசைத்து கொண்டும் கண் மூடிய நிலையில் இருந்தான் ராம்.. 

ட்ரெயின் சென்று கொண்டே இருக்க இறங்க வேண்டியவர்கள் எல்லாம் இயந்திரம் போல அந்தந்த நிறுத்தங்களில் இறங்கி கொண்டு இருந்தார்கள்...ஒரு சில நிமிடம் கழித்து,பாடல் "வை வை வை வைபய் என்ன இழுக்குற"... என மாற அய்யயோ இந்த பாட்டா என மாற்றுவதற்காக கண் விழித்தான்..ராம்.. 

ஆச்சரியம் ட்ரைனில் இவனை தவிர வேறு யாரும் இல்லை..ஹெட் போனை அவிழ்த்து மொபைலோடு சேர்த்து தன் பையில் வைத்தான் ராம்..என்ன நடக்கிறது என்ன செய்வது என்று புரியவில்லை.. ஜன்னல் வழியே எட்டி பார்த்தான் ஒரே வெள்ளை யாக தெரிந்தது. அப்போது "நீங்கள் இறங்க வேண்டிய இடம்,ராம் இறங்கி கொள்ளுங்கள்".என எப்போதும் கேட்கும் அந்த ட்ரைனின் கம்ப்யூட்டர் ரெகாட் சொன்னது.. 

ராம் இறங்கி நடந்தான் அங்கேயும் வெள்ளையாகவும்,ஒரே புகை மூடமாகவும் இருந்தது...உடனே கூகுள் மாப்பில் லொகேஷன் ஆன் செய்து பார்த்தான்.. ஒன்றும் லோட் ஆக வில்லை..அப்போது அவன் செல்லில் அது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போக வழி காண்பித்தது..அதன் படி அவன் நடந்தான்..நெடுந்தூரம் போல இருந்தது,அந்த வெள்ளை பனி மூட்டத்தில் அவன் தொடர்ந்து அதில் காண்பிக்கும் ரைட்,லெப்ட் களை பார்த்து சரியாக நடந்து கொண்டு இருந்தான்... 

மீண்டும் போன் சிணுங்கியது,யூ ரீச்சிட் தி பிளேஸ் இன் 2 மினிட்ஸ்...ஒரு வழியாக அந்த இடைத்தை அடைந்தான் ராம்.. 
ஓரு கருப்பு நிற கதவு அந்த வெள்ளை விசித்திர இடத்தில்,உள்ளே நுழைந்தான்..வழக்கம் போல அதே கருப்பு நிற லெனவோ டெஸ்க்டாப்,அதை பார்த்து சற்று முகம் சுழித்தான்.. இருந்தாலும் அந்த ரோதை நாற்காலியில் அமர்ந்து டெஸ்க்டாப் பை பார்த்தான்.. 

"அதில், வெல்கம் ராம்,"... என்று இருந்தது கண்டினு டு கிளிக் செய்யவும்,கிளிக் செய்தான்... அதில் பெயர்,அட்ரஸ்,பேங்க் டீடெயில்ஸ்,போன்ற காலம் இருந்தது அனைத்தையும் பில் செய்தான்... அடுத்து 
உங்களுக்கு தேவைப்படும் பணத்தொகை என்றொரு ஆப்ஷன் ஆச்சரியமாக இருக்க, லோன்,நகை, அப்பா மெடிக்கல் பில் என எல்லாத்தையும் கூட்டி கூட்டி ஒரு 2 கோடி என டைப் செய்தான்..மீண்டும் கிளிக் செய்தான்.. ஆர் யூ சூயர் டூ க்ஷேவ் 
என இருக்க மீண்டும் ஒரு முறை பேங்க் டீடெயில்ஸ்,ஐ. எப். சி கோட், எம்.ஐ.சி, ஆர் நம்பர் எல்லாவற்றையும் டபுள் செக் செய்தான்...பிறகு க்ஷேவ் செய்தான் ராம்.. 

"தான்க் யூ ராம்,அமௌண்ட் வில் பி ட்ரான்ஸ்பெர் இன் யூ ஆர் அக்கோவுண்ட் சக்ஸஸ் பியூல்லி"..முகம் மலர்ந்தான்... 
உடனே பணம் தனக்கு வந்துவிட்டதா என பேங்க் ஆப்பில் போய் செக் செய்தான் ராம்..அமௌண்ட் கிரெடிட் ஆகவில்லை.. அதற்காக காத்துகொண்டு இருக்கும் போது போன் சிணுங்கியது... 


அளறிக்கொண்டு விழித்தான்..போனில் "பாஸ்" என்று இருந்தது..எடுத்தான்...ஹெலோ ராம் இடியட் எங்க இருக்க டைம் என்னாச்சு? சார் சார் என்று உளறினான்.. சுற்றி முற்றி பார்த்தான் ட்ரெயின் கடைசி ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது.."சாரி, சார் ட்ரெயின் லேட் ,ஆம் வில் பி இன் 30 மினிட்ஸ்"என போனை கட் செய்தான்.. 

நடந்தது கனவா, இல்லை உண்மையா என்று கூட தெரியாமல் மீண்டும் பேங்க் ஆப்பில், கிரெடிட் வந்து இருக்கிறதா..என்று செக் செய்தான் ராம்.. 

-முகம்மது முஃபாரிஸ்.மு

என்னை பெத்த தாயே

கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி விட்டு இரவு பகல் என்று பாராமல் கல்லூரி மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம், வீண் சோலியெல்லாம் எதுவும் கிடையாது அதாவது இந்த காதல் கத்தரிக்காய் போன்றவையில் சிறிதும் நாட்டம் கிடையாது 

இது அவள் பக்குவத்தின் அடையாளம் வீணில் துரு பிடிப்பதை காட்டிலும் தேய்ந்து போவதே மேல் எனும் நீதியை கடைபிடிப்பவளாக திகழ்பவளே 

கல்லூரி செல்வது வீட்டுக்கு வருவதும் அவள் வேலை, யாருடனும் அனாவசியமாக பேசுவதும் இல்லை, யாரும் பேச்சு கொடுத்தாலும் ஓரிரு வார்தையில் பேச்சை முடித்துக் கொள்வாள் 

தன்னை திறமைசாலி என்று நினைதால் போதும் அதிலும் தளராமல் இருந்தால் கண்டிப்பாக திறமைச்சாலி ஆகிவிடலாம் எனும் நம்பிக்கை கொண்டிருந்தாள் 

மிகச்சிறந்த பேரும் புகழும் கடின உழைப்பாலேயே வரும் என்ற வழியில் செல்பவள் 

கல்லூரியில் சில மாணவர் மாணவியரோடு இடை இடையே அரட்டை அடித்து மணவர்களை உர்சாகப்படுத்துவது வழக்கம் 

அவர்களோடு பேசுவதால் அவளின் சஞ்சலம் குறைவது போல் உணர்வாள் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்வாள் 

உள்ளத்தில் உள்ள குமுறலை புகையவும் விடமாட்டாள், புகைந்தால் பிறருக்கு ஏளனமாக தோன்றலாம் அதை வைத்து வாயில் வருவதை யெல்லாம் பேசிடக்கூடும் அதை கேட்டு தாங்கிக் கொள்ளும் போதிய சக்தி நம்மிடம் இல்லை என்று உணர்வாள் 

சில சமயங்களில் மேடம், வகுப்புக்குள் வர தாமதமானதால், மாணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டது "இன்னும் கல்யாணம் ஆகவில்லை அதனால் வீட்டில் பிள்ளை குட்டிகள் இல்லை ஆனாலும் மேடம் தாமதமாக ஏன் வருகிறார் என்று பேசிக் கொண்டதை மேடம் காதில் விழுந்தது கேட்டும் கேட்காதது போல் காட்டி க்கொண்டாள் தனது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு 

நான் தாமதமாக வருவதின் காரணம் உங்களுக்கு தெரியவேண்டும் அவ்வளவுதானே நான் சொல்லப்போவதை பொருமையோடு கேட்கக்கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு இருக்குமா என்று எனக்கு தெரியவில்ல ஆனாலும் அதை சொல்வதால் என் மனபாரமும் லேசாகலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் ஆனால் தூங்கிவிடக்கூடாது 

ஒரு மீனவன் இருந்தான் அவனுக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தது, தினம் கடலுக்கு போவான், அவனை போல மீனவர்களும் போவார்கள் இவனுக்கு மட்டும் நிறைய மீன்கள் கிடைக்கும் வீட்டில் எல்லோருக்கும் சாப்பாட்டுக்கு ஒரு குறையும் இல்லாதிருந்தது 

சக மீனவர்கள் பொறாமை கொண்டார்கள் அடே உனக்கு கிடைப்பது போல் மீன்கள் எங்களுக்கு கிடைக்குமானால் இந்த ஊரையே விலைக்கு வாங்கி விட்டிருப்போம் ஆனால் இவ்வளவு மீன்கள் உனக்கு கிடைத்தும் நீ ஒன்னும் வாங்க முடியவில்லையே என்று ஆசையை கிளப்பிவிட்டார்கள் 

அவர்கள் சொல்வதும் சரிதான் ஐந்து பிள்ளைகள் கணவன் மனைவியை சேர்த்து மொத்தம் ஏழுபேருக்கு குறைவில்லை பேசாமல் ஒரு பிள்ளையை கொன்றுவிட்டால் அதன் பங்கு மீறும் அதை சேர்த்து பிடித்தால் நாம் பணக்காரர் ஆகிவிடலாம் என நினைத்து ஒரு பிள்ளையை கொன்று விட்டான், அதற்கு செய்ய வேண்டிய காரியங்கள் செய்து விட்டு ஒரு வாரம் கழித்து கடலுக்கு போனான் அன்று மீதமுள்ள ஆறுபேருக்கு தக்க மீன்களே கிடைத்தது இப்படியாக ஐந்து பிள்ளைகளையும் கொன்றான் எஞ்சிவர்கள் கணவன் மனைவி, கடலுக்கு போனான் இரண்டு பேருக்கு தகுந்த மீன்களே கிடைத்தது, மனைவியையும் கொன்றான், கடலுக்கு போனான் ஒருவருக்கு தக்க மீன்களே கிடைத்தது உட்கார்ந்து யோசித்துப் பார்க்க வீணாக பணக்காரன் ஆக அர்ப்ப ஆசைப்பட்டு ஆறு உயிரைக் குடித்துவிட்டேனே இனி நான் யாருக்காக பணக்காரன் ஆகவேண்டும் என்று அவனும் உயிரை மாய்த்துக் கொண்டான் இக்கதையை யாராவது சொல்லி நீங்கள் கேட்டு இருக்கலாம் அதேபோல் 

ஒரு ஊர்ல ஒரு குடும்பத்தில் ஒரு தாய்க்கு அடுத்து அடுத்து அஞ்சி பொண்ணு பொறந்து இருந்தது, அடுத்து மூழ்காம இருந்தாங்க கணவன் வந்து இந்த தடவையாவது ஆம்பளை புள்ள பெக்காம பொண்ணு பெத்தால் தூக்கி கொண்டு போய் வீசி எரிஞ்சிடுவேன் ஏற்கனவே அஞ்சும் பொண்ணா இருக்கு அதுகளுக்குன்னு செலவு செஞ்சி கட்டிக்கொடுக்க ஏங்கிட்ட என்ன இருக்கு ஒன்னுமே இல்லை அதனால் இந்த தடவை பையன் தான் பிறப்பிக்க வேண்டும் என்றான் 

மனைவி அதற்கு என்னால என்ன பண்ண முடியும், நான் என்ன கடவுளா என்ன, இல்லை நானாக மாத்தி வச்சிடுறேனா வயிற்றில் இருப்பது குயவன் சக்கரத்தில் குவித்து வருகிற களிமண் இல்லை எதை வேண்டுமானாலும் செய்து கொள்ள, வயிற்றில் இருப்பது குழந்தை அது என்ன உரு எடுத்ததோ அதுவாகவே பிறக்கும் என்றாள் 

மனைவி வேண்டாத கடவுளை எல்லாம் வேண்டினாள் கடைசியில் அவள் வேண்டுதலை இறைவன் கேட்க வில்லை என்று பொருள் இல்லை சோதிக்கிறார் போலும் ஆறாவதும் பெண்ணே பிறந்தது 

கணவன் கடும் கோபத்தில் எப்போது இருட்டும் இருட்டும் என்று காத்துக் கொண்டிருந்தான் இருட்டி விட்டது குழந்தையை தூக்கிக்கொண்டுபோய் ஒரு இடத்தில் கிடத்தி விட்டு வந்துவிட்டான் 

மனைவி காலில் விழுந்து வேண்டாம் என்று கெஞ்சியும் கேட்கவில்லை அவள் அழுகை நின்ற பாடில்லை, குழந்தையை தன் கணவன் கையிலிருந்து பிடுங்க எழுந்து ஓடும் நிலைமையில் அவள் இல்லை 

மறு நாள் குழந்தையை விட்ட இடத்தை போய் பார்க்க யாரும் தூக்கி கொண்டு போகாமல் போட்ட இடத்திலேயே கிடந்தது அக்குழந்தையின் அருகில் ஒரு நாய் படுத்திருந்தது கண்டு அதிர்ந்து போனான் அக்குழந்தையை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வந்து விட்டான் நாயும் அவன் பின்னால் சென்றதை அவன் கவனிக்க வில்லை ஆனால் அந்த நாய் அவன் வீடு போய் சேரும் வரை அவனை கவனிக்க மறக்க வில்லை கொஞ்சம் நேரத்தில் அவ்விடத்தை விட்டு அகன்றது 

நாயின் எண்ணம் என்னவாக இருந்திருக்கும் குழந்தையை வீட்டுக்குத்தான் தூக்கிக்கொண்டு போகிறானா இல்லை வேறு எங்கேயும் போட்டுவிட தூக்கிக்கொண்டு போகிறானா என்று கவனிக்க இருக்கலாம் என்றல்லவா தோன்றுகிறது 

அன்றே மறுபடியும் இருட்டும் நேரம் ஆனதும் தூக்கி கொண்டு போய் வேறு இடத்தில் விட்டு வந்துவிட்டான் மறுபடியும் மறுநாள் போய் பார்க்க குழந்தை அங்கேயே கிடந்தது மறுபடி அந்த நாய் அக்குழந்தைக்கு அருகில் படுத்து இருந்தது, மீண்டும் தூக்கி கொண்டு வந்தான் இப்படியே அடிக்கடி செய்து பார்க்க அவன் வீட்டு வாசலிலேயே நாய் படுத்திருந்தது அவன் குழந்யை வெளியே தூக்கிவர விடுவதில்லை குலைக்க ஆரம்பித்தபோது அதற்கு அஞ்சி நாய் போடும் சத்தம் கேட்டு ஊரார் விழித்துக் கொண்டுவிட்டால் இருக்கும் அரை குறை மானமும் போய்விடும் என்று மனம் உடைந்து தூக்கி போடுவதை கை விட்டு விட்டான் 

மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது அது ஆண் குழந்தை யாக இருந்தது மனைவி ஆனந்தம் அடைந்தாள் கணவன் வந்து என்னை பாராட்டு வார் என்ற ஆனந்தம் அவளுக்கு 

கணவன் வந்தான் அவள் எதிர்பார்த்தபடி அங்கே கணவன் நடந்து கொள்ளா ததைக்கண்டு மனைவி முகத்தில் அசடு வழிந்தது ஏன் என்ன ஆனது உங்களுக்கு இப்போது நீங்கள் வரமா வரம் கிடந்த ஆண்தானே பிறந்திருக்கிறான் என்ன முகத்தில் சோகம் என்று கேட்டாள் 

நமது மூத்த மகள் இறந்து விட்டாளடி என்றவாரு ஓவென கதறியழுதான் அதை கேட்டு மனைவியும் அழுது வாரி அடக்கம் செய்தார்கள் 

அடுத்து இன்னொரு ஆண் குழந்தை பிறந்தது இக்குழந்தை பிறந்ததும் இளையவள் இறந்து விட்டாள் அப்போதும் ஆனந்தம் அடைய கொடுத்து வைக்கவில்லை 

இப்படியாக ஐந்து ஆண்குழந்தைகள் பிறக்க பிறக்க இருந்த ஐந்து பெண் குழந்தைகளும் மாண்டு விட்டது கடைசியில் மிஞ்சியது வீசி எரிய போன ஒரு பெண் குழந்தையும் மற்றும் ஐந்து ஆண்குழந்தைகள் தான் 

சில நாள் கழித்து தாய் உடல் நிலை சரியில்லாததினால் அவளும் போய் சேர்ந்தாள் 

ஐந்து ஆண் மகன்கள் பெரியவர்கள் ஆனதும் ஆளுக்கு ஒருத்தியை பிடித்துக்கொண்டு தந்தையையும் பெண்ணையும் அம்போ என்று விட்டுவிட்டு ஒதுங்கி கொண்டார்கள் 

வயதான தந்தை இன்றைக்கோ நாளைக்கோ இப்பவோ எப்பவோ இன்னும் கொஞ்சம் நேரத்திலோ என்று இருக்கிறார் 

அவரால் தானாக உணவை அள்ளி உண்ண முடியாது, அந்த தூக்கிட்டு போய் போட்டுவிட இருந்த பெண்தான் ஊட்டி விடுவாள் 

தந்தை தன் மகள் ஊட்டும் ஒவ்வொரு வாய்க்கும் கண்ணத்தில் கண்ணீர் வடிந்த வண்ணமே வாங்குவார் 

வாய் சோறு தெறிக்க அம்மா.... என்று கதறிய வாறு என்னை மன்னித்து விடும்மா, என்னை மன்னித்துவிடு, ஐந்து ஆண் பிள்ளைகள் பெற்றும் கஞ்சி ஊற்றி உண்டறியேன், கடைசியில் மூச்சை விட்டால் கொல்லி போட ஒன்று கூட என் அருகில் இல்லை இதற்கு தானா ஆண் குழந்தை மட்டும் வேண்டும் என்று வரமா வரம் கிடந்தேன் கடைசியில் எந்த குழந்தையை வேண்டாம் என்று தூக்கி போட போனேனோ அதுதான் கல்யாணம் கூட பண்ணிக்காமல், எவனையும் ஏறெடுத்து பார்க்காமல், எவனையாவது விரும்பியிருந்து விரும்பிவனோடு ஓடிப்போகாமல் என் அருகில் இருந்து என்னை கண்ணும் கருத்துமாக கவனிக்கிறது 

நான் உன்னை வேண்டாம் என்று தூக்கி போட்டதும் யாராவது உன் மேல் பரிதாபம் பட்டு உன்னை தூக்கிக்கொண்டு போய்விட்டு இருந்திருந்தால் இன்று என் நிலமை என்னவாக ஆகியிருக்கும் தாயே, என் குலதெய்வமே கண்ணீர் மல்க அழுதார் 

ஆனால் ஒரு அதிசயம் உன்னை போட்டுவிட்டு வந்து விட்டு , விடிந்ததும் போய் பார்பேன் ஒரு நாய் உன் அருகில் படுத்திருந்தது அது தான் யாரையும் தூக்க விடாமல் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது தாயே 

கடைசியில் அந்த நாய் வீட்டுக்கு வந்து விட்டது, அப்போது நான் உன்னை தூக்கிக்கொண்டு வெளியேறிய போது என்னை பார்த்து குலைத்து வெளியில் போகவிடாமல் தடுத்தது அதோடு விட்டுவிட்டேன் தூக்கி போடும். எண்ணத்தை தாயே 

ஆண்டவன் என்னை கவணிக்கவே உன்னை எனக்கு திருப்பி நாய் மூலமாக எச்சரிக்கை படுத்தி திருப்பி கொடுத்விட்டானம்மா, அம்மா தாயே உன் காலை காட்டம்மா சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி என் உயிரை உன் பாதத்தில் காணிக்கையாக விட்டு கொள்கிறேன் என் குலதெய்வம் அம்மா நீ 

அப்பா.... என்று கதறிய வாறு அப்பா காலை பிடித்து அழுது தீர்த்தாள் 

அம்மா அடுத்த ஜென்மம் என்று ஒன்று உண்டு என்றால் உன் வயிற்றில் நான் உனக்கு பிள்ளையாக பிறந்து உனக்கு மகனாக பணிவிடை செய்ய வேண்டும் என்று கடவுளை கெஞ்சிக்கிட்டே இருக்கேம்மா 

அம்மா நீ எனக்கு மகள் இல்லை என்னை பெத்த தாயம்மா என்று கதரும் தந்தைக்கு பாதுகாப்பாக இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா 

அவள் வேறு யாருமில்லை அது நான்தான் 

மாணவர் எல்லாரும் சடாலென "மேடம்" என்று இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டார்கள் 

இச் சோக கதையைக்கேட்ட டியூசனுக்கு வந்த மாணவர்கள் அத்தனை பேரும் கண்கலங்கியவாறு எங்களை மன்னித்து விடுங்கள் மேடம் 

இனிமேல் நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை நாங்களே படித்துக் கொள்கிறோம், நல்ல பர்சண்டேஜ் எடுப்போம் மேடம் என்று தங்கள் கண்களை துடைத்துக் கொண்டார்கள். 

°°°°°°°°°°°°°° 
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்"

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!! 

ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான். 

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்?? 

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான். 

அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !! 

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான். 

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!! —

சாமான்யனின் சரித்திரம்



(நாம் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி கி,பி.1774க்கு போவோம்) 

லண்டன் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்றில் !. 
“கிளைவ்” நீங்கள் இப்போது குணமாகிவிட்டீர்கள் உங்கள் மனைதை போட்டு அலட்டிக்கொள்ளாதீர்கள். தயவு செய்து அமைதியாக இருங்கள். நீங்கள் அமைதியாகி விட்டால் இன்றே கூட உங்களை வீட்டுக்கு அனுப்பி விடுவேன்.”டேக் ரெஸ்ட்” தோளில் தட்டிக்கொடுத்து விட்டு டாக்டர் அருகில் இருந்த அவர் மனைவி மார்கரெட் மஸ்கலீனிடமிருந்து விடை பெற்று அடுத்த நோயாளியை பார்க்க சென்றார் 

கிளைவ் விரக்தியாய் புன்னகைத்தார் அமைதியாம் அமைதி அது எங்கு கிடைக்கும்? என்னை பற்றித்தான் இந்த மக்கள் கொள்ளை அடித்தவன் என்று பேசிக்கொள்கிறார்களே? நான் ஏதோ இவர்கள் சொத்தை கொள்ளை அடித்தது போல் பேசிக்கொள்கிறார்கள். இந்த பாராளுமன்றாவாதிகளுக்கும் வேறு வேலை என்ன? வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை பற்றி குறை கூறுவது, மக்களிடம் என்னை பற்றி தப்பும் தவறுமாக சொல்லி என் பெயரை கெடுப்பது இதுதானே இவர்கள் வேலை! இவர்கள் இந்தியாவிற்கு போயிருக் கிறார்களா/ இங்கே உட்கார்ந்து இந்தியாவை பற்றி பேசுவார்கள், காட்டுவாசிகள், அங்கங்கே பாம்பும் பல்லியும்தான் இருக்கும், சாமியார்கள் தான் இருப்பர் என்று பேசி கொண்டிருப்பார்கள். போய் பார்க்க வேண்டியதுதானே,அங்கே உங்கள் சாம்ராஜ்யத்தையே நிறுவிய என்னை பார்த்து கண்டபடி பேசுவது. சே..என்ன வாழ்க்கை புலம்பியவாறு புரண்டு படுத்தார். 
அந்த மிகப்பெரிய பண்ணை வீட்டின் முன் நின்ற காரிலிருந்து கிளைவ் மெல்ல இறங்க, பின்னால் அவரை தாங்கி பிடித்தாவாறு மனைவி மார்கரெட்டும் இறங்கினாள். பின்னால் மகன்கள் எட்வர்டும், ராபர்ட்டும், மற்றும் கூட வந்தவர்கள் சிலரும் இறங்கி கிளைவ் அறைக்கு முன்புறம் நின்று கொண்டனர். கிளைவ்வை கூட்டி வந்த மார்கரெட் “கிளைவ்வை” கட்டிலில் படுக்க வைத்து விட்டு “ரிலாக்ஸ்” சொல்லிவிட்டு திரும்பியவளை “ப்ளீஸ்” என்னை விட்டு போய் விடாதே. அவள் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சலாய் பார்த்தார். ஓகே நீங்கள் தூங்குங்கள் நான் பக்கத்திலேயே இருக்கிறேன். கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள் மார்கரெட். டேவிட்டும், ராபர்ட்டும், மற்றவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர் மனைவியின் அருகாமை தந்த பாதுகாப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்குள் நுழைந்த கிளைவ் வின் நினைவுகள் கி..பி.1743 க்குள் அழைத்து வருகிறது. 
"ராபர்ட் உன்னை பற்றி ஏகப்பட்ட புகார்கள் வந்து விட்டது, என்னால் உன்னை வைத்து சமாளிக்க முடியவில்லை. இதுவரை இருமுறை போலீஸ் வரைக்கும் என்னை கொண்டு போய் விட்டாய். பதினேழு வயதில் இவ்வளவு தொல்லைகள் செய்பவனை நான் பார்த்த்தே இல்லை.உனக்கு “ஈஸ்ட் இந்தியா”கம்பெனியில் வேலைக்கு சொல்லியிருக்கிறேன். அவர்கள் இங்கு வேலை காலி இல்லை வேண்டுமென்றால் இந்தியாவில் வேலை போட்டு கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள் அதற்கான கடிதத்தையும் கொடுத்து விட்டார்கள். நீ என்ன செய்கிறாய் நாளை “மெட்வேயிலிருந்து விஞ்செஸ்டர் கப்பல் கிளம்புகிறது. அதில் கிளம்பி சென்று இந்த கடித்த்தை கொடுத்து வேலைக்கு சேர், அதன் பின் எனக்கு தகவல் அனுப்பு. தந்தை சொல்லிக்கொண்டிருக்க மெல்ல தலையை ஆட்டினான் ராபர்ட் 
ராபர்ட்டுக்கு வெயில் கண்ணை கூசிற்று, தான் இதுவரை பார்க்காத ஆட்கள், கறுப்பாய் நிறங்கள், அட..அவர்கள் மொழி கூட வித்தியாசமாய் உள்ளதே? கும்பல் கும்பலாய் வருகிறார்கள் என்னை கண்ட்தும் ஏன் ஒதுங்கி போகிறார்கள். வியப்பில் மனதுக்குள் அசை போட்டவாறு ஒருத்தருக்கு ஒருத்தர் வித்தியாசமாய் வேறு இருக்கிறார்கள், சே..இந்த இடத்துக்கு வர்றதுக்குள்ள, தேவையில்லாமல் யார்கூடவோ சண்டை வேற போட்டு, வந்து சேர ஒரு வருசத்தையே முழுங்கிடுச்சு, இப்படி யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவன் தோளில் யாரோ தட்ட திரும்பி பார்த்தான்.ஒரு வெள்ளை சிப்பாய் நின்று கொண்டிருந்தான். எங்கு போகிறாய்? நான் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு போகிறேன், இவன் பதில் சொல்ல அவன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை காண்பித்து அங்கு செல் சைகை மூலம் சொல்கிறான். 

இவன் கொடுத்த கடிதத்தை வாங்கி பார்த்தவன் இவனையே சிறிது நேரம் பார்த்து விட்டு பிறகு புன்சிரிப்புடன் இவன் கையை பிடித்து குலுக்கி என் பெயர் வில்ல்லியம்ஸ். நீ இனிமேல் எனக்கு உதவியாளனாக இரு. ராபர்ட் அதற்கு மறு மொழி எதுவும் பேசாமல் ஒரு புன்சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தான். 
வில்லியம்ஸ் ஒரு பெரிய பொறுப்பில் இருந்தான். அவனுக்கு கீழ் ஏராளமான இந்தியர்கள் சுமை கூலிகளாக இருந்தனர். அங்கிருந்துதான் யுத்த களங்களுக்கு வெடி பொருட்கள் போன்றவை சப்ளை ஆகிக்கொண்டிருந்தன. பொருட்களை கை மாற்றி விட்டு நிறைய வரும்படி பார்த்தான் வில்லியம்ஸ். ராபர்ட் அவனுக்கு உதவியாளனாக இருர்ந்ததில் அவனுடைய நெளிவு சுழிவுகளை இவனும் கற்றுக்கொண்டான். மிக விரைவில் காசு பணம் இவனிடம் புழங்க ஆரம்பித்தது. ஆனாலும் அவன் உள் மனம் இந்த வேலையை விட உயர்ந்த வேலையை எதிர்பார்க்க ஆரம்பித்தது. 
. வில்லியம்ஸ் ஒருவாரம் உடல் நிலை சரியில்லாமல் போக முழு பொறுப்பும் இவன் பார்க்க வேண்டியதாகிவிட்டது. இவன் அப்படி பார்த்துக்கொண்டிருந்த பொழுதே “வில்லியம்ஸ்” பற்றி பல்வேறு புகார்கள் இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு சென்றது. அவர்களும் வில்லியம்சை உடனே இங்கிலாங்குக்கு விசாரணைக்கு வரும்படி கட்டளையிட்டனர். விசாரணையின் முடிவில் இனிமேல் இந்த கோட்டையை ராபர்ட்டே கவனிப்பான் என்று முடிவெ செய்து விட்டது 
இப்பொழுது முழு பொறுப்பையும் ஏற்றிருந்த ராபர்ட்டுக்கு வயது வெறும் இருபதுதான் ஆகியிருந்தது. ராபர்ட் பொறுப்புக்கு வந்த சில நாட்களிலேயே எதிர்பாராமல் ஆஸ்திரிய வாரிசுரிமை போரில் பிரிட்டனிடம் அங்கிருந்த கோட்டை பறிகொடுத்து விட்டது பிரான்ஸ். அதற்கு பழி வாங்குவதற்கு சந்தர்ப்பம் பார்த்த பிரெஞ்சு படைகள், ராபர்ட் பொறுப்பில் இருந்த கோட்டையை கைப்பற்றிக்கொண்டன. இவன் எப்படியோ தப்பித்து பக்கத்திலுள்ள பிரிட்டனின் மற்றொரு கோட்டைக்கு சென்று விட்டான். அங்குள்ளவர்களீடம் சிறிது சிப்பாய்களை மட்டும் கொடுங்கள், என்ற் சொல்லி அவர்களை வைத்துக்கொண்டு பிரெஞ்சுப்படையிடம் சண்டையிட்டு மீண்டும் இவன் பொறுப்பில் இருந்த கோட்டையை மீட்டுக்கொண்டான். 
இந்த நிகழ்ச்சி இங்கிலாந்திலிருந்த கம்பெனி தலைமையகத்தை கவர்ந்து விட்டது. யுத்த களத்திற்கு அவனை அனுப்பி வைக்க தீர்மானம் எடுத்த கம்பெனி ஒரு படைக்கு தளபதியாகவும் நியமித்தது. ராப்ர்ட்டின் புத்தி கூர்மையும் செயல் திறனும் இந்த வாய்ப்பை தக்கபடி பயன்படுத்திக்கொண்டது. இவன் படையேற்று சென்ற இடமெல்லாம் வெற்றி. கம்பெனி இப்பொழுது இவனை கூர்மையாக கவனிக்க தொடங்கி விட்ட்து. அப்புறம் என்ன சீக்கிரமே தலைமை தளபதியாக நியமிக்கபட்டான். இதைவிட இவனுக்கு பேரதிர்ஷ்டமாக நண்பன் எட்மெண்ட்மஸ்கில்னே தன் தங்கை மார்க்கரெட்டை இவனுக்கு மணமுடித்து கொடுத்ததுதான். 

"கிளைவ்” பட்டத்துடன் தலைமை தளபதியாக உயர்த்தப்பட்ட ராபர்ட் தன் குடும்பத்தை நேசித்தான் (நாமும் இனி அவரை “ர்”) போட்டே அழைப்போம். குடும்ப வாழ்க்கையில் உயர்ந்தவராய் இருந்தாலும் இளமையில் தான் பட்ட துன்பம் எல்லாம் வறுமையினால்தான் என்று நினைத்திருந்த கிளைவ்” அந்த பணத்தை வெகு சீக்கிரம் எப்படி சம்பாதிப்பது என்று எல்லா திறமைகளையும் காட்ட ஆரம்பித்தார். இதனால் பல்வேறு புகார்கள் அவர் மீது சொல்லப்பட்டது. இங்கிலாந்து நிர்வாகம் கிளவ்வை பம்பாய்க்கு மாற்றியது. அடுத்து அவரை வங்காள கவர்னராக அறிவித்தது. 
இப்படி படிப்படியாக உயர்ந்த நிலைக்கு சென்று கொண்டிருந்த கிளைவுக்கு இவர் மீது கூறப்பட்ட புகார்களினால் இவருடைய செல்வாக்கு ஆட்டம் காண ஆரம்பித்த்து. 
இதுவரை சம்பாதித்த பணத்தை எப்படி எடுத்துக்கொண்டு நாட்டுக்கு செல்வது? யோசித்த கிளைவ் அனைத்தையும் தங்கமாக்கி அதை கப்பலில் கொண்டு செல்ல முடிவு செய்தார். ஆனால் அந்த முடிவு தவறாகி போனது. இங்கிருந்து கிளம்பி சென்ற கப்பல் வழியில் புயலிலும், மழையிலும் அடிபட்டு கடலுக்குள் மூழ்கி போனது. இதனால் துவண்டு விடவில்லை கிளைவ். தான் சமபாதித்து வைத்திருந்த ஏராளமான செல்வத்துடன் குடும்பத்தை கூட்டிக்கொண்டு நாடு செல்ல முடிவு எடுத்தார். 
லண்டன் வந்திறங்கிய கிளைவ் தாம் இப்பொழுது சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனல்ல என்று முடிவு செய்தவர் இந்த லண்டனில் வசிக்கும் பிரபுக்களுக்கு இணையாக வசிக்கவேண்டும், முடிவு செய்தவர் தான் கொண்டு போன பணத்தில் பெரிய பண்ணை வீட்டை அந்த லண்டன் மாநகரிலேயே வாங்கி குடும்பத்துடன் குடி புகுந்தார். 
இது போதாதா அங்குள்ள பிரபுக்களுக்கு ! அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்க ஆரம்பித்தனர். பாராளுமன்றத்திலும் அவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்க ஆரம்பித்தனர். வழக்குகளும் அவர் மீது போடப்பட்டது. 
பத்து வருடங்கள் இந்த வழக்குகளுக்கு பதில் சொல்லியே அலுத்து போனார் கிளைவ். ஆரம்பத்தில் இருந்த தைரியமும்,வேகமும் கொஞ்சம் கொஞ்சமுமாக கரைய ஆரம்பிக்க இப்பொழுது மன நோயாளியாக மருத்துவமனையில் இருந்து சரியாகிவிட்டதாக டாக்டர் சொன்னதால் வீட்டுக்கு அனுப்ப பட்டிருக்கிறார். 
திடீரென விழிப்பு வர பக்கத்தில் மனைவியை தேடினார்.”கணவர்”தூங்கி விட்டார் என்று எழுந்து சென்று விட்ட மார்கரெட்டை உடனே பார்க்க வேண்டும் என்று வேகமாய் எழுந்த கிளைவ் உடம்பு பலகீனத்தால் தடுமாறி விழ போனவர், தன்னை யாரோ பிடித்து தள்ளி விட்டதாக கருதி பெரும் கூச்சலுடன் அங்கு ஏதாவது ஆயுதம் கிடைக்குமா என்று தேடினார். டேபிளின் மேல் ஆப்பிள் வெட்டுவதற்கு வைக்கப்பட்டிருந்த கத்தி கண்ணில் பட அதை தன் கழுத்தில் வைத்துக்கொண்டு எதிரில் இல்லாத எதிரியை விரட்டிக்கொண்டிருந்தார். 


வரலாறு இராபர்ட் கிளவை பற்றி இப்படி சொல்கிறது “இராபர்ட் கிளைவ்” ஆரம்ப கால வாழ்க்கை போராட்டமானதாக இருந்தாலும் அது உடலளவான போராட்டமாக இருந்ததால் அவரால் விரைவில் வெற்றி காண முடிந்தது. இறுதி காலத்தில் அவருக்கு சட்ட ரீதியான போராட்டமாக மாறி விட்டதால், அவர் மன நிலை பாதிப்புக்கு உள்ளாகி அவரது முடிவு வருந்ததக்கதாய் ஆனது.)

அந்த மூன்றாவது கேள்வி

திருவண்ணாமலைக்கு செல்ல முன் பதிவு செய்தாயிற்று. ரமண மகிரிஷி ஆஸ்ரமத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கு மின் அஞ்சலில் அனுமதியும் வாங்கியாயிற்று. பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை.ஜன்னல் அருகில் இருக்கும் என் இருக்கையில் அமர்ந்தேன். திருவண்ணாமலைக்கு குறைந்தது ஐந்து மணிநேரமாவது ஆகும். கைபேசியைப் பார்த்தேன். வழக்கத்திற்கு மாறாக வந்திருந்த அனைத்து குறுஞ்செய்திகளையும் படித்தேன். இடது பக்கம் இருக்கும் கைப்பிடியில் கை வைக்க வாகில்லாமல் அடியில் ஏதோ துருத்திக்கொண்டு இருப்பதைப் போல உணர்ந்தேன். கைப்பிடியை உயர்த்த அந்தப் பிளவில் சொருகிவைத்த கத்தைப் பேப்பரை உருவி எடுத்தேன். அது ஒரு கையெழுத்துப் பிரதி. யாரோ மறந்துபோய் வைத்திருக்கவேண்டும். எடுத்து புரட்டிப்பார்த்தேன். “ஓ, விக்கிரமாதித்யா!” என்ற தலைப்பிட்டிருந்தது. தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். 
"மாலை ஐந்து மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தது. சொல்லி வைத்தாற் போல் ஒவ்வொருவராக மேடம் ஜாஸ்மினின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். பருமனான உடல் வாகு. வயதிற்கு மீறிய தளர்ச்சி. வழக்கமான முதுமைக் கால மருத்துவப் பிரச்சினைகள். சராசரி நடுத்தரவர்கத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியைப் போல கணவர் வினோத்தின் ஓய்வூதியப் பணத்தை எதிர்பார்த்து, ஏராளமான கனவுகளுடன் தற்காலிக நிம்மதிப் பெருமூச்சுடன் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்தான் நம் மேடம் ஜாஸ்மின். 
முதலில் வந்தவரின் பெயர் ராமானுஜம். வயது ஐம்பதிற்கு மேல். ஒரு தனியார் கம்பெனியில் தலைமைக் கணக்கராக இருக்கிறார். ஓரளவிற்கு வசதியானவர். இருக்கும் சேமிப்பை வைத்து கொஞ்சம் கடனும் வாங்கி ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொண்டார். மற்றவர்களைப் போல மாதம் பிறந்தால் வாடகைக்கு என ஒரு தொகையை அவர் எடுத்து வைக்க வேண்டியதில்லை. வரவேற்பறையில் வினோத்திற்காகக் காத்திருந்த ராமானுஜம், கழுத்துப் பக்கம் அடிக்கடி தெரிந்த பூணலை லேசாகத் தளர்த்தி சட்டைக் காலரின் கீழ் தள்ளி விட்டுக்கொண்டே அன்றைய செய்தித் தாளை படித்துக்கொண்டிருந்தார். 
அடுத்து வந்தவர் அரவிந்தன். ஒடிசலான உருவம். பார்ப்பதற்கு மிகவும் வெகுளியாகத் தெரிந்தாலும் பண விஷயத்தில் மிகவும் கராரான பேர்வழி. “என்ன விலை வாசி?! வேர்க்கடலையை வறுத்தா ஒரு விலை வறுக்காட்டி ஒரு விலை சொல்றான்” என்று புலம்பிக்கொண்டே ராமானுஜம் அருகில் வந்தமர்ந்தார். 
பிளாக் டீயுடன் அங்கு வந்த மேடம் ஜாஸ்மின் “எல்லாரும் வந்திட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே டிரேயில் இருந்து ஒவ்வொரு கோப்பையாக எடுத்து டீப்பாயில் வைத்தார். மனைவியைப் பணிவுடன் தொடர்ந்து வந்த வினோத் வறுத்த நிலக்கடலையும், பாதாம் பருப்பையும் சரி சமமாக இரண்டு பிளாஸ்டிக் தட்டங்களில் வைத்தார். ராமானுஜம் நிலக்கடலையை சிறிது எடுத்துத் தன் உள்ளங்கைகளில் தேய்த்து ஊதி வாயில் போட்டுக்கொண்டார். 
அப்போது அங்கு வந்த காதர் நவாஸ் “வழக்கம் போல நாந்தான் இன்னைக்கும் லேட்டா?” என்று கேட்டுக்கொண்டே மேடம் ஜாஸ்மினைப் பார்த்துச் சிரித்தார். அப்போதுதான் ராமானுஜமும், அரவிந்தனும் வழக்கத்திற்கு மாறாக மேடம் ஜாஸ்மினின் நெற்றியில் இருக்கும் பெரிய அளவு பிந்தியையும், தங்க வளையலுக்குப் பதிலாக கைகள் நிறைய கண்ணாடி வளையல்களையும் ஏதேச்சையாக கவனித்தார்கள். அரவிந்தன் தன் தலையில் அணிந்திருக்கும் காந்திக் குல்லாயை மிகுந்த அக்கரையுடன் இரண்டாக மடித்துத் தன் தொடையில் வைத்து கை நிறைய பாதாம் பருப்பை எடுத்துக்கொண்டார். 
“என்ன விலைவாசி, ஒரு நாள் பேவதே பெரும்பாடா இருக்கு” என்று குறைப்பட்டுக்கொண்டே பிளாக் டீயை சத்தம் போட்டு உறிஞ்சிக் குடித்தார். 
அடுக்களையில் தனி ஆளாகப் போராடிக்கொண்டிருந்த மேடம் ஜாஸ்மின் கணவரை அழைத்து “வினோத், ரெண்டு தெரு தாண்டி இருக்கும் அண்ணாச்சி கடையிலே லூசிலே ரெண்டு கிலோ பச்சரிசி வாங்கிட்டு வாங்க. அப்படியே ஒரு கப் தயிரும், அவலும் வாங்க மறந்திடாதீங்க” என்று அவரின் ஒப்புதலிற்குத் துளியும் காத்திருக்காமல் துணிப் பையை கணவரின் கைகளில் திணித்தார். “வினோத் ஒன்னு சொல்ல மறந்திட்டேன். சோம்பேறித்தனப்பட்டு பக்கத்திலே இருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலே வாங்கிட்டு வந்தீங்களோ!” கண்களை அகல விரித்து உருட்டி வினோத்தை ஒரு நொடி நிலைகுலைய வைத்தாள் மேடம் ஜாஸ்மின். 
வினோத் கேட்டைத் திறந்து வேளியே போகும் சமயம் ஒரு இளவயது சாமியார் கழுத்தில் ஏராளமான ருத்ராட்ச மாலைகளுடனும் நெற்றியில் தேவையான பரப்பளவிற்கு அதிகமாக விபூதியை பூசிக்கொண்டு நின்றிருந்தார். அவர் கையில் மண் பாத்திரத்துடன் நிற்பதைப் பார்த்த வினோத் தன் பைஜாமாவில் இல்லாத சில்லரைகளைத் துளாவினார். வெகு அலட்சியமாக வினோத்தைக் கடந்து அந்த சாமியார் உரிமையுடன் உள்ளே சென்று மேடம் ஜாஸ்மினை சைகையால் அழைத்தார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு “தொடர்ந்து மூன்று சனிக்கிழமை இந்த நெல்லிக்கனியை வெற்றிலையில் வைத்து மடித்து உங்கள் குல தெய்வத்தை வழிபடுங்கள்” என்று கூறி மேடம் ஜாஸ்மினின் கைகளில் ஒரு குறிப்பிட்ட விசையுடன் ஒவ்வொன்றாக மூன்று நெல்லிக்கனிகளை போட்டார். தடுமாறியபடி மூன்று நெல்லிக்கனிகளையும் கீழே விழாமல் மிகுந்த பயபக்தியுடன் கேட்ச் பிடித்த மேடம் ஜாஸ்மின் அவரை வணங்கி அரவிந்தை செய்கையால் ஒரு நூறு ரூபாய் கொடுக்குமாறு அவசரப்படுத்தினாள். அரவிந்தும் தன் பையிலிருந்து நூறு ரூபாயை அரை மனதுடன் நீட்டினார். அனைத்தையும் கவனித்த வினோத் வாய்விட்டு பலமாகச் சிரிக்க மேடம் ஜாஸ்மின் தன் ஓரப்பார்வையால் வினோத்தை சுலபமாக மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாள். 
அப்போது வீட்டிற்குள் ஒரு ஆடு ஓடி வந்ததைப் பார்த்த ராமானுஜம் சப்தம் போட்டு அலறினார். “ஆட்டுப்பாலிலே டீ போட்டு குடிச்சிருக்கீங்களா ராமானுஜம்?” என்று மேடம் ஜாஸ்மின் கேட்க அவர் அருவருப்புடன் உதட்டைப் பிதுக்கினார். “பாலோட விலை போற போக்கைப் பாத்தா இனிமே ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் ஒரு ஆடு வளக்கவேண்டி வரும் ராமானுஜம். எதுக்கும் வினோத்திடம் இப்பவே கொஞ்சம் டிரெய்னிங்க் எடுத்துக்கோங்க” என்று மேடம் ஜாஸ்மின் கண் சிமிட்டிச் சிரிக்க ஒரு கையில் பையுடனும், மறு கையில் தொண்னையுடன் வீட்டிற்குள் நுழைந்தார் வினோத். 
புளியோதரையின் மணம் அனைவரின் நாசியையும் துளைத்தது. “கடைக்கு பக்கத்திலே இருக்கும் கோயில்லே கொடுத்தாங்க. அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்று சாட்சிக்கூண்டில் நின்று கொண்டு குறுக்கு விசாரணையின் போது பிராசிக்கியூட்டரிடம் தயக்கத்துடன் பொய் சாட்சி சொல்லும் நபரைப் போல ஜாஸ்மின் மேடத்தின் கண்களை நேராடியாகப் பார்க்க முடியாமல் ஒப்பித்தார். 
“ராத்திரிக்கு சன்னா, பன்னீர்,உருளை தக்காளி போட்டு சப்ஜி வெச்சிடவா?” என்று மேடம் ஜாஸ்மின் தன் கணவரின் தோளில் சரிந்த ஹியரிங்க் எய்டை சற்று சரிப்படுத்தி அவரின் காதில் வைத்து மீண்டும் கேட்க “சூப்பர், அதையே வெச்சிடு” என்று தனக்கு அபூர்வமாக அளிக்கப்பட்ட சுதந்திரத்தை அளவாக உபயோகித்தார். 
இதுவரை கதையை பொறுமையுடன் கூறிக்கொண்டிருந்த வேதாளம் கதையை இத்துடன் நிறுத்தி மூன்று கேள்விகளை மன்னன் விக்கிரமாதித்யனிடம் கேட்டது.” 
இத்துடன் அந்தக் கதை முடிவடைந்திருந்தது. பின் பக்கத்தை புரட்டிப்பார்த்தேன். ஒன்றும் எழுதவில்லை. எடுக்கும் போது கைப்பிடிப் பிளவில் ஏதாவது காகிதங்கள் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீண்டும் கைகளை விட்டுத் துழாவினேன். இந்தக் கதையில் நான் வேதாளத்தையோ அல்லது விக்கிரமாதித்யனையோ துளியும் எதிர் பார்க்கவில்லை. வேதாளத்தின் மூன்று கேள்விகள் என்னவாக இருக்கும்?. மீண்டும் கதையை முதலில் இருந்து ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தேன். 
தொடர்ந்து அதற்கான கேள்வி பதில்களை என் மடிக்கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். 
“விக்கிரமா, இது வரை நீ கேட்ட கதையில் வந்தஆறு பேருடைய பொதுப் பிரச்சினை என்ன?” வேதாளம் விக்கிரமனின் பதிலிற்காகக் காத்திருந்தது. சிறிதும் யோசிக்காமல் விக்ரமாதித்யன் “விஷம் போல தமிழகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் விலை வாசியைவிட வேறென்னவாக இருக்கமுடியும்” பதில் கூறினான். 
இதைக் கேட்ட வேதாளம் தன் இரண்டாவது கேள்வியைக்கேட்டது. “அவன் மகுடம் தரித்த அரசனாக இருக்கவேண்டும். எனினும் யாசித்தே தன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய கையறு நிலையில் இருக்கவேண்டும். அத்தகைய அரசர்களில் குறைந்தது பத்து பெயர்களையாவது கூறு ? இந்தக் கேள்விக்கு விக்ரமாதித்யனால் சரியான பதிலை கூறமுடியாது என்று எண்ணிய வேதாளம் கர்வமாகச் சிரித்தது. “ஜனநாயகம் என்ற மகுடத்தை தலையில் சுமந்துகொண்டு அரசர்களாக வலம் வரும் தமிழக மக்கள் காவிரி நீருக்கும், கிருஷ்ணா நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் கையறு நிலையில்தானே இன்றளவும் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தான் விக்கிரமாதித்யன். அவனின் இரண்டாவது பதிலில் திருப்தி அடைந்த வேதாளம் தன் மூன்றாவது கேள்வியைக் கேட்டது. 
அத்துடன் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு மூன்றாவது கேள்வியை யேசிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு முயன்றும் அந்த மூன்றாவது கேள்வி மட்டும் பிடிபடவே இல்லை. இந்தக் கதையை சிறிது மேம்படுத்தி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் என்ன என்று தோன்றியது. அந்த மூன்றாவது கேள்வி பதில் இல்லாமல் கதையை எப்படி முடிப்பது என்று குழம்பிக்கொண்டே இருந்தேன். 
“ஓருவருக்கு உரிமையான கதையை கையாள்வதே குற்றம், அந்தக் கதையை மேம்படுத்தி சில புனைவுகளுடன் தன்னுடையதாக்கிக் கொள்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?”. என் அருகில் கேட்ட குரலைக் கேட்டு அதிர்ந்தேன். 
சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு குழந்தை அழும் சப்தம் கேட்டது. கைக்குட்டையால் கண்களை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு உறங்கும் முதியவரின் குரட்டை ஒலி கூடிக்கொண்டே போனது. சுதாரித்துக்கொண்டு சூழ்நிலையைப் புரிந்துகொள்ள எனக்கு நேரம் அதிகமானது. 
சிரித்துக்கோண்டே என் அருகில் உட்கார்ந்த அவன் பேருந்தின் ஜன்னல் வழியாகப் சாலையில் கடந்து போன முருங்கை மரத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே “விக்கிரமாதித்யா, பதில் சொல்ல அவசரம் ஒன்றுமில்லை. வேண்டுமளவு அவகாசம் எடுத்துக்கொள். விருப்பாட்ச்சி மலையில் நாம் இருவரும் ஏறிக்கோண்டே மீதியைப் பேசிக்கொள்ளலாம் என்று என் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

காதலர்களுக்குச் சமர்ப்பணம்

" மச்சான் போனை எடு. 
மச்சான் போனை எடு. 
மச்சான் போனை எடு. டேய்! சோம்பேறி போனை எடுடா. ", என்று கதரேசனின் போன் அதிகாலையிலே ஒலித்துக் கொண்டிருந்தது. 

போனை எடுத்து பார்க்க ஒலிப்பது நின்றது. 
கார்த்திகா தான் கால் பண்ணியிருக்கிறாள் என்பதை தவறிய அழைப்பு வரலாற்றைப் பார்த்து தெரிந்து கொண்டான். 

" 15 மிஸ்டுக்காலா? நான் இன்னைக்கு தொலைஞ்சேன். ",என்றவாறு தாமதமின்றி கார்த்திகாவிற்கு கால் செய்தான். 

அழைப்பை ஏற்ற கார்த்திகா, வழக்கம் போல, " டேய்! தடிமாடு! எத்துன தடவை கூப்பிடுறது! வேலைக்கு போகாமல் வீட்டுலதான சுத்திட்டு இருக்க! 
போன் பண்ணால் அதை எடுக்கதை விட அப்படி என்ன வேலை உனக்கு? ",என்றாள். 

" காலங்காலத்தால சேவல் தான்டி கூவும்! 
கோழி நீ கூவுவனு நான் எதிர்ப்பார்க்கலடி! 
அசந்து தூங்கிட்டேன்டி. 
சாரிடி. நைட் கொஞ்சம் லேட்டாத்தான் படுத்தேன். ",என்றான் கதிரேசன். 

" நைட் அப்படி என்னடா வெட்டி முறிச்ச? வெட்டியா உன் ப்ரண்ட்ஸோட ஊர் சுத்தியிருப்பா. ", என்றாள் கார்த்திகா. 

" அதெல்லாம் விடு! இப்போ என்ன விடயமா கால் பண்ணியிருக்க? " 

" ஆமா! இவரு பெரிய கலெக்டரு. விடயத்தோடத் தான் கால் பண்ணுவாங்க. " 

" விடயமில்லாம நீ கூவ மாட்ட. என்னனு சொல்லு. " 

" அது ஒன்னுமில்லடா. சின்ன விடயம் தான். இன்னைக்கு என்னை பொன்னு பார்க்க வாராங்கடா. " 

" அப்படியா! ரொம்ப சந்தோஷம்! பத்திரிக்கை மறக்காமல் கொடுத்துவல! சரி மாப்பிள்ளை என்ன பண்றானாம்? 
உங்க அப்பன் எதிர்பார்க்கிறதெல்லாம் இருக்கிறதா? " 
என்றான் கதிரேசன் நக்கலாக. 

" என்னடா! அப்படி தப்பிச்சிரலாம்னு பார்க்கிறீயா? 
உன்னையும் கொன்னுட்டு நானும் செத்துப் போவேன்டா. " 

" ஹேய்! லூசு மாதிரி பிணத்தாதடி. இப்போ என்ன செய்யனும்னு சொல்லு. " 

" நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும். எங்க அப்பாகிட்ட வந்து பேசுடா! ப்ளீஸ்! " 

" ஆமா! உங்க அப்பன் சரியான சிடுமூஞ்சியாச்சே! 
ஒப்புதல் தராவிட்டால் என்ன செய்யலாம்? " 

" அதை அப்புறம் சொல்லுறேன். நீ வந்து பேசு. " 

" ம்ம், சரி. ",என்றான். 

தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

ஏதோ தைரியத்தில் கார்த்திகாவிடம் சரியென்று சொல்லிட்டானே தவிர அவளுடைய தந்தையைக் காண பயமாக இருந்தது. 

சிறிது யோசித்தவன் கிளம்பினான் பயம் நீங்கியவனாக. 

அரிவாளை எடுத்து தான் சட்டைக்கு பின் பக்கமாக இட்டு மறைத்துக் கொண்டான். 

நேராக கார்த்திகா வீடு சென்றான். 
வீடு சற்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

கதிரேசன் உள்ளே சென்றான். 

கதிரேசனைக் கண்ட கார்த்திகாவின் தந்தை, " வாப்பா! நீ அப்பவே வருவேன்னு எதிர்ப்பார்த்தேன். 
இப்போதான் வார! . சரி உள்ளே வா. ",என்று தனியே அழைத்துச் சென்றவர், " என் பொண்ணு சொன்னா உன்னை காதலிக்கிறதாக. அது அவளோட விருப்பம். 
என் விருப்பம்னு ஒன்னு இருக்குதுல. அதான் என் நண்பரோட பையன். 
அவன் உன்னை மாதிரி இல்லப்பா. பெரிய கம்பேனியோட முதலாளி. ",என்று கூறி கதிரேசனின் கர்வத்தை தாக்கி அவனது வசதியின்மை இழிவுப்படுத்தியும் பேசினார். 

அவர் பேச பேச அமைதியாக கேட்டுக் கொண்டே இருந்தவனை, " சரி, வந்ததுதான் வந்துட்ட. அப்படி ஓரமா உக்கார்ந்து சாப்பிட்டு போ. ",என்றார் கார்த்திகாவின் தந்தை இருளப்பர். 

அதற்கு, கதிரேசன், " உங்க முடிவை நீங்க சொல்லிட்டீங்க. எங்க முடிவுனு ஒன்னு இருக்கிறதுலா. அதையும் பாருங்க. ", என்றவன், " கார்த்திகா! அடியேய் கார்த்திகா! ", என்று விளித்திட விரைந்தோடி வந்தாள். 

" உனக்கு நான் முக்கியமா? அல்லது உங்க அப்பா முக்கியமா? " 

" இரண்டு பேருமே முக்கியம் தான். " 

" இரண்டில் ஒன்றை சொல்லு. இரண்டையுமே சொல்லாத. ", என்றவன் குரலில் சற்று கடுமை தெரிந்தது. 

" நீ தான் ",என்றாள். 

" இந்தா! இந்த உடையை அணிந்து கொண்டு நீ போட்டு இருப்பதை கழற்றி வைத்துவிட்டு வா. ", என்று தான் வாங்கி வைத்திருந்த ஆடையை அளித்தான். 

வாங்கிக் கொண்டு உள்ளே சென்றவள் உடை மாற்றி வந்தாள். 
அதற்குள் எல்லாம் கூடி விட்டார்கள். 

கார்த்திகாவின் கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வர, 
நான்கு பேர் சூழ்ந்தார்கள். 
கதிரேசன் அரிவாளை எடுத்து கையில் வைத்துக் கொண்டு தயாரானான். 
அதைக் கண்டு சூழ்ந்தவர்கள் விலகிக் கொண்டார்கள். 
அவர்களுக்கு அவனைப் பற்றி தெரியும், கொலை செய்யவும் அஞ்சமாட்டான் என்று. 

நேராக அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்துவிட்டான். 
கதிரேசனின் நண்பர்கள் மறுநாள் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்தனர். 
அதன் படி திருமணமும் நடந்து முடிந்தது. 

கதிரேசன் தன் நண்பர்கள் உதவியுடன் சிறு தொழிலைத் தொடங்கினான். 
அதில் நல்ல வருமானம் வர பெரிய வீட்டைக் கட்டி அதில் கூடியேறினார்கள். 

அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திட ஆனந்தமாக வாழத் தொடங்கினார்கள். 

இப்படியாக நாட்கள் நகர, ஆண்டுகள் பல ஓடிக் கழிந்தது. இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று 
குடும்பம் பெரியதாக நரைத்த தலையோடு கார்த்திகாவும், நரை மீசையோடு கதிரேசனும் அதே காதலோடு வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். 
மூத்த மகன் திருமணம் செய்து பட்டிணத்தில் கூடியேறிவிட்டான். 
மகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். 

ஒரு நாள் அந்த ஊரில் கனமழை பெய்து வெள்ளம் வந்தது. 
கதிரேசனின் இளைய மகன் மகேஷ் வெளியூரில் படித்துக் கொண்டிருந்தான். 
அதனால் கதிரேசன் தன் மனைவியுடன் தனியாக இருந்தார். 
அங்கு வந்த பெரும் வெள்ளத்தில் இருவரும் சிக்கி இறைவனடி சேர்ந்தார்கள். 
அவர் வாழந்த வீட்டிலேயே இறந்ததால் அங்கேயே புதைக்கப்படு சமாதி எழுப்பினார்கள். 
ஒரு காதலின் நினைவு சின்னமாக அது மாறிவிட்டது. 

ஒருவர் மேல் ஒருவர் எடுத்துக் கொள்ளும் உரிமை, அதில் அவர்கள் கொண்ட உறுதி எதையும் சந்திக்கும் தைரியம் தரும். 
காதலர்களே உறுதியோடு இறுதி வரை வாழுங்கள். 
உங்களுக்காக இச்சிறுகதையைச் சமர்பிக்கிறேன்.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !