சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்தன. உயிரொளிர்தல் என்ற நிகழ்வால் கடல் அலைகள் நீல நிறத்தில் இவ்வாறாக மாறுகின்றன.
இது சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, இவை ஏன் ஏற்பட்டன? காரணம் என்ன? என்பதைப் பார்ப்போம்.
உயிரொளிர்தல்
மிதவை உயிரிகளால் (Phytoplankton) இவ்வாறான உயிரொளிர்தல் நிகழ்கிறது என்கிறார் கடலுயிர் விஞ்ஞானியான நாராயணி சுப்ரமணியன்.
நாராயணி, "மிதவை உயிரிகள் என்பவை வேறொன்றும் இல்லை. அவை நம் கண்ணுக்குத் தெரியாத பாசி வகைகள்தான். இந்த மிதவை உயிரிகளில் சில ஒளிரும் தன்மை கொண்டவை. பாசிகளின் உள்ளே நிகழும் வேதியியல் மாற்றத்தால் ஒளி உண்டாகிறது" என்றார் இவர்.
ஒரே இடத்தில் கழிவுகள் அல்லது ஊட்டசத்துகள் அதிகமாகும் போது அந்த இடத்தில் மிதவை உயிரிகள் பெருக வாய்ப்புள்ளது என்கிறார்.
"பிற நாடுகளில் உயிரொளிர்தல் நிகழ்வு அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் மிதவை உயிரிகள் கரைக்கு வந்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வு குறைவுதான்" என்கிறார்.
பெருங்கடல்களின் சூழலியலில் இந்த மிதவை உயிரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடல்சார் உணவு சங்கிலியில் இந்த மிதவை உயிரிகள்தான் முதல் படிநிலையில் உள்ளன. கடலுக்கு ஒரு தோற்றம் கொடுப்பதில் இந்த மிதவை உயிரிகளின் பங்கு முக்கியமானது.
சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன், "எப்போதும் மிதவை உயிரிகள் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கும். அவை ஒரே இடத்தில் அதிகமாகத் திரளும் போது அந்த ஒளி நம் கண்ணுக்கு புலப்படுகிறது." என்கிறார்.
குறையும் மிதவை உயிரிகள்
கடல் நீர் வெப்பமடைவதால் இந்த மிதவை உயிரிகள் பல இடங்களில் குறைந்து கொண்டிருக்கின்றன என்கின்றன சில ஆய்வுகள்.
பல வகையான மிதவை உயிரிகள் உள்ளன. நீல நிறத்தை மட்டுமல்ல சில மிதவை உயிரிகள் பச்சை நிறத்தையும் வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தவை.
"கண்ணுக்கு புலப்படும் அளவுக்கு மிதவை உயிரி இருப்பது நல்லதல்ல. அதாவது ஒரே இடத்தில் திரட்சியாக இருப்பது நல்லதல்ல. இவை ஒரே இடத்தில் அதிகம் திரளும்போது அதிக ஆக்சிஜனை எடுத்துக் கொள்ளும். இதனால், பிற கடல் உயிரினங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம்" என்கிறார் அவர்.
இந்த நிகழ்வு தொடர்பாக நித்தியானந்த் ஜெயராமன் மீனவர் ஒருவரிடம் பேசியவற்றை ஃபேஸ்புக் பதிவாக பகிர்ந்துள்ளார். அதில், "கடலில் பல உயிரினங்கள் (பாசி, மீன், கடமா) பயன்படுத்தக்கூடிய ஒரு தொடர்பு முறை இந்த உயிரொளிர்வு . ஒரு சில கோலா (flying fish) வகைகளிலும் செவுள் பக்கத்தில் உயிரொளிர்வு கொண்ட பூச்சி ஒன்றிருக்கும். அது மீன் வாழும் வரை வாழும். மீன் சாகும் பொது, அதுவும் செத்துவிடும். உயிரொளிர்வு தன்மை கொண்ட பாசி (phytoplankton) அலைகளின் கிளர்ச்சியின்போது லூசிபரின் என்ற மூலக்கூறினை பயன்படுத்தி ஒளியை உருவாக்குகின்றன. கடலலைகளில் இது போன்ற பாசி எப்போவும் இருந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது தான் ஒரு நிகழ்வாக காணப்படுகிறது." என்று மீனவர் பாளையம் கூறியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment