Tuesday, October 15, 2019

இந்திய இளைஞர் கண்டுபிடித்த ஏசி ஹெல்மெட்டுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

சுட்டெரிக்கும் வெயிலில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு தீர்வு காணும் முயற்சியாக இளைஞர் ஒருவர் ஏ.சி. வசதியுடன் இயங்கும் ஹெல்மெட்டை கண்டுபிடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.


நாட்டில் இருக்கும் பல்வேறு பகுதிகள் அதிக வெயில் தாக்கம் கொண்டவையாக உள்ளன. அவற்றில், ஒருசில பகுதிகளில் மட்டுமே குளிர்ந்த வானிலை நிலவுகின்றன. எனினும், பருவநிலை மாற்றம் காரணமாக, குளிர்ந்த பிரதேசங்களிலும் அவ்வப்போது அதிக வெப்பநிலை பதிவாகிறது.

ஏற்கனவே வெயில் அனலாக கொதிக்கும் பகுதிகளில், மேலும் வெப்பம் தகிக்கிறது. கோடை காலத்தில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வெயில் 100 டிகிரியை தாண்டும் சம்பவங்களும் சாதாரணமாக அரங்கேறுகின்றன.

இதனால் பொதுமக்களுக்கு கடும் சிரமங்கள் ஏற்படுகின்றன. வெயிலில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் நிலவுகின்றன. மேலும், ஏசி, ஏர் கூலர் உட்பட பல்வேறு மின்சாதனங்களின் பயன்பாடும் அதிகரிக்கிறது.

வெயில் காலத்தில் வீட்டில் இருப்பவர்கள் எப்படியாவது தப்பித்துவிடலாம். ஆனால், வெளியில் அலைபவர்கள், டூ-வீலர் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் நிலை மேலும் பரிதாபத்தை தரக்கூடியது. அடிக்கும் வெயிலில் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவது, மிகுந்த சிரமத்தை தரக்கூடியது.

இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் விதமாக, இந்திய இளைஞர் ஒருவர் ஏசி-யால் இயங்கும் ஹெலெம்ட் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சந்தீப் என்ற இளைஞர், பொறியியல் பட்டதாரியாவார்.

இவர் ஹெல்மெட்டுடன் பொருத்திக் கொள்ளும் வகையில் ஏசி- இயந்திரத்தை கண்டுப்பிடித்துள்ளார். சிறியளவில் அமைந்திருக்கும் இந்த இயந்திரம் சூடான காற்றையும் வெளியேற்றும் தன்மைக் கொண்டது.

நாட்டில் நிலவும் அனைத்து பருவநிலை மாறுதலின் போது இந்த ஹெல்மெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என சந்தீப் தெரிவித்துள்ளார். எனினும் கோடைக் காலத்தில் இந்த ஏசி ஹெல்மெட் அதிக பயனை அளிக்கும்.

தோள்பட்டையில் ஏசி இயந்திரத்தை மாட்டிக் கொள்ள வேண்டும். பிறகு பையில் இருந்து கிடைக்கும் குழாயை ஹெல்மெட்டுக்குள் விட வேண்டும். பையில் இருக்கும் இயந்திரத்தை இயக்கியவுடன், உடனே குழாய் வழியாக குளிர்ந்த காற்று ஹெல்மெட்டுக்குள் பரவும்.

ஏசி இயந்திரத்தின் மொத்த எடை 125 கிராம். ஹெல்மெட் மற்றும் தோள்பட்டை பையுடன் சேர்க்கும் போது அதிகப்பட்சமாக 1,800 கிராம் எடை வரும். எனினும், ஹெல்மெட்டின் மாடலுக்கு தகுந்தால் போல எடையில் மாறுபாடு இருக்கும்.

பேட்டரி திறனில் இயங்கும் இந்த ஏசிக்கு தோள்பட்டை பையில் தனியாக பிளக்-பாயின்ட் உள்ளது. அதிலுள்ள ஒரு சுவிட்ச்சில் தலைக்கு செல்லும் குளிர்ந்த காற்றின் அளவை கூட்டவும் குறைக்கவும் செய்யலாம்.

குளிர்ந்த பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இந்த இயந்திரம் சூடான காற்றையும் வெளிப்படுத்தும். வாகன ஓட்டிகள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் இடங்களுக்கு ஏற்றவாறு, குளிர்ந்த மற்றும் சூடான மோடுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஏசி இயந்திரம், பைக்கின் பேட்டரியின் மூலம் திறனை பெற்று இயங்கும்.

நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு இளைஞர் சந்தீப் இந்த ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளார். இதுபோல தன்னிடம் எட்டுக்கும் மேற்பட்ட கண்டுப்பிடிப்புகள் இருப்பதாகவும், விரைவில் அவை அடுத்தடுத்து அறிமுகமாகும் என சந்தீப் தெரிவித்துள்ளார்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !