Thursday, May 23, 2019

இந்தியாவில் உண்மையாகவே தண்ணீர் இல்லாமல் போகப்போகிறதா?

நடந்து முடிந்துள்ள 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, நாடுமுழுவதும் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சனை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
2024ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதுமுள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியும், உலகளவிலான தரத்தில் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் 42 சதவீதப் பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று அச்சம் தெரிவிக்கிறது.
நாட்டிலுள்ள அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம் என்பது போன்ற வாக்குறுதிகளை உண்மையிலேயே நிறைவேற்ற முடியுமா?

அபாய நிலை

உலகின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டிருக்கும் இந்தியாவில் வெறும் நான்கு சதவீத நன்னீர் ஆதாரங்களே உள்ளன.
"முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமான தண்ணீர் பிரச்சனையை நாடு சந்தித்து வருகிறது" என்று அரசின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் உண்மையாகவே தண்ணீர் இல்லாமல் போகப்போகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற நாட்டின் 21 நகரங்களில் 2020ஆம் ஆண்டிற்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
அதுமட்டுமின்றி, 2030ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் 40 சதவீத இந்தியர்களுக்கு குடிநீரே கிடைக்காத நிலை ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

வளரும் நகரங்கள்

இந்தியாவின் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் நிலவும் தண்ணீர் பிரச்சனையில் மிகுந்த வேறுபாடு காணப்படுவதாக கூறுகிறார் அசோகா சூழலியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் வீணா ஸ்ரீநிவாசன்.
"நாட்டிலுள்ள நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால், அவற்றிற்கு தேவையான தண்ணீரை உறுதிசெய்யும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை" என்று அவர் கூறுகிறார்.
2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை 60 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஊரகப் பகுதிகளிலுள்ள நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதே நீண்டகால பிரச்சனைக்கு வித்திடக்கூடும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
நாட்டின் 80 சதவீத தண்ணீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. பூமிக்கடியிலுள்ள கல் மற்றும் மண்ணிலிருந்து அது பெறப்படுகிறது.
"பூமிக்கடியில் தண்ணீர் உற்பத்தி ஆவதை விட அதிகமாக அளவு வெளியேற்றப்படுவதே பிரச்சனைக்கு காரணம்" என்று கூறுகிறார் 'வாட்டர்எயிட் இந்தியா' அமைப்பின் தலைமை செயலதிகாரியான மாதவன்.
அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவிலான தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன.
இந்தியாவில் உண்மையாகவே தண்ணீர் இல்லாமல் போகப்போகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஒரு கிலோ பருத்தியை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்காவில் 8,100 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும் நிலையில், இந்தியாவில் 22,500 லிட்டர் தண்ணீர் உபயோகிக்கப்படுவதாக 'வாட்டர் பூட் பிரிண்ட் நெட்ஒர்க்' எனும் அமைப்பு கூறுகிறது.
முந்தைய 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், நாட்டிலுள்ள அனைத்து பிராந்தியங்களில் கண்காணிக்கப்பட்ட 66 சதவீத கிணறுகளின் நீர் மட்டம் கடந்தாண்டு மிகவும் குறைந்து காணப்பட்டதாக அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு பருவநிலை மாற்றமும் முக்கிய காரணம்.
மழை வராததால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்பது போய், தற்போது அதிகளவிலான மழைப்பொழிவு நிலத்துக்கடியில் செல்லாமல் வழிந்தோடி செல்வது முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று கூறுகிறார் சுந்தரம் கிளைமேட் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மிருதுளா ரமேஷ்.
அதே சமயத்தில், உலக வெப்பமயமாதலின் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் வறட்சி என்பது சாதாரண ஒன்றாக மாறி வருகிறது.

நிறுத்தப்பட்ட நிதியுதவி

இந்தியாவில் உண்மையாகவே தண்ணீர் இல்லாமல் போகப்போகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியாவை பொறுத்தவரை தண்ணீர் பிரச்சனை என்பது மாநிலம் சார்ந்த ஒரு விவகாரமாக பார்க்கப்பட்டாலும், குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு நிதியுதவி மாநிலங்களுக்கு வழங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த ஐந்தாண்டுகளாக இந்த நிதியுதவியை நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு நிறுத்திவிட்டது.
அதே சமயத்தில், ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை, இந்தியாவின் ஊரகப் பகுதிகளிலுள்ள ஆறு சதவீத வீடுகளுக்கு மட்டுமே குழாய் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இது தற்போது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல், நாடு முழுவதும் தொழில்துறையிடமிருந்து 'நீர் பாதுகாப்பு' என்ற பெயரில் கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை போதுமானதாக இருக்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, தண்ணீரை மறுசுழற்சி செய்வது, மழைநீரை பாதுகாத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று பல்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !