Tuesday, May 25, 2021

உழவுத் தொழிலின் பெருமை கட்டுரை

 

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வள்ளுவரின் கருத்து
  3. ஒளவையாரின் கருத்து
  4. உழவின் முக்கியத்துவம்
  5. முடிவுரை

முன்னுரை

ஆதிகாலம் தொட்டு இன்று வரை தமிழர்களின் அடையாளமாக விளங்குவது உழவுத்தொழிலே ஆகும். நதிக்கரைகளை அண்டி தனது குடியிருப்புக்களை அமைத்த ஆதி மனிதனின் வாழ்வாதாரமாக விளங்கியது உழவுத்தொழில்.

இந்த உழவுத்தொழில் மூலம் உலகிற்கே உணவைத் தந்து மக்களை வாழ வைப்பவன் விவசாயி. இதனையே கம்பர் தனது ஏரெழுபது என்ற நூலில் “செங்கோல் நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோல்” என்று குறிப்பிடுகின்றார்.

நாட்டிலே மக்கள் சிறப்பாக வாழ வேண்டுமாயின் அங்கே உழவுத்தொழில் சீரும் சிறப்புமாக நடந்தாக வேண்டும். இதனையே நாட்டில் செங்கோலாட்சி நடைபெறுவதற்கு காரணமாக அமைவது உழவனின் சிறுகோலாகிய கலப்பையேயாகும் என குறிப்பிடுகின்றார்.

தொழில்களிலே மேன்மையான தொழில் உழவுத்தொழிலே. உழவு இல்லையேல் இவ்வுலகில் வாழ்வோரிற்கு உணவு இல்லை. இதனாலே இவ் உலகம் ஆதிகாலம் தொட்டு இன்று வரை உழவுத்தொழிலை போற்றி வணங்கி வருகின்றது.

இக்கட்டுரையில் உழவுத்தொழில் பற்றி நோக்கலாம்.

வள்ளுவரின் கருத்து

பண்டைய காலம் தொட்டே மக்களின் பிரதான தொழிலாக உழவு இருந்தமையால் திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் போன்ற பல பழம்பெரும் புலவர்கள் உழவுத்தொழிலின் மகிமையை போற்றிபாடி வந்துள்ளனர்.

அவற்றில் முதன்மையானவராக திருவள்ளுவ பெருந்தகை விளங்குகின்றார். அவர் தனது நூலாகிய திருக்குறளில் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று குறிப்பிடுகின்றார்.

இதன் பொருள் யாதெனில் மண்ணை உழுது அதிலிருந்து வேளாண்மை செய்து இந்த உலகத்திற்கு உணவை அளிக்கின்ற மக்களே சிறந்தவர்கள் ஆவார்கள். மற்றவர்கள் அனைவரும் இவ் உழவுத்தொழிலை மேற்கொள்கின்ற மக்களை தொழுதே தமது வாழ்க்கையை நடாத்த வேண்டிய கட்டாயத்தில் வாழ்கின்றார்கள். இதுவே உழவுத் தொழிலின் பெருமையாகும்.

மேலும் “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்றும் குறிப்பிடுகின்றார்.

அதாவது எத்தகைய சிறப்பான தொழில்களை மேற்கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்தாலும் எமது உணவிற்காக நாம் உழவரையே கையேந்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

ஆகவே உழவுத் தொழிலே மேன்மையான தொழிலாக கருதப்படுகின்றது. அதனாலேயே எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் உழவுத் தொழிலை கைவிடக்கூடாது என்று குறிப்பிடுகின்றார்.

ஒளவையாரின் கருத்து

ஒளவையார் தனது நூலாகிய நல்வழியில் உழவுத் தொழிலின் பெருமையை 

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே- ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு ஓர் பணிக்கு

இவ்வாறு போற்றிப் பாடியுள்ளார். அதாவது ஆற்றங்கரையிலே வளர்ந்திருக்கும் மிகப் பெரிய மரமானது பெருவெள்ளம் வரும்போது சாய்ந்து விடும்.

அவ்வாறே எந்தப் பெரிய அரசசேவையில் உள்ளவரும் குறிப்பிட்ட காலத்தை நெருங்கியவுடன் ஓய்வு பெறுவது கட்டாயமாகும். ஆனால் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றவர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது.

அவர்கள் நேரம் பார்க்காமல் எந்நேரமும் வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அவ்வாறு வேலை செய்தால் மாத்திரமே இந்த உலகத்திற்கு உணவை அளிக்கமுடியும்.

ஆகவே இந்த உழவுத்தொழிலிற்கு ஒப்பானதொரு தொழில் இந்த உலகத்திலே இல்லை என உழவின் மேன்மையை எடுத்தியம்புகின்றார்.

இவ்வாறு ஒவ்வொரு புலவர்களும் பலவாறாக உழவை மேன்மைபடுத்தி உள்ளனர்.

உழவின் முக்கியத்துவம்

மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் போன்றவற்றுள் உணவே மிகமுக்கியமாக கருதப்படுகின்றது. இந்த உணவு மனிதனிற்கு சக்தியை தருகின்றது.

அப்படிப்பட்ட உணவை உழவுத்தொழில் மூலம் கிடைக்கின்ற நெற்கதிர்களை உமி நீக்கி அரிசியாக்கி இந்த உலகத்திற்கு அளிப்பவன் உழவாளி.

ஆதிகாலம் தொட்டு இன்றுவரை உழவுத்தொழில் இன்றிமையாததாக விளங்குவதற்கான காரணம் தமிழர்களின் உணவுப்பழக்கத்தில் நெல் அரிசி சோறு முக்கியமான இடத்தை வகிப்பதேயாகும்.

இந்த அரிசி சோற்றை தருவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் உழவர்கள். இதனாலேயே உழவுத்தொழில் மிக முக்கியமாக கருதப்படுகின்றது.

முடிவுரை

இன்றைய நவீன உலகத்தில் உழவுத் தொழிலானது அருகிவரும் நிலமை காணப்படுகின்றது.

இதற்கான பிரதான காரணம் உழவுத்தொழிலானது கடினமானதாக இருப்பதோடு, படித்தவர்கள் யாரும் வயலில் இறங்கி வேலை செய்ய விரும்புவதில்லை.

இதனால் ஒவ்வொரு நாடும் தனது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக வேறு நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்நிலை மாற வேண்டுமாயின் உழவுத்தொழிலை போற்றிப்பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். ஆகவே உழவுத்தொழிலை போற்றி சிறப்புடன் வாழ்வோமாக.


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !