Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, January 22, 2019

புத்தி பலம்

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.
இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.
“தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!” என்று சொல்லிச் சிரிப்பான்.
அதற்கு அந்த மூவரும், “இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்… நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!” என்று சொல்லி சிரிப்பர்.
இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.
ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.
வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.
அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“விடுவிடு’வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.
அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.
“எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!” என்றான் இளங்கோ.
“என்ன போட்டி நோஞ்சான்?” என்று கேட்டனர்.
“உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்றான் இளங்கோ.
அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் “ஹா… ஹா… ஹா…!” என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.
“நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!” என்றனர் அவர்கள்.
“இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!” என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.
“சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!” என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.
இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.
“ம்! இழுக்கலாம்!” என்று கத்தினான்.
அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.
திடீரென்று “இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ’ என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.
மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.
எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.
வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.
இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. “இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்’ என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.
கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.
அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.
மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, “”மூளை பலம் என்பது இது தான்,” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.

Wednesday, December 19, 2018

மீனவனின் புத்தி கூர்மை

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது: 

மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.'' 

மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்: 

மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.'' 

மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான். 

அவனது தந்தை கூறினார்: 

மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...'' 

அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்: 

மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...'' 

கடைசியாக மனைவி கேட்டாள்: 

நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.'' 

மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்? 

விடை: என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம். 

நீதி: உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும் முடிவெடுக்கும் திறமையும் இயல்பாகவே வெளிப்படும்.

நன்றி மறப்பது நன்றன்று

காசிராஐனின் தேசம் அங்குள்ள ஒரு வனத்தில் வேடன் ஒருவன் விஷம் தோய்ந்த அம்பினை ஒரு மானின் மீது எய்தினான்.அது குறி தவறி ஒரு பெரிய மரத்தின் மேல் பாய்ந்து பதிந்தது. விஷ அம்பு பாய்ந்ததால் மரத்தின் 
இலை, காய், கனி அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் தொடங்கின. அதில் வசித்த பறவைகள் திசைக்கொன்றாய் பறக்கவும் தொடங்கின. ஆனால் அதில் வசித்து வந்த ஒரு கிளி மட்டும் எங்கும் செல்லாமல் அந்த மரத்திலேயே தங்கி விட்டது. 
அந்த கிளியை பார்த்து வியப்படைந்த இந்திரன் மனித வடிவம் தாங்கி மரத்தின் பக்கத்தில் வந்தான். அந்த கிளியை பார்த்து பட்டுப் போன மரத்தை விட்டு பிரியாமல் அதன் கிளையிலேயே அமர்ந்து இருக்கிறாயே இந்த மரத்தால் என்ன பயன் .மரம்தான் கருகி விட்டதே என வினவினான். 
இந்த மரத்தில்தான் நான் பிறந்தேன்.இந்த கிளையில்தான் நான் வளர்ந்தேன்.இதில் பழுத்த பழங்களைதான் உண்டு உயிர் வாழ்ந்தேன்.எனக்கு அடைக்கலம் தந்த மரம் இன்று பட்டுப் போனதால் இதை விட்டுப் பிரிவதில் என்ன நியாயம் என்று சொன்னது கிளி... 
நன்றியும் விசுவாசமும் நிறைந்த கிளியின் வார்த்தைகளில் நெஞ்சம் நெகிழ்ந்தான் தேவேந்திரன்.உடனே இந்திரன் கிளியிடம் நீ விரும்பும் ஒரு வரம் கேள் தருகிறேன் எனறான். 
உடனே பட்டுப் போன இந்த மரம் பசுமை பெற வேண்டும் இதுதான் எனது விருப்பம் என்றது.இந்திரன் அளித்த வரத்தால் இலையும் கனியுமாக புத்துயிர் பெற்றது மரம்.இந்த கதை உணர்த்தும் கருத்து முதுமை அடைந்த பெற்றோரால் இனி எந்த பயனும் இல்லை என பெற்ற பிள்ளைகள் கருதி அவர்களை புறக்கணிக்கலாகாது.வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்றும் பெற்றவர்கள் வைரம் பாய்ந்த மரத்தை போன்றவர்களே.....

கர்மா….

ன்னா, நம்ம ஷாலு சொல்றதக் கேட்டேளா?”
சோஃபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம் காஃபியைக் கையில் கொடுத்துக் கொண்டே, கேட்டாள் சாரதா.
“எதப்பத்தி சொல்றே?” அவளின் கேள்வியில் பெருமளவு ஆர்வம் காட்டாமல், டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரேம்.
“அதான்னா… நேத்து எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை… நான் சொன்னாக்கா, கேக்க மாட்டான்னு தோண்றது.. நீங்க கொஞ்சம் பேசிப் பாருங்கோளேன்.”`
“என்னம்மா பிரச்சனை? நம்மதான் அவ்வளவு பேசினோமே, இன்னுமென்ன… நீயுந்தான் அவளோட சாய்ஸ்க்கு ஓ.கே. சொல்லிட்டியே….”
“அதான்னா… எனக்குக் காதல் மேலயெல்லாம் ஒண்ணும் வெறுப்பில்லை.. நம்ம கல்யாணமே அப்டித்தானே.. அதுவும் இருபத்தெட்டு வருஷத்துக்கு முன்னால”… சாரதா தொடர, ஒரு நிமிடம் அந்தக் கால நினைவுகள் வந்து போனது பிரேமுக்கு.
வ்வளவு வேலைகளைத் திருட்டுத்தனமாகச் செய்திருப்பான் அவன். நண்பர்களின் உதவியுடன், சுவரேறிக் குதித்து, மொட்டை மாடிக்கு அவளை அழைத்துச் சென்று…..
நினைத்துப் பார்க்கையிலே ஒரு விதமான சந்தோஷமும் வெட்கமும் சேர்ந்து கொண்டது. இரண்டு வருடங்களுக்கு மேல் காதலித்தனர் இருவரும். வெவ்வேறு சாதி, வெவ்வேறு பழக்க வழக்கங்கள். பிரேமின் அப்பா அந்தக் கிராமத்து ஜமீந்தாரர். திரைப்படங்களில் வருவதுபோல் இல்லாவிட்டாலும், கிராமப் பஞ்சாயத்து நடப்பது என்பது நிஜமே.. பிரேமின் தந்தை சொல்வதே தீர்ப்பு. தனக்கு அதிகாரமிருக்கிறது என்பதால் மனம்போன போக்கிலெல்லாம் செய்து விடமாட்டார். ஒரு நீதிபதிக்கிருக்க வேண்டிய நேர்மையுடன் செயல்படுவார். வேண்டுமளவுக்கு விசாரணைகள் செய்து முடித்து, கிராமத்தில் இருக்கும் இன்னும் சில பெரியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கடைசியில் தனக்குச் சரி என்று முழுவதுமாய்த் தெரிந்தவற்றை மட்டுமே தீர்ப்பாக வழங்குவார்.
அவர், சாதிவிட்டுச் சாதி திருமணம் செய்து கொள்வதைச் சற்றும் ஏற்காதவர். தனது மகன் தன் சாதிவிட்டு அக்கிரகாரத்துப் பெண்ணைக் காதலிக்கிறான் என்றவுடன் முழுவதுமாய்க் கொதித்துப் போய்விட்டார் அவர். உறுதியாய் இந்தத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மறுத்துவிட்டார் அவர். சாரதாவின் பெற்றோருக்குப் பெருமளவுக்கு எதிர்ப்பு இல்லையெனினும், ஜமீந்தாருக்குப் பிடிக்காததைச் செய்வதில்லை என்ற நிலையில், அவர்களும் இந்தத் திருமணத்தை எதிர்த்தனர்.
அவ்வளவு எதிர்ப்பையும் மீறி, சாரதாவைத் தூக்கிக் கொண்டுபோய், பக்கத்து டௌனிலுள்ள ரெஜிஸ்ட்ரார் ஆஃபிசில் வைத்துத் தாலி கட்டினான் பிரேம். நேற்று நடந்தது போலிருந்த இந்த நிகழ்வு நடந்து இருபத்தி எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன.
னதுக்குள் அமைதியாய்ச் சிரித்துக் கொண்ட பிரேமை, “ஏன்னா, நாம்பாட்டுக்குப் பேசிண்டே இருக்கேன், என்ன பெரிய யோஜனைல மூழ்கிட்டேள்?” என்ற சாரதாவின் குரல் எழுப்பியது.
”என்னதான் பிரச்சனை இப்போ? சொல்லும்மா….” என்றிழுத்தான்.
”ஷாலு சொல்றா, அவ லவர் டெல்லிக்கு மாத்தலாயிட்டாராம்… அவளும் ஆஃபிஸில டெல்லிக்கு மாத்தல் கேட்டுண்டு போப்போறளாம்”……
இதனைக் கேட்டவுடன் தனது உடலுக்குள் கைவிட்டு, உயிரினைப் பிடித்து யாரோ உருவி எடுத்துக் கொண்டு செல்வதுபோல் உணர்ந்தான் பிரேம். “வாட்…. வாட் ஆர் யூ டாக்கிங்க் அபவுட்? என்ன… அவள விட்டுட்டு நாம எப்படி? கம் ஆன்……”
என்று சொன்ன கணவனை ஒரு கணம் பார்த்த சாரதாவின் மனதிலும் ஃப்ளாஷ் பேக் ஓடத் தொடங்கியது…
சாரதா… அம்மா… கொஞ்சம் புரிஞ்சுக்கோடி… நீ காதலிக்குறதுகூட எங்களுக்குப் பெரிசுல்ல… அந்த ஜமீந்தாருக்காப் பயந்து கண்காணாத தேசத்துக்குப் போக வேண்டியிருக்கும்மா… யோசிச்சுப் பாரு… அப்பா உன் மேல எத்தன பாசம் வச்சிருக்கார்னு… அவரால உன்னப் பாக்கமா ஒரு நாள் இருக்க முடியுமா… பிராணம் போயிடுண்டி….”
ழுதுகொண்டே புலம்பிய அம்மாவின் முகமும், அந்த அழுகையிலாவது தன் மனதை மாற்றிக் கொண்டுவிட மாட்டாளா என்ற எதிர்பார்ப்புடன் அப்பாவியாய்த் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவின் முகமும் மனதுக்குள் வந்துபோனது. தன் அப்பாவின் அந்த முகத்திற்கும், தன் கண்ணெதிரே கலங்கி வீற்றிருக்கும் கணவனின் முகத்திற்கும் எள்ளளவு வித்தியாசமும் தெரியவில்லை சாரதாவிற்கு.
–    வெ. மதுசூதனன்.

ஓட்டு வீடு

காசி வீட்டிற்குள் இருக்க முடியாமல் தவித்தார். அந்தச் செங்கல் சுவர், பெயிண்ட் எல்லாம் இறுக்குவது போல இருந்தது. வீட்டின் வாசல் நோக்கி நடந்தார். மனைவி சுபா புரிந்தது போல ஒரு குவளை தண்ணீரைக் கையில் ஏந்தியபடி அவரைத் தொடர்ந்தார். அந்த வீட்டின் வாசலில் உள்ள சிறிய வராந்தாவில் அமர்ந்தார். வெளிக் காற்று, ஏதோ இறுக்கத்தைக் குறைத்தது போல இருந்தது. ஆனாலும் முழு அமைதி இல்லை.
“சுபா .. மனசுக்கு கஷ்டம் குறையல.. அம்மா திடீர்னு இப்படி போவான்னு எதிர்பாக்கல”.
“பத்து நாளாச்சுத் தூங்கி. கொஞ்சம் தூங்க முயற்சி பண்ணுங்க”
ஒரு பெரு மூச்சை மட்டுமே தந்தாள் சுபா.
காசி வராந்தாவின் சுவரின் சாய்ந்தார் . மேலே பார்த்தார் . வீட்டின் மேல் சுவர் தான் தெரிந்தது. கொஞ்சம் ஒருக்களித்து வெளிப் பக்கம் தெரிவது போல நகர்ந்து உட்கார்ந்து சாய்ந்தார். தண்ணீரை அருகில் வைத்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டார் சுபா. மேலே வானம் பார்த்த படி அமர்ந்த பொழுது ஏதோ கொஞ்சம் அமைதி பிறந்தது.
நட்சத்திரங்கள் மினுக்கியது. இரவின் குளுமை பரப்பிய படி நிலவு. கண்களை மெல்ல மூடினார் காசி.
மனதிற்கு மட்டும் “Time machine ” போல சக்தி உண்டு பின் நோக்கி செல்ல. ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு ஓடியது. ஏழு வயது காசி வீட்டிற்கு முன் இருந்த சின்ன ஓடையில் குதித்து கொண்டு இருந்தான்.
அவர்கள் வீடு உலகத்திலேயே மிக சந்தோஷமான வீடு.
ஒரு பத்துக்குப் பத்துக்கு இடத்தில உலகத்தின் அத்தனை மகிழ்வும் கிடைக்கும் . சின்ன ஓடுகள் அடுக்கி கட்டிய வீடு. இடையிடையே சிறு சிறு ஓட்டைகளில் கூரைகளை வைத்து குளுமை யாக கட்டி இருந்தார் அப்பா. வீட்டின் உள்ளே ஒரு சிறிய தடுப்பு போல வைத்து அதில் ஓரமாக ஒரு அடுப்பு இருந்தது. பக்கத்தில் சிறிய மர அலமாரி . அதில் சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைத்திருந்தார் அம்மா. இன்னொரு பக்கம் பாயை மடித்து வைத்திருந்தார். அது தான் படுக்கும் பக்கம்.
அவ்வளவு தான் வீடு. வெளியில் ஒரு கயத்து கட்டில். அப்பா தன் கையால் கட்டிய கட்டில். இரவு தினமும் அப்பாவும் காசியும் அந்தக் கட்டிலில் படுத்து, மேலே வானம் பார்த்து, கதை பேசியபடி தூங்குவார்கள்.
அவர்கள் வீடு இருக்கும் இடத்தைச் சுற்றி நிறைய மரங்கள் இருந்தன.
காலையில் குயில்களும் குருவிகளும் கதை சொல்லி அவனை எழுப்பும். அந்த ஓடையில் குதித்து விளையாடி குளித்து விட்டு பள்ளிக்குக் கிளம்புவான் காசி. அம்மா வைத்திருக்கும் காலை உணவு எது என்று நினைவு இருக்காது ஆனால் சுவை நாவில் மட்டும் இருக்கும்.
அவன் அப்பா தான் உலகத்திலேயே மிகச் சிறந்தவர் என்று அன்பைப் பொழிவான் சிறிய காசி லிங்கம்
.
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்று தெரியாத வயசு.ஆனால் கடின உழைப்பாளி என்று புரியும் அவனுக்கு. பள்ளிக்குப் போகும் பொழுது சில சமயம் கால்கள் வலிக்கிறது என்று அவர் தோள்களில் உட்காருவான். இன்னமும் அந்த வலிமையான தோள்கள் நினைவில் இருந்தது.
அவர்கள் வீடு, ஊரை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி இருந்தது. தினம் நடந்து தான் படிக்கப் போவான். ஆனால் எதுவுமே அவனுக்கு கஷ்டம் இல்லை. அம்மா, அப்பா, வீடு இது தான் சொர்க்கம். மரம் ஏறுவதும் , ஊஞ்சல் ஆடுவதும், ஓடையில் குதிப்பதும் என, சிறுவன் காசிக்கு எல்லாமே வீடும், அதன் சுற்றமும் தான்.
கண்ணைத் திறந்தார் காசி .. ஒரு ஓரமாக கசிந்திருந்த கண்ணீரைத் துடைத்தார். வீட்டின் இறுக்கமும், மனமும் எங்கோ பறந்து சென்று விட்டது.
“நேரம் ஆச்சு உள்ள வந்து படுங்க.. நாளைக்கு வேலைக்குப் போகணும்”. சுபா குரலில் வாஞ்சையோடு நினைவுறுத்த.. அந்த வாஞ்சையில் உருகி உள்ளே வந்து படுத்தார்.
சுபாவிற்காக உள்ளே வந்து படுத்தாலும் மனம் மட்டும் மீண்டும் பின் நோக்கி ஓடியது. மனதை அடக்க வழி மட்டும் தெரிந்திருந்தால்
எவ்வளவு நல்லதாக இருக்கும்.
பள்ளிப் பருவம் முதல் இதம் தந்த வீடு அங்கு படுத்தால் மட்டுமே தன்னை மறந்த தூக்கம் என்பது காசிக்கு வரும்.
நாட்கள் ஓடியது சுற்றி உள்ள மரங்கள் குறைந்தது .. அவன் வீட்டைச் சுற்றி நிறைய குடியிருப்புகள் வரத் தொடங்கின .. பெரிய பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு நடுவில் அவர்களது சிறு வீடு
கம்பீரமாக நின்றது போல தோன்றும் காசிக்கு. ஓடை அவர்களுக்கு அருகில் ஓடியதால், அவர்கள் ஓட்டு வீட்டின் அடுத்து கட்டிடங்கள் குறைவாகத் தான் இருந்தன.
ஆனாலும் அந்த இடத்தின் வளர்ச்சிக்குப் பொருந்தாமல் தான் வீடு நின்றது. காசி கல்லூரி படிக்கும் பொழுது, அவன் அப்பா தவறினார்.
அதே வீட்டில் இருந்து தான் தன் காலமும் பிரியும் என கடைசி வரை அங்கிருந்து உயிரை விட்டார். அம்மா திடமானவர். அந்த ஓடையைச் சுற்றி இருந்த இவர்களது சிறிய நிலத்தில் காய்கறிகள் பயிர் செய்து, அதில் வந்த வருமானத்தைக் கொண்டு இருவரின் வாழ்க்கையும் நடத்தினாள். காசி நன்குப் படித்தான். படிப்பு முடித்த பின், ஒரு பெரிய பணியில் சேர்ந்தான்.
வேலை நிமித்தமாக நகரிலேயே தங்க நேர்ந்த போதிலும், அவனிடம் வந்து தங்க வில்லை அவன் அம்மா. அவனும் எங்கே எந்தப் பணிக்கு சென்றாலும், வாரக் கடைசியில் வீட்டிற்கு வந்து அதே கயத்து கட்டிலில் தான் தூங்கினான்.
குடியிருப்புகள் பெருகியது. ஓடையில் குடியிருப்புகளின் கழிவுகள் கலக்கத் தொடங்கியது. வீட்டின் மிக அருகிலேயே ஒரு பேருந்து நிலையம் வந்தது. ஆனாலும் அம்மா அந்த இடத்தையும், நிலத்தையும் விட்டு நகராமல் அங்கேயே இருந்தார்.
காசிக்குத் திருமணம் ஆகி குடும்பம் ஆன பிறகும், வேலைக்கு வசதியாக நகரத்தில் வீடு ஒன்று இருந்தாலும், அங்கு வீட்டைச் சுற்றி, மரங்கள் நிறைய இருக்கும் படி பார்த்து கொண்டு , குருவிகளை, குயில்களை ரசித்தாலும், அந்த ஓட்டு வீடிற்கு இணை உலகில் எங்கும் இல்லை .
ஒவ்வொரு வாரக் கடைசியிலும் ஒரு முறையாவது வந்து அம்மாவுடன் பேசி, வீட்டில் படுத்தால் தான் நிம்மதியாகத் தூங்கியதாக உணர்வார்.
அம்மா போன வாரம் திடீரென மறைந்தார். காசிக்கு உயிர் பிரிந்தது போல ஒரு துக்கம்.
“ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்புவதில்லை ” என்று புரிந்தாலும், வீடும், தூக்கமும் போனது காசிக்கு. புரண்டு புரண்டு படுத்தார் மீண்டும். வெளியே சூரியன் எழுந்து விட்டான். ஏதோ ஒன்று தோன்றியது. அவசரமாக தொலை பேசி எடுத்து யாரிடமோ பேசினார் காசி.
சுபாவும் , அவர் மகனும் புரியாமல் அவரைப் பார்க்க ஒரு புதிய உத்வேகத்துடன் வெளியில் சென்றார்,
இரவு அவர்கள் வீட்டுக்கு முன் ஒரு டெம்போ வந்தது . டெம்போவினைத் திறந்த பொழுது, உள்ளே ஒரு பெரிய ஆச்சர்யமே இருந்தது.
வீட்டின் மொட்டை மாடியில் அதை ஏற்றினார் காசி.
பெரிய மொட்டை மாடியில் ஒரு ஓரமாக, ஏற்கனவே மரங்களைச் சுற்றி அமையும் படி இருக்கும் அவர்கள் வீட்டின் எழிலோடு அதை இணைத்தார் காசி.
சுபா ஆச்சர்யமாக பார்க்க. வீட்டின் மொட்டை மாடியில் அழகாக வைக்கப்பட்ட அவரது ஓட்டு வீட்டினுள் சென்று கயத்து கட்டிலில் சுகமாகப் படுத்துக் கொண்டார் காசி. பத்து நாட்களாக தூங்காதவர் குழந்தை போல தூங்கினார் அன்று.
நகரத்து அத்தனைக் களேபரத்திலும் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் கம்பீரமாக நின்றது காசியின் ஓட்டு வீடு .
-லட்சுமி சுப்பு

மன்னிப்பாயா ..

நிரஞ்சனுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. புரண்டு புரண்டு படுத்தாலும் தூங்க முடியவில்லை. படுக்கையை ஒட்டிய மேஜை மீதிருந்த செல்ஃபோனை எடுத்தான். பளீரென ஒளிர்ந்து கண்ணைக் கூசியது. கண்களை இடுக்கிப் பார்த்ததில் மணி 3.17 am என்று காட்டியது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தான். கால்களில் துணி விலகியதைக் கூட உணராமல், குழந்தை போல் குப்புறப் படுத்து, நித்சலனமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஷர்மி. தூக்கத்திலும் முகத்தில் மெலிய புன்னகை. விலகிக் கிடந்த நைட்டியை இழுத்துவிட்டு, பக்கத்திலிருந்த போர்வையைக் கழுத்து வரையில் போர்த்தி விட்டான். அந்தச் சலனத்தில் கண் விழித்தவள்
‘தூங்கலையாங்க? பதினோரு மணிக்குத் தானே ஏர்ப்போர்ட் போகணும் .. மணி என்னாகுது?’
‘மூணே கால் ஆகுது..’
‘படுங்க கொஞ்ச நேரம் ..’
‘இல்லைம்மா, தூக்கம் வரலை ..’
‘படுங்கப்பா .. படுத்தீங்கன்னா தூக்கம் வரும் .. ‘ சொல்லிக் கொண்டே திரும்பப் படுத்துத் தூக்கத்தைத் தொடர்ந்தாள் ஷர்மி.
எப்படி வரும்? படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமுக்குச் சென்று கண்ணாடியில் பார்த்தான் நிரஞ்சன். முகம் கறுத்து, கண்கள் சிவந்து .. அடிமனதில் உளைச்சல்; கடந்த கால உறுத்தல், எதிர்காலக் குழப்பம். எல்லாம் ஒரு ஃபோன் காலில் தொடங்கியது.
மூன்று நாட்களுக்கு முன்னர் ஜிம்மில் இருக்கும் போதுதான் அந்த ஃபோன் வந்தது. புதிய நம்பர். யாராக இருக்குமென நினைத்துவாறு டிரெட்மில்லின் வேகத்தைக் குறைத்துப் பேசினான்.
‘ஹலோ ..’
‘இஸ் திஸ் மிஸ்டர் நிரஞ்சன்?’
‘எஸ்’. மிஸ்டர் எல்லாம் போடுகிறார்களே, யாராக இருக்கும்?
‘ஹலோ .. நான் .. வந்து .. ஐ அம்.. நான் மிதுன்.. கௌரியோட பையன்..’
காது வழியே ஆயிரம் வாட் மின்சாரம் பாய்ந்து, மூளையில் தாக்கி உடலெல்லாம் பரவியதாய் உணர்ந்தான். இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் துண்டித்து, மெதுவே மறந்து போன உறவு, மகனின் குரல் வடிவில் இடியாக விழுந்து நெஞ்சைப் பிளந்தபின் எப்படித் தூக்கம் வரும்?
*
கௌரி.. நிரஞ்சன் ஒன்றரை வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவள். பெற்றோரை எதிர்த்து நடந்த திருமணம். முதல் இரண்டு வாரங்கள் ஹோட்டல், லாட்ஜ் என்று ஓடியது.  அதற்குப் பிறகு தான் வாழ்க்கையின் நிதர்சனம் பளாரென்று என்று அறைந்தது. எங்கு சென்றாலும்  நிரஞ்சன் வீட்டினர் தேடித் துரத்தி வந்தார்கள். வீடு, சாப்பாடு என அனைத்தும் போராட்டமாகிப்போனது. காதலித்த போது கண்ட கனவுகள் எதுவும் நிஜமாகாதோ என்று பயந்தார்கள் இருவரும். காதலுக்குத் தைரியம் சொல்லிய நண்பர்கள் காணாமல் போனார்கள். அந்தச் சமயத்தில் கை கொடுத்தவன் தான் ஷாஜி. பல ஆண்டுகளுக்கு முன்னர் நிரஞ்சனின் பக்கத்து வீட்டிலிருந்தவன். புனேவில், நிரஞ்சனுக்கு சஞ்ஜெட்டி ஹாஸ்பிட்டலில் வேலை வாங்கிக் கொடுத்து, வீடு பார்த்துக் கொடுத்து.. பல உதவிகள் செய்தான்.
புனேவில், அவர்களின் வாழ்க்கை வெகு மகிழ்ச்சியாகத் தான் தொடங்கியது. டியூட்டி டாக்டர் வேலை என்பதால் பெரும்பாலும் நைட் ஷிஃப்ட் தான்.  தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் கெளரியுடனே செலவிட்டான். சமையலில் உதவி செய்து, காப்பி போட்டுக் கொடுத்து, துணி துவைத்து.. என ஒவ்வொரு நொடியும் அவளுடன் தான். பெற்றோரைப் பிரிந்து வந்த சோகம் அவள் மீது படியாமல் பார்த்துக்கொண்டான். நிரஞ்சனின் குடும்பத்தினர், கோபம் தீராமல் இருவரையும் தேடி வருகிறார்கள் என்கிற தகவல் கிடைத்த போதெல்லாம் அவளுக்குத் தெரியாமல் மறைத்தான்.
நான்கு மாதங்களில் கௌரி கர்ப்பமானாள். தந்தையாகப் போகிற மகிழ்ச்சியில், கௌரி மீதான அவனது அக்கறை இரட்டிப்பானது. மாடி ஏறி இறங்கி கஷ்டப்படாமலிருக்க, ஷாஜி இருந்த ஃபிளாட்டில், கிரவுண்ட் ஃப்ளோருக்கு மாறினார்கள். கெளரியை எந்த வேலையும் செய்ய விடாமல், வீட்டு வேலைகள் முழுவதையும் நிரஞ்சன் செய்து விடுவான். கர்ப்ப கால உணவுகளை ஷாஜியின் தாயிடம் கேட்டு அவனே தன் கைப்பட சமைத்து ஊட்டினான்.
மிதுன் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, தொட்டில், ரப்பர் ஷீட், படுக்கை, ட்ரெஸ், ஜான்சன்ஸ் பவுடர் எல்லாம் வாங்கியாகிவிட்டது. கெளரியின் கட்டளைப்படி ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது என்னென்ன தேவையோ அதையெல்லாம் எடுத்துக் கூடையில் அடுக்கி வைத்தான். மிதுன் கொழுக் மொழுக்கென இருந்ததால் சிசேரியன் செய்ய வேண்டியதானது.  அவள் தேறி வரும் வரை இருவரையும் அவன் தான் பார்த்துக் கொண்டான். குழந்தை தான் உலகமென ஆகிப் போனது நிரஞ்சனுக்கு. இரவெல்லாம் தூங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருப்பான். அசந்து  தூங்கும் போது, கனவு கண்டு, கண்ணைத் திறக்காமல், ரோஜாக் கன்னத்தில் குழி விழ மிதுன் சிரிப்பதைப் பார்த்துச் சொக்கிப் போவான். மடியில் கிடத்தி கை கால் அமுக்கி விட்டு, தோளில் கிடத்தி, நடந்து ஏப்பம் விடச் செய்து .. இரு வீட்டுப் பெற்றோரும் உடன் இல்லாத குறை தெரியாது எப்படியோ சமாளித்துவிட்டான்.
கௌரி மட்டுமே உலகம் என்றிருந்தவனுக்கு,  புதிய உறவு வந்த பின்பு பொறுப்புகள் இரட்டிப்பானது. தேவைகள் கூடக் கூட, செலவுகளும் கூடின. எப்படியாவது அவர்கள் இருவரையுமே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டுமென்ற வைராக்கியம் மேலோங்கியது. நல்லவேளையாக டூயூட்டி டாக்டர் பயிற்சி முடிந்து நிரஞ்சனுக்கு ஜெனரல் டாக்டர் பதவியும் கிடைத்தது. இரவு பகல் பாராமல் உழைக்கத் துவங்கினான்.
*
விமானம் நெவார்க் ஏர்போர்ட்டில் இறங்கியது. அவசர அவசரமாக, மற்றவர்களுக்கு முன்பாக வெளியே வந்தான் நிரஞ்சன் . ஏர்ப்போர்ட் ஹால்வேயில் நடக்கும்பொழுது எந்தத் தெளிவுமில்லை.   மிதுன் எப்படி இருப்பான்? மார்ச் மாதத்தோடு 24 முடிந்திருக்கும். எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? மிதுனிடம் செல்ஃபோன் வேறு இல்லை. குழப்பத்துடன் எரிச்சலும் வந்தது. ச்சே .. எந்த அப்பனுக்காவது இப்படி ஒரு சிக்கல் வருமா?
திரும்பிய இடமெல்லாம் நிறைய இந்திய இளைஞர்கள்..வெளுத்த ஜீன்ஸ், கசங்கிய சட்டையணிந்து, புஜமெல்லாம்  பச்சைக் குத்தி, காதில் பெரிய ஹெட்ஃபோன் பொருத்தி..
‘ஹலோ .. நீங்க தான் நிரஞ்சன்னு நினைக்கிறேன்..’ பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
ஆறடியைத் தாண்டும் உயரம்.. அகன்ற தோள்கள்; மாநிறம்; பாம்படார் ஃபேட் பாணியில் ஓரமெல்லாம் ஓட்ட வெட்டி, கொத்தாகப் பக்கவாட்டில்  வாரிய முடி; அளவெடுத்து, நேர்த்தியாகச் செதுக்கிய கிருதா; ஒரு காதில் வளையம்; வழ வழ சவரம்; இடது புருவத்தில் சிறிய வெட்டு; கழுத்தோடு ஒட்டிய டிஷர்ட்;
‘மிதுன்?’
‘யா.. மிதுன்’
கையில் இழுத்து வந்த பெட்டியை விட்டுவிட்டு அப்படியே இறுகக் கட்டியணைத்தான் நிரஞ்சன். லேசாக நிரஞ்சனின் தோளைத் தட்டிக் கொடுத்த மிதுன், ‘போலாமா?’ என்றான்.
*
வாடகைக் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் நிரஞ்சன். வண்டியுள், இறுக மூடியிருந்த கண்ணாடி வழியே கசிந்த இஞ்சின் சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. கண்களில் பெருகிய நீர் வெளியே விழுந்து விடாமல் கட்டுப்படுத்தியதில் நாசி வழியே வெளியேறியது நிரஞ்சனுக்கு .. அழுந்த உறிஞ்சிக் கொண்டான். ஏதாவது பேச வேண்டும். என்ன பேசுவது?
‘நினைக்கவேயில்லை .. உன்னைப் பார்ப்பேன்னு.. எப்போ ஜெர்ஸி வந்த?’
‘நாலு நாளாகுது .. ஒண்ணரை மாசம் டிரெயினிங்’
‘டயர்டா தெரியறே ..ஜெட் லாக் இருக்கா இன்னும்?’
‘அதெல்லாம் இல்ல..’
‘இதுக்கு முன்னாடி வந்திருக்கியாப்பா யு.எஸ்.க்கு?’
‘இல்ல.. இதான் ஃபர்ஸ்ட் டைம்.’
அவனைத் திரும்பிப் பார்த்தான் நிரஞ்சன்.
‘பெருசா வளர்ந்திருக்கே. ஹாண்ட்ஸமா இருக்கப்பா..’
‘தேங்க்ஸ்’
கண்கள் வெறிக்க முன் கண்ணாடி வழியே ரோட்டைப் பார்த்துக்கொண்டு வந்தான் மிதுன்.
‘பாட்டுக் கேக்கறியா? தமிழ்ப் பாட்டு .. ‘ அவன் பதிலேதும் சொல்லும் முன்பே ஃபோனிலிருந்து பாடலை ஒலிக்கவிட்டான்.
“ஊர்வசி ஊர்வசி டேக்  இட் ஈஸி ஊர்வசி..”
‘சின்ன வயசிலே இந்தப் பாட்டைக் கேட்டா எங்க இருந்தாலும் ஓடி வந்து டி. வி. முன்னாடி நிப்பியே ஞாபகம் இருக்கா?’
சிரித்தான்.
‘அப்புறம் .. உனக்குக் கார் ரொம்பப் பிடிக்கும்.. பக்கத்து வீட்டுக்காரங்க வைச்சிருந்த கார்ல தான் உக்காந்து சாப்பிடணும்னு அடம் பண்ணுவே ..’
ரோட்டிலிருந்து கண்ணை எடுக்காமல் செயற்கையாகச் சிரித்தான் மிதுன்.
‘நீ பெரியவனா வளர்றதுக்குள்ள கார் வாங்கிடணும்னு நெனச்சுக்குவேன் ..’ குரல் தழுதழுத்தது ‘இப்பத்தான் உன்னை கார்ல கூட கூட்டிக்கிட்டுப் போக சான்ஸ் கிடைச்சிருக்கு..’ மூக்கை அழுந்த உறிஞ்சிக்கொண்டான்.
ஹோட்டல் வந்துவிட்டது.
‘பெட்டியை வைச்சிட்டு வந்துடறேன்.. சாப்பிடப் போலாமா?’.
அமைதியாகத் தலையாட்டினான் மிதுன்.
*
ன்னல் ஓரமாகயிருந்த மேஜையில் அமர்ந்தார்கள்.
‘மிதுன்.. திடீர்னு வந்துட்டதால உனக்கு என்ன வாங்கறதுன்னு தெரியல.. நாளைக்கு ஷாப்பிங் போலாம் ..  இப்போதைக்கு உனக்கு ஒரு ஃபோன் மட்டும் வாங்கிட்டு வந்தேன்..இந்தா ‘
‘இதெல்லாம் எதுக்கு .. எனக்கு ரூம்ல ஃபோன் இருக்கு’
‘பரவால்லப்பா .. சிம் போட்டுருக்கேன். உன் கூட அடிக்கடி பேச முடியும் .. எப்ப எது வேணாலும் என்னைக் கூப்பிடு.. சரி  என்ன சாப்பிடறே?’
‘எதா இருந்தாலும் ஓகே..’
‘சோளா பூரி சாப்பிடறயா? சின்ன வயசில பூரி தான் உன்னோட ஃபேவரிட்.’
‘ஓகே’
வெயிட்டரிடம் ஆர்டர் செய்துவிட்டுத் தொடர்ந்தான் நிரஞ்சன்.
‘யூ லுக் வெரி டயர்ட் மிதுன். சாப்டுட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு’
‘நோ ஐ அம் ஃபைன்’
மிதுன் மேஜை மீது இரண்டு கைகளின் விரல்களைக் கோர்த்து வைத்துக் கட்டை விரல்களை ஆட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தான் நிரஞ்சன்.
‘உன்னோட அன்ஈஸினெஸ் எனக்குப் புரியுது மிதுன். இன்ஃபேக்ட் எனக்கும் என்ன பேசறது , எப்படிப் பேசறதுன்னு தயக்கம், பதட்டம் எல்லாமே இருந்தது..உன்னைப் பார்த்தப்புறம் எல்லாமே பறந்துடுச்சி..’
‘ம்ம்..’
‘ஐ டோன்ட் நோ வாட் யூ ஃபீல்.. எனக்கு இப்போ சந்தோஷம் மட்டுமே இருக்கு.. நெறய வருஷங்களுக்கு அப்புறம்.’
‘ஐ அம் கன்ஃப்யூஸ்ட் .. நான் என்ன பேசணும்னு முடிவு பண்ணிட்டுத் தான் வந்தேன்.. ஆனா இப்போ எல்லாமே  குழப்பமா இருக்கு.. என்ன பேசறதுன்னு தெரியல.’
அவனது இரண்டு கரங்களின் மீதும் தன் கரத்தை வைத்து அழுத்திய நிரஞ்சன்  ‘நெர்வஸா இருக்கன்னு நினைக்கிறேன் .. டேக் இட் ஈஸி.’
நாற்காலியின் பின்னால் சாய்ந்து உட்காரும் சாக்கில் கைகளை நாசூக்காக விலக்கிக் கொண்ட மிதுன்.. ‘லைஃபே அப்படித்தான் ஓடிக்கிட்டிருக்கு .. சின்ன வயசிலேயே இது தெரிஞ்சிதானோ என்னமோ நீங்க சொன்ன ‘ஊர்வசி ஊர்வசி’ பாட்டை ரசிச்சுப் பார்த்திருக்கேன்.’
‘ச்சே..ச்சே.. ஏன் அப்படி எல்லாம் நினைக்கிற?’
‘நாம மீட் பண்ணி ரெண்டரை மணி நேரம் ஆகுது.. என்னென்னமோ கேட்டீங்க .. ஆனா அம்மா எப்படி இருக்காங்க, இருக்காங்களா இல்லையான்னு கூட கேக்கல நீங்க’
‘மிதுன்..’
‘இல்லை தோணுச்சு.. ஏர்ப்போர்ட்லயே கேப்பீங்கன்னு நெனைச்சேன்..’
‘ ..’
‘நீங்க என்ன காரணத்தால அம்மாவை விட்டுட்டு வந்தீங்கன்னு எனக்குத் தெரியாது.. தெரிஞ்சுக்கவும் நினைக்கல.. ‘
‘இல்ல மிதுன்…’
‘நோ.. நோ .. எதுக்குப் பிரிஞ்சு வந்தீங்கன்னு கேட்டு உங்கள எம்பராஸ் பண்ண வரல.. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, அப்பான்னு கேட்டபோது எல்லாம், உங்க அப்பா எங்கேயோ இருக்காங்க மிதுன்.. ரொம்ப நல்லவங்கன்னு சொல்லுவாங்களே தவிர வேற எதுவும் சொன்னதில்ல. உங்க பேரைத் தவிர எனக்கு ஒண்ணுமே தெரியாது..’
‘அப்படின்னா ..’
‘நானும் கேட்டுக்கல.. ஆனா நெறய ஃபேஸ் பண்ணேன்..ஸ்கூல்ல, வயலின் கிளாஸ்ல, சாக்கர் பிராக்டிஸ்ல, காலேஜ்ல.. எல்லா எடத்திலேயும், அப்பா இல்லையேங்கிறதை ஃபீல் பண்ணியிருக்கேன்  .. சின்ன வயசில்லையா.. எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியாம அழுதிருக்கேன்.. அந்தச் சமயத்தில எல்லாம் அம்மா தான் கூட இருந்தாங்க.. ஷி மேட் மி ஸ்ட்ராங்.. இருவத்திரெண்டு வருஷம் ஓடிப் போச்சு .. எனக்கு அவங்களத் தவிர உறவு கிடையாது.. அவங்களுக்கு என்னைத் தவிர யாரும் கிடையாது.. ‘
கண்கள் கலங்கியது நிரஞ்சனுக்கு.
‘எப்பவோ யாரோ சொன்னாங்க நீங்க அமெரிக்கால இருக்கீங்கன்னு.. அவங்களுக்கும் உங்களைப் பத்தி பெருசா  ஏதும் தெரியல.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி  ஆஃபீஸ்ல ட்ரெயினிங் பத்தி பேசினப்போ தோணுச்சு .. உங்களைப் பாக்கணும்னு … ‘பெர்சன் ஃபைண்டர்ல’ சப்ஸ்க்ரைப் பண்ணி உங்களைக் கண்டுபிடிச்சேன்.. இதுவரைக்கும் அம்மாக்குக் கூடச் சொல்லலை. என்னைப் பாக்க வந்ததுக்கு தேங்க்ஸ்.. ‘
‘தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதே மிதுன்…இன்ஃபாக்ட் நான்..’
‘அகெய்ன் .. உங்களைக் கேள்வி கேக்கணும், கில்டியா ஃபீல் பண்ண வைக்கணும்னு எல்லாம் எனக்கு  எண்ணம் கிடையாது. ஒரே ஒரு ரிக்வஸ்ட் தான் … உங்களுக்கு அது கஷ்டமா கூட இருக்கலாம் .. ஆனா எனக்காக அதைப் பண்ணித் தான் ஆகணும்.’
பேப்பர் நாப்கினால் மறைத்து மூக்கை நன்றாக உறிந்துக் கொண்ட நிரஞ்சன்.. ‘ சொல்லுப்பா .. ஐ வில் பி ஹாப்பி டு டூ வாட்டெவர் யூ வாண்ட்’ என்றான்.
‘இத்தனை வருஷமா தனியா கஷ்டப்பட்ட ஜீவன் எங்கம்மா .. உங்க மனைவி .. எக்ஸ்-வைஃப்.. அவங்க கிட்ட ஒரே ஒரு தடவை மன்னிப்பு கேக்கறீங்களா .. பெரிய ஆறுதலா இருக்கும்ணு நினைக்கிறேன் அவங்களுக்கு… தட் வில் கீப் ஹெர் கோயிங் ஃபார் த ரெஸ்ட் ஆஃப் ஹெர் லைஃப்.’
‘ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளு மிதுன்…’
‘ப்ளீஸ் .. எதுவும் தடை சொல்லாதீங்க .. ஒரு தடவை மட்டுந்தான் … நான் வேற எதுவும் கேக்கலை உங்ககிட்ட .. நீங்க இருக்க திசைப் பக்கம் கூட திரும்ப மாட்டேன்.. ஐ ப்ராமிஸ்..  இந்த ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் ப்ளீஸ்.. நீங்க சாரின்னு மட்டும் சொன்னீங்கன்னா கூட போதும்…’ குரல்  உடைய தழுதழுத்தான்.
‘எ..ஸ் .. எஸ்.. கண்டிப்பா பண்றேம்பா.. அழாதே.. சியர் அப்..’ கண்களில் நீர் வழிந்தது ..’ஜஸ்ட் எக்ஸ்கியூஸ் மி..  ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வந்துடறேன்..’
திரும்ப வந்தபோது கௌரியுடன் பேசிக்கொண்டிருந்தான் மிதுன்..
‘.. சாப்பிட்டாச்சு.. உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் மம்மி .. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் பேசறதால உனக்கு யாருன்னு கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியுமான்னு தெரியல.. மிஸ்டர் நிரஞ்சன் குப்புசாமி.. உன்னோட எக்ஸ் .. என் கூடத்தான் இருக்காங்க  ..’ சொல்லிவிட்டு ஃபோனை நிரஞ்சனிடம் நீட்டினான் மிதுன்.. ‘பேசுங்க’.
என்ன பேசுவது என்று புரியாமல் ஃபோனை வாங்கிக் கொண்டான் நிரஞ்சன் ..
‘ஹ..லோ .. நான் நிரஞ்சன் பேசறேன்.. என்னை .. என்னை மன்னிச்சிடு கௌரி.. மிதுன் என் முன்னாடி தான் இருக்கான்… ‘
நீங்க பேசுங்க என்பது போல் சைகை காண்பித்த மிதுன் மெதுவே அங்கிருந்து நகர்ந்தான்.
‘ஐயோ .. நீங்க ஏங்க வருத்தப்படணும்…’ உரக்க அழுதாள் கௌரி. தலையில் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது.  ‘பாவி நான் தான் உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கணும் .. எல்லா பாவத்தையும் பண்ணது நான் தானே … நம்ப குடும்பத்துக்காக நீங்க ராத்திரி பகல்னு பாக்காம உழைச்சதை, என்னை நீங்க வெறுக்கறீங்கன்னு கதை கட்டி நம்ப வெச்சான் ஷாஜி.. புத்தி கெட்டுப் போய் உங்களை விட்டுட்டு அவனோட போனேன்.. மிதுனையும் என்னையும் தேடி அலஞ்சு நீங்க ஊரை விட்டுப் போயிட்டதா கேள்விப்பட்டேன்..  நாலு மாசத்திலே எங்களைத்  தவிக்க விட்டுட்டு போயிட்டான் ஷாஜி … அப்பத்தான் என்னோட மடத்தனம் எனக்குப் புரிஞ்சுது.. தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட நெனச்சேன்.. என் குழந்தை .. நம்ப குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு .. அவனைத் தண்டிக்கக் கூடாதுன்னு தோணுச்சு .. நான் பண்ண பாவத்துக்கப்புறம் உங்களத் தேடிக் கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிக்க எனக்குத் தைரியமில்லை.. ஆனா என்னையே நம்பி இருந்த மிதுனும் என்னை வெறுத்துடக்கூடாதுன்ற சுயநலத்தில எல்லாத்தையுமே மறைச்சிட்டேன்..  இதுவரைக்கும் அவனுக்கு எதுவுமே தெரியாது .. ‘
கதறினாள் கௌரி..
‘இதையெல்லாம் ஏதோ சால்ஜாப்புக்காக  சொல்லலங்க .. உங்ககிட்ட பேசமுடியும்னு நான் நெனச்சுக் கூட பாக்கல .. எதிர்பாக்காம இப்போ அந்த சான்ஸ்  கிடைச்சிருக்கு .. நீங்க என்னை மன்னிக்க வேண்டாம் .. மன்னிக்கவும் கூடாது.. என்னை யாருமே மன்னிக்க மாட்டாங்க .. இருந்தாலும் மன்னிச்சிடுங்கன்னு  கேட்டுட்டேன்னா நிம்மதியா செத்துப்போவேன்.. என்னை மன்னிச்சிடுங்க..’
தொடர்பில்லாமல் பேசிக்கொண்டேயிருந்தாள் கௌரி.
வாஷ் ரூமிலிருந்து வந்த மிதுன் , நிரஞ்சனைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். ‘தேங்க் யூ .. தேங்க் யூ அண்ட் சாரி அப்பா ..’ என்றான். அவன் காதில் பொருத்தியிருந்த ரிமோட் செல்ஃபோன் லிஸ்னரில் இன்னமும் கௌரி அழுதவாறே மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்.
– மர்மயோகி

குற்ற உணர்ச்சி

“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வர வேண்டாம்” அப்பா அவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட கண்ணனுக்கு கோபம் ஒரு பக்கம், சிரிப்பு ஒரு பக்கம் வந்தது. இந்தச் சாமிநாதனை இதோடு எத்தனை தரம்தான் இப்படி மிரட்டிக் கொண்டே இருப்பார். அவரும் பதிலுக்கு, ”சரிங்க முதலாளி, இனிமே நேரத்துல வந்துடறேன்” .இதே வார்த்தைகள்தான் இவரிடம் வரும்.
இவனும் பல முறை அப்பாவிடம் சொல்லி விட்டான், ”அப்பா அவருக்கு ஓய்வு கொடுத்துடலாம், கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிச்சுட்டா ஒதுங்கிக்குவாரு”. சொன்னவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்து விட்டு “வேணாம் கண்ணா இன்னும் கொஞ்ச நாள் வேலை பாக்கட்டும்”, சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார். இவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் கம்பெனியில் சுமார் நூறு பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கண்ணன் படித்து முடிக்கும் வரை அவன் அப்பாதான் பார்த்துக் கொண்டிருந்தார். இவன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து அப்பாவுக்குத் துணையாய் வந்த பின்னால் சில மாற்றங்களைச் செய்தான். கொஞ்சம் இளைஞர்களை வேலைக்கு எடுத்தான். வயதானவர்களை அனுப்பி விடச் சொன்ன போது அவன் அப்பா தயங்கினார்.
கண்ணா அவங்களை வேண்டாமுன்னு அனுப்ப வேண்டாம், அவங்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம் அப்படீன்னு சொல்லிக் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பணும்.
சொன்னபடியே ஐம்பத்து எட்டை தாண்டியவர்களுக்கு ஓய்வு என்ற திட்டத்தைக் கொண்டு வந்து அவர்கள் செய்த பணிகளுக்கு பணிக்கொடையும் கொடுத்து அனுப்பினான்.
தினமும் வேலை நேரம் தாண்டியே, வந்து கொண்டிருந்த இவரையும் அனுப்பி விடலாம் என்று முடிவு செய்த போது அப்பா தடுத்து விட்டார். இவர் இன்னும் கொஞ்ச நாள் வேலை செய்யட்டும், கம்பெனிக்குள்ள வேண்டாமுன்னாலும், என் ஆபிசுல உட்கார்ந்து இருக்கட்டும். சொன்னபடியே சாமிநாதன் இனிமே உங்களுக்கு என் ஆபிசுல தான் வேலை. காலையில ஒன்பது மணிக்கெல்லாம் வந்து ஆபிச ஒழுங்குபடுத்தி வச்சிருக்க வேண்டியது உங்க பொறுப்பு.
சரி என்று தலையாட்டிய சாமிநாதனின் முகத்தில் தென்பட்டது மகிழ்ச்சியா, அல்லது அதிர்ச்சியா என்று இவனுக்குப் புரியவில்லை. வழக்கம் போலவே தாமதமாகத்தான் வந்து கொண்டிருந்தார். அப்பாவும் அவரை வழக்கம்போல திட்டிக்கொண்டேதான் இருந்தார்.
கண்ணனுக்கு அப்பாவிடம் வற்புறுத்திச் சொல்ல முடியாத சூழ்நிலை. இவனே.இப்பொழுதுதான் இந்தக் கம்பெனிக்குப் பொறுப்பு எடுத்திருக்கிறான். அப்பாவோ இருபத்தி ஐந்து வருடங்களாக இதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார். அதனால் அவரை வற்புறுத்த இவன் மனம் இடங்கொடுக்கவில்லை.  மற்றபடி சாமிநாதன் கடுமையான உழைப்பாளியாகத்தான் இருந்தார். எந்த வேலை சொன்னாலும் தட்டாமல் செய்தார். அது போல பலருடன் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பது, அடாவடிப் பேச்சு, இவைகள் எப்பொழுதும் இவரிடம் இவன் பார்த்ததில்லை. ஆனால் கம்பெனி சட்டம் என்று ஒன்றைப் போட்டுவிட்டு இவர் மட்டும் விதி விலக்கு என்று இருப்பது இவனுக்கு ஒவ்வாததாக இருந்தது. அப்பாவிடம் இதைப் பற்றி விவாதிப்பதற்கும் தயக்கமாக இருந்தது. அப்பாவுடன் அந்தக் காலத்திலிருந்தே இவர் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். என்றாலும், இவரைப் போல மற்ற பணியாளர்களும் இவருடன் வேலை செய்து ஓய்வு பெற்று விட்டபோது இவரை மட்டும் விதி விலக்காய் அப்பா ஏன் வைத்திருக்கிறார் என்பது இவனுக்குப் புரியவில்லை.
இன்றைய சூழ்நிலையில் கம்பெனி பல்வேறு போட்டிகளுக்கிடையிலே போராட வேண்டி இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தகுந்த பணியாளர்களைப் பணிக்கு வைத்து, தரமான பொருட்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. தற்பொழுது இவருக்கு அளிக்கும் ஊதியத்தில் இவரை விடத் தரமான பணியாளர் இருவர் எடுத்து விடலாம் என்று இவன் கணக்குப் போட்டான்.
இரண்டு மூன்று நாட்களாக சாமிநாதனைக் காணவில்லை. விடுமுறை என்று முன்னறிவிப்பும் செய்யவில்லை.மூன்று நாட்கள் ஆகியும் காணாத நிலையில் கண்ணனை அழைத்து, ”சாமிநாதன் மூன்று நாளா வரலை, யாரையாவது அனுப்பி என்னாச்சுன்னு பாத்துட்டு வா”. சொன்னவரை வியப்புடன் பார்த்தான் கண்ணன். ஒரு தொழிலாளிக்கு ஏன் இவ்வளவு பரிந்து போகிறார். அதுவும் எந்த அறிவிப்புமில்லாமல் விடுமுறை எடுத்ததற்குக் கோபப்படாமல், பதட்டப்படுகிறார் என்று புரியவில்லை, என்றாலும், அப்பா சொன்னபடி ஒரு ஆளை அனுப்பி என்ன விசயம் என்று கேட்டு வரச் சொல்கிறான்.
வந்து சொன்ன செய்தி உண்மையிலேயே இவனை வருத்தமடையச் செய்தது. அவருடைய மனைவி இறந்து விட்டார்களாம். அதுவும் நீண்ட நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து நேற்று இறந்து விட்டதாகவும், சாமிநாதன் மறுபடி பணிக்கு வருவது சந்தேகமே என்றும் அந்தப் பணியாள் சொன்னான். கண்ணனுக்கு மனசு கனத்துப் போயிற்று. தனக்கே இப்படி என்றால் அப்பாவுக்கு எப்படி இருக்கும்? மனசுக்குள் நினைத்துப் பார்த்தவன் மெல்லச் சென்று அவர் மனசு அதிச்சியடையா வண்ணம் இந்தச் செய்தியை சொன்னான்.
அதைக்கேட்ட அப்பா அப்படியே உறைந்து விட்டது போலக் கண்ணை மூடிச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தவரின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்த்து. சிறிது நேரம்தான் அப்படி இருந்தார். சட்டென விழித்துக் கண்களை துடைத்துக் கொண்டு, இனி அவன் வேலைக்கு
வரமாட்டான் என்று முணு முணுத்தார். கண்ணனுக்கு வியப்போ வியப்பு, சாமிநாதனின் முடிவைப் பற்றி இவர் எவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்.
சரி வா போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கண்ணனை அழைத்துக்கொண்டு அப்பா சாமிநாதன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு சாமிநாதன் இவரைக் கண்டவுடன் மெல்ல எழ முயற்சிக்க, வேண்டாம் எழுந்திருக்காதே, என்று சொல்லி விட்டு இவர் அவனருகில்
உட்கார்ந்து அவன் தோளைப் பற்றிக் கொள்கிறார். இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடுகிறது. இவன் எதுவும் பேசாமல் அங்கிருந்த ஒரு நாற்காலியில் மெளனமாய் உட்கார்ந்திருக்கிறான். குடிப்பதற்கு பானம் கொண்டு வந்தவர் சாமிநாதனின் மகனாய் இருக்க வேண்டும். இவன் ஒன்றும் வேண்டாம் என்று சைகையிலேயே சொல்கிறான். ”அப்பாவுக்கு” எனச்
சைகையிலேயே கேட்டவருக்கு, அவருக்கும் ஒன்றும் வேண்டாம் சைகையிலேயே பதில் சொன்னான்.
அரை மணி நேரம் கழித்துக் காரில் திரும்பிக் கொண்டிருந்த கண்ணனிடம் அவன் அப்பா சொல்லிக் கொண்டு வந்தார். ”இப்ப நீ உயிரோட இருக்கறதுக்குக் காரணமே அவன்தான், அதே மாதிரி அவன் வாழ்க்கை பாழானதுக்கு காரணமும் நீதான்”.சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்க்க, கண்ணன் அதிர்ந்து போனான். ”புரியலேப்பா”, சொன்ன கண்ணனிடம் ”இந்தக் கம்பெனி ஆரம்பிக்கறதுக்கு முன்னால, நானும் சாமிநாதனும் ஒண்ணாத்தான் ஒரு கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருந்தோம். நான் எப்படியாவது முன்னுக்கு வரணும்னு துடிச்சுகிட்டு இருந்த நேரம்.
நாங்க ஒரு நாள் ஊட்டிக்கு பிக்னிக் கிளம்பிப் போனோம், அங்கிருக்கற போட் ஹவுசுல நான், கைக்குழந்தயா இருந்த நீ, உன அம்மா, மூணு பேரும், இன்னொரு படகுல சாமிநாதன்,அவன் சம்சாரம், இவங்க இரண்டு பேரும் இருந்தாங்க. நல்ல வேளையா அவனோட குழந்தைங்க இரண்டு பேரும், அப்ப அவங்க ஊர்ல திருவிழான்னு சொல்லி ஊருக்குப் போயிருந்தாங்க.    
நாம போயிட்டிருந்த படகு திடீருன்னு ஒரு சுழல் காத்துல சுத்தி உங்கம்மா கையில இருந்த நீ தண்ணிக்குள்ள விழுந்திட்டே. அதே மாதிரி சாமிநாதன் போன படகும் சுழலுல மாட்டி சுத்திட்டு இருந்தப்ப இவன் எங்க படகுல இருந்து குழந்தை விழுகிறதப் பாத்துட்டு உடனே தண்ணிக்குள்ள பாஞ்சு வந்து உன்னை எப்படியோ தூக்கி படகுல போட்டுட்டான். அதுக்குள்ள படகும் கொஞ்சம் நிலையா நின்னுடுச்சு, அதே நேரத்துல சாமிநாதனோட படகு திடீருன்னு இவன் குதிச்சதுனால குப்புறக் கவுந்திடுச்சு, உன்னையப் போட்டுட்டு உடனே அவன் நீந்தி படகுக்குள்ள இருந்த அவன் மனைவியக் காப்பாத்திட்டான்”. இருந்தாலும், அவர் மெல்ல நிறுத்தினார்.
”அப்புறம் என்னப்பா ஆச்சு?”
”அந்த அதிர்ச்சியினால அவன் மனைவிக்கு புத்தி பேதலிச்சுப் போச்சு. இவனும் எல்லா மருத்துவமும் பார்த்துட்டான், அப்புறம்தான் அவளை இத்தனை வருசம் குழந்தையப் பாக்கற மாதிரி பாத்துட்டு, குழந்தைகளையும் வளத்து ஆளாக்கிட்டான்.நான் கூட ஒரு நாள் சொன்னேன், நீ வீட்டுலயே இருந்து உன் மனைவியைப் பார்த்துக்க, நான் வேணா மாசா மாசம் பணம் கொடுத்துடறேன்னு. அவன் சொன்னான்,என் மனைவியைப் பாத்துக்கறதுக்கு, நான் உன் கிட்ட சம்பளம் வாங்குனா, அது எனக்கு நல்லாயிருக்காது. நான் எப்படியும் சமாளிச்சு வேலைக்கு வந்துடுவேன். நீ கம்பெனி ஆரம்பிச்ச பின்னாடி அங்க எனக்கு ஒரு வேலை போட்டுக் கொடு. நான் உன் கிட்ட  வேலைக்கு வந்திடுறேன்”. இருபத்தி அஞ்சு வருசமா அவளைப் பாத்து வந்திருக்கான். ஒரு நாள் அவனே சொன்னான், அவளுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னா அதுக்கப்புறம் நான் வேலைக்கு வர்றதை நிறுத்திக்குவேன் அப்படீன்னான். நானும் என்னாலதான இவனுக்கு இப்படி ஆயிடுச்சு.! அப்படீங்கற குற்ற உணர்ச்சியிலயே இருந்தேன்.”
சொல்லிவிட்டுக் குரல் கம்மச் சொன்னார், ”இப்ப நீ அவனுக்கு பதிலா வேற ஆளை எடுத்துக்கலாம்”. அவர் குரல் சோகத்தில் கரகரத்திருந்தது.
–    தாமோதரன்

அசௌகரிய வீடு

இலையுதிர் காலத்தில் ஏரிக்கரை மரங்களின் நிறம் மாறுகின்றது. இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறுகின்றன. சில்லென்ற குளிரில் சில புற்களும் உலருகின்றன. ஏரிக்கு அருகே பல குட்டைகளும், வாய்க்கால்களும் உள்ளன. இவற்றில் மிதக்கும் அல்லிப்பூக்களும், அயல் நீர்த் தாவரங்களும் பூத்து ஓய்கின்றன.
அல்லிக் கொடிகள் குட்டை மேல் நீர் கடந்து தெரிகின்றன. வட்ட இலைகள் வாடுகின்றன. இது இலையுதிர் கால இறுதியில் குட்டைகளின் தன்மை. நீரில் வளரும் தாவரங்கள் கோடை வெய்யிலில் பெருகும். பின்னர் அடுத்த வருடத்திற்கு உதவும் உக்கல் மண்ணாக மாறும். இதனால் குட்டை நீர் குறைந்து காணப்படும். நீர் வற்றி நிலம் தெரியும்.
இந்தக் குட்டை ஒன்றிலே ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பெயர் ஆனந்தன். குட்டை அருகே ஆமை களிமண் கிண்டி தன் வீட்டை அமைக்கும். வரவிருக்கும் பனிக் காலத்தில் பல விலங்குகள் நீண்ட தூக்கம் கொள்ளும். ஆனந்தனும் சேற்றினுள் புதைந்து நீண்ட தூக்கத்திற்குத் தயார் ஆகியது. எனினும் அவன் வீட்டினுள் நீர் நுழைந்ததால்  தூக்கம் கலைந்தது. இது ஆமை வீட்டிற்கு அசெளகரியத்தை உண்டு பண்ணியது. இதனால் ஆமை சலிப்பு அடைந்தது. தனது அசெளகரியத்திற்கான காரணம் தெரிந்து கொள்ள வீட்டின் வெளியே வந்தது.
ஆமை சுற்றுப் புறத்தை நோட்டம் இட்டது. வழக்கமாக நீர் குறைந்த குட்டை திடீர் என ஏரியாக மாறியுள்ளது. இந்த ஏரி கரை கடந்து நீர் கொண்டுள்ளதையும் அவதானித்தது. இது எப்படி ஏற்பட்டது? என்று திகைத்தது. மேலும் நெடிய புற்களிற்கு ஊடாக புதிய நிலப்பரப்பு ஒன்றையும் அவதானித்தது. ஏரியின் நடுவே ஒரு சிறு தீவும் காணப்பட்டது.
இந்தத் தீவு சற்று அபூர்வமாக இருந்தது. அது மண், புல் தரை இல்லாமல் மரக்கிளைகள் இலைகளால் மாத்திரமே கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இது ஆனந்தனிற்கு ஆர்வத்தைத் தந்தது. இதை விவரமாக அறிய அங்கு நீந்திச் சென்றது. ஏரி நடுவில் உள்ள சிறு தீவின் மேல் ஏறியது.
அப்போது நீரில் சலசலப்புச் சத்தம் கேட்டது. நீர்க்குமிழிகள் மத்தியில் வந்தது சப்பட்டைத் துடுப்பு வால் பீவர். தனது வாலை இலகுவாக அசைத்துத் தன் உடலைப் படகு போல் நீரில் செலுத்தியது. பீவர் மிதந்து தீவை நோக்கி வந்தது. தீவில் தானும் ஏறி ஆமையை அணுகியது. நான் பகீரதன் எனும் பீவர், நீ யார்? என்று கேட்டது. அதற்கு ஆமை நான் ஆனந்தன் என்று பதில் அளித்தது.
அது சரி, நீ இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டது பீவர். அதற்கு ஆமை கூறியது நான் தூங்க எனது வீட்டில் தயார் ஆனேன். ஆனால் நீர் நுழைந்து எனது  நித்திரையைக் கலைத்து விட்டது. என் வீடு எனக்கு செளகரியமாக இல்லை. இது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே இது எப்படி நிகழ்ந்தது என்று அறிய வந்தேன் என்றது.
மேலும் ஆனந்தன் ஆமை தொடர்ந்து கூறியது. நான் உறங்கச் சென்ற போது இருந்த குட்டை பெருகியுள்ளது. இப்போது இதுவும் ஏரி ஆகியுள்ளது. இதை உருவாக்கிய ஏரிக்காரன் நீதானா? என்று பீவரைக் கேட்டது. ஆமாம் அது நானே என்றது பகீரதன் பீவர்.
மேலும் தொடர்ந்து பேசியது பீவர். எனது வீட்டைச் செளகரியமாக அமைத்துக் கொள்ள மரக்கிளைகள் தேவைப்பட்டது. மரத்தை வெட்டிக் கிளைகள் ஒடித்து இழுத்து வர ஆழமான நீர் தேவைப்பட்டது, எனது வீட்டைப் பாதுகாக்க ஏரி உண்டு பண்ணினேன். எனவே அருகே ஓடும் அருவியைக் களிமண் மடை கட்டித் திருப்பினேன்.
இப்போது நீ நிற்பது என் வீட்டுக் கூரையில் என்றது பகீரதன் பீவர், அது எப்படி? நுழைவாயில் காணவில்லையே என்று வினவியது ஆனந்தன் ஆமை. என் வீட்டு வாயில் தண்ணீரிற்கு உள்ளே தான்  என்றது பீவர், ஆனந்தன் ஆமையும் நீரின் உள்ளே குதித்தது. பீவர் வீட்டு நுழைவாயிலை நீரின் உள்ளே கண்டது. மீண்டும் மேலே ஏறி வந்தது.
ஆனந்தன் ஆமை சொல்லியது “உன் வீட்டு வாசல் பார்த்தேன். அது வசதியாகவே உள்ளது. அப்போ நீ செளகரியமாக இருந்து கொள்ள,  என் வீடு அசெளகரியம் அடைய வேண்டுமா?” என்று கேட்டது ஆமை.
அதற்கு பகீரதன் கூறியது அது ஒன்றும் எனக்குத் தெரியாது மடை கட்ட மண் தேவையாக இருந்தது. என் வீட்டைப் பாதுகாக்க நீர் தேவையாக இருந்தது அதை நான் செய்து கொண்டேன்  என்றது.
இது ஆனந்தனுக்கு எரிச்சலைத் தந்தது. இந்தக் குட்டையில் பல காலமாக நான் வாழுகிறேன். இவன் யார் என்னை வந்து குடி எழுப்புவது என்று யோசித்தது ஆமை. அதன் பின்னர் “பகீரதன் பீவரே நீ சொல்வது சரியாகவே இல்லை. உன் வீடு செளகரியமாக இருக்க வேண்டும்  அப்படித்தான் சொல்கிறாயா என்று பீவரைக் கேட்டது ஆமை.
பகீரதன் பீவரும் “அப்படித்தான் இருக்கும், இப்போது என் வீட்டுக் கூரையில் இருந்து காலி பண்ணு” என்றது. ஆமைக்கு ஆத்திரம் வந்தது. அதே சமயம் தானாக ஏரியின் மறுபுறம் நீந்திச் செல்ல முடியவில்லை. சென்று புதிய களிமண் வீடு அமைத்துக் கொள்ளவும் அவகாசம் போதாது. இதை நன்கு உணர்ந்தது ஆனந்தன்ள. அதே சமயம் பீவருக்கும் ஒரு வகையில் பாடம் படிப்பிக்க விரும்பியது.
“சரி பகீரதன் பீவரே உனது வீட்டுக் கூரையை விட்டு நான் வெளியேற வேண்டுமானால், நீ ஒரு போட்டிக்கு வர வேண்டும் என்றது ஆனந்தன் ஆமை. இந்தக் குட்டையில் யார் செளகரியமான வீட்டை அமைத்துக்  கொள்ளலாம் என்பதை நாம் இருவரும் முடிவு செய்வோம். இந்த இடத்தில் இருந்து அடுத்த ஏரிக்கரை வரை போட்டி போட்டு நீந்திச் செல்ல வேண்டும், போட்டி முடிவில் யார் வெல்கிறார்களோ அவரே இவ்விடம் வீடு வைக்கலாம், தோற்றவர் விலகிப் போக வேண்டும் என்றது.
துடுப்பு வால் பீவரும் எண்ணியது. இந்தப் போட்டியில் வெல்லுவது தான் தானே என்று அகங்காரம் கொண்டது. அதுக்கென்ன போட்டி போடலாமே என்றது.
ஆமையும் பீவரும் நீரின் உள்ளே குதித்து நீந்தத் தொடங்கின. பீவர் முதற்கட்டம் முந்தியது. ஆனந்தன் ஆமை தனது தந்திரத்தைப் பாவித்தது. லபக் என்று பீவரின் வாலைக் தனது அலகால் கவ்வியது.
பகீரதன் பீவரும் ஏய் ஆமையே இது சரியான போட்டியாகத் தெரியவில்லை என்று முறையிட்டது. அப்போது ஆனந்தன் ஆமை சொன்னது உன் வாலை நான் விட வேண்டுமானால் நீ ஒன்று செய்ய வேண்டும். எனக்கும் புதிய ஏரிக்கரை களிமண் இடத்தைத் தேடித் தர வேண்டும் என்றது. அப்போது தான் நானும் பனிகாலத் துயிலுக்கு செளகரியமாகுவேன் என்றது.
அதன் போது தான் பீவர் தான் தனது பொறுப்பற்ற செயலை உணர்ந்த்து.
தான் செளகரிய வீட்டை உண்டு பண்ண ஆமை வீட்டில் அசெளகரியம் உண்டு பண்ணியதை உணர்ந்தது. மேலும் இதற்குப் பரிகாரம் காணவிட்டால் ஆமை அலகு தன் வாலில் இருந்து அகலப் போவதும் இல்லை என்று தெரிந்து கொண்டது..
சரி ஆமையே உனக்கு ஏரியின் மற்றொரு பகுதியில் செளகரியமான களிமண் இடம் பார்த்துத் தருகிறேன் என்றதும். அடுத்து சிறு தூரம் ஆமையை இழுத்துச் சென்று இன்னும் ஒரு களிமண் பகுதிக்கு கவ்விய ஆமையை தன் துடுப்பு வால் சுழட்டி விட்டெறிந்தது.
ஆனந்தன் ஆமையும் நல்ல களிமண் பிரதேசத்தில்  வந்து இலேசாகப் புதைந்து விழுந்தது. அடுத்து நீந்திய போட்டி களைப்பால்  உடன் களிமண்ணில் உறங்கியது.   பிறகு தனக்குச் செளகரியமான புதிய வீட்டை உருவாக்கிக் கொண்டது. பகிரதன் பீவரும், ஆனந்தன் ஆமையும்  தமது பனிக் கால நீண்ட துயிலைத் தம் தமக்குச் செளகரியமான வீடுகளில் ஆரம்பித்தன.

நினைவின் மொழி

னோ, நியூ இயர் அன்னைக்கு நம்ம வீட்ல தான் சாப்பாடு. அவசியம்வந்துரணும், கடைசி நேரத்துல வேற எதுவும் காரணம் சொல்ல கூடாது”
“சேச்சே..  கண்டிப்பா வரேன், நண்பா. நமக்கு சோறு தான் முக்கியம்.”
அன்பான உபசரிப்பும், ருசியான உணவும் கொண்ட விருந்தை முடித்துவிட்டுபேசிக்கொண்டிருதோம். அவர்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில், புளோரிடா, நெவாடா, லாஸ் வேகாஸ், நியூ யார்க் என ஒட்டியிருந்த காந்தபட்டைகளைப் பற்றி விசாரித்தேன். இது எல்லாம் அந்தந்த ஊருக்கு சென்றுவருகையில் அதன் ஞாபகமாக வாங்கி வந்தது.. இன்னும் நெறைய ஊர் பாக்கிஇருக்கு, எல்லாத்துக்கும் ஒரு விசிட் அடிச்சிட்டு இந்தக் கதவு முழுவதும், காந்தப்பட்டைகளால் நிரப்ப வேண்டும் எனச் சொன்னார்.  
‘அதுவும் இல்லாம இதைப் பார்க்கும் போது அந்த ஊரின் நினைவுகள் ஒரு கணம்மனதில் பசுமையாய் வந்து போகும்’ என்றார். உண்மை தான். சில பலஆண்டுகளுக்கு முன்,  ஒரு புத்தகத்தின் நடுவில் மயிலிறகு வைத்திருந்ததோழியைப் பார்த்து, ‘என்ன இது?’ என்றேன். ‘பார்த்தா தெரியலையா..?மயிலிறகு’ என்றாள். என் பிரியத்தின் பக்கங்களை நிரப்புகிறேன், பேர்வழிஎன்று, காதலுடன், அவளின் கண்களை மிக அருகில் பார்த்துக்கொண்டிருந்த ஓரிரு வினாடிகளில், என் மனதின் செய்தி அவளின் மூளைக்குக் கடத்தப்பட்டு, அதன் காரணமாக லேசான புன்னகையையை சிந்தி கொண்டே கேட்டாள்.., என்னடா .?  அந்த சொற்களில் உள்ள குழைவினால் திடீரென கழுத்து வரைநிரம்பிவிட்ட காதலின் அமிலம் தந்த முனைப்பில், ஒரு பழைய கேள்வியைஅவளிடம் கேட்டேன். ‘இது குட்டி போட்டா எனக்கும் தருகிறாயா?’
சட்டென, எங்கள் கண்களுக்கு இடையேயான மாய இழையை கருணையேஇல்லாமல் அறுத்தெறிந்துவிட்டு கேட்டாள், ‘மயிலிறகு எங்கயாவது குட்டிபோடுமா, முட்டாளா நீ?’
அமிலம் எல்லாம் ஆவியாகி காது வழியாக, புகையாக போய்க்கொண்டிருந்தது. ‘எப்ப பார்த்தாலும் லாஜிக்கோட தான் பேசுவியா? அந்த அறிவை ஆஃப்பண்ணிட்டு பேசலாம்ல..?’ என கடுப்பில் குரலை உயர்த்தினேன். இப்போதுஅமிலம் இடம் மாறியிருந்தது அவள் கண்களில் தெரிந்தது. உடனடியாக  என்கன்னத்தைக் கிள்ளி, “கோச்சிக்காதடா” என்றவள், அவளே தொடர்ந்தாள், ‘எங்கசொந்த ஊர்ல எங்க வீட்டுக்குப் பின்னாடி வெறும் வயல் வெளி தான். அங்க,அப்பபோ மயிலெல்லாம் வரும். ஒருநாள் நானும் என் அப்பாவும் எங்க வயலுக்குபோயிட்டு, மழை வர்ற  மாதிரி இருக்குனு திரும்ப வீட்டுக்கு வந்துட்டுஇருந்தோம். வர்ற வழியில மயில் ஒண்ணு  தோகையை விரிச்சி அழகா ஆடிட்டுஇருந்தது. நானும் அப்பாவும் அதை  பார்த்துட்டு வீட்டுக்கு வரதுக்குள்ள சடசடனுமழை ஆரம்பிச்சிட்டுது. எங்க அப்பா என்ன துண்டு போட்டு போத்தி தோள்லதூக்கி போட்டுட்டு ஓட்டம் ஓட்டம்னு வீடு வந்து  சேர்த்துட்டார்.  இந்தமயிலிறகைப் பாக்கும்போதெல்லாம் அந்த மயிலும், என் அப்பாவும்,  மழையும்மண்ணும் காதல் கொண்ட அந்த தருணத்தின்  வாசமும்  என் நினைவில்நிழலாடும்’  எனச் சொல்லி முடித்த கணத்தில் என் கைகளைப் பற்றியிருந்தாள். அவள் பார்வையில் ஒரு மயிலின் நடனமும், பெருமழையும் தெரியும் இந்த அற்புதக் கணத்தில், பெருகி வரும் என் காதலை ஒரு முத்தத்தின் மூலம் அவளுக்குக் கடத்திவிடலாம் என யோசித்தேன். அவள் நினைவில் அந்த மழைஈரம் கொண்ட அந்தி இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டும் என, அமைதியாய்இருந்துவிட்டேன். சமயத்தில் கொடுக்கப்படாத முத்தம் கூட காதலின்வெளிப்பாடுதான்.
லோ பாஸ்.!! என்ன அமைதியாயிட்டீங்க..?’ என்ற நண்பரிடம், ‘செமசாப்பாடு தோழர், நல்ல தூக்கம் வருது, அழைப்புக்கு நன்றி!’ எனக் கூறிவிட்டுவீடு வந்தவிட்டேன். நண்பரின் அன்பும்,  நல்ல உணவும்,  ஊரின் நினைவுகளைத்தாங்கி நிற்கும் அந்தக் காந்தப் பட்டையும் என் மனதில் ஒட்டிக்கொண்டன. இதுபோல எத்தனையோ நினைவுகள் எங்கள் வீட்டிலும் இருந்திருக்கின்றன. வேளாங்கண்ணி போய் வந்த போது வாங்கி வந்த  மேரி மாதா படம் ரொம்பநாள் எங்கள் வீட்டின் சுவரில் ஒட்டியிருந்தது. எதோ ஒரு பொங்கலுக்கு சுவரில்சுண்ணாம்பு அடிக்கும் போது கழற்றி, சுருட்டி பரணில் போட்டோம். பூம்புகாரில்இருந்து வாங்கி வந்த சங்கு மற்றும் கிளிஞ்சல்களால் ஆன மாலையை எங்கள்வீட்டின் அருகாலில் வெகு காலம்  மாட்டி வைத்திருந்தோம். பின்பு, சிறுகுளவிகள் கூடி கட்டி அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்ததால் அதைக் கழட்டிவீசிவிட்டோம். இப்படியே பழைய ஞாபகங்களில் மூழ்கியிருந்த போது கண்கள்சுழலத் தொடங்கியது. மதிய நேரத்தில் தூங்க மனமில்லாமல், டிவி யைப்போட்டேன்.  சமீபத்திய அரசியல் அதிர்ச்சியினைத் தாங்க முடியாமல் எல்லாசெய்தி சேனலிலும் கதறிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொன்றாக மாத்திகொண்டே வந்து கடைசியில் மதுரை பஸ் ஸ்டாண்டில் வந்து லேண்ட் ஆனேன்.. அங்கே விஷால் ஒரு கும்பலிடம் “நானும் மதுரைக்காரன் தாண்டா என மதுரைமொழியின் கலப்பே இல்லாமல் சுத்தமான தமிழில் கத்திக்கொண்டிருந்தான். இவன விட என் நண்பன் கண்ணன் நல்ல மதுரை பாஷை பேசுவான் என வேறுஒரு சேனலுக்கு தாவிய கணத்தில் தோன்றியது நாம் செல்லும் ஊர்களின் நினைவாகப் பொருட்களுடன் சேர்த்து அந்த ஊரின் மொழியையும் எடுத்து வந்து நம் ஊர் எங்கும் பரப்பி விட்டிருக்கிறோம் என்று. கண்ணன், எங்கள் ஊர் தான். வேலை நிமித்தமாக மதுரை சென்ற பிறகு, எங்களிடம் பேசியதெல்லாம் மதுரை மொழிதான்.
எங்கள் ஊரில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற சொற்ப பேர்களில் எங்கள்எதிர்த்த வீட்டு மாமாவும் ஒருவர். அவர் விடுமுறைக்கு வந்தபோது, வலிக்குதடவும், நல்ல வாசனை கொண்ட, பச்சை நிற தைலம் நிரம்பிய ஒரு சிறியகுப்பியைப் பரிசளித்தார். ‘இத வலிச்சா தான் தடவணும், சும்மாலாம்தடவக்கூடாது’  என அப்பா அதை வாங்கி பெட்டியில் வைத்துவிட்டார். ஒருதலைவலியோ, உடல் வலியோ, ஜலதோஷமோ எப்போ வந்து தொலைக்கும் எனதேவுடு காக்கத் தொடங்கினோம். துபாய் மாமா, கைலியைக் கணுக்காலுக்குமேல் ஏற்றிக்கட்டி, வெள்ளை நிறத்தில் மிக மெல்லிய,  நீண்ட  சட்டை அணிந்துஅவர் நடந்து சென்ற பின்னும் இரண்டு நிமிடத்துக்கு சென்ட் வாசனை அந்த தெருவெங்கும் வீசும். யாரிடமும் அதிகம் பேசாத அவர், தெருவில் செல்லும்முஸ்லீம் நண்பர்களைப் பார்த்து “ஸலாம் அலைக்கும்” என ஆரம்பித்துவம்படியாக உருதுவில் பேசுவார். பேசி முடித்து, முஸ்லீம் நண்பர் சென்ற பின்அருகில் இருக்கும் யாரையாவது பார்த்துச் சொல்லுவார், ‘பாய்க்கு அவ்வளவாஉருது வரல., சும்மா நம்ம ஊரு உருதுல பேசறாப்ல.. நான் பேசினது பாதி புரியலஅவருக்கு’  எனப் பெருமை அடிப்பார். இதைக் கேட்டு கொண்டிருக்கும் அந்தநபரும் ‘ஆமா.. ஆமா.. துபாய்ல பேசுறதெல்லாம் சுத்தமான உருதுல்ல..!! இங்கயாருக்கு அது தெரியும்!!’  எனப் பஞ்சாயத்து யூனியனில் விதை உளுந்துவாங்கப்போன மாதிரி, சுத்தத்துக்கு  சர்ட்டிஃபிகேட் கொடுப்பார். இந்த சீன்முடியும் போது முகத்தில் அவ்வளவு பெருமிதத்துடன் துபாய் நாட்டு அரசர் போலபோல நடந்து செல்வார் மாமா. அது அவர் அங்கிருந்து எடுத்து வந்த மொழி தந்தபெருமிதம்.
சக்திமான் நாடகத்திலிருந்து ஷகிலா படத்துக்கு அசுர வேகத்தில் ஓடி விட்ட காலத்தின் பயணத்தில் நாங்கள் எல்லோரும் படித்து முடித்து வேலைக்குச் செல்லும் வயதில் இருந்தோம். என் சில நணபர்கள் ஏற்கனவே வேலைக்கு வெளியூர் சென்றிருந்தார்கள். அதில் என் பள்ளி தோழன் அருண் திருநெல்வேலி, தூத்துக்குடி என மாறி மாறி வேலை செய்துவிட்டு ஒரு வருடம் கழித்து ஊருக்கு வந்தவன், பெட்டிக்கடை நடத்திவந்த குமார் அண்ணனிடம் கோல்ட் பில்டர் வாங்கிவிட்டு, ‘என்ன அண்ணாச்சி..!! சொகமா இருக்கீயளா..?’ என்றான். இவன் எதோ, அவரைக் கிண்டல் செய்கிறான் என நினைத்து அவர் பதில் ஏதும் சொல்லலாமல் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு ‘உம்.. உம் ..’ என்றார். ‘அட..  ஏன் கோவிக்கிறிய.? பாசமா தானே கேட்டேன்..’ எனச் சொல்லிவிட்டு அவன் அதே மொழி நடையில் தொடர்ந்து பேச ஆரம்பித்த பிறகுதான், அவனது ஒரு வருட வரலாற்றைக் கேட்டறிந்தார். அதன் பிறகு நாங்களும் அவனை அண்ணாச்சி என கூப்பிட ஆரம்பித்தோம்.. அவன் இல்லாத நேரத்திலும் அவனைப் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் அந்த மொழி நடையிலேயே பேசிக்கொண்டோம். அந்த மொழி அவனது அடையாளம் ஆகிப்போனது. நண்பன் காளிதாஸ் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துமனையின் மருந்தகத்தில், மருந்தாளுநராக வேலைக்கு சேர்த்திருந்தான். அவன் விடுப்பில் ஊருக்கு வந்த நாட்களில் பேசும்போது எக்கச்சக்க “ங்” குகளை போட்டு தாளித்தான். இதில் கடுப்பான நான், ‘ஏன்டா  அந்த ஊருக்குப் போய் நம்ம ஊரு பாஷலாம்  பேச மாட்டியா? ஓவர் படமா இருக்கு..?!!!’ என்றேன். ‘நம்ம ஊர் பாஷ தான.., நல்லா பேசலாம். பேசிட்டு ஒரு தெருவைக் கூட தாண்ட முடியாது. அடி பொளந்துடுவானோ..!!’ என்றான். என்ன இருந்தாலும் அவனது மரியாதையான பேச்சைக் கேட்க  நன்றாகத்தான் இருந்தது.
இப்படியாகப் பல மொழி நடையின் பரிச்சயம் கிடைத்து, எங்களின் பேச்சுமொழியே எல்லாம் கலந்த ஒரு தினுசான மொழி நடைக்கு டியூன் ஆகி இருந்தது . அது ஒரு மாதிரி ஜாலியாகத்தான் இருந்தது, எதுவரை என்றால்..? தொலைத்தொடர்பில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக, அதிகரித்துவிட்ட செல்போன் பயன்பாட்டை ஈடு செய்யும் வகையில், சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆரம்பிக்கப்பட்ட நோக்கியா தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து இப்போது விடுமுறைக்கு வீடு திரும்பிருக்கும், எங்கள் பள்ளி தோழனும், சமீபத்தில் அதிக பழக்கமில்லாத, சென்னைவாசியாகிவிட்ட, பாலமுருகன், மணி அண்ணன் டீ கடையில் நின்று கொண்டிருந்த எங்களைப் பார்த்து தூரத்தில் இருந்து கையசைத்து, நீண்ட நாள் கழித்து நண்பனைப் பார்க்கும் பரவசத்தில் இருந்த எங்கள் அருகில் வந்து, ‘ஓ**… எல்லாரும் எப்படிடா இருக்கீங்க..? ஓ**’ என கேக்கும் வரை.
மூன்றே வார்த்தைகள் கொண்ட ஒரு வாக்கியத்தில், முன்னொட்டும், பின்னொட்டுமாக இரண்டு ஓ**களை சேர்த்து ஐந்து வார்த்தைகள் கொண்ட வாக்கியமாக மாற்றிய மிகப் பெரிய சாதனையின் அதீதப் பெருமிதம் அவன் முகத்தில் மின்னியது. எங்கள் ஊரில் எத்தனையோ கெட்ட வார்த்தைகள் இருந்தது. ஆனால் இதை கேட்கும் போது கொஞ்சம் வலுவான கெட்ட வார்த்தை போல இருந்தது. சொன்னவனுக்கு ஒரு திருப்தியையும், கேட்டவனுக்குப் பெரிய அவமானத்தையும் சட்டென பரிசளிக்கக்கூடிய இந்த வார்த்தையின் ஒலியின் அளவு சிறிய மாத்திரை தான் என்றாலும் ஏப்பம் விடும் போதெல்லாம் இம்சிக்கக்கூடிய ஒரு கொடும் நாற்றம் கொண்ட கசப்பு மாத்திரையாக இருந்தது.  அருகில் நின்ற குமாரின் வாயிலிருந்த சிகரெட்டை வாங்கி ஒரு இழுப்பு இழுத்தவன், ‘ஓ**.. இன்னும் கோல்ட் பில்டர் தான் குடிக்கிறியா..? ஓ**.., போய் ஒரு கிங்ஸ் வாங்கிட்டு வாடா.., காசு நான் தரேன்’ என ஐம்பது ருபாய் நோட்டை எடுத்து நீட்டும் போது முறைத்த குமாரிடம், முபாரக் லேசாகக் கண்ணைக் காட்டினானான்.
கிங்ஸ் உடன் டீயும் குடித்து முடித்து அவன் பேசிக்கொண்டிருந்த அரை மணிநேரமும் ஆயிரத்தி சொச்சம் ஓ** போட்டு ஒரு லிம்கா சாதனையே படைத்திருந்தான். கடைசியாக, ‘ஓ** இன்னும் மூணு நாள் ஊர்லதான் இருப்பேன். எங்கப் போனாலும் போன் அடிங்க மச்சான்’, என்று சொல்லிவிட்டு பாதி தூரம் சென்றவன் திரும்ப வந்து, ‘ஓ** உங்கள நம்ப முடியாது, எல்லார் போன் நம்பரும் குடுங்க என கேட்டு வாங்கிக்கொண்டு, நான் போன் பண்ணி ப்ரோக்ராம் சொல்றேன், எல்லாரும் சேர்ந்து செமயா என்ஜாய் பண்றோம்.  ஓ** எவனாவது போன் எடுக்கல, ஓ** காண்டாயிடுவேன்’ எனச் சொல்லிவிட்டு சென்றான். அதை அவன் செய்திருக்க வேண்டாம். செய்துவிட்டான். என்ன செய்வது..? அடுத்த ரெண்டாவது நாளில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என அவனுக்கு மட்டுமல்ல, யாருக்குத்தான் தெரியும்..?
காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி. எல்லா புது படங்களும் இரண்டு மாதத்திற்குள் எங்கள் ஊரின் திரையரங்கத்திற்கு வந்துவிடும் அளவிற்கு ரொம்பவும் பின்தங்கிய ஊராகவும் இல்லாமல் அதே சமயம் நகரமும் அல்லாத ஒரு நடுத்தரமான ஊர். இங்கேயே வளர்ந்து, படித்து, ஊரை விட்டுப் போக மனமில்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி கொண்டிருந்த புதிய தலைமுறை இளவட்டங்களில் நானும் ஒருவன். காசு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்ளும், இல்லையென்றால் அதைப்பற்றி கேட்காத, மணி அண்ணன் டீக்கடை தான் நாங்கள் கூடும் இடம். வெளி ஊரில் வேலை பார்க்கும் எங்கள் நண்பர்கள் ஊருக்கு வரும் சமயம் அவர்களிடம எங்களுக்கும் எதாவது வேலை பார்த்து தரும் படி மிகுந்த அக்கறையுடன் சிபாரிசு செய்துகொண்டிருக்கும் போதே ஒரு ஐந்நூறு ரூபாயை எடுத்து நீட்டி ‘அவனுங்க பாக்கியையும் எடுத்துக்கங்க அண்ணே’ என்பான் நண்பன்.. ‘நல்லது தம்பி, ஆனா நான் இதுக்காக சொல்லல, ஊருக்குள்ளே இருந்தா தேவை இல்லாத பிரச்னைலாம் வரும், அதுவும் இல்லாம இதான சம்பாரிக்கிற வயசு’ என்று சந்தோஷமாகச் சில்லறை பாக்கியைக் கொடுத்து அந்தக் கணக்கை முடிப்பார். ‘மாப்ள அண்ணன் சொன்ன மாதிரி எங்களுக்கும் உன் கம்பெனி லேயே ஒரு வேலை பாரேன்’ எனக் கேட்டால், ‘ஏன்,..? நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா,’ என்றவுடன் லேசாக மாறும் என் முகத்தைக்  கண்டு , ‘அதெல்லாம் உனக்குச் சரியாய் வராது  மாப்ள.., கஷ்டம். அதுக்காகச் சொல்றேன் எனச் சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்யும் போது சொல்வான், ‘டீ குடிக்கறதைக் கொறைங்கடா.!!’
இப்படியாக நெருங்கிய நண்பர்களே சர்வ ஜாக்கிரதையா டீல் செய்யும் எங்களிடம் புதிதாக நெருக்கமாகி இருந்தான் நண்பன் பாலமுருகன்.. அதாவது ஓ** பாலமுருகன். சென்னையின் மொழியையும், நாகரீகத்தையும் வம்படியாக எங்கள் ஊரின் தெருக்களில் சிதறவிட்டு கொண்டிருந்தான். அதீத வெள்ளை நிறத்தில் இருக்கும் அவன், ஒரு கை வைக்காத டைட்டான ஒரு பனியனும் அரைக்கால் டௌசரும் போட்டு கொண்டு கவாஸாகி பாக்ஸர் இல் சினிமா ஹீரோ போல் (அப்படி நினைத்துக் கொண்டு!!) வந்து மணி அண்ணன் டீ கடைக்கு வந்து இறங்கினான்.
எங்களுடன் இருந்த அரை மணி நேரமும் ஓ** மழையில் எங்களைக் குளிப்பாட்டி முடித்துவிட்டு போகும் போது, ‘மாப்ள இன்னைக்குச் சாயங்காலம் லால்பேட்டை போயி பரோட்டா சாப்பிடலாமா’ என்றவனிடம், ‘நீ காசு கொடுத்தா சிதம்பரம் போயி கூட சாப்பிடலாம்’ என்றோம். ‘ஓ**  திருந்தவே மாட்டீங்கடா . சரி என் ட்ரீட் இன்னைக்கு. போறோம்..,’ எனச்  சொல்லிவிட்டு சென்றான். சாயங்காலம் வந்தது. நான், முபாரக், நடராஜ், கிளி, ஊரில் இருந்த வந்திருந்த என் மச்சான் மற்றும் பாலமுருகன் ஆறு பெரும், மொழி ஒரு வலிமையான ஆயுதம் என எங்களுக்கு நிருபித்த அந்த முன்னிரவில் லால்பேட்டை தாவூஸ் ஹோட்டலில் அமர்ந்திருந்தோம்.
ஓசியில் சாப்பிடும் உற்சாகத்தில் சகலவித அயிட்டங்களையும் ஆர்டர் செய்துவிட்டு பேசத் தொடங்கியிருந்தோம். ஒவ்வொரு ஐட்டமாக வர, சாப்பிட்டு கொண்டே பேச்சு  தொடர்ந்தது. முபாரக்கும் நட்ராஜும், ஒரு பழைய கொடுக்கல் வாங்கலில் அவர்களை ஏமாற்றியிருந்த செல்போன் கடை வைத்திருக்கும் சரவணனைப் பற்றி பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில், பரோட்டாவைப் பிய்க்கும் போது தெரித்துவிட்ட சால்னாவுக்கு ஒரு ஒ**வையும், லாவகமாக வாயில் போடத்தெரியாமல், மஞ்சள் கரு  உடைந்துவிட்ட ஒரு ஆப் பாயிலுக்கு ஒரு ஒ**வையும் வாரி வழங்கி கொண்டிருந்த போது, எங்களுக்குப் பின்னால் முரட்டு போதையில் உட்கார்ந்திருந்த சரவணன் காதில் எக்குத்தப்பாக எதோ விழ, எழுந்து வந்தவன் கொலைவெறியுடன் பொளேர் என விட்டான். நண்பர் ஓ**  பாலமுருகனின் வெள்ளை நிற  கன்னங்களில் நான்கு விரல்கள் தெரிந்தன. ஒட்டு மொத்த கடையும் அமைதியானது. முபாரக், இவன் இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தானா என்பது போல் பார்த்தான். அடுத்தடுத்து நடக்கப் போகும் சம்பவங்களை யூகித்து கொண்ட நான் விறு விறு என ஒன்சைடு ஆம்லெட்டைத் தின்ன ஆரம்பித்தேன். பரோட்டா போடுபவர் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்துவிட்டு, பரோட்டாவைத் திருப்பிப் போடத் தொடங்கினார். இதெல்லாம் பார்த்து பழக்கமில்லாத என் மச்சான் மட்டும் விருட்டென எழுந்து சுவற்றோடு சாய்ந்து நின்றுகொண்டிருந்தான்.
இதைச் சற்றும் எதிர்பாராத பாலமுருகன் அனிச்சை செயலாக உதிர்த்த இன்னொரு ஓ**வை அடுத்தடுத்து அவனது கன்னங்களில் அறையாக இறங்கியது. அவ்வளவுதான்,  முபாரக், நடராஜும் எழுந்து சரவணனை அடிக்க, ஒரு குட்டி கலவரம் தொடங்கியது. முன்னனுபவம் இல்லாத என் மச்சான் எதற்கென்றே தெரியாமல் கடைக்கு வெளியே கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, நான் இன்னமும் எதோ சாப்பிட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு திரும்ப ஓடி வந்தான். இதற்கு  நடுவில், ‘காடை யார் கேட்டது ?’ என சர்வர் கேட்க, ‘பாய் இங்கதான்..,’ எனச் சொன்ன கிளி,  ‘மச்சான் எனக்கு கொஞ்சம் மீதி வை’ என்றான். இப்போது கடைக்கு வெளியில் சண்டை மிகவும் ஆக்ரோஷமாக  நடந்து கொண்டிருந்தது. ‘மச்சான் நம்ம பசங்களப் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கான், நீ என்னடா தின்னுட்டு இருக்க?’ எனப் பதட்டமாகக் கேட்டான். ‘மச்சான். இதெல்லாம் உனக்குப் புதுசு, பேசாம உக்காந்து சாப்பிடு’ என்ற என்னைக் கேவலமாகப் பார்த்துவிட்டுச் சண்டையை  விலக்கி விடும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தான். நானும் காடையைத் தின்ன தொடங்கியிருந்தேன். கொஞ்ச நேரத்தில் என் பின் மண்டையில் விழுந்தது ஒரு அடி. மச்சான் மிகுந்த கோபத்தில் நின்றிருந்தான். ‘அங்க என்ன நடந்துட்டு இருக்கு, நீ என்னடா இன்னும் தின்னுட்டு இருக்க கம்னாட்டி’ என்றான்.
இவனைக் கூட்டிட்டு வந்தது தப்பா போச்சு என நினைத்துக் கொண்டேன், இருந்தாலும், எல்லா சண்டையிலும் ஆன் தி ஸ்பாட் இல் ஐடியா கொடுக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டபடியால் சண்டை நடக்கும் கடைக்கு வெளியில் வந்தேன். கொஞ்ச நேரம் கூர்ந்து கவனித்து, அந்த சண்டையின்  வியூகம் தெரிந்துகொண்டேன். இந்த நேரத்தில் எக்குத் தப்பாக உதை வாங்கி கிட்டத்தட்ட கீழே விழப்போன முபாரக்கைத் தாங்கிப் பிடித்து அந்த ரகசியத்தை அவனிடம் சொன்னேன், “மச்சான் அவன் போதையில சும்மா காட்டுத்தனமா சுத்துறான். நீங்க தான் குறுக்க போயி தேவையில்லாம அடிவாங்கிட்டு வரீங்க”. ‘என்னடா சொல்ற.? அப்ப நான் இங்கயே நிக்குறேன்’ என்றான் மூச்சிரைக்க. அப்படியே நட்ராஜுக்கும் சைகை காட்டினான் முபாரக். சும்மாவே சுத்திக்கொண்டிருந்த சரவணன் கால் தடுமாறி கீழே விழுந்தான் அதே சமயம் , என் மச்சான், முபாரக், நட்ராஜ் இருவரையும் தள்ளிக் கொண்டு வண்டியை நோக்கி ஓடி கொண்டே சொன்னான், ‘மச்சான் இவனுங்கள விட்டுட்டு வந்து உங்களக் கூட்டிட்டு போறேன்.’ ஒரு வழியாகச் சண்டை முடிவுக்கு வந்தது. திரும்ப வந்த என் மச்சான் மற்ற எல்லாரையும் அழைத்துப் போனான். ஊரை அடைந்து எல்லாரும் நடந்து கொண்டே, எப்படி அடித்திருக்க வேண்டும், எப்படி தடுத்திருக்க வேண்டும் என பேசிக் கொண்டே சென்றுகொண்டிருந்த போது பாலமுருகன் சொன்னான், ‘ஓ**  300 ரூவா செலவு பண்ணி ஒழுங்கா சாப்பிட கூட இல்ல.. செம அடி வாங்கிட்டு வந்துட்டோம்.’
‘என்னது காசு குடுத்தியா..?’ என்றான் முபாரக். ‘ஓ** நீங்கலாம் சாப்டா காசு தர மாட்டிங்களா?’ என நக்கலாகக் கேட்ட அவனை இன்னொரு அறை விட்டான் முபாரக். எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி. ‘ஏன்டா  அவனை அடிச்ச..?’ என்ற எங்களைப் பார்த்து ‘அடிக்கிறதா..? சாவடிக்கணும் அவனை. நாம எவ்ளோ கஷ்டப்பட்டு அடி வாங்குறோம் இது தான் சாக்கு னு எஸ்கேப் ஆகாம அவன்கிட்ட போய் காசு குடுத்துட்டு வந்திருக்கான். ஏன் மச்சான் நாம எத்தனை எடத்துல இதே மாதிரி அடி வாங்கி இருக்கோம், எங்கயாவது காசு குடுத்துருக்கோமா..?’ என எங்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே ஒரு குத்து விட்டான். அந்த குத்தையும் வாங்கி கொண்டு, ‘என்னது..? அப்ப எல்லா இடத்துலயும் அடி வாங்கிட்டு தான் வாரீங்களா..? அப்ப நானா தான் வந்து மாட்டிகிட்டனா..?’ என அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போது முபாரக்கோடு நட்ராஜும் சேர்ந்து கொண்டான். ‘சும்மா இருந்தவனை “ஓ**” ன்னு சொல்லி கடுப்பு ஏத்தி எங்களுக்கு அடி வாங்கி குடுத்துட்டு, எங்களைக் கிண்டல் வேற பண்றியா..?’ என அவன் பங்குக்கு ரெண்டு விட்டான். முபாரக் திட்டவட்டமாக சொன்னான். ‘மச்சான் எனக்கு தெரியாது, இவன் அந்த 300  ரூபாயை நாளைக்கு எனக்குத் தரணும். இல்லனா இவன் திரும்பி சென்னைக்கு போக மாட்டான். நீதான் பொறுப்பு’ என மிகவும் சீரியஸாகச் சொன்னான். இது என்னடா புது பஞ்சாயத்தா இருக்கு என கேட்க வாய் வர வந்துவிட்டது. ரொம்ப கோவமா இருக்கான், வேணாம் என விட்டுவிட்டேன்.
ஒரு வழியாக எல்லா கலவரத்தையும் முடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தோம். மறுநாள் காலை என் மச்சானை பஸ் ஏத்திவிட சென்றிருந்த போது, சென்னை பஸ் ஏற பாலமுருகன் வந்திருந்தான். என்னைப் பார்த்துவிட்டு அருகில் வந்தவன், ‘மச்சான் காலைல சரவணனைப் பார்த்துக் கேட்டேன். நான் ஓ** சொன்னதுனால தான்  அவனுக்குக் கோபம் வந்து  அடிச்சேன் னு சொன்னான். அத சொன்ன கோவமா வருது.?’ என்றான். ‘ஆமாம் மச்சான்..’, என்றேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துட்டு 300 ரூபாயை எடுத்து என் சட்டை பையில் வைத்து விட்டு சொன்னான் ‘அவன்கிட்ட குடுத்திடு, இது அவன் மிரட்டுனதுக்கு இல்ல.., என்னாலதான எல்லாரும் அடி வாங்கினீங்க.. அதுக்குத்தான்…’, என அவன் சொன்ன அதே  வினாடியில் எதேச்சையாக கேட்டேன் ‘அடுத்து எப்போ மச்சான் வருவ..? வந்தா மறக்காம போன் பண்ணு.’ என்றேன். கொஞ்சம்கூட யோசிக்காமல் கோபமாக சொன்னான், ‘போடாங்கோ…!!’ என ஆரம்பித்து சற்று நிதானித்து எங்கள் ஊரில் நாங்கள் காலம் காலமாக புழங்கும் ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னான். இந்தி திணிப்புக்கு எதிராக மீம் போட்டு லைக் வாங்கிய முகநூல் போராளி போல் பெருமையாக இருந்தது. ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. இந்தி திணிப்புக்கு எதிராக நாம் பொங்குவது எல்லாம் யாரும் தூண்டி விட்டு வருவது இல்லை. அது இயல்பாகவே நம்முள் இருக்கிறது. மொழி வலியது. நாம் பொருளின் வழி மட்டுமல்ல, மொழியின் வழியும் நினைவுகளைக் கடத்துகிறோம்.
  • --மனோ அழகன்
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !