Wednesday, December 19, 2018

அந்த மூன்றாவது கேள்வி

திருவண்ணாமலைக்கு செல்ல முன் பதிவு செய்தாயிற்று. ரமண மகிரிஷி ஆஸ்ரமத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கு மின் அஞ்சலில் அனுமதியும் வாங்கியாயிற்று. பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை.ஜன்னல் அருகில் இருக்கும் என் இருக்கையில் அமர்ந்தேன். திருவண்ணாமலைக்கு குறைந்தது ஐந்து மணிநேரமாவது ஆகும். கைபேசியைப் பார்த்தேன். வழக்கத்திற்கு மாறாக வந்திருந்த அனைத்து குறுஞ்செய்திகளையும் படித்தேன். இடது பக்கம் இருக்கும் கைப்பிடியில் கை வைக்க வாகில்லாமல் அடியில் ஏதோ துருத்திக்கொண்டு இருப்பதைப் போல உணர்ந்தேன். கைப்பிடியை உயர்த்த அந்தப் பிளவில் சொருகிவைத்த கத்தைப் பேப்பரை உருவி எடுத்தேன். அது ஒரு கையெழுத்துப் பிரதி. யாரோ மறந்துபோய் வைத்திருக்கவேண்டும். எடுத்து புரட்டிப்பார்த்தேன். “ஓ, விக்கிரமாதித்யா!” என்ற தலைப்பிட்டிருந்தது. தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். 
"மாலை ஐந்து மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தது. சொல்லி வைத்தாற் போல் ஒவ்வொருவராக மேடம் ஜாஸ்மினின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். பருமனான உடல் வாகு. வயதிற்கு மீறிய தளர்ச்சி. வழக்கமான முதுமைக் கால மருத்துவப் பிரச்சினைகள். சராசரி நடுத்தரவர்கத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியைப் போல கணவர் வினோத்தின் ஓய்வூதியப் பணத்தை எதிர்பார்த்து, ஏராளமான கனவுகளுடன் தற்காலிக நிம்மதிப் பெருமூச்சுடன் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்தான் நம் மேடம் ஜாஸ்மின். 
முதலில் வந்தவரின் பெயர் ராமானுஜம். வயது ஐம்பதிற்கு மேல். ஒரு தனியார் கம்பெனியில் தலைமைக் கணக்கராக இருக்கிறார். ஓரளவிற்கு வசதியானவர். இருக்கும் சேமிப்பை வைத்து கொஞ்சம் கடனும் வாங்கி ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொண்டார். மற்றவர்களைப் போல மாதம் பிறந்தால் வாடகைக்கு என ஒரு தொகையை அவர் எடுத்து வைக்க வேண்டியதில்லை. வரவேற்பறையில் வினோத்திற்காகக் காத்திருந்த ராமானுஜம், கழுத்துப் பக்கம் அடிக்கடி தெரிந்த பூணலை லேசாகத் தளர்த்தி சட்டைக் காலரின் கீழ் தள்ளி விட்டுக்கொண்டே அன்றைய செய்தித் தாளை படித்துக்கொண்டிருந்தார். 
அடுத்து வந்தவர் அரவிந்தன். ஒடிசலான உருவம். பார்ப்பதற்கு மிகவும் வெகுளியாகத் தெரிந்தாலும் பண விஷயத்தில் மிகவும் கராரான பேர்வழி. “என்ன விலை வாசி?! வேர்க்கடலையை வறுத்தா ஒரு விலை வறுக்காட்டி ஒரு விலை சொல்றான்” என்று புலம்பிக்கொண்டே ராமானுஜம் அருகில் வந்தமர்ந்தார். 
பிளாக் டீயுடன் அங்கு வந்த மேடம் ஜாஸ்மின் “எல்லாரும் வந்திட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே டிரேயில் இருந்து ஒவ்வொரு கோப்பையாக எடுத்து டீப்பாயில் வைத்தார். மனைவியைப் பணிவுடன் தொடர்ந்து வந்த வினோத் வறுத்த நிலக்கடலையும், பாதாம் பருப்பையும் சரி சமமாக இரண்டு பிளாஸ்டிக் தட்டங்களில் வைத்தார். ராமானுஜம் நிலக்கடலையை சிறிது எடுத்துத் தன் உள்ளங்கைகளில் தேய்த்து ஊதி வாயில் போட்டுக்கொண்டார். 
அப்போது அங்கு வந்த காதர் நவாஸ் “வழக்கம் போல நாந்தான் இன்னைக்கும் லேட்டா?” என்று கேட்டுக்கொண்டே மேடம் ஜாஸ்மினைப் பார்த்துச் சிரித்தார். அப்போதுதான் ராமானுஜமும், அரவிந்தனும் வழக்கத்திற்கு மாறாக மேடம் ஜாஸ்மினின் நெற்றியில் இருக்கும் பெரிய அளவு பிந்தியையும், தங்க வளையலுக்குப் பதிலாக கைகள் நிறைய கண்ணாடி வளையல்களையும் ஏதேச்சையாக கவனித்தார்கள். அரவிந்தன் தன் தலையில் அணிந்திருக்கும் காந்திக் குல்லாயை மிகுந்த அக்கரையுடன் இரண்டாக மடித்துத் தன் தொடையில் வைத்து கை நிறைய பாதாம் பருப்பை எடுத்துக்கொண்டார். 
“என்ன விலைவாசி, ஒரு நாள் பேவதே பெரும்பாடா இருக்கு” என்று குறைப்பட்டுக்கொண்டே பிளாக் டீயை சத்தம் போட்டு உறிஞ்சிக் குடித்தார். 
அடுக்களையில் தனி ஆளாகப் போராடிக்கொண்டிருந்த மேடம் ஜாஸ்மின் கணவரை அழைத்து “வினோத், ரெண்டு தெரு தாண்டி இருக்கும் அண்ணாச்சி கடையிலே லூசிலே ரெண்டு கிலோ பச்சரிசி வாங்கிட்டு வாங்க. அப்படியே ஒரு கப் தயிரும், அவலும் வாங்க மறந்திடாதீங்க” என்று அவரின் ஒப்புதலிற்குத் துளியும் காத்திருக்காமல் துணிப் பையை கணவரின் கைகளில் திணித்தார். “வினோத் ஒன்னு சொல்ல மறந்திட்டேன். சோம்பேறித்தனப்பட்டு பக்கத்திலே இருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலே வாங்கிட்டு வந்தீங்களோ!” கண்களை அகல விரித்து உருட்டி வினோத்தை ஒரு நொடி நிலைகுலைய வைத்தாள் மேடம் ஜாஸ்மின். 
வினோத் கேட்டைத் திறந்து வேளியே போகும் சமயம் ஒரு இளவயது சாமியார் கழுத்தில் ஏராளமான ருத்ராட்ச மாலைகளுடனும் நெற்றியில் தேவையான பரப்பளவிற்கு அதிகமாக விபூதியை பூசிக்கொண்டு நின்றிருந்தார். அவர் கையில் மண் பாத்திரத்துடன் நிற்பதைப் பார்த்த வினோத் தன் பைஜாமாவில் இல்லாத சில்லரைகளைத் துளாவினார். வெகு அலட்சியமாக வினோத்தைக் கடந்து அந்த சாமியார் உரிமையுடன் உள்ளே சென்று மேடம் ஜாஸ்மினை சைகையால் அழைத்தார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு “தொடர்ந்து மூன்று சனிக்கிழமை இந்த நெல்லிக்கனியை வெற்றிலையில் வைத்து மடித்து உங்கள் குல தெய்வத்தை வழிபடுங்கள்” என்று கூறி மேடம் ஜாஸ்மினின் கைகளில் ஒரு குறிப்பிட்ட விசையுடன் ஒவ்வொன்றாக மூன்று நெல்லிக்கனிகளை போட்டார். தடுமாறியபடி மூன்று நெல்லிக்கனிகளையும் கீழே விழாமல் மிகுந்த பயபக்தியுடன் கேட்ச் பிடித்த மேடம் ஜாஸ்மின் அவரை வணங்கி அரவிந்தை செய்கையால் ஒரு நூறு ரூபாய் கொடுக்குமாறு அவசரப்படுத்தினாள். அரவிந்தும் தன் பையிலிருந்து நூறு ரூபாயை அரை மனதுடன் நீட்டினார். அனைத்தையும் கவனித்த வினோத் வாய்விட்டு பலமாகச் சிரிக்க மேடம் ஜாஸ்மின் தன் ஓரப்பார்வையால் வினோத்தை சுலபமாக மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாள். 
அப்போது வீட்டிற்குள் ஒரு ஆடு ஓடி வந்ததைப் பார்த்த ராமானுஜம் சப்தம் போட்டு அலறினார். “ஆட்டுப்பாலிலே டீ போட்டு குடிச்சிருக்கீங்களா ராமானுஜம்?” என்று மேடம் ஜாஸ்மின் கேட்க அவர் அருவருப்புடன் உதட்டைப் பிதுக்கினார். “பாலோட விலை போற போக்கைப் பாத்தா இனிமே ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் ஒரு ஆடு வளக்கவேண்டி வரும் ராமானுஜம். எதுக்கும் வினோத்திடம் இப்பவே கொஞ்சம் டிரெய்னிங்க் எடுத்துக்கோங்க” என்று மேடம் ஜாஸ்மின் கண் சிமிட்டிச் சிரிக்க ஒரு கையில் பையுடனும், மறு கையில் தொண்னையுடன் வீட்டிற்குள் நுழைந்தார் வினோத். 
புளியோதரையின் மணம் அனைவரின் நாசியையும் துளைத்தது. “கடைக்கு பக்கத்திலே இருக்கும் கோயில்லே கொடுத்தாங்க. அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்று சாட்சிக்கூண்டில் நின்று கொண்டு குறுக்கு விசாரணையின் போது பிராசிக்கியூட்டரிடம் தயக்கத்துடன் பொய் சாட்சி சொல்லும் நபரைப் போல ஜாஸ்மின் மேடத்தின் கண்களை நேராடியாகப் பார்க்க முடியாமல் ஒப்பித்தார். 
“ராத்திரிக்கு சன்னா, பன்னீர்,உருளை தக்காளி போட்டு சப்ஜி வெச்சிடவா?” என்று மேடம் ஜாஸ்மின் தன் கணவரின் தோளில் சரிந்த ஹியரிங்க் எய்டை சற்று சரிப்படுத்தி அவரின் காதில் வைத்து மீண்டும் கேட்க “சூப்பர், அதையே வெச்சிடு” என்று தனக்கு அபூர்வமாக அளிக்கப்பட்ட சுதந்திரத்தை அளவாக உபயோகித்தார். 
இதுவரை கதையை பொறுமையுடன் கூறிக்கொண்டிருந்த வேதாளம் கதையை இத்துடன் நிறுத்தி மூன்று கேள்விகளை மன்னன் விக்கிரமாதித்யனிடம் கேட்டது.” 
இத்துடன் அந்தக் கதை முடிவடைந்திருந்தது. பின் பக்கத்தை புரட்டிப்பார்த்தேன். ஒன்றும் எழுதவில்லை. எடுக்கும் போது கைப்பிடிப் பிளவில் ஏதாவது காகிதங்கள் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீண்டும் கைகளை விட்டுத் துழாவினேன். இந்தக் கதையில் நான் வேதாளத்தையோ அல்லது விக்கிரமாதித்யனையோ துளியும் எதிர் பார்க்கவில்லை. வேதாளத்தின் மூன்று கேள்விகள் என்னவாக இருக்கும்?. மீண்டும் கதையை முதலில் இருந்து ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தேன். 
தொடர்ந்து அதற்கான கேள்வி பதில்களை என் மடிக்கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். 
“விக்கிரமா, இது வரை நீ கேட்ட கதையில் வந்தஆறு பேருடைய பொதுப் பிரச்சினை என்ன?” வேதாளம் விக்கிரமனின் பதிலிற்காகக் காத்திருந்தது. சிறிதும் யோசிக்காமல் விக்ரமாதித்யன் “விஷம் போல தமிழகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் விலை வாசியைவிட வேறென்னவாக இருக்கமுடியும்” பதில் கூறினான். 
இதைக் கேட்ட வேதாளம் தன் இரண்டாவது கேள்வியைக்கேட்டது. “அவன் மகுடம் தரித்த அரசனாக இருக்கவேண்டும். எனினும் யாசித்தே தன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய கையறு நிலையில் இருக்கவேண்டும். அத்தகைய அரசர்களில் குறைந்தது பத்து பெயர்களையாவது கூறு ? இந்தக் கேள்விக்கு விக்ரமாதித்யனால் சரியான பதிலை கூறமுடியாது என்று எண்ணிய வேதாளம் கர்வமாகச் சிரித்தது. “ஜனநாயகம் என்ற மகுடத்தை தலையில் சுமந்துகொண்டு அரசர்களாக வலம் வரும் தமிழக மக்கள் காவிரி நீருக்கும், கிருஷ்ணா நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் கையறு நிலையில்தானே இன்றளவும் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தான் விக்கிரமாதித்யன். அவனின் இரண்டாவது பதிலில் திருப்தி அடைந்த வேதாளம் தன் மூன்றாவது கேள்வியைக் கேட்டது. 
அத்துடன் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு மூன்றாவது கேள்வியை யேசிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு முயன்றும் அந்த மூன்றாவது கேள்வி மட்டும் பிடிபடவே இல்லை. இந்தக் கதையை சிறிது மேம்படுத்தி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் என்ன என்று தோன்றியது. அந்த மூன்றாவது கேள்வி பதில் இல்லாமல் கதையை எப்படி முடிப்பது என்று குழம்பிக்கொண்டே இருந்தேன். 
“ஓருவருக்கு உரிமையான கதையை கையாள்வதே குற்றம், அந்தக் கதையை மேம்படுத்தி சில புனைவுகளுடன் தன்னுடையதாக்கிக் கொள்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?”. என் அருகில் கேட்ட குரலைக் கேட்டு அதிர்ந்தேன். 
சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு குழந்தை அழும் சப்தம் கேட்டது. கைக்குட்டையால் கண்களை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு உறங்கும் முதியவரின் குரட்டை ஒலி கூடிக்கொண்டே போனது. சுதாரித்துக்கொண்டு சூழ்நிலையைப் புரிந்துகொள்ள எனக்கு நேரம் அதிகமானது. 
சிரித்துக்கோண்டே என் அருகில் உட்கார்ந்த அவன் பேருந்தின் ஜன்னல் வழியாகப் சாலையில் கடந்து போன முருங்கை மரத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே “விக்கிரமாதித்யா, பதில் சொல்ல அவசரம் ஒன்றுமில்லை. வேண்டுமளவு அவகாசம் எடுத்துக்கொள். விருப்பாட்ச்சி மலையில் நாம் இருவரும் ஏறிக்கோண்டே மீதியைப் பேசிக்கொள்ளலாம் என்று என் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !