Wednesday, December 19, 2018

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!! 

ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான். 

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்?? 

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான். 

அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !! 

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான். 

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!! —

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !