பல ஆண்டுகளுக்கு முன்பு தஸ்துர்ஜி என்ற பெயரில் ஒரு அதிகாரி இருந்தார். அவர் ஒரு சமயம் மும்பைக்கு ஏதோ வேலையாகச் சென்றிருந்தார். ஒரு நாள் அவர் நகரத்தின் ஒரு பகுதிக்கு பெஸ்ட் பஸ்ஸில் சென்றார். பஸ் கண்டக்டர் தவறுதலாக தஸ்துர்ஜியிடம் ஒரு ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டார். தன் இருக்கையில் அமர்ந்ததும் தஸ்துர்ஜி யோசித்தார். “இந்த ரூபாயை என்ன செய்வது? திருப்பிக் கொடுத்து விடலாம், என்னிடம் வைத்துக் கொள்வது தவறு” என்று எண்ணினார். பிறகு வேறு ஒரு எண்ணம் தோன்றியது. “ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்? நானே வைத்துக் கொண்டால் பஸ் கம்பனிக்கு ஒன்றும் பெரிய நஷ்டம் ஆகி விடாது. இதைக் கடவுளின் ஒரு பரிசாக வைத்துக் கொண்டு மௌனமாக இருப்போம்” என தீர்மானித்தார்.
தஸ்துர்ஜி இறங்கும் இடம் வந்தவுடன் ஒரு வினாடி யோசித்து அந்த ரூபாயை கண்டக்டரிடம் கொடுத்து “நீங்கள் ஒரு ரூபாய் அதிகமாக சில்லறை கொடுத்து விட்டீர்கள்” என்று சொன்னார்.
கண்டக்டர் அவரிடம் “நீங்கள் இவ்வூருக்கு வந்திருக்கும் தஸ்துர்ஜி தானே? நான் உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். உங்களுக்கு சில்லறை அதிகமாக தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்க்க எண்ணினேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
தஸ்துர்ஜி பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஒரு கம்பத்தை பிடித்து கொண்டு “கடவுளே, கேவலம் ஒரு ரூபாய்க்காக என் மனசாட்சியை விற்க நினைத்தேனே” என்று நினைத்து வருத்தப்பட்டார். ஆனால் சில்லறையை திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மையை நினைத்து கடவுளுக்கு நன்றி கூறினார்.
நீதி
தோழர்களே, கவனம்!! நம் மனம் எல்லா விதமான ஆட்டமும் காட்டும். ஜாக்கிரதை
– உன் எண்ணங்களை பார், அதுவே உன் வார்த்தைகளாகும்
– உன் வார்த்தைகளை பார், அதுவே உன் செய்கைகளாகும்
– உன் செய்கைகளை பார், அதுவே உன் பழக்கங்களாகும்
– உன் பழக்கங்களை பார், அதுவே உன் நடத்தை ஆகும்
– உன் நடத்தையை பார், அதுவே உன் விதி ஆகும்
ஆதலால், மனதை அடக்க வேண்டும். அல்லது அது வேண்டாத எண்ணங்களை நோக்கி செல்லும். தவறான செயலுக்கு பிறகு நம் மனசாட்சி நம்மை நிம்மதியாக வாழ விடாது.
No comments:
Post a Comment