Friday, March 15, 2019

ஒரே கனவு

”ஏன் இந்தக் கனவு அடிக்கடி வருது டாக்டர்? சில சமயம் முழுக் கனவும் வருது, சில சமயம் அதே கனவு பாதி வருது….ஆனா எனக்கு இந்தக் கனவைத் தவிர வேற கனவே வரதில்லை....ஐம் ரியலி ஸ்கேர்ட் அதான் உங்க கிட்ட கன்ஸல்ட் பண்ண வந்தேன்” படபடவென்று அகில் சொல்லி முடிக்கையில் ஏஸி ரூமிலும் அவனுக்கு வியர்த்துவிட்டது.





”மிஸ்டர் அகில் கூல் டவுன்....ரிலாக்ஸ்...இதுல பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை...ஜஸ்ட் எ ட்ரீம்” என்றார் டாக்டர் ரங்கராஜன். 

”அது ட்ரீம்தான்னு மனசுக்குத் தெரியுது டாக்டர். ஆனா ஒரே கனவு திரும்ப திரும்ப வர்றதுதான் பதட்டமா இருக்கு” என்றான். 

அந்தக் கனவை மறுபடியும் அவன் விவரிக்கத் துவங்க, அவனுடைய முகமாற்றத்தை ரங்கராஜன் உற்றுக் கவனித்தார். 

”லிசன் அகில்...நீங்க ஐடி செக்டார்ல இருக்கீங்க...வொர்க் ப்ரெஷர்ஸ், ராத்திரி பகலா செய்யற வேலைகள்னு கொஞ்சம் டிப்ரஷன் இருக்கலாம் அவர் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த அகில்,

’அதெல்லாம் இல்லை டாக்டர் எந்த வேலையையும் நான் ரொம்பவே என்ஜாய் பண்ணி செய்யறவன். வீட்ல, என்னோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்லேன்னு எல்லாரும் என்னை புரிஞ்சிக்கிட்டவங்கதான் இருக்காங்க டாக்டர். சின்ன மன வருத்தம் கூட இந்த நிமிஷம் எனக்கு கிடையாது”. என்றான்

”தட்ஸ் குட். நீங்க சொல்றது சரியாவே இருக்கலாம் அகில். ஆனா மனசு ரொம்ப விசித்திரமானது. அது ஏன் டிஸ்டர்ப் ஆகுதுக்கு யாராலயும் ஈஸியா சொல்லிட முடியாது. தூக்க பிரச்சனைகள்தான் எல்லாத்துக்கும் அடிப்படை”





”எனக்கு தூக்கம் பொதுவாவே கம்மிதான் டாக்டர். ஆனா படுத்த அடுத்த செகண்டே குறட்டை விட்டு தூங்கிடுவேன்...இப்போதைக்கு இந்த கனவு மட்டும்தான் என் ப்ராப்ளம்..என்றவன் தொடர்ந்து “கனவுகளுக்கு சயின்டிபிக்கா பலன் எதாவது இருக்கா டாக்டர்? என்றான்.

”கனவுகளோட பலன் என்ன அப்படிங்கறதைத் தாண்டி ஏன் ஒரே கனவை அடிக்கடி காண உங்க உள் மனசு விரும்புதுங்கறது யோசிக்க வேண்டிய விஷயம். சம்திங் பிஷ்ஷி என்றபடி சில மாத்திரைகளின் பெயரை எழுதி அவனிடம் தந்தார்.

”இதை மூணு நாள் எடுத்துக்கங்க அகில். ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு நல்லா சாப்பிட்டு, நல்லா ரெஸ்ட் எடுங்க. முடிஞ்சா எங்கயாவது சின்ன டூர் அடிச்சுட்டு வாங்க. யூ நீட் கம்ப்ளீட் ரெஸ்ட். ”
அவருக்கு நன்றி சொல்லி கைகுலுக்கிவிட்டு அவனுடைய அனிதாவுக்கும், நெருங்கிய தோழி மீராவுக்கும் அவளின் காதலன் விபின் மற்றும் தன் அலுவலக நண்பன் செந்திலுக்கும் போன் செய்தான். அவன் டாக்டரை சந்தித்த விஷயத்தைச் சொல்லாமல் அவர் சொன்ன ட்ரிப் பத்தி மட்டும் சொல்லவே அவர்கள் சந்தோஷத்துடன் சம்மதித்தார்கள்.


அகில் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். 
தேனியிலிருந்து பிரிந்து போடிக்குச் செல்லும் நீளமான புத்தம் புது சாலையில் அவர்களின் கறுப்பு நிற சிஆர்வி கார் வழுக்கிக் கொண்டு பறந்தது. ஏஸியை அமர்த்திவிட்டு கண்ணாடியை இறக்கிவிட்டான். டாக்டர் சொன்னது சரிதான், இயற்கை எவ்வளவு புத்துணர்ச்சியை நமக்குள் செலுத்துகிறது என்று ஆச்சரியப்பட்டான். இரு பக்கமும் மரங்களும் தூரத்தில் தெரியும் மலையும், சில்லென்ற மென்காற்றுமாய் அகிலுக்கு வண்டியை ஓட்டுவதே சுகமாக இருந்தது.தன்னுடைய குளிரூட்டப்பட்ட கேபினில் தினம் தினம் கம்யூட்டர் திரையின் முன் இரவு பகல்களை கரைத்த சலிப்பெல்லாம் மெல்ல தீர்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. நண்பன் செந்திலின் சொந்த ஊர் போடிநாயக்கனூர். அவனை அங்கிருந்து பிக் அப் செய்தபின், தேக்கடிக்குப் போகத் திட்டமிட்டிருந்தார்கள். காலை எட்டு மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி இடைவிடாமல் பயணம் செய்து போடிக்கு வந்துவிட்டார்கள். 

”ஏய் அனிதா அந்த பெப்ஸியை எடு” சி.டி ப்ளேயரின் வால்யூமை அதிகமாக்கினான் அகில்.






அவன் அருகே இருந்த அனிதா குனிந்து கீழே இருந்த கவரிலிருந்து பெப்ஸியை எடுத்து குடுத்தபின், சீட்டில் வசதியாக சாய்ந்து கொண்டாள். ஒரே மூச்சில் அரை லிட்டர் பெப்சியைக் குடிக்க அகிலால் மட்டும் தான் முடியும்.

”ஒரு பியர் அடிச்சா நல்லா இருக்கும்” என்றவனை முறைத்தாள் அனிதா. 

விபின் விசிலில் ஏதோ பாடிக்கொண்டிருக்க, அவன் பக்கத்தில் இருந்த மீரா ஐபாட்டில் மூழ்கியிருந்தாள். 

’அதான் நான் பாட்டு போட்டிருக்கேன் இல்ல அதுக்கப்பறம் எதுக்கு காதுல அதை மாட்டிக்கிட்டு இருக்கே?” என்றான் அகில்.

மீராவுக்கு அவன் சொன்னது காதில் விழவில்லை. தொடர்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருக்கவே, அகில் ஹாரனை விட்டு விட்டு அடித்தான்.

சத்தம் உரைத்த மீரா காதிலிருந்து ஹெட் போனை உருவி.”என்ன ஆச்சு எதுக்கு இப்படி ஹார்னை அடிக்கறே?” என்று கேட்கவும் அனிதாவும் விபினும் சிரித்தார்கள். 

மீரா எதுவும் சொல்லாமல் மறுபடியும் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டாள். அனிதா தன் ஹேண்ட்பேகிலிருந்து சமீபத்தில் வெளிவந்திருந்த ”வெஸ்ட் இஸ் வெஸ்ட்” டிவிடியை ப்ளேயரில் ஓட விட்டாள். அந்த சத்தத்தில் கூட பின் சீட்டில் ராகவ் தூங்கிக் கொண்டிருந்தான். யு.எஸ் டைமிங்கில் நைட் ஷிப்டில் வேலை செய்யும் அவனுக்கு சாப்பாடு கூட வேண்டாம், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் உறக்கம் மட்டுமே போதும்.

ஜாலியாக கிளம்பியவர்கள் மிகவும் சோர்ந்து போனார்கள். செந்திலின் வீட்டைத் தேடி கண்டுபிடித்து கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தார்கள். செந்தில் அதிகாலையில் கிளம்பலாம் என்று சொல்லவே விபின் ஒத்துக் கொள்ளவில்லை. க்ளப் மகிந்திராவில் அன்று மதியத்திலிருந்து அவர்களுக்கு ரூம் புக்காகி இருந்தது. முந்தைய இரவு கிளம்ப முடியாத அளவிற்கு வேலை இருந்ததால் அரை நாள் வீண் ஆனாலும் பரவாயில்லை என்று காலையில் இருந்தார்கள். இரவும் இங்கேயே ஹால்ட் ஆகிவிட்டால் முழுதாக ஒரு நாள் வீணாகி விடும். சகல செளபாக்கியங்களும் நிறைந்த ஸ்டியோ ரூம் அது. அகிலை வற்புறுத்தி அழைத்துச் செல்பவன் அவன் தான்.

அகிலின் பிரச்சனை அவன் காரை யாருக்கும் ஓட்டக் குடுக்க மாட்டான். எவ்வளவு நெருங்கிய நண்பனாக இருந்தாலும் சரி. அவனுடைய கார்தான் அவனின் முதல் காதலி. அனிதா மூன்றாவது தான். நடுவில் இருக்கும் காதலி அவனது கணினி. அவன் சோர்வைப் பார்த்து செந்தில் ரெஸ்ட் எடுக்கச் சொன்னான். 

இங்கேர்ந்து ஒன் அவர்ல போயிடலாம் இல்லைடா. ரெஸ்ட் எடுத்தோம்னா ரொம்ப இருட்டிடும் அதுக்கப்பறம் மலைப் பாதைல ட்ரைவ் பண்றது ரொம்ப கஷ்டமாயிடும் ” என்றான் விபின்.

விபின் சொல்றதுதான் சரி என்று அனிதாவும் சொல்லவே செந்தில் அவர்களுடன் கிளம்பினான்.

மறுபடியும் சிரிப்பும் பாட்டும் கூத்துமாக அவர்களின் பயணம் தொடர்ந்தது. மீரா காதில் இன்னும் ஹெட்போன் இருந்தது.

அனிதா விபினிடம் “பேசாம நீ அந்த ஐபாடா இருந்திருக்கலாம். எப்ப பாரு மீரா அதைத்தான் ரொம்ப லைக் பண்றா என்றாள்.

விபின் சோகமாக தலையாட்டியபடி ஆமா என்றான். மீரா ஏதோ புரிந்தவளாக அவன் தலையில் கொட்டினாள்.

அதன் பின் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரவர் உலகத்தில் மூழ்கிவிட்டார்கள். 

ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அனிதாவும், மீராவும் உள் ரூமில் பெட்டில் படுத்துக் கொண்டார்கள். வெளியே சோபாவில் அகில் படுத்துக் கொள்ள, விபினும், செந்திலும் தரையில் பெட்ஷீட் விரித்துப் படுத்துக் கொண்டார்கள்.

அகில் அனைவரும் தூங்கிய பின் மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டான். தொண்டையில் கசந்தது. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது என்று மகிழ்ந்தான். கனவு வந்தது கூட நல்லதாகிப் போய்விட்டது. இப்படி நண்பர்களுடன் ஜாலி ட்ரிப் வாய்த்ததே என்று சந்தோஷப்பட்டான்.கண்ணின் இமைகள் கனக்கவே தூக்கம் அவனை ஆரத் தழுவியது. 

நள்ளிரவில் தண்ணீர் குடிக்க விபின் எழுந்த போது அகிலின் முகம் தீவிரமாக யோசனையில் இருப்பதைப் போல புருவங்கள் நெறுக்கி ஏதோ குழறலாகப் பேசிக் கொண்டிருந்தான். முகம் லேசாக வியர்த்திருக்க, அகில் அகில் என்று அவன் கன்னத்தைத் தட்டினான் விபின். அகில் அமைதியாகிவிட விபின் ஏசியைப் போட்டுவிட்டு அவனுக்கு போர்த்திவிட்டுப் படுத்தான்.






அடுத்த நாள். ப்ரேக்பாஸ்ட் டேபிளில் கூடினார்கள். அகிலைத் தவிர மற்றவர்கள் நன்றாக தூங்கியிருந்ததால் களைப்பு நீங்கி உற்சாகமாக இருந்தார்கள். அகிலுக்கு தூங்க்ய உணர்வே இல்லை. அந்தக் கனவு மிக மிக மங்கலாக நேற்றிரவு வந்திருந்தது. மீரா பிடித்த ஐட்டங்களை ஆர்டர் செய்யவே, சாப்பிட்டுக் கொண்டே அன்றைய ஷெட்யூலை ப்ளான் செய்தார்கள். 

அனிதா சொன்னாள், “நேரா போட்டிங் போறோம். அதுக்கப்பறம் மத்ததை பேசிக்கலாம். என்றாள்.

அகில் சட்டென்று, போட்டிங்கா நா வரலைப்பா ஐ நீட் ரெஸ்ட். உடம்பெல்லாம் வலிக்குது. நீங்க போயிட்டு வாங்க. என்றான். 

அனிதாவின் முகம் வாடிவிட்டது. ஏன் அகில். தேக்கடின்னாலே போட்டிங்தான்...ரொம்ப ஜாலியா இருக்கும். அதைவிட்டுட்டு கொட்டு கொட்டுன்னு எதுக்கு தனியா ரூம்ல இருக்கணும்னு நினைக்கறே’ என்றாள்.

அகில் எதுவும் சொல்லாமல் இருக்க, மீரா ஏளனமாக சிரித்தபடி, ‘ஏய் நாம க்ரூப்பா வந்திருக்கோம், இவன் மட்டும் தனியா ரெஸ்ட் எடுக்கப் போறானாமா...அதெல்லாம் முடியாது. நீ வந்தா தான் போட்டிங் இல்ல ட்ரிப்பை கேன்ஸல் பண்ணிட்டு ஊருக்குப் கிளம்பிடலாம்” என்றாள். வேறு வழியின்றி ஏதோ ஒரு கணத்தில் எடுத்த முடிவாக ‘ஓகே கய்ஸ் லெட்ஸ் கோ” என்றான்.

அவர்கள் உற்சாகமாக போட்டிங் கிளம்பினார்கள். இரண்டு அடுக்குகள் கொண்ட விசைப் படகு மெல்லக் கிளம்பி, பின் வேகம் எடுத்தது.





இவர்களையும் சேர்த்து படகில் கிட்டத்தட்ட எண்பது பயணிகள் ரொம்பி வழிந்தார்கள். நீரைக் கிழித்துக் கொண்டு சென்ற படகின் அடிப்பாகத்தைப் பார்த்த அகிலுக்கு அடிவயிற்றில் லேசாக பயம் துளிர்த்தது. விபின் மீரா காதில் ஏதே கிசுகிசுக்க அவள் ச்சீ என்று உதட்டைக் கடித்து வெகு நாள் கழித்து வெட்கப்பட்டாள். இதை ஓரக் கண்ணால் பார்த்த அனிதா, அகிலைப் பார்த்து புன்னகைக்க அவன் சலனமே இல்லாமல் இறுக்கமான முகத்துடன் நீர்ப்பரப்பையே வெறித்துக் கொண்டிருந்தான். உள்ளுக்குள் புரண்டு கொண்டிருந்த பயம் பந்தாகச் சுழன்று தொண்டை வரை வந்துவிட்டிருந்தது. ராகுல் செந்திலின் வாட்சை பரிசோதித்து ஏதோ கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். அகில் அனிதாவின் கையைப் பிடித்து இங்கேர்ந்து போயிடலாம் அனி...எனக்கு பயமா இருக்கு என்றான். அவனை ஆழமாகப் பார்த்த அனிதா ‘நீ என்ன குழந்தையா எதுக்கு அனாவசியமா பயப்படறே என்று அவன் கையை அழுத்தமாகப் பிடித்தாள். அகில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வானத்தைப் பார்த்தான்.

சூழல் மிக ரம்யமாக இருக்க, வேகமாகச் சென்று கொண்டிருந்த படகில் திடீரென்று சல சல என்று சத்தம். படகிலிருந்து பார்க்கும் போது காட்டில், புலிகள் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தது. அடிக்கடி காட்டு எருமைகள், மான்கள் என்று படகில் போகும் போது சில சமயம் மிருகங்கள் கண்ணுக்குத் தென்படுமாம். தூரத்தில் புலி தன் குட்டியுடன் செல்வதைப் பார்க்கையில் டிஸ்கவரி சேனலை நேரடியாக பார்ப்பது போல் இருந்தது. புலிகளைக் கண்ட ஆர்வம் மிகுதியில் சிலர் அதைத் தெளிவாகப் பார்க்க படகின் ஓரத்திற்கு விரைந்தார்கள். திடீரென்று அந்தப் பகுதியில் வெயிட் அதிகரிக்கவே, படகு நிலைதடுமாறியது. அகில் என்னவென்று தீர்மானிப்பதற்குள் படகு ஒரே நொடியில் கவிழ்ந்து அதில் பயணித்த மொத்த நபர்களும் நீருக்குள் மூழ்கினார்கள். சாவின் குரல் அத்தனை திசைகளிலிருந்தும் எழுந்தது. அய்யோ அம்மா காப்பாத்துங்க, ஹெல்ப் என்ற தீனமான அலறல்கள் கரையிலிருப்பர்வகளின் காதுகளுக்கு எட்டும் முன்னர் கிட்டத்தட்ட அனைவரும் மூழ்கினார்கள். நீச்சல் தெரிந்தவர்கள் பயத்தில் நீச்சல் வராமல், திக்கு முக்காடினார்கள். 





அகில் மனதில் அம்மாவின் கரங்கள் நினைவுக்கு வந்தது. அப்பாவின் சிரிப்பும் அதன் பின் அனிதாவின் அணைப்பும் ஞாபகத்திற்கு வந்து உயிரை வலிக்கச் செய்தது. தண்ணீருக்கு அடியில் அவன் கைகளும் கால்களும் பிடிப்புக்காகத் தவித்துக் கொண்டிருக்க, மரங்களும் புதர்களும் பாறைகளும் அடர்ந்த நீருக்கு அடியில் சிக்கி சுவாசம் இழந்து மிதப்பதைப் போல வரும் கனவின் பயத்தை இனி யாரிடம் போய்க் கேட்க முடியும் என்ற கடைசி யோசனையும் மங்க விழிகள் அசைய மறக்க அவனுயிர் பிரிந்தது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !