முதன் முதலில் இங்கிலாந்து ரயில்வே கம்பெனிகள் தான் சிக்னலுக்காக வண்ண விளக்குகளை உபயோகப்படுத்தத் துவங்கினர். 1830 ஆம் ஆண்டு முதல் புகைவண்டிகளை இயக்குபவர்களுக்கு எப்போது ரயிலை நிறுத்த/இயக்க வேண்டும் என்று சொல்வதற்காக இந்த முறை ரயில்வே நிர்வாகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்று முதல் இன்று வரை, அபாயத்தைக் குறிப்பதால் சிவப்பு நிறம் “நில்” என்று சொல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் “செல்” என்று சொல்ல பச்சை நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறமே உபயோகிக்கப்பட்டது. லண்டனில் 1914ஆம் ஆண்டு, சிவப்பு நிறத்திற்காக விளக்கின் மீது வைக்கப்பட்டிருந்த மூடி கழண்டு கீழே விழுந்துவிட, வெள்ளை நிற விளக்குதான் ஒளிர்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்ட புகைவண்டி ஓட்டுனர் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று மற்றொரு ரயிலின் மீது நேருக்குநேர் மோதிவிட்டார். அந்த விபத்திற்குப் பிறகுதான், “செல்” என்பதற்கு பச்சை நிறம் கொடுக்கப்பட்டது. அதோடு சேர்ந்து புதிதாக “கவனி” என்று அறிவிக்க மஞ்சள் நிற விளக்குகளும் வைக்கப்பட்டன. மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்படக்காரணம், மற்ற இரு வண்ணங்களிலிருந்தும் அதிக வித்தியாசமாக இருப்பதால் தான்.
1860களில் லண்டன் மாநகரில் குதிரையில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், சாலைகளைக் கடக்கும் பாதசாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகினர். எப்படி விபத்துகளைத் தடுக்கலாம் என்று அரசாங்கம் யோசித்துக்கொண்டிருந்தபோது , John Peake Knight என்ற ரயில்வே எஞ்சினியர்(மற்றும் மேனேஜர்) ரயில்வேயில் பயன்படுத்தும் அதே வண்ண விளக்குகள் முறையை ஏன் சாலைகளிலும் உபயோகிக்கக்கூடாது என்று ஐடியா கொடுத்தார். அவரின் ஐடியா ஏற்றுக்கொள்ளப்பட்டு 1868ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள், முதல் ட்ராஃபிக் சிக்னல் லண்டன் பாராளுமன்றத்துக்கு அருகில் நிறுவப்பட்டது.
No comments:
Post a Comment