இலையுதிர் காலத்தில் ஏரிக்கரை மரங்களின் நிறம் மாறுகின்றது. இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறுகின்றன. சில்லென்ற குளிரில் சில புற்களும் உலருகின்றன. ஏரிக்கு அருகே பல குட்டைகளும், வாய்க்கால்களும் உள்ளன. இவற்றில் மிதக்கும் அல்லிப்பூக்களும், அயல் நீர்த் தாவரங்களும் பூத்து ஓய்கின்றன.
அல்லிக் கொடிகள் குட்டை மேல் நீர் கடந்து தெரிகின்றன. வட்ட இலைகள் வாடுகின்றன. இது இலையுதிர் கால இறுதியில் குட்டைகளின் தன்மை. நீரில் வளரும் தாவரங்கள் கோடை வெய்யிலில் பெருகும். பின்னர் அடுத்த வருடத்திற்கு உதவும் உக்கல் மண்ணாக மாறும். இதனால் குட்டை நீர் குறைந்து காணப்படும். நீர் வற்றி நிலம் தெரியும்.
இந்தக் குட்டை ஒன்றிலே ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பெயர் ஆனந்தன். குட்டை அருகே ஆமை களிமண் கிண்டி தன் வீட்டை அமைக்கும். வரவிருக்கும் பனிக் காலத்தில் பல விலங்குகள் நீண்ட தூக்கம் கொள்ளும். ஆனந்தனும் சேற்றினுள் புதைந்து நீண்ட தூக்கத்திற்குத் தயார் ஆகியது. எனினும் அவன் வீட்டினுள் நீர் நுழைந்ததால் தூக்கம் கலைந்தது. இது ஆமை வீட்டிற்கு அசெளகரியத்தை உண்டு பண்ணியது. இதனால் ஆமை சலிப்பு அடைந்தது. தனது அசெளகரியத்திற்கான காரணம் தெரிந்து கொள்ள வீட்டின் வெளியே வந்தது.
ஆமை சுற்றுப் புறத்தை நோட்டம் இட்டது. வழக்கமாக நீர் குறைந்த குட்டை திடீர் என ஏரியாக மாறியுள்ளது. இந்த ஏரி கரை கடந்து நீர் கொண்டுள்ளதையும் அவதானித்தது. இது எப்படி ஏற்பட்டது? என்று திகைத்தது. மேலும் நெடிய புற்களிற்கு ஊடாக புதிய நிலப்பரப்பு ஒன்றையும் அவதானித்தது. ஏரியின் நடுவே ஒரு சிறு தீவும் காணப்பட்டது.
இந்தத் தீவு சற்று அபூர்வமாக இருந்தது. அது மண், புல் தரை இல்லாமல் மரக்கிளைகள் இலைகளால் மாத்திரமே கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இது ஆனந்தனிற்கு ஆர்வத்தைத் தந்தது. இதை விவரமாக அறிய அங்கு நீந்திச் சென்றது. ஏரி நடுவில் உள்ள சிறு தீவின் மேல் ஏறியது.
அப்போது நீரில் சலசலப்புச் சத்தம் கேட்டது. நீர்க்குமிழிகள் மத்தியில் வந்தது சப்பட்டைத் துடுப்பு வால் பீவர். தனது வாலை இலகுவாக அசைத்துத் தன் உடலைப் படகு போல் நீரில் செலுத்தியது. பீவர் மிதந்து தீவை நோக்கி வந்தது. தீவில் தானும் ஏறி ஆமையை அணுகியது. நான் பகீரதன் எனும் பீவர், நீ யார்? என்று கேட்டது. அதற்கு ஆமை நான் ஆனந்தன் என்று பதில் அளித்தது.
அது சரி, நீ இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டது பீவர். அதற்கு ஆமை கூறியது நான் தூங்க எனது வீட்டில் தயார் ஆனேன். ஆனால் நீர் நுழைந்து எனது நித்திரையைக் கலைத்து விட்டது. என் வீடு எனக்கு செளகரியமாக இல்லை. இது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே இது எப்படி நிகழ்ந்தது என்று அறிய வந்தேன் என்றது.
மேலும் ஆனந்தன் ஆமை தொடர்ந்து கூறியது. நான் உறங்கச் சென்ற போது இருந்த குட்டை பெருகியுள்ளது. இப்போது இதுவும் ஏரி ஆகியுள்ளது. இதை உருவாக்கிய ஏரிக்காரன் நீதானா? என்று பீவரைக் கேட்டது. ஆமாம் அது நானே என்றது பகீரதன் பீவர்.
மேலும் தொடர்ந்து பேசியது பீவர். எனது வீட்டைச் செளகரியமாக அமைத்துக் கொள்ள மரக்கிளைகள் தேவைப்பட்டது. மரத்தை வெட்டிக் கிளைகள் ஒடித்து இழுத்து வர ஆழமான நீர் தேவைப்பட்டது, எனது வீட்டைப் பாதுகாக்க ஏரி உண்டு பண்ணினேன். எனவே அருகே ஓடும் அருவியைக் களிமண் மடை கட்டித் திருப்பினேன்.
இப்போது நீ நிற்பது என் வீட்டுக் கூரையில் என்றது பகீரதன் பீவர், அது எப்படி? நுழைவாயில் காணவில்லையே என்று வினவியது ஆனந்தன் ஆமை. என் வீட்டு வாயில் தண்ணீரிற்கு உள்ளே தான் என்றது பீவர், ஆனந்தன் ஆமையும் நீரின் உள்ளே குதித்தது. பீவர் வீட்டு நுழைவாயிலை நீரின் உள்ளே கண்டது. மீண்டும் மேலே ஏறி வந்தது.
ஆனந்தன் ஆமை சொல்லியது “உன் வீட்டு வாசல் பார்த்தேன். அது வசதியாகவே உள்ளது. அப்போ நீ செளகரியமாக இருந்து கொள்ள, என் வீடு அசெளகரியம் அடைய வேண்டுமா?” என்று கேட்டது ஆமை.
அதற்கு பகீரதன் கூறியது அது ஒன்றும் எனக்குத் தெரியாது மடை கட்ட மண் தேவையாக இருந்தது. என் வீட்டைப் பாதுகாக்க நீர் தேவையாக இருந்தது அதை நான் செய்து கொண்டேன் என்றது.
இது ஆனந்தனுக்கு எரிச்சலைத் தந்தது. இந்தக் குட்டையில் பல காலமாக நான் வாழுகிறேன். இவன் யார் என்னை வந்து குடி எழுப்புவது என்று யோசித்தது ஆமை. அதன் பின்னர் “பகீரதன் பீவரே நீ சொல்வது சரியாகவே இல்லை. உன் வீடு செளகரியமாக இருக்க வேண்டும் அப்படித்தான் சொல்கிறாயா என்று பீவரைக் கேட்டது ஆமை.
பகீரதன் பீவரும் “அப்படித்தான் இருக்கும், இப்போது என் வீட்டுக் கூரையில் இருந்து காலி பண்ணு” என்றது. ஆமைக்கு ஆத்திரம் வந்தது. அதே சமயம் தானாக ஏரியின் மறுபுறம் நீந்திச் செல்ல முடியவில்லை. சென்று புதிய களிமண் வீடு அமைத்துக் கொள்ளவும் அவகாசம் போதாது. இதை நன்கு உணர்ந்தது ஆனந்தன்ள. அதே சமயம் பீவருக்கும் ஒரு வகையில் பாடம் படிப்பிக்க விரும்பியது.
“சரி பகீரதன் பீவரே உனது வீட்டுக் கூரையை விட்டு நான் வெளியேற வேண்டுமானால், நீ ஒரு போட்டிக்கு வர வேண்டும் என்றது ஆனந்தன் ஆமை. இந்தக் குட்டையில் யார் செளகரியமான வீட்டை அமைத்துக் கொள்ளலாம் என்பதை நாம் இருவரும் முடிவு செய்வோம். இந்த இடத்தில் இருந்து அடுத்த ஏரிக்கரை வரை போட்டி போட்டு நீந்திச் செல்ல வேண்டும், போட்டி முடிவில் யார் வெல்கிறார்களோ அவரே இவ்விடம் வீடு வைக்கலாம், தோற்றவர் விலகிப் போக வேண்டும் என்றது.
துடுப்பு வால் பீவரும் எண்ணியது. இந்தப் போட்டியில் வெல்லுவது தான் தானே என்று அகங்காரம் கொண்டது. அதுக்கென்ன போட்டி போடலாமே என்றது.
ஆமையும் பீவரும் நீரின் உள்ளே குதித்து நீந்தத் தொடங்கின. பீவர் முதற்கட்டம் முந்தியது. ஆனந்தன் ஆமை தனது தந்திரத்தைப் பாவித்தது. லபக் என்று பீவரின் வாலைக் தனது அலகால் கவ்வியது.
பகீரதன் பீவரும் ஏய் ஆமையே இது சரியான போட்டியாகத் தெரியவில்லை என்று முறையிட்டது. அப்போது ஆனந்தன் ஆமை சொன்னது உன் வாலை நான் விட வேண்டுமானால் நீ ஒன்று செய்ய வேண்டும். எனக்கும் புதிய ஏரிக்கரை களிமண் இடத்தைத் தேடித் தர வேண்டும் என்றது. அப்போது தான் நானும் பனிகாலத் துயிலுக்கு செளகரியமாகுவேன் என்றது.
அதன் போது தான் பீவர் தான் தனது பொறுப்பற்ற செயலை உணர்ந்த்து.
தான் செளகரிய வீட்டை உண்டு பண்ண ஆமை வீட்டில் அசெளகரியம் உண்டு பண்ணியதை உணர்ந்தது. மேலும் இதற்குப் பரிகாரம் காணவிட்டால் ஆமை அலகு தன் வாலில் இருந்து அகலப் போவதும் இல்லை என்று தெரிந்து கொண்டது..
சரி ஆமையே உனக்கு ஏரியின் மற்றொரு பகுதியில் செளகரியமான களிமண் இடம் பார்த்துத் தருகிறேன் என்றதும். அடுத்து சிறு தூரம் ஆமையை இழுத்துச் சென்று இன்னும் ஒரு களிமண் பகுதிக்கு கவ்விய ஆமையை தன் துடுப்பு வால் சுழட்டி விட்டெறிந்தது.
ஆனந்தன் ஆமையும் நல்ல களிமண் பிரதேசத்தில் வந்து இலேசாகப் புதைந்து விழுந்தது. அடுத்து நீந்திய போட்டி களைப்பால் உடன் களிமண்ணில் உறங்கியது. பிறகு தனக்குச் செளகரியமான புதிய வீட்டை உருவாக்கிக் கொண்டது. பகிரதன் பீவரும், ஆனந்தன் ஆமையும் தமது பனிக் கால நீண்ட துயிலைத் தம் தமக்குச் செளகரியமான வீடுகளில் ஆரம்பித்தன.
No comments:
Post a Comment