வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. இதோ அந்த கதை. “விஜய்ப்பூர்” என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் எல்லோருக்கும் அவர்களுக்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் அனைவருக்கும் உதவி வந்தான். இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர்கள் அவனுக்கு திருமணம் செய்தால் இக்குணம் மாறும் எனக்கருதி, சிறந்த அறிவாற்றல் மிக்க “ரமா” என்கிற பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து சில காலம் கழித்து தன் கணவன் ரகுவிடம் அவன் இதற்கு முன்பு உதவி செய்த அனைவருக்கும் அதனால் பயன் கிட்டியதா என்பதை அறிந்து வருமாறு கூறினாள். இதை கேட்டு அவர்கள் அனைவரிடமும் விசாரித்த ரகு அவர்களுக்கு தான் செய்த உதவியினால் எவ்வித பயனும் இல்லை என்பதை அறிந்து வந்து ரமாவிடம் கூறினான். அப்போது ரமா, பிறருக்கு நேர்மையாக உதவுவதற்கு மருத்துவத்தொழிலைக் கற்று, அதன் மூலம் உதவுமாறு கூறினாள்.
அதைக் கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்று ரகு கூறிய போது “சந்திரநகர்” என்ற ஊரில் வைத்தியநாதன் என்ற மருத்துவரிடம் ஒரு வருடத்திலேயே மருத்துவத்தொழிலை யாரும் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறி, ரகுவை அவரிடம் சென்று மருத்துவம் பயிலக்கூறினாள் ரமா. ரகுவும் வைத்தியநாதனிடம் ஒரு வருடம் மாணவனாக இருந்து வைத்தியமுறைகளை கற்று தேர்ந்தான். அப்போது வைத்தியநாதன் ரகு தனது வைத்திய தொழிலை நேர்மையாக செய்யும் பட்சத்தில் தன்னிடமுள்ள அனைத்து வைத்திய குறிப்பு சுவடிகளையும் தருவதாக உறுதியளித்தார்.
பின்பு ஊருக்கு திரும்பிய அவன் தினமும் தனது வீட்டிலேயே மக்கள் அனைவருக்கும் வைத்தியம் பார்க்கத்தொடங்கினான். அப்படி ஒரு முறை ஏழை ஒருவருக்கு ரகு வைத்தியம் பார்க்கும் போது செல்வந்தர் ஒருவர் குறுக்கிட்டு தனக்கு உடனடியாக வைத்தியம் பார்க்குமாறும், அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாக கூறினான். ஆனால் ரகு மறுத்துவிட்டான். மற்றொருநாள் அந்த நாட்டு மன்னரின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் அரண்மனைக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் படி அரசாங்க வீரர்கள் ரகுவை அழைத்தனர். தான் அரண்மனைக்கு சென்று வைத்தியம் பார்க்கும் நேரத்தில் இங்கிருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதால் மன்னரின் தாயாரை தனது வீட்டிற்கு அழைத்துவந்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி விட்டான்.
இதையெல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்த துறவி ஒருவர் கவனித்து ரகுவை பாராட்டி ஆசிர்வதித்தார். அதோடு சந்திராநகர் சென்று, அவரது குருவிடம் மீதமிருக்கும் மருத்துவ ஓலைகளை வாங்கிவந்து அதன் மூலம் மேலும் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ரகுவிடம் அடிக்கடி கூறிவந்தார். ரகுவும் ஒவ்வொருமுறையும் அங்கு செல்ல காலம் தாழ்த்தி வந்தான். ரகுவை அந்த சுவடிகளை வாங்கி வர ஒருநாள் அவன் மனைவி ரமாவே தனக்கு உடல் நலம் சரியில்லாது போலும், அவள் கணவணான ரகு தரும் எம்மருந்துகளை உட்கொண்டாலும் அவள் குணமாகாத மாதிரி நடித்தாள். இதனால் வேறு வழியின்றி ரகு தனது குரு வைத்தியநாதனிடம் சென்று ஓலைகளை வாங்கிவந்து, மருந்து தயாரித்து அதை ரமாவிற்கு கொடுத்தான். அவளும் அதை உண்டு குணமடைந்தது போல் நடித்தாள்.
இப்போது வேதாளம் “விக்ரமாதித்தியா ரகுவின் சுயநலத்தைப் பார். பிறருக்கு சிகிச்சை அளிக்க தன் குருவிடம் சுவடிகளை வாங்கச் செல்லாதவன், தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் ஓலைகளைப் பெற்றது சரியா? மேலும் நேர்மையாக மருத்துவ தொழிலை நடத்தினால் ஓலைச்சுவடிகளை தருவதாக கூறிய வைத்தியநாதன் எப்படி ரகுவிற்கு உடனே சுவடிகளைக் கொடுத்தார்? “எனக் கேட்டது “ரகு சந்திராநகரில் இருக்கும் தன் குருவிடம் செல்லும் காலத்தில், தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு தான் சிகிச்சை அளிப்பதில் தடங்கல் ஏற்படும் என்றே அவரிடம் செல்ல காலம் தாழ்த்திவந்தான். பாதிக்கப்பட்டது மனைவி எனின் எந்த கணவனும் அவளுக்காக எத்தகைய காரியத்தையும் செய்வார்கள். இதில் அவனது சுயநலம் ஏதும் இல்லை. மேலும் ரகுவின் நேர்மையை பிறர் மூலம் அறிந்த அவனது குருவும் அவன் கேட்டவுடன், அவனுக்கு ஓலைச்சுவடிகளை கொடுத்து விட்டார்”. என்ற விக்ரமாதித்தியனின் விடையைக் கேட்டு வேதாளம் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
No comments:
Post a Comment