குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நோன்பு என்பதன் பொருள்
- நோக்கங்கள்
- காலம்
- சிறப்புக்கள்
- செய்யத் தகாத செயல்கள்
- முடிவுரை
முன்னுரை
இஸ்லாமிய மாதத்தில் நோன்பு என்பது ஒரு இன்றியமையாததாகும். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக நோன்பு அல்லது ரமழான் மாதம் காணப்படுகின்றது.
முகம்மது நபிக்கு முதன் முதலாக அல்குர்ஆன் வெளிப்படுத்திய மாதமாக ரமழான் மாதம் காணப்படுகின்றது. ஆதலால் இஸ்லாமியர்களுக்கு ரமழான் மாதம் ஓர் ஆன்மீக ரீதீயில் ஒரு மகிமைமிக்க மாதமாக உணரப்படுகின்றது.
“விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் உடையவராக மாற வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது”
மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனம் நோன்பு இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்று என்பதை தெளிவுபடுத்துகின்றது.
நோன்பு என்பதன் பொருள்
நோன்பு என்பது அரபு மொழியில் ஸவ்மு என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகின்றது. இதன் பொருள் தடுத்துக் கொள்ளுதல் என்பதாகும்.
அதாவது சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து சூரியன் மறையும் நேரம் வரையில் எதையும் உண்ணாமலும், குடிக்காமலும், தீய செயல்களில் ஈடுபடாமலும் உடல் உள ரீதியில் தம்மை கட்டுப்படுத்தி 30 நாட்களும் நோக்கும் விரதமே நோன்பு என பொருள் கொள்ளப்படுகின்றது.
ரமழான் என்ற வார்த்தையானது அரேபிய வார்த்தையான ரமிதா அல்லது அர் ரமத் என கூறப்படுகின்றது. தமிழில் சுடும் வெப்பம் அல்லது உலர்ந்த தன்மை என பொருள் கொள்ளப்படுகின்றது.
நோக்கங்கள்
நோன்பின் நோக்கங்களானது பலவாறாக காணப்படுகின்றது. “அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கின்றேன்” என்ற எண்ணத்தை மனதில் உறுதிப்படுத்தல், ஸஹர் முடிவிலிருந்து நோன்பு திறக்கும் நேரம் வரை நோன்பை தடுக்கும் எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும்.
நோன்பின் பிரதான நோக்கம் இதயத்தில் இறையச்சத்தை பலப்படுத்துதல் என்ற போதிலும் அதன்மூலம் உடல் உள ஆரோக்கியம் பெறல், உள்ளம் பண்படுத்தப்படல், பொறுமை, கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளல், சிக்கனம் பேணல் போன்ற நற்பண்புகளை வளர்ப்பதே பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.
காலம்
அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமழான் மாதம் காணப்படுகின்றது. இஸ்லாமிய வருடத்தில் உள்ள 12 மாதங்களில் ரமழான் ஒன்பதாவது மாதம் ஆகும்.
இம் மாதத்திலேயே வருடந்தோறும் நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது. 29 அல்லது 30 நாட்கள் நோன்பு அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை ஈகை திருநாள் ஈதுல் பிதிர் எனவும் அழைக்கப்படுகின்றது.
சிறப்புக்கள்
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு நோற்றல் ஆகும். இக்காலப் பகுதியிலேயே விண்ணில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு நரக வாசல்கள் மூடப்படும் காலப்பகுதியாகும்.
ஆகவே இக்காலப்பகுதியில் நோன்பு இருப்பதால் நேரடியாக சொர்க்கத்தை அடையலாம் என்பது இதன் சிறப்பாகும்.
நோன்பில் அல்லாஹ்வின் விசேடமான அருள் பாவமன்னிப்பு மற்றும் நரக விடுதலை என்பன கிடைக்கின்றன.
பல மடங்கு கூலிகளையும் இம்மாதத்தில் அல்லாஹ் வழங்குவது சிறப்பிற்குரியதாகும். தீய சிந்தனை, கெட்ட எண்ணங்களை தவிர்க்க தூண்டுகின்றது. ஆசைகளைக் கட்டுப்படுத்தி வாழ்வதற்கான மனப்பக்குவம் ஏற்படுகின்றது.
செய்யத் தகாத செயல்கள்
நோன்பு காலத்தில் செய்யத் தகாத செயல்கள் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவை நாவுடன், செயலுடன் சம்பந்தப்பட்டவையாகும்.
நாவுடன் சம்பந்தப்பட்டவையாக பொய் பேசுதல், புறம் கூறல், கோள் சொல்லல், வீண்பேச்சு பேசுதல், கேலி செய்தல் என்பனவாகும்.
செயலுடன் சம்பந்தப்பட்ட தீய செயல்களாக பிறருக்கு துன்பம் விளைவித்தல், பிறர் பொருளை அபகரித்தல், சண்டை பிடித்தல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற தீய செயல்களை செய்யக் கூடாது என அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது.
முடிவுரை
இஸ்லாமிய மதத்தில் ரமழான் மாதம் அதி உன்னத மிகமுக்கிய காலமாக கொள்ளப்பட்டு இம் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இஸ்லாமியர்கள் தமது தீய சிந்தனைகளில் இருந்து விலகி சொர்க்கத்தை அடைவதற்கு எத்தணிக்கும் ஒரு காலப்பகுதியாகும்.
இக்காலப்பகுதியில் தீய சிந்தனைகளில் இருந்து விலகி நல்ல எண்ணங்களுடனும் பிறருக்கு உதவி செய்தும் ரமழான் காலப்பகுதியில் 30 நாட்கள் முறைப்படி நோன்பு நோற்று பிறவிப்பயனை சொர்க்கத்தில் சென்றடைய நாம் நோன்பு நோற்றல் சிறப்புக்குரியதாகும்.
1 comment:
Nice
Post a Comment