Thursday, March 25, 2021

வெள்ளம் பஞ்சம் வேண்டாம்!

 ஒரு அழகிய ஊர் இருந்தது. அந்த ஊரில் உழவர்கள் பலர் வசித்து வந்தனர். மழை பொய்த்து போனாலும் வெயில் வாட்டி வதைத்தாலும் வெள்ளம் புகுந்தாலும் வருடம் தவறாமல் கடவுளுக்குப் படையல் வைப்பார்கள். அந்த வருடமும் படையலுக்கான ஏற்பாடுங்கள் விமர்சையாக நடந்தது. 


அவர்களின் பக்தியைக் கண்டு மனம் இறங்கிய இறைவன், அந்த ஊர் மக்களின் முன் தோன்றினார்.

‘மக்களே, உங்கள் அன்பை கண்டு நான் ஆனந்தம் அடைந்தேன். இனி நீங்கள் என்னை எப்பொழுது அழைத்தாலும் உங்கள் முன்பு தோன்றுவேன். நீங்கள் ஒன்றாகக் கூடி கேட்கும் வரத்தை அளிப்பேன்’ என்றுக் கூறி மறைந்தார்.

மக்கள் அனைவரும் மகிழிச்சியில் திளைத்தனர். அடுத்த அறுவடைக்காகத் தயாராகினர். நிலத்தை உழுது விதைகளைத் தூவி பயிர் வளரக் காத்திருந்தனர். சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பலத்த மழை. வெள்ளம் வரும் அளவிற்கு வானம் மழையை பொழிந்தது.

அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடினர், கடவுளை அழைத்தனர். இறைவனும் தான் கூறியப் படியே அவர்கள் முன் தோன்றினார், ‘உங்கள் கோரிக்கை என்ன?’ எனக் கேட்டார். மக்கள் ‘இறைவா! எங்கள் ஊரையும் பயிர்களையும் என்றுமே வெள்ளம் அடிக்காமல் காத்து அருளுங்கள்!’ என ஒன்றாகக் கேட்டனர். கடவுளும் அவர்கள் கேட்டப் படி நடக்கட்டும் என்று வரம் அளித்தார்.  

மழை காலம் முடிந்தது வெயில் தொடங்கியது. நீரின்றி சில ஊர்களில் பயிர்கள் கருகி போகும் செய்தியைக் கேட்டு அறிந்தனர் அந்த ஊர் மக்கள். மீண்டும் ஒன்றுக் கூடி இறைவனை வேண்டினர். அவரும் அவர்கள் முன் தோன்ற, ‘நீர் பற்றாக்குறையால் சில ஊர்களில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அப்படியொரு நிலை எங்கள் ஊருக்கு வரக் கூடாது இறைவா!’ என வேண்டினர் மக்கள். கடவுள், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று புன்னகையோடுக் கூறி மறைந்தார்.

ஆரோக்கியமில்லா பயிர்கள்


அறுவடைக்கான நேரம் வந்தது. உழவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எப்பொழுதும் அறுவடைக்கு பின் வலிமையாகச் செழுமையாக ஆரோக்கியமாகக் காணப்படும் பயிர்கள், இந்த வருடம் வலிமையின்றி காணப்பட்டது. உழவர்களுக்கு ஒரே வருத்தம். 

அனைவரும் இறைவனிடம் சென்று முறையிட்டனர். ‘இறைவா! வெள்ளத்தில் இருந்தும் பஞ்சத்தில் இருந்தும் காத்து நன்றாக வளர்த்த இந்தப் பயிர்கள் ஆரோக்கியமின்றி இருக்க காரணம் என்ன? எங்காளால் இயன்றதை நாங்கள் செய்தோமே’ எனக் குழப்பத்துடன் சோர்வாகக் கூறினர்.

இறைவன், ’மனிதர்களே! இந்த உலகில் ஏற்படும் அனைத்து நிகழ்விற்கும் ஒரு காரணம் உள்ளது. இந்தப் பயிர்களை வெள்ளம் அடிக்காமலும் பஞ்சத்தில் வாடாமலும் இருக்கும் படி என்னிடம் வேண்டினீர்கள்.

உண்மை என்னவென்றால், பஞ்சம் வரும் பொழுதுப் பயிர்கள் நீரை தேடி இன்னும் பூமியின் ஆழத்திற்கு வேர்களைச் செலுத்தும். இதன் மூலம் அதன் வேர்கள் ஆழமாகப் பூமியில் பதியும். வெள்ளம் அடிக்கும்பொழுது, அதை எதிர்த்துப் பயிர்கள் போராடும் அதன் வேர்கள் இன்னும் வலிமையாகும். இவ்வாறு பஞ்சத்தையும் வெள்ளத்தையும் போராடி வெல்லும் பயிர்கள் தான் ஆரோக்கியமாக உருவாகும்.

ஆனால் நீங்கள் அதை வலிமையாக்கும் வெள்ளமும் பஞ்சமும் வேண்டாமெனத் தவிர்த்துவிட்டீர்கள். அதுவே பயிர்களின் இந்த நிலைக்குக் காரணம்’ எனக் கூறினார்.

கஷ்டம் இல்லாத வாழ்க்கை சபிக்கப் பட்ட வாழ்க்கை


மக்கள் தம் தவறை உணர்ந்தனர். நம் வாழ்கையும் இதைப் போன்றது தான். வாழ்வின் கஷ்டங்களைக் கண்டு நாம் வருந்திப் பயனில்லை. அவை யாவும் நம்மை இன்னும் வலிமையான மனிதன் ஆக்க இறைவன் ஏற்படுத்தும் நிகழ்வுகள். இதை உணர்ந்த ஞானிகள் கஷ்டத்திலும் வருந்தாமல் புன்னகை செய்கின்றனர்.

ஒரு ஞானி, ‘கஷ்டம் இல்லாத வாழ்க்கை சபிக்கப் பட்ட வாழ்க்கை’ என்கிறார். வாழ்வில் எந்த அளவிற்கு நாம் கஷ்டங்களை எதிர் கொள்கிறோமோ அந்த அளவிற்கு பக்குவமும் அதைவிட அதிகாமான இன்பத்தையும் நாம் அடைவது உறுதி.

திரைப்படங்களில் காட்டும் மருத்துவமனை காட்சிகளில் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார். மருத்துவர்களும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்வர்.

அப்பொழுது அவர்கள் அருகே இருக்கும் இசிஜி இயந்திரத்தை (ECG Machine) கண்டிருப்போம். அது நம் இதய துடிப்பை காட்டும் கருவி. மேலும் கீழும் நாடி துடிப்பு சென்று வருவதை படமாகக் காட்டும்.

உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நபரை அதைப் பார்த்தே காப்பாற்ற செயல்படுவர் மருத்துவர்கள். அது மேலும் கீழும் செல்லாமல் ஒரே கோடாக நின்று விட்டால். ‘மன்னித்து விடுங்கள். எங்களால் முடிந்ததை முயற்சி செய்தோம், அவர் இறந்து விட்டார்’ எனக் கூறுவர் மருத்துவர்.

நம் வாழ்கையும் அப்போ அப்போ மேலும் கீழும் சென்று வருவது தான் நம் வாழ்கிறோம் என்பதற்கு அர்த்தம். 

எப்பொழுதும் இன்பம் மட்டுமே வேண்டும் என்று நினைத்தால், இறந்ததை ஒரே கோட்டில் இசிஜி இயந்திரம் இறந்தவரைக் குறிப்பது போல வாழ்க்கைக்கும் அர்த்தம் இல்லாமல் போகும்.

இருக்கும் வரை அன்பாக வாழ்வின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக ஏற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !