Thursday, March 25, 2021

விதியை மதியால் வெல்லலாம்

 ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு மூட நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார். காலையில் அவர் யார் முகத்தைப் பார்த்து விழிக்கிறாரோ அவரின் அதிர்ஷ்டத்தை பொறுத்தே அந்த நாள் அமையும் எனக் கண் மூடித் தனமாக நம்பினார். அந்த நாள் இனிய நாளாக அமையவில்லை என்றால் காலையில் யார் முகத்தில் விழித்தாரோ அவரை நாடு கடத்தி விடுவார். 


எப்பொழுதும் தான் அதிர்ஷ்டம் கொண்டவர் எனத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து விழிப்பதே வழக்கம். எனினும் சில பொழுதுகளில் எவரேனும் மாட்டிக்கொள்வதுண்டு.


சின்னத் தீவு


அந்த நாட்டிலிருந்து கடல் தாண்டி ஒரு சின்னத் தீவு இருக்கும். அந்தத் தீவுக்குத் தான் அதிர்ஷ்டம் இல்லாதவர்களை நாடு கடத்துவது வழக்கம். அங்குப் பல மிருகங்கள் சுற்றி திரியும். அவை நாடு கடத்த பட்ட மனிதர்களை உணவாகத் திண்று விடும். 

எந்தத் தவறும் செய்யாமல் ராஜாவின் மூட நம்பிக்கையால் இறந்தவர்கள் பலர். இப்படியே நாட்களோட அந்த நாட்டிற்கு வேலை தேடி ஒரு இளைஞன் வந்தான். ராஜாவைப் பார்க்க வேண்டுமென ஆவலோடு அரண்மனை வாயிலில் இரவு முதல் காத்திருந்தான். 

காலை விடிந்தது காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 'காவலளிகளே! காவலாளிகளே! என் கண்ணாடி எங்கே?' என்று ராஜாவின் குரல் கேட்டது. காவலாளிகள் பணியில் ஈடுப்பட்டிருக்க ராஜாவுக்கு உதவி செய்து நற்பெயருடன் வேலையை வாங்கி விடுவோம் என்று மனதினுள் யோசித்தான். ஊருக்குப் புதிது என்பதால் அவனுக்கு ராஜாவின் மூடநம்பிக்கைபற்றி ஒன்றும் தெரியாது.

ராஜா ' கண்ணாடி எங்கே? ' என்று கண்ணை மூடிக்கொண்டே குரல் கொடுக்க உள்ளே சென்றான் இளைஞன். கண்ணாடியைத் தேடி 'இந்தக் கண்ணாடியா பாருங்கள் ராஜா?' என மரியாதையோடு கண்ணாடியைக் கையில் கொடுக்க முற்பட்டான். 

குரல் புதுமையாக இருக்க 'யார் அது?' என்று கூறியபடி கண்ணைத் திறந்தார் ராஜா. எதிரில் இளைஞன் இருப்பதை கண்டு கோவத்தோடு,' யார் நீ? இங்கு என்ன செய்கிறாய்? ' எனக் கேட்டார்.

இளைஞன்,'ராஜா, நான் வேலை தேடி தங்களை காண வந்துள்ளேன். உங்கள் குரல் கேட்டவுடன் உதவிட அறையினுள்ளே வந்தேன்' என ஒன்றும் அரியாதவனாய் விழித்தான். 'நீ என் முன் தோன்றியதால் உன் முகத்தைக் கண்டு கண்விழித்து விட்டேன். இன்றைய நாள் சிறப்பாக அமையாவிடில் உனக்குத் தண்டனை நிச்சயம்' எனக் கோவத்தோடு வெளியே சென்றார்.

ராஜாவின் மூட நம்பிக்கை பற்றியும் தண்டனையாகத் தீவிற்கு நாடு கடத்தப்படுவதை பற்றியும் காவலாளிகள் மூலம் கேட்டு அறிந்தான்.


சிக்கிக் கொண்ட இளைஞன்


இன்றைய நாள் ராஜாவிற்கு சிறப்பாக அமைய வேண்டும் எனக் கடவுளை வேண்டிக் கொண்டான். ஆனால், அவனது நேரம் சரியாக இல்லை. வெளியே போன ராஜாவிற்கு கல் இடித்துக் காலில் ரத்தம் வந்துவிட்டது. முடிந்தது அவன் கதை என்று அனைவரும் அச்சுறுத்த, செய்வது அறியாது திகைத்து நின்றான். 

பயந்தது போலவே அனைத்தும் நடக்க தொடங்கியது. அவனைக் குற்றவாளியென அறிவித்து நாடு கடத்த ஏற்பாடுங்கள் தயார் ஆகியது.

ஆனால் அவன் தன் மீது கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை. தைரியத்தை வர வைத்தக்கொண்டு, ' ராஜா, உங்கள் கொள்கையை அறியாமல் உங்கள் முன்னே வந்துவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள். நான் பிழைப்பு தேடி இங்கு வந்தவன். என் ஆசையை நிறைவேற்றாமல் ஊருக்கு வந்த விருந்தினரைத் தண்டித்தால், உங்கள் நாட்டுக்கு இழுக்கு வந்துவிடும். என்னைத் தண்டிக்கும் முன் என் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள்' எனப் பணிவுடன் கேட்டான்.           

அவன் கூறுவதும் சரியென ராஜாவிற்கு தோன்றியது. 'உன் கடைசி ஆசை என்ன? நான் நிச்சயம் நிறைவேற்றுகிறேன்' வாக்குக் கொடுத்து விட்டார் ராஜா. 

மனதிற்குள்ளே நிம்மதி அடைந்த இளைஞன் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், 'எனக்குச் சிறு வயது முதலே ராஜாவாக வேண்டுமென்று ஆசை. தாங்கள் அனுமத்தித்தால் ஒரு மாதத்திற்கு நான் ராஜாவாக இருக்க ஆசைப்படுகிறேன் '.

மனதினுள்ளே கோபம் எழுந்தாலும் வாக்கு கொடுத்து விட்டதனால்,' சரி, இன்று முதல் ஒரு மாதத்திற்கு நீயே ராஜா!' ஆணையிட்டர். மகிழ்ச்சியாகப் பதவி ஏற்றுக் கொண்டான் அந்த இளைஞன். 

நாட்கள் உருண்டு ஓடின, ஒரு மாதம் முடிந்தது. ராஜா மீண்டும் அரசபைக்கு வந்தார். 'உனது தண்டனை இன்று நிறைவேற்றப்படும். காவலாளிகளே! இவனைத் தீவிற்கு கடத்த தயாராகுங்கள்' என ஆணையிட்டார்.

அந்த இளைஞன் அழுது கதறாமல் சிரித்துகொண்டே புறப்பட்டான். ராஜாவிற்கு ஒரே குழப்பம். அவனைத் தீவிற்கு கடத்தியப் பின் ராஜாவிற்கு விஷயம் தெரியவந்தது.

அந்த இளைஞன் ராஜாவாக இருந்த வேளையில் அந்தத் தீவில் பாதுகாப்பான ஒரு அரண்மனை கட்டிகொண்டதும் உணவிற்கு குறைபாடு வராத அளவிற்கு பயிர்களை அங்கு விளைத்துள்ளதையும் வேலைக்கு அங்குப் பலரை பணியில் அமர்த்தியிருப்பதும் தெரியவந்தது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !