Thursday, March 14, 2019

கவிதைகள்


காத்திருத்தலின் வலி!


எல்லா கதவுகளையும்
மூடியபோது
நீ வந்தாய்...

சாளரங்களையாவது
திறக்கும்படி மன்றாடினாய்...

நான்
புகைக்கூண்டுகளையும்
அடைத்துவிட்டு வந்தேன்...

காத்திருப்பு காலங்கள்
வலி மிகுந்தது தோழி...

அப்போது,
சூரிய வெப்பங்கள்...
நெருப்பு சாட்டைகளால்
விளாசிப்போகும்...
மௌன உதடுகள்
விரிசல் கோட்டை
வேகமாக கிழிக்கும்...





தேவையா தோழி
அந்த காத்திருப்பு?

அதனால்தான் இந்த கதவடைப்பு
காரியங்கள்...

மெல்ல கதவிடுக்கின் வழியே
நோக்கினேன்...

வெளியேறிக் கொண்டிருந்தாய்...
இப்போது
நட்சத்திரங்கள் முறைத்தன.

அது உன் கண்களைப் போல தெரிந்தது!


மழை நாளொன்றில்தானே..


மௌனம் பூண்டு கிடந்தது
காதல்
தன்னைப் பிரிந்து சென்ற
மழைக்காதலியின்
பரிசத் தீண்டல்கள்
கிட்டாத சோகத்தில்...

தன்னின் துயர கண்ணீர்களை
பெரும் அலையென
பிரசவித்துக் கொண்டிருந்தது...







நெடும் கூந்தலொன
விரிந்துகிடக்கும்
தனது கரைகளில்
கால்நனைத்து செல்லும்
காதலர்களை
மிகுந்த ஆதங்கத்துடன்
அது எட்டிப்பார்த்து
கண்ணீர் உகுத்துகிறது...

 பிறகு,
பெரும் மழையொன்று
கொட்டத் தொடங்குகிறது,

உன் விழியில்
நீர்பூக்க கண்டேன் தோழி...

ஒரு மழை நாளில்தானே
கொடும் கரமொன்று
உன்னையும் என்னையும்
பிரித்தது...?

நம்மிரு உடல்கள்
வேறு வேறு
உடல்களுக்கு உறுதி
செய்யப்பட்டது
மழை நாளொன்றில்தானே.. தோழி...

நீயும் நானும்
அதை
விழிகளிலிருந்து தருவித்து கொள்கிறோம்
அவ்வப்போது...
பெரும் கேவலுடன்..!


மண்வாசனைக் கவிதை

செவக்காடு உழுது
சீராக பாத்திகட்டி
கமலைத் தண்ணி எரச்சி
கடலைப் பயிறு
போட்டுவிட்டேன்...

தேனி சந்தையிலே
தேடி வாங்கிவந்து
தெக்காட்டு வயலிலே




தென்னங்கன்னு
நட்டு வச்சேன்...

அத்தை மக
ஒன்நெனப்பை
மனசுக்குள்ளே
ஊனி வச்சேன்...

கடலையும் பூத்து
காய்ப்புக்கு வந்துருச்சு...

கன்னு மரமாகி
கொலை கொலையா தள்ளிருச்சு...

நெஞ்சுக்குள்ளே
ஊனிவச்ச




ஒன் நெனப்பு விதை
மட்டும் தாண்டி
வேர்ப்புழு விழுந்து
வெட்டியா காய்ஞ்சிருச்சு...



கவிதை

தூரத்தில் விழும்
சன்னமான
இசைகேட்டு
லயிக்கிறேன் நான்...

விழித்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
சூனியத்தில் உறங்கிய
என் காலம்!


அய்க்கூ

காற்று வலுக்க வலுக்க
மேலும் சப்தமாய்
மழைப்பாட்டு



•••••••••••••••••••••••••••••••••
திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு


காதலர் தின சிறப்பு கவிதைகள்

சாளரத்தின் வழியே

உட்புகுகிறது
மழையின் ஈரம்
உள்ளிருக்கும் வெப்பம்
வெளியேற வாய்ப்பற்று
என்னில் குவிகிறது
சூடாகிக் கொண்டிருக்கிறேன்
நான்...

**************************



என் பார்வையை
கிரகித்துக் கொண்டே
நீ
விட்டுப் போகிறாய்
சிறு புன்னகையை
என்
மகரந்தங்களில்
சூழ் பிடிக்கத் தொடங்கிவிட்டது
நம் காதல்

ஒரு கவிதை, ஒரு அய்க்கூ...


ஒரு கவிதை
விலைவாசி உயர்வு
அகவிலை கேட்டு
போராடும் அலுவலர்கள்
அமைதியாய் நகரும்
பிச்சைக்காரன்



••••••••••••
அய்க்கூ
மரங்களற்ற சாலை
நிழல் தருகிறது
புதிய பாலங்கள்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !