சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா இன்று களைகட்டியுள்ளது. சென்னை மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்களும் மயிலாப்பூர் மாடவீதிகளில் குவிந்துள்ளனர். மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்னும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது கபாலீஸ்வரர் ஆலயம். அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது இங்குதான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான். இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.
மயிலாப்பூர் திருவிழா
இந்த ஆண்டு பங்குனிப் பெருவிழா கடந்த மார்ச் 21ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிராம தேவதை பூஜை நடைபெற்றது. 22ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா களைகட்டியது. பத்துநாள் திருவிழாவில் தினசரி ஒரு வாகனத்தில் இறைவன் எழுந்தருளினார்.
மாட வீதியில் வலம் வந்த தேர்
ஏழாம் நாள் திருவிழாவான நேற்று தேரில் இருக்கும் கபாலீஸ்வரருக்கு வில், அம்புடன் அலங்காரம் நடைபெற்றது.
திரிபுர சம்ஹாரம் நடைபெறும் பொருட்டே இந்த வில், அம்பு அலங்காரம். நான்கு மாட வீதிகளில் ஆடி அசைந்து வந்த தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கூடிநின்ற பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். இன்று காலையில் அங்கம் பூம்பவையை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் குளக்கரையில் நடைபெற்றது.
63 நாயன்மார்களுக்கு காட்சி
இன்று மாலை (18.03.2019) அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி கபாலீஸ்வரர் காட்சி அளித்தார். இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். கோலவிழி அம்மன், விநாயகர் இவர்களைத் தொடர்ந்து அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெற்றது. கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டீகேஸ்வரர், மூலவர்கள் வலம் வந்தனர். இதை மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் கண்டு தரிசித்தனர். அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது.
திருக்கல்யாணம்
ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும் மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். பத்தாம் நாள் காலை கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பவுர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார் அன்னை பார்வதி. அம்பாள் திருக்கல்யாணத்தைப் பார்க்கிறவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment