Vaseline என்றழைக்கப்படும் பெட்ரோலியம் ஜெல்லியை யாராவது தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுவோமா? பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்த Robert Augustus Chesebrough, தான் இறக்கும்வரை(இறந்தது 96வது வயதில்) அதைத்தான் செய்திருக்கிறார். எண்ணெய் உற்பத்தி அதிகரித்த 19 நூற்றாண்டின் இறுதியில், எண்ணெய் கிணறுகளில் உபயோகப்படுத்தப்பட்ட துளையிடும் கருவிகளின் மேல் வழவழப்பான பொருள் ஒன்று ஒட்டிக்கொள்வதாகவும், கருவியின் செயல்பாட்டை அது பாதிப்பதாகவும், அவற்றை இயக்கியவர்கள் புகார் கூறினர்.
எண்ணெய்க் கிணறுகளில் வேலை செய்தவர்களோ, வழவழப்பான அந்த ஜெல்லியைத் தடவினால் காயங்கள் விரைவில் குணமடைவதாகக் கூறினர். இதன் பிறகே ராபர்ட், பெட்ரோலியம் ஜெல்லியைத் தனியாகப் பிரித்தெடுக்கும் ஆய்வுகளில் இறங்கி, வெற்றிபெற்று, ஜெல்லியை “Vaseline” என்ற பெயரில் விற்கத் துவங்கினார். ஒரு காலத்தில் நம்மூர் Franch Oil எப்படி “அனைத்தையும்” குணப்படுத்தும் தன்மை இருப்பதாகச் சொல்லி விளம்பரப்படுத்தப்பட்டதோ, அதே மாதிரி பெட்ரோலியம் ஜெல்லியையும் ”Miracle Cure” என்று சொல்லி ராபர்ட் விளம்பரப்படுத்தினார். தன் உடல் முழுவதும் ஜெல்லியைப் பூசிக்கொண்ட அவர், அது இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாகக் கூறினார். ஜெல்லி காயங்களைக் குணப்படுத்த உதவுவதை நிரூபிக்க, தன் கைகளில் காயங்களை ஏற்படுத்தி அவற்றுக்கு ஜெல்லியை மருந்தாகத் தடவினார். இந்த வரிசையில் தான் அவர் தினமும் ஒரு ஸ்பூன் ஜெல்லியை உட்கொண்ட நிகழ்வும் வருகிறது.
No comments:
Post a Comment