Wednesday, December 5, 2018

வெண்புறா தமிழ்

Image result for வெண்புறா தமிழ்
எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.
தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.
அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று.
அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி.
அங்கே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் கிடையாது. அங்கு யாவரும் ஓரினம் அதுதான் தமிழினம். அகதித் தமிழினம்.
கும்மிருட்டு வேளையிலும் கொட்டும் மழையினிலும் அவர்கள் யாவருக்கும் தேவையாயிருந்தது ஒதுங்க ஓரிடம். எல்லோரும் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைக் கூப்பிட்டனர். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமே. போகும் வழிதோறும் குழந்தைகளின் அழுகுரல்கள் ஓயவேயில்லை. குழந்தைகள் வயோதிபர்கள் இவர்களால் இந்தப் பயணத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இடையிலேயே தங்கள் உறவினர்களை இழந்தாலும். எஞ்சியோர் பயணத்தைத் தொடர்ந்தனர். அதில் பயணஞ் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு சோகக் கதை இருக்கத்தான் செய்தது. இப்படிப் பல விபரிக்க முடியாத அல்லோல கல்லோலங்களினூடே அவர்கள் பயணம் தொடர்ந்தது.
ரம்யாவும் ஒரு நடைப்பிணமாக அவர்கள் பின்னே போய்க்கொண்டிருந்தாள். 
ரம்யா இப்போ ஓர் இளம் விதவை. ராட்சதரின் குண்டு அவள் கணவனின் உயிரைக் குடித்து உடலைச் சிதறடித்திருந்தது. அவன் இறந்தபின் அவன் உடல் மீது விழுந்து கதறி அழுதிருந்தாலாவது அவளுக்குச் சிறிது ஆறதலாயிருந்திருக்கும். அதற்கும் கொடுத்து வைக்கவில்லை. இவ்வளவு சனத்திரளுக்குள்ளும் அவளுக்கென்று அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் பயணத்தைத் தொடர்ந்தாள். ஏன்? எதற்காக? அது அவளிற்கே விளங்கவில்லை. 

பாடசாலையிற் படிக்கும் போது அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி விளையாட்டிலும் மிகுந்த ஈடுபாடு அவளிற்கிருந்தது. மிகவும் துடிப்பானவள். அவள் பின்னே எத்தனை ஆடவர்கள் படையெடுத்தனர்? அவள் கடைக்கண் பார்வைக்கு ஏங்கியவர் எத்தனை பேர்?
ஆனால் அவள் மனம் சேகரிடம் மட்டுமே பறிபோனது. சேகரும் ரம்யாவும் மதத்தால் வேறுபட்டிருந்தனர். ரம்யாவின் வீட்டிலே மிகுந்த எதிர்ப்புக் கிளம்பியது. கடைசியில் இருவருமே தங்கள் வாழ்க்கையை நிச்சயிக்க வேண்டி ஏற்பட்டது. திருமணம் முடித்து இரண்டே வாரங்களில் தனக்கு இக்கதி நேருமென அவள் கனவிலும் எண்ணவில்லை. சேகரின் இழப்பு அவளை மிகவும் பாதித்திருந்தது. வாடிய பயிராய்த் துவண்டுவிட்டாள். வெள்ளைச் சேலைக்குள் புகுந்துகொண்டாள். இடிமேல் இடிபோல அவள் இப்போ இப்படிப் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம். என்ன செய்வது? புறப்பட்டுவிட்டாள். 

ரம்யாவின் மனமும் உடலும் நன்கு சோர்ந்துவிட்டிருந்தன. நீண்ட தூரம் நடந்தார்கள். ஏதேதோ ஊர்களின் பெயர் சொன்னார்கள். அவை அவளிற்குப் புதிய பெயர்கள். ஏதோ எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது அவளிற்கு. பொழுது மெல்ல மெல்லப் புலர ஆரம்பித்தது. இப்படிக் கதிரவனின் வரவை விழித்திருந்து அவள் பார்த்தது கிடையாது. சேகர் இருந்திருந்திருந்தால் இதற்கிடையில் எத்தனை கவிதைகள் பிறந்திருக்கும். அவன் ஒவ்வொரு விடயங்களையும் ரசித்து ரசித்து கவிதை சொல்லும் அழகே தனி அழகு. 
குழந்தைகளின் அழுகுரல்கள் மட்டும் ஓயவேயில்லை. வெய்யோனின் வெங்கதிர்கள் அக்காலை வேளையில் சிறிது இதமாக இருந்தது. ஆயினும் நேரஞ் செல்லச் செல்ல அவ்வெம்மை யாவரையும் சுட்டெரித்தது. யாவரும் நிழல்களைத் தேடி சிறிது இளைப்பாறினர். ரம்யாவும் ஓரிடத்தில் தனியாகக் குந்தியிருந்தாள். முழங்கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு அதற்கிடையில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். 

மீண்டும் பயணம் தொடர்ந்தது. திடீரென மழை பொழியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை விட்டு வெயில் எறித்தது. பெருந்திரளாக புறப்பட்ட மக்களில் பலரை இறைவன் தன்னிடம் அழைத்துவிட்டிருந்தான். பலர் வெவ்வேறு பாதைகளில் தங்கள் தங்கள் உறவினர் வீடுகளிற்குச் சென்றிருந்தனர். ரம்யா இறுதியாக ஒரு பாடசாலை அகதி முகாமில் தங்கினாள். அவளிற்கு மிகவும் களைப்பாக இருந்தது. தன் தாய் தந்தையரை நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு வசதியுடன் வாழ்ந்தவள். இன்று இந்நிலை அவளுக்கு. மயக்கம் வருவது போல உணர்ந்தாள். அப்படியே சரிந்து படுத்துவிட்டாள்.

கண் விழித்தபோது அவள் முன்னே ஒரு சிறுமி நின்றிருந்தாள். ஓரு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது தானிருக்கும். "அக்கா சாப்பிட்டிங்களா? ஏன் பேசாம இருக்கிறீங்க. கொஞ்ச நேரத்திற்கு முதல் சாப்பாடு கொஞ்சம் கொடுத்தார்கள். என்னட்ட கொஞ்சம் இருக்கு. உங்கள எழுப்பி எழுப்பி பாத்தன் நீங்க எழும்பேல்ல அது தான் எழும்பும் வரைக்கும் பாத்துக் கொண்டிருந்தன்" என்றவள் ரம்யாவின் பதிலையும் எதிர்பாராமல் சிறிது கஞ்சியைக் கொடுத்தாள்.
சுய நினைவிற்கு வந்தவளாக தன்னருகேயிருக்கும் அச்சிறுமியைப் பார்த்தாள். அவள் தன் ஊரில் வசிப்பவள்தான். அதன் பின் ரம்யாவும் அபர்ணா என்னும் அச்சிறுமியும் நண்பிகளானர்கள். அபர்ணா அடிக்கடி சொல்வாள். "எனக்கு இயக்கத்திற்குப் போகோனும் என்று சரியான ஆசை ஆனால் அம்மாக்குத் துணையா ஒருத்தருமில்ல. அத நினைச்சுப்போட்டுத்தான் பேசாம இருக்கிறன் . இந்த ஆமியை எல்லாம் கலைச்சுப் போட்டு நிம்மதியா இருக்கோனும். நான் செத்தாலும் மற்றச் சனமாவது நிம்மதியா இருக்குங்கள் தானே. அம்மாவ நினைச்சாத்தான் கவலை. பாவம் அம்மா. அவவிற்கு நான் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறன். என்ட அப்பா அக்கா தங்கச்சியாட்களும் உங்கட சேகர் அங்கிளோட போட்டினம்." என்றாள் கலங்கிய கண்களுடன்.
அவளை அப்படியே இறுக அணைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள் ரம்யா. 

ரம்யாவின் மனதில் இப்போதெல்லாம் இந்தப் போராளிகளின் ஞாபகம் தான் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தது. அவளுக்குள் ஒருவிதமான உணர்வு ஒரு தாகம் மேலிடுவது போல உணர்ந்தாள். நான் யாருக்காக வாழ்கின்றேன். என் சேகரைக் கொன்ற அவர்களை நான் பழி வாங்க வேண்டும். என் தமிழ் மக்களை காப்பாற்ற என்னால் இயன்றதை நான் செய்ய வேண்டும். அதற்கு இது நல்ல தருணம். சேகர் அடிக்கடி சொல்வான் "ரம்யா நான் உன்னைக் கண்டிருக்காட்டி நிச்சயமா ஒரு போராளியாகியிருப்பன்". சேகர் உங்கட ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும். அப்பத்தான் உங்கட ஆத்மா சாந்தியடையும். எனக்கு இப்போ பத்தொன்பது வயது. வெள்ளைப் புடைவைக்குள் இருக்கும் என்மீது இவர்கள் வீசும் சொல்லடிகள் மிகவும் கொடியவை. இவற்றை நான் எவ்வளவு காலத்திற்குத் தாங்க முடியும்.
ரம்யா தனக்குள் ஒரு உற்சாகம் எழுவதை உணர்ந்தாள் அவளுள் ஏற்பட்ட அந்த எண்ணங்கள் மெல்ல மெல்ல விசுவரூபமெடுத்தன. இனிமேலும் காலந் தாழ்த்துவதில் பயனில்லை என உணர்ந்தாள். அங்கிருக்கும் அகதிகளைப் பார்த்தாள் வாய் திறந்து தூங்கும் ஒரு வயோதிபரின் வாயைச்சுற்றிலும் இலையான்கள் அமர்ந்திருந்தன. அவை வாயாலும் மூக்குத் துளையாலும் உட் செல்ல முயன்றுகொண்டிருந்தன. ஓ! எம் தமிழினம் எவ்வளவு கொடுமை. என்ன அநியாயம். என்ன பாவம் பண்ணினோம். நான் என்னால் இயன்றதைச் செய்யத்தான் வேண்டும். ஆப்போதான் என் சேகரின் ஆத்மா சாந்தியடையும். உணர்ச்சி மேலிட ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்தாள் தன் சேலையில் ஒட்டியிருந்த தூசிகளைத் தட்டி விட்டாள். கூந்தலை அவிழ்த்து தன் கைகளினால் கோதி உயர்த்தி ஒரு கொண்டை போட்டாள். அவள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. 
அபர்ணாவின் தாயாரிடம் தன் மனக் கிடக்கைகளைக் கொட்டினாள். "துப்பாக்கிச் சத்தங்கள் தூரத்தில் கேட்கின்ற போது உயிர் துடித்து உடல் நடுங்கி நாவறண்டு செத்துச் செத்துப் பிழைக்க வேண்டுமா? தப்பேதும் செய்யாத போதினுலும் அவன் தமிழன் என்றால் விடுவானா? பிஞ்சுப் பாலகன் முதல் பல் விழுந்த தாத்தா வரை அவர்கள் பார்வையில் பயங்கரவாதியாமே. அதுதான் அரக்கரவர் அகராதி. எம்மினப் பெண்கள் கற்பெல்லாம் சூறையாடி அவர் வாழ்க்கை கதையான பின்னே அழுதென்ன லாபம். கொலைகாரர் கோரப்பிடியிலகப்பட்டு அவர் காலில் நாம் நசிவதா? இல்லவேயில்லை. என்னுயிர் பிரியுமுன் அவ்வரக்கர்களை அழிக்க நான் என் பங்களிப்பைச் செய்தே தீருவேன். என் கண்களைத் திறந்தவள் அபர்ணாதான். நான் இழந்துவிட்ட என் சேகரையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டேன். ஆனால் இப்போ தான் எனக்குப் புரிகின்றது நான் நிலையானது என நினைத்த பாசம் பந்தம் எல்லாம் நீராவியாகிவிட்டதென்று". ரம்யாவின் ஒவ்வொரு பேச்சிலும் உயிர்த் துடிப்பிருப்பதை அபர்ணாவின் தாய் உணர்ந்தாள். கண்ணீர் மல்கிய கண்களுடன் அவள் தலையைத் தடவி நெற்றியிலே முத்தமிட்டாள். 

ரம்யா அபர்ணாவைப் பார்த்தாள். பூமியைப் பார்த்துக் கண்ணடிக்கும் மின்னலென அவளுள் ஒரு பாச உணர்வு பளிச்சிட்டு மறைந்தது. பின் மெல்ல அவ்விடம் விட்டகன்றாள். அவளுக்குள் ஒருவித புத்துணர்ச்சி பரவியிருந்தது. தன்னிடமிருந்த நகைகளை விற்றுக் காசாக்கினாள். மிகவும் ஏழை எனத் தென்பட்டவர்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுத்தாள். இப்போ அவளுக்கென்று எதுவுமே கிடையாது. அந்தத் தூய வெள்ளைப் புடவை மட்டுமே அவள் சொத்து. அங்கிருந்தவர்கள் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். சிலர் வினோதமாகப் பார்த்தனர். சிலரோ பாவம் மூளையில தட்டிப்போட்டுதாக்கும் என்றனர். ஓரு பெரியவர் அவளருகில் வந்தார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்க இப்படி இருக்கவேண்டி வருமோ யாருக்குத் தெரியும் ஏன் அவசரப்பட்டு என்று இழுத்தார். அவள் யாரையும் பொருட்படுத்துவதாக இல்லை. அவள் தன்னை இம்மண்ணுக்கு அர்ப்பணிக்கத் துணிந்துவிட்டாள் 

சின்னச் சின்ன ஆசைகளிலே சிம்மாசனமிட்டு காதலிற்காய்ப் போராடி வெற்றி கண்டவள் தான் ஆயினும் ஆண்டவனிடம் தோற்றவள். தாலி தொங்கிய வெண் சங்குக் கழுத்தினிலே நஞ்சுமாலையை ஏற்று பாசறைப் பயிற்சி பெற்று எதிரிகளுடன் போராடி எம்மினத்தின் விடியலுக்காய் பூக்கவுள்ள பூ அவள். காதலால் வாடிய வெண் புறா இப்போ சுதந்திர தாகங் கொண்ட சுதந்திரப் பறவையாக மாறவென விரைகின்றாள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !