முன்னொரு காலத்தில், ஒரு ஆடு மேய்க்கும் இடையச் சிறுவன் தனது ஆடுகளை மேய விட்டு விட்டு மரத்தினடியில் அமர்ந்து கொண்டு இருந்தான். பணியேதும் இன்றி ஓய்வாக அமர்ந்திருப்பது அலுப்பு ஏற்படுத்த, விளையாடும் எண்ணத்துடன் ,“ஓநாய்! ஓநாய் வருகிறது! என் ஆடுகளைக் கொன்று புசிக்க ஓநாய் வருகிறது!” என்று கூக்குரலிட்டான் சிறுவன். இந்த சிறுவனுடைய கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்து வயல்களில் விளையாடிக் கொண்டிருந்த நபர்கள் சிறுவன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தனர்.
சிறுவன் அருகே அனைவரும் வந்து பார்த்தால், அவன் கவலையின்றி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். மேலும் அங்கு வருகை புரிந்தவர்களைப் பார்த்து இடைவிடாது நகைக்கத் தொடங்கினான். வருகை தந்தவர்கள் இவ்வாறு பொய்யுரைக்க வேண்டாம் என்று சிறுவனைக் கண்டித்துவிட்டு, தங்களது பணிகளைப் பார்க்க சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் சிறுவன் முன்பு போலவே,”ஓநாய்! ஓநாய் வருகிறது!”என்று கத்தினான்.இம்முறையும் சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள், அவனது கேலிச்சிரிப்பைக் கண்டு,கோபமுற்று, “இவ்வாறு பொய் கூறாதே! மீறி கூறினால் உண்மையாக இது போன்ற சம்பவம் நேருகையில் உனக்கு யாரும் உதவ முன்வரமாட்டார்கள்.” என்று அறிவுறுத்திவிட்டு சென்றனர்.
சிறுவன் மீண்டும் சிறிது நேரத்திற்கு பின் மூன்றாவது முறையாக “ஓநாய் வருகிறது! ஓநாய்!” என்று கூக்குரலிட்டான். அவன் மீண்டும் பொய்யுரைக்கிறான் என்று எண்ணி கிராமமக்கள் யாரும் அவனை காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால் இம்முறை உண்மையாகவே ஓநாய் வந்து அவன் மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளைத் துவம்சம் செய்துவிட்டு சென்றுவிட்டது.
இதனால் மனம் வருந்தி அழுது கொண்டே சிறுவன் மலையில் அமர்ந்துவிட்டான். மாலை வெகுநேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால், அவனின் பெற்றோர் கிராமத்தாரின் உதவியுடன் சிறுவனைத் தேடிக்கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு அழுது கொண்டிருந்த சிறுவனிடம் விவரம் கேட்ட பொழுது, அவன், “உண்மையாகவே ஓநாய் வந்தது; அப்பொழுது நான் உங்களை அழைத்தேன் யாரும் உதவிக்கு வரவில்லை.ஓநாய் ஆடுகளை விரட்டியதால், ஆடுகள் சிதறி நாலாப்பக்கமும் சென்று விட்டன. நான் அழைத்தும் யாரும் உதவ முன்வராதது ஏன்?” என்று கேட்டான்.
அப்பொழுது கிராமத்தை சார்ந்த ஒரு முதியவர், “மக்கள் பொய்யர்களை நம்பமாட்டார்கள். அவர்கள் உண்மையையே கூறினாலும் பொய்யர்களின் பேச்சினை யாரும் உண்மை என கருதமாட்டார்கள்.” என்று உரைத்தார்; பின் வாருங்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லலாம், காலை விடிந்ததும் ஆடுகளைத் தேடலாம் என்று கூறி அனைவரையும் இல்லம் நோக்கி செல்லுமாறு உரைத்தார்; சிறுவன் உட்பட அனைத்து மக்களும் இல்லத்தை நோக்கி செல்லத் தொடங்கினர்.
நீதி: பொய்மை நம்பிக்கையை உடைக்க வல்லது, பொய்யர்கள் உண்மையையே கூறினாலும், யாரும் அவர்களை நம்பமாட்டார்கள்!
No comments:
Post a Comment