Tuesday, June 9, 2020

காட்டுல நடந்த கரடி கதை...

`ஒரு ஊர்ல...

 

உலகில் மிக உற்சாகமான வார்த்தைகளில் நிச்சயம் இவையும் சேரும். கதைகள் கேட்பதிலும் கதைகள் சொல்வதிலும் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நம் எல்லோருக்குள்ளும் கதைகள் இருக்கின்றன. கதைகள் இல்லாத மனித வாழ்வை கற்பனை செய்துபார்க்கவே முடியாது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை, என்றோ ஒருவரின் கற்பனையில் கதையாக ஆரம்பித்ததுதான்.

 

 கதைகளால் வளரும் குழந்தைகள், அறிவாற்றலில் கடலளவு ஆழம் செல்கிறார்கள். அன்புசெலுத்துவதில் வானமாக விரிகிறார்கள். கதைகளில்தான் புழு, பூச்சி முதல் மனிதன் வரை அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். சமமாக பேசிக்கொள்கிறார்கள். மனிதனின் சந்தோஷம், கோபம், துக்கங்களை எல்லாம் ஒரு புலியோ, குரங்கோ ஏற்றுக்கொள்கிறது. ஒரு குருவி பற்றியும் கொக்கு பற்றியும் அறிவியல் மூலம் தெரிந்துகொள்வதைவிட, கதைகள் மூலமே குழந்தைகள் அதிகம் தெரிந்துகொள்கின்றனர்.

 

எலி, பூனை, வாத்து எனப் பல உயிரினங்கள் உலகம் முழுக்க கதைகளால் ஆட்சிசெய்கின்றன. அனைவரின் மனங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளன. அத்தகைய ராஜாக்களில் ஒன்று... கரடி.

 

கரடியை மையமாகவைத்து எத்தனை எத்தனை கதைகள்... முரட்டு உறுமலும் மிரளவைக்கும் முகமும், கூரிய நகங்களையும் பெற்ற கரடியை, ஒரு மனிதக் குழந்தையை வளர்க்கும் தாயாக மாற்றி நேசிக்கவைக்கும் ஆற்றல், கதையின் மூலமே நிகழும். காட்டுக்குள் உலவும் அந்த உயிரினத்தை ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் அணைத்தவாறு உறங்கவைக்கும் மாயாஜாலத்தை கதைகளே விதைத்தன.

 

நம்ம ஊர் பாட்டி கதைகளிலும் கரடிகள் நம்மை கரம்பிடித்து கற்பனை உலக்குக்கு அழைத்துச்சென்றுள்ளன; பாட்டு பாடியுள்ளன; நடனமாடி மகிழவைத்துள்ளன. அப்படியான புகழ்பெற்ற கதைகளில் ஒன்றுதான், இங்கே `பட்டி டிங்கரிங் பார்த்த பாட்டி கதைகள்' வரிசையில், அழகான வீடியோ வடிவில் கொடுத்திருக்கிறோம். குழந்தைகள் பார்த்து ரசிக்கவும் வாசிப்பு பழகவும் அவர்களிடம் கொடுங்க.

 

கதைக்குள் போவதற்கு முன்பாக, கரடி வகைகளில் ஒன்றான சோம்பல் கரடி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை உங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

சோம்பல் கரடி:

 

19-ம் நூற்றாண்டில், ஒருமுறை ஆங்கிலேய ஆய்வாளர்கள் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்த இந்தக் கரடியைப் பார்த்தார்கள். ஸ்லாத் என்றழைக்கப்படும் மிகவும் சோம்பல் நிறைந்த கரடி வகைகளின் தோற்றத்தோடு ஒத்துப்போனதால், இவற்றை இந்திய சோம்பல் கரடி (Indian sloth bear) என்று அழைத்தனர். பெயருக்குத்தான் சோம்பல் கரடியே தவிர, இது தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவிலிருக்கும் ஸ்லாத் போன்று சோம்பேறி கிடையாது. அதற்கு இருப்பதைப்போல நீண்ட கால்கள், நீளமான நகங்கள் போன்றவை இதற்கும் இருக்கும். ஸ்லாத்களைப் போலவே, நம்ம ஊர் சோம்பல் கரடிகளும் மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். ஸ்லாத் போலவே தம் குட்டிகளை முதுகில் சுமந்துசெல்லும். குட்டிகளுக்கு மூன்று வயது முடியும் வரை இப்படிச் சுமந்தபடியே சுற்றும்.

சோம்பல் கரடிகளிலேயே இரண்டு துணை இனங்கள் உள்ளன. இந்திய சோம்பல் கரடி, இலங்கை சோம்பல் கரடி. பனிப்பிரதேசத்தில் இருக்கும் கரடிகளுக்கு, குளிரைத் தாங்குவதற்காக உடல் முழுவதும் முடி இருப்பது சரி. ஆனால், வெப்பமண்டலமான நம்ம ஊரில் வாழும் கரடிகளுக்கும் எதற்கு உடல் முழுக்க இவ்வளவு முடி?

 

கரடிகளின் பிரியமான உணவான பூச்சிகளைப் பிடித்து உண்ணும்போது, அவை உடலில் ஒட்டிக்கொள்ளாமல் பாதுகாத்துக்கொள்ளத்தான், கோட் போட்டது போல உடல் முழுவதும் முடி இருக்கிறது. பூச்சிகளைப் பிடித்து உண்ணுவதற்கு வசதியாக நீளமான நாக்கு இருக்கும். இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேட வெளியில் வரும் நம்ம ஊர் சோம்பல் கரடிகள், பகலில் குகைக்குள் உறங்கும். குறிப்பாக, நதியோரங்களில் அமைந்துள்ள குகைகள் என்றால் அலாதிப் பிரியம். சிறப்பாக மரமேறும் திறன் சோம்பல் கரடிகளுக்கு இருந்தாலும், ஆபத்தின்போது மரத்தில் ஏறுவதில்லை. நுகரும் திறன் அபாரமாக இருந்தாலும், கேட்கும் மற்றும் பார்க்கும் திறன்கள் சுமார்தான். நிலத்தில் 1 மீட்டருக்கும் கீழே உள்ள கரையான்களைக்கூட நுகர்ந்தே கண்டுபிடித்துத் தோண்டி எடுத்து சாப்பிட்டுவிடும். தேன், கரும்பு, பூக்கள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றையும் விரும்பி உண்ணும்.

 

நம்ம ஊர் சோம்பல் கரடிகள், அடிப்படையில் மூர்க்கமானவை கிடையாது. கேட்கும் திறனும் பார்க்கும் திறனும் குறைவாக இருப்பதால், மனிதர்கள் அருகில் வருவது தெரியாது. அதைப் பயன்படுத்தி, மனிதர்கள் அடிக்கடி அருகில் சென்று அதைப் பயமுறுத்துவதால், தற்காத்துக்கொள்ளவே எதிர்க்கின்றன. கரடி, மூர்க்கமானால் இரண்டு கால்களில் எழுந்து நிற்கும். அப்போது, எதிரில் இருப்பவர்களுக்கு ஆபத்து என்று ஒரு வதந்தி உள்ளது. உண்மையில், சோம்பல் கரடிகள் தெளிவாகப் பார்க்கவும், காற்றை நுகர்ந்து தம் எதிரில் வருவது உணவா ஆபத்தா என்பதைத் தெரிந்துகொள்ளவுமே அப்படி நிமிர்ந்து நிற்கின்றன.


இனி, இங்குள்ள வீடியோவை க்ளிக் பண்ணுங்க... காட்டுக்குள் போன இரண்டு நண்பர்கள், கரடியைப் பார்த்த பாட்டி கதையை உங்க குழந்தைகள் பார்த்து ரசித்துகொண்டே, வாசிக்கவும் சொல்லுங்க.

 


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !