Thursday, March 14, 2019

முட்டுசந்துக்கொரு பிள்ளையார் கோயில்

சரியாய் இந்தப் பருவத்தில், வீடு மாறி போகும் போதே அம்மாவின் எச்சரிக்கை தொடங்கிவிட்டது. இதப்பாரு அங்க கஜ கஜன்னு ஆம்பளப் பசங்களும், பொம்பளப் பசங்களும் நிறைய. யார்கிட்டயும் அனாவசியமா பேச்சு வெச்சுக்கக்கூடாது. என்னன்னா என்னன்னு இருக்கனும். அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லுவது இது. வாரிப்பூசிக்கொண்டு குத்துதே, கொடையுதே என்று அவஸ்தை படுவதற்கு இப்படி இருப்பதே மேல் என்று அடிக்கடி சொல்வார்கள்.

நமக்கு தமிழ்ல / இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தைதான் அட்வைஸ் ஆச்சே. அதனால இதையெல்லாம் நான் பின்பற்றமாட்டேன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியுமாதலால்,கூடவே அங்க இருக்குற எல்லா ஆம்பளப் பசங்களையும் அண்ணா ந்னு தான் கூப்பிடனும் என்பதுதான் கட்டளை. தப்பித்தவறிக் கூட அவர்களோடு நானோ, என்னோடு அவர்களோ பேசக்கூடாது. மீறினால் வசவு விழுவும். எனக்கல்ல, அவர்களுக்கு.

அந்த வீட்டில் இருந்த நிறைய அண்ணாக்கள் சென்னை கார்ப்ஸில் (மாநகராட்சி பள்ளி) தான் படித்தார்கள். அதனால் எல்லோரும் ஒன்று கூடி சாயங்காலம் ட்யூஷன் மாதிரி எடுப்பார்கள். பெரிய அண்ணாக்கள் எடுக்க, அக்காக்கள், தங்கைகள், தம்பிகள் என நிறைய பேர் உட்கார்ந்திருப்பார்கள்.
எனக்கும் அந்த கூட்டணியில் ஐக்கியமாக ஆசை. அம்மாவிடம் சொன்னால் எல்லாம் இங்க உக்காந்து படிச்சு மார்க்கு வாங்குனா போதும், அங்க போய் ஒன்னும் ஆகத்தேவையில்ல, அதுங்க இருக்கறதையும் கெடுத்துடும் என்று சொல்லக்கேட்டதால், ஒரு நாள் அம்மா எங்கேயோ சென்றிருக்கும் போது, நோட்டு புக் சகிதம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டேன்.

ஒரு அண்ணா செங்கல் சுவற்றில் சாக்பீஸால் ஒளவையார் என்று எழுதிவிட்டு எங்க, எல்லாரும் சொல்லுங்க ஒல வைய்யார் என்றார். உட்கார்ந்திருப்பதெல்லாம் ரிப்பீட்ட ஆரம்பிக்க, நான் மட்டும் அண்ணா, அது ஒல வைய்யார் இல்ல ணா, ஒளவையார் ணா என்று சொல்ல, டேய் இத யாருடா இங்க சேர்த்தது, தலையில கொட்டி அனுப்பிவிடுங்கடா, அவுங்க அம்மா பாத்தா நம்பள கத்தும் என்று சொல்லி தன் தமிழ் மானத்தை காற்றில் விடாமல் காப்பாற்றிக்கொண்டார்.

அதனால் வீட்டருகில் செட்டு சேரும் வாய்ப்பே இல்லை. வாய்க்க அம்மாவும் விடவில்லை. ஆனால் அரசல் புரசலாக அவ்வப்போது இன்னார் இன்னாரைப் பார்க்கிறார்கள், பின்னாடியே போகிறார்கள், கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார்கள் இல்லையெனில் ஓடிப்போய்விட்டார்கள் என காதில் விழும். நிறைய அண்ணாக்கள் அதே அக்காக்களை கல்யாணம் செய்து கொண்டார்கள். சில அக்காக்கள் வேறு அண்ணாக்களை. சிலர் சேரவேயில்லை. ஒரு அக்காவும், அண்ணாவும் மாத்திரம் வெவ்வேறு ஆளை கல்யாணம் செய்து கொண்டு பிறகும் காதலித்துக் ! கொண்டிருந்தார்கள். திகட்ட திகட்ட நிறைய கதைகளை கேட்டதாலோ என்னமோ காதல் மேல் ஒரு புனித அபிப்ராயமே இல்லை, பாரி-நிர்மலா ஜோடியில் பாரி அண்ணா இறக்கும் வரை / செங்குட்டுவன் - லதா ஜோடி ஓடிப்போய் கல்யாணம் செய்தாலும் லட்சியத்தம்பதியாய் வளைய வந்ததை கண்டதைத் தவிர.






ஞாயிற்றுக்கிழமைகளில் ஜீன்ஸும், பனியனும் மாட்டிக்கொண்டு நடையாய் நடப்பார்கள். சைக்கிளை கடன் வாங்கி, ஃப்ரண்டின் பைக்கை கடன்வாங்கி என கண்கட்டி வித்தை நடக்காத குறைதான். அக்காக்களும் அதற்கீடாக தலை நிறைய பூவோடு தாவணிகளில் வலம் வருவார்கள். பார்க்க கண் கொள்ளா காட்சியாகத் தான் இருக்கும். ஆனால் அன்றைய ஞாயிற்றுக்கிழமை இரவில் கண்டிப்பாய் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளில் சண்டை தூள் பறக்கும். ஞாயிறுகளில் தூர்தர்ஷன் ஒளிபரப்பும் படத்தை மிஸ் செய்தாலும், இந்த சண்டைகளை மிஸ் செய்யக்கூடாது. அவ்வளவு(ம்) சுவாரஸ்யம்.

மொசப்புடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தால் தெரியும் என்பதைப் போல வகுப்புத்தோழிகள் சிலரின் போக்கே அவர்களை காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் அந்தப் பக்கமும் அவ்வளவாய் தலை சாய்வதில்லை. அய்யோ, எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா என்கிற சாமியார் மாதிரியான ஆளுமில்லை, பொதுவாகவே ஒரு ரெண்டுங்கெட்டான். அதென்னமோ எனக்கொரு ராசி. தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி? என்று கேட்டுக்கொண்டு நான் தான் இருவருக்குமிடையே காதல் பரிவர்த்தனைகள் நடத்தி வைப்பதாக நினைத்துக்கொண்டு சில தோழிமார்களின் அம்மாக்கள், வாம்மா என்பதை விடவும் வந்துட்டியா என்று ஒரு பார்வை பார்ப்பார்கள். எனது பூஞ்சான் தோற்றமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

சம்பந்தவட்டவள் எங்கு போனாலும் என்னை அழைத்துதான் குறுக்கு விசாரணை நடக்கும். சுதாவின் அம்மாவும், கிருஷ்ணாவின் அப்பாவும், துர்கா, தீபாவின் அம்மாக்கள் கூட விதிவிலக்கல்ல. இதில் துர்கா, பள்ளி, ட்யூஷன் முடித்து எங்களோடுதான் வந்துகொண்டிருப்பாள். திடீரென்று பார்த்தால் அந்த உருவம் மறைந்திருக்கும். சரியாக கவனித்தால் இடையில் ஏதாவது ஒரு சந்துக்குள் நுழைந்திருப்பாள். இவ பண்றதுக்கெல்லாம் நாம தாண்டி மாட்டறோம் என்றபடியே அவளோடு சேரவும் முடியாமல், சேராமல் இருக்கவும் முடியாமல் அது ஒரு அவஸ்தை.

பெரும்பாலும் அய்னவன் வய்னந்தாண்டி, இட்லவ ஏன் அட்லன்னிக்கு லீய்னவு தெய்னறியுமா? என்பது போன்ற பாஷைகளை உடனிருக்கும் தோழிகள் பேசும்போது, ஏய் என்னப்பா, என்னப்பா பேசுறீங்க என்று நச்சரித்து, இது ஒன்னுடி என்று பாட்டுவாங்குவேன்.

நம்ம ஊர்ல எந்த சாமிக்கு கோவில் இருக்கோ, இல்லையோ பிள்ளையாருக்கு மட்டும் ஒவ்வொரு சந்து முக்குலயும் கோவில் இருக்கும். மத்த நாள் கிழமைகளில் சீந்துவார் இல்லாம இருந்தாலும் செப்டம்பரில் வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு மாத்திரம் பிள்ளையார்(பட்டி) ஹீரோவாகிவிடுவார்.
அந்த மாதிரிதான் எது இருக்குதோ இல்லையோ நம்ம பய புள்ளைகளுக்கு டீனேஜ்ல களுக்குன்னா காதல் வந்துடும். இது இப்ப வரைக்கும் விடாம தான் தொடருது போல. (பின்ன உலகம் உள்ளளவுக்கும் உள்ள விஷயமாச்சே) எ.காக்களுக்கு எங்கேயுமே போகவேண்டாம். நிறைய லைவ் ப்ரோக்ராமில் நான் பன்னிரண்டாவது படிக்கிறேங்க, என் ஆளு பத்தாவது படிக்குதுங்க என்ற ரேஞ்சில் ஆரம்பித்து, இந்தப் பாட்டை என் ப்ரண்டுக்கெல்லாம் டெடிகேசன் செய்றேங்க என்று உச்சிமண்டையில் சுர்..... ருங்க வைக்கிறார்கள்.






தொண்ணூறுகளில் உடன் படித்தவர்களில் நிறைய பேர் காதல் கத்தரிக்காயை கிண்டி குழம்பு வைத்து சாப்பிட்டாலும், நாம அந்தளவுக்கு வொர்த் இல்லாத காரணத்தினால், டென்சிங்க் பால்டன், விமலா, கலைச்செல்வி, பிருந்தா, போன்ற உருப்படி(யானவர்)கள் அதெல்லாம் ஒரு பேண்டஸி, நாம இப்போ படிக்கறதுல மட்டும்தான் கான்செண்ட்ரேட் செய்யனும், நீ அவங்களோட சேர்ந்து ஒன் கேரியர வேஸ்ட் பண்ணிக்காத என்று கூப்பிட்டு க்ரூப் ஸ்டடியில் சேர்த்துக்கொண்டதால் பிஸிக்ஸில் மூன்று மார்க்கை கோட்டை விட்டதோடு நிறுத்தி மீண்டும் ஒரு உத்வேகத்தில் படிப்பைத் தொடர்ந்தேன், தொடர்கிறேன்.

ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !