Thursday, March 14, 2019

மாய வித்தைக்காரி

பத்தாம் வகுப்பு பாதியில் அவள் பூத்துவிட்டாள் என்ற செய்தி வந்தது. தோழி என்றாலும் போய் பார்ப்பதற்கு ஒருவகையான நாணம் குடிகொண்டது. சரி, எப்படியும் வருவாள் என்று பார்க்காமல் விட்டதில் பத்து நாள் கழித்து பள்ளிக்கு வந்தாள். மிக அழகாக மாறியிருந்தாள். எப்போதும் போடும் மடித்துக்கட்டிய இரட்டைப்பின்னல்தான் என்றாலும், இப்போது ஸ்லைடு எடுத்து குத்தி தூக்கி வாரி என்று ஒரு மாதிரியாய் முகமாற்றமும் மலர்ச்சியுமாய் இருந்தது. நடத்தையில் கூட கொஞ்சம் பெரிய பெண் போல மாறியிருந்தாள். அவளோடு தோற்றத்தில் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்த என்னை சிறுமி போல பாவித்தாள். சிரிப்பு வந்தது. அதுவரை உற்ற தோழியாய் நான் இருந்தாலும் அவளொத்த பெண்களோடு பேசி சிரித்தாள். மதிய உணவு இடைவேளையின் போது சினிமாக்கள் பற்றியும், கதாநாயகர்கள் பற்றியும் அதிகம் பேசினார்கள், அளவில்லாமல் சிரித்தார்கள். காதல் பாடல் வரிகளை அழகாய் மனனம் செய்து சன்னமாய் ராகமிட்டு பாடினார்கள்.




மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ, மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே, மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ, நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே என்ற பாடல் வரிகளை கிறங்கிப்போய் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பரீட்சைக்கு வரும், அப்படி வந்தால் குடுவையை வரைந்து, சமன்பாட்டை எழுதினால் ஐந்து மார்க் சர்வ நிச்சயம் என்று நம்பிய கொஸ்டீனை மறுநாள் டெஸ்ட்டாக சயின்ஸ் டீச்சர் அறிவித்தால் டீச்சருக்கு தலைவலி வரவேண்டும் இல்லை அவர்கள் வீட்டிலிருந்து போன் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். மாறாய் ஆசிரியை வந்து அமர்ந்து கொண்டால் இன்று டெஸ்ட் வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதில் இவளும் ஒருத்தியாகிப்போனாள். மாத இடைவெளிகளில் தோன்றிய இந்த மாற்றம் அதுவரை அருகிலிருந்து பார்த்த என்னை அதிரச்செய்தது.

அவசியம் கருதி பள்ளியில் ஏதாவது சயின்ஸ் எக்ஸிபிஸனுக்கோ, ஆர்ட் கேலரிக்கோ அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெரும்பாலும் அக்கா மாதிரி தோற்றம் கொண்டிருக்கும் அதே வகுப்பு பெண்களோடே அவள் நடந்து போக ஆரம்பித்தாள். சாலையில் நடக்கும் போதோ, இல்லை எக்ஸிபிஸனிலோ இளம் வயது ஆண்களை பார்க்க நேர்ந்தால் அதிகமாய் வெட்கப்பட்டார்கள். தன்னுள் குழுமி சிரிப்பொலி எழுப்பினார்கள். ஸ்ஸ்ஸ், எங்க இருக்கோம்னு நினைச்சிக்கோங்க, இதொன்னும் உங்க வீடில்ல என்று டீச்சர்கள் பக்கமிருந்து எச்சரிக்கை வரும்போது தலை குனிந்து வருந்தும் பாவனை செய்தார்கள் / செய்தாள். சிறுமிகள் போல் தோற்றமிருப்பவர்களை அந்த குழு ஏளனமாய் பார்த்துச் சிரித்தது.

பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பு தொடங்கியபோது கடந்த வகுப்பில் படித்தவர் பாதிபேர் வெவ்வேறு பள்ளிகளுக்கு போக, வீட்டருகில் பள்ளியிருந்தவர்களில் பாதிபேர் எடுத்த மார்க்குக்கு இந்த ஸ்கூலில் இரண்டாவது க்ரூப் கூடிவருவதே பெரிய விஷயம் என்பதாலும், பி செக்‌ஷன், இங்கிலீஷ் குரூப் என்று ஜம்பஸ்தாக சொல்லிக்கொள்ளலாம் என்பதாலும் அவ்வகுப்பில் பயின்ற ஏனையோர் ஒன்று கூடி சயின்ஸ் க்ரூப்பையே தேர்ந்தெடுத்தார்கள். பத்தை தொடர்ந்து பதினொன்றிலும் அக்கா, சிறுமி வேறுபாடுகள் தொடர்ந்தது.

பதினோராம் வகுப்பின் தொடக்கத்திலேயே அவள் தன் வீட்டு விசேஷத்துக்காக எண்ணூரிலிருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்வதாக வெள்ளிக்கிழமையே வகுப்பு டீச்சரிடம் விடுப்பு சொல்லிவிட்டாள். போனவள் திங்கள் போய், செவ்வாய் தொடர, புதன்கிழமை தான் வகுப்புக்கு வந்தாள். ஆளே மாறிப்போயிருந்தாள். ஒரே கற்பனை சஞ்சாரம்தான். தீவிர விசாரிப்பிற்குப் பிறகு பெயர் முருகன் என்ற பெயர் வெளியே வந்தது. முதல் நாள் பார்த்தார்களாம். இரண்டாவது நாள் இவளைப் பார்த்தவுடனே பூஜைக்கு வந்த மலரே வா பாடல் அங்கிருந்து பாடப்பட்டதாம். போன விசேஷத்தை முடித்துக்கொண்டு வரும்போது அங்கிருந்து காதலை கையோடு எடுத்து வந்திருந்தாள்.

எப்பொழுதும் தலை கவிழ்ந்து கொண்டோ, இல்லை ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும் போது கரும்பலகையைப் பார்ப்பது போல் கற்பனையில் சஞ்சாரித்துக்கொண்டோ, இல்லை கீழே குனிந்து கொண்டு நோட்டில் சில “முக்கியமான” இனிஷியல்களை கிறுக்கிக்கொண்டே அதுநாள் வரை இருந்த வந்த சுபா, சுனிதா, துர்கா, கோதை உமா லிஸ்ட்டில் இவளும் சேர்ந்துகொண்டாள். அவர்களோடு சேர்ந்து எடுத்த கிறுக்கல் பயிற்சியில்
இவளுக்கும் நன்றாக ஹார்ட்டின் போடவந்தது. ஃப்ளேம்ஸ் போட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டாள். கைரேகைகளை இணைத்துப்பார்த்து காதல் கல்யாணம் கைகூடுமா என்று இணையாத கோடுகளை இணைத்துப்பார்த்தார்கள். மீறி அரேஞ்ச்டு மேரேஜ் என்று வந்தாள் ஆங்க், இதெல்லாம் சும்மா என்று கையை உதறிவிட்டுப்போனார்கள்.

வகுப்பின் ஒரு பக்க ஜன்னல் சாலை பார்த்து இருப்பது பெருத்த வசதியாய் போனது. போதாக்குறைக்கு துர்காவின் “ஆள்” என்று சொல்லிக்கொண்ட குள்ளன் ஒருவன் மதிய உணவு இடைவேளையின் போது அந்த சாலையோர ஜன்னல் பக்கமாய் தரிசனம் தர ஆரம்பித்ததும், இங்கேயிருந்து அங்கே பார்த்துவிட்டு, தத்தம் ஆட்களுக்கும் இது போல வரவில்லையே என்பதில் மீதியிருப்பவர்களுக்கு மிகுந்த மனவருத்தம்.
அது கூப்ட்டா வராதுடி, இவன மாறி என்ன வேலையத்தவனா?, எஞ்சினியரிங்க் காலேஜ்ல படிக்கிறாங்கல்ல என்றெல்லாம் ஆளாளுக்கு தன் ஆள் கதை சொல்லிக்கொண்டார்கள்.



ச்சே, எப்பப் பார்த்தாலும் இதுங்க தொல்லை தாங்க முடியலடா என்று சிறுமி தோற்றங்கள் முனக, ஆமா, நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க, இந்த வருஷம் ஆன்வல் டே ல உங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்டு தருவாங்க வாங்கிக்கோங்க என்று அவர்களும் மாறி, மாறி பொருமிக்கொண்டார்கள். பொருமல் சத்தக்காரர்களை விட முனகல் சத்தத்தில் ஆட்கள் பெரும்பான்மை அதிகமிருந்தமையால் யாரோ யாரிடமோ வத்தி வைக்க சாலையோர ஜன்னல் பக்கம் பள்ளி நிர்வாகம் சீல் வைத்துவிட்டது.

பள்ளி விடுமுறைகளும், வார சனிக்கிழமைகளும் ஸ்பெஷல் க்ளாசாக உருவெடுத்து வெளியே போக வழிவகை செய்துதந்தது போலும். போய்விட்டு வந்து கதையோ கதை அளந்தார்கள். இது அவுங்க வாங்கித்தந்தது, இந்தக் கார்டு பாத்தியா, ஏ, ஹார்ட்டின்ல க்ளிப் பாரேன், இந்த சேட்டர்டே ஸ்கூல் இருந்தா ஒரு சுடிதார் போட்டுட்டு வரேன் பார் என்றெல்லாம் மற்றவர்கள் கிளப்பிவிட்டதில் எண்ணூர் விசேஷத்துக்கு போய்விட்டு வந்தவளுக்கு
எப்படியிருந்தது என்று தெரியவில்லை. மிகுந்த மனச்சோர்வாக இருப்பதாய் காட்டிக்கொண்டாள். இவள் சோகத்தைப் பார்த்ததும், மீதியிருப்பவர்கள் கரிசனமாய் விசாரிக்க, பார்த்து ரொம்பநாளாயிற்று என்று சொன்னதில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஏதாச்சும் போன் நெம்பர் இருக்குமா, இல்லை வீட்டு முகவரி, கடிதம், இல்லையென்றால் தெரிந்தவர்கள் மூலமாக தூது விடலாமா என்றெல்லாம் கிளப்பிவிட்டதில் அவளுக்கு ஏக சந்தோஷம். இந்த வாரம் கட்டாயம் பார்த்துடுவப் பாரேன் என்று கிளி ஜோசியம் சொல்வதைப்போல சொல்லி வைத்தார்கள். கொஞ்சம் உற்சாகம் ஆனமாதிரி தெரிந்தாள்.

திடீரென ஒருநாள் மிகவும் பளிச்சென வகுப்புக்கு வந்தாள். உற்சாகம் மிகுந்திருந்தது. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போயிருக்கும் போது அவர் வீட்டிலிருந்தாராம். சும்மா இந்தப்பக்கம் வந்ததில், எல்லோரையும் ”பார்த்து”விட்டு போகலாமென்று தலைகாட்டினாராம். அம்மா அந்தப்பக்கம், இந்தப்பக்கம் போனதில் இவளுக்கு தனியான கவனிப்பாம். முக்கியமாய் அவருக்கும் பிரிவு வேதனையிருந்ததாம். தாடி வளர்த்திருந்தாராம்!!! முன்பை விட மெலிந்திருந்தாராம். அதுவாம், இதுவாம். டாஆஆஆஅய், பக்கத்தில் உட்கார்ந்திருந்த எங்களுக்கு காது புளித்துப்போனது.

ஒரு மாதம் போயிருக்கும், தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் சோக கீதம். மீண்டும் ஜோசியங்கள், ஆறுதல்கள். பொருமல் செட்டில் ஒருவரை மாற்றி ஒருவருக்கு ஆறுதல் சொன்னதில் ஒருவருடம் ஓடிப்போய் கூண்டோடு கைலாசமாய் பனிரெண்டாம் வகுப்புக்கு படையெடுத்தார்கள். வகுப்பில் பலருக்கு போன வருஷம் இந்த மாதிரி இருக்காதீங்க பிள்ளைகளா, ஏதோ பாஸ் பண்ணனும்னு உங்கள பாஸ் பண்ணிவிட்டோம் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டது. கால் பரீட்சை வந்தது. எடுத்திருந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு பாதிப்பேருடைய பெற்றோர்களையும் வரவழைத்து பேசியதில்
அடுத்த ஓரிரு மாதத்தில் முன்னேற்றம் அதிகமாகியிருந்தது. மதியத்துக்கு மேல் வீசிங்கெல்லாம் வருவதில்லை. எல்லா ஸ்பெஷல் க்ளாஸும் ஒழுங்காய் அட்டெண்டஸ் வந்தது. ஒரிஜினல் நல்ல பிள்ளைகளுக்கே இவர்களை எ.கா சொல்வது மாதிரி நிலைமை தலைகீழாயிற்று. மார்க்கில் இலக்கங்கள் ஏறியதே ஒழிய இறங்கவேயில்லை. எந்த எஞ்சினியரிங் காலேஜ் நல்லா இருக்கும். எவ்வளவு கட் ஆஃப் என்றெல்லாம் திடீர் நல்ல பிள்ளைகள் பேசுவதைப்பார்த்து ஆக்சுவல் நல்ல பிள்ளைகளுக்கு கொஞ்சமல்ல நிறையவே குமைச்சல்.


திடீர் நல்ல பிள்ளைகளில் இருந்தவர்களில், தனது பழைய பள்ளியிலேயே காதல் வயப்பட்டு பதினோராம் வகுப்போடு இந்தப் பள்ளிக்கு மாறியவர்களை விடவும் எங்களுக்கு ஆச்சர்யம், எங்கள் பள்ளியிலேயே எங்களோடவே ஆறாம் வகுப்பிலிருந்து உடன் வந்த எண்ணூர் விசேஷக்காரியின் மாற்றம் தான் அதிசயத்திலும் அதிசயமாயிருந்தது. படிப்பும் கூடவே ஷார்ட்டண்ட், டைப்ரைட்டிங்க் என ஓவர்டைமில் படிக்கத்தொடங்கினாள்.

மற்றவர்களின் ஆள்”கள் எல்லாம் தாடி வளர்த்து கொண்டதாய் தெரிய வர, இவளின் ஆள் மட்டும் இவளுக்கு அண்ணன் முறையாகிப்போனாள். வேறொன்றுமில்லை. சொந்தம் வழி வந்த சொந்தத்தில் உறவுமுறையில் பூஜைக்கு வந்த மலரை பாடியவன் மாமன் இல்லையாம், அண்ணனாம். அடுத்ததாய் ஒரு வீட்டு விசேஷத்தில் எல்லோரும் கூட அப்போதுதான் அது தெரியவந்ததாம். !!!!!!!

எண்ணூர் விசேஷக்காரிக்கு எதிலும் அவசரம்தான். அவசரமாய் காதல் செய்தாள், அதை விடவும் அவசரமாய் அதையும் இதையும் படித்தாள், படிப்புக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் மார்க்கெட்டிங்க் துறையில் இறங்கினாள். நட்பு பெருகியது. பொருந்தாக் காதலொன்று கைகூடி வந்து கல்யாணத்தையும் அவசரமாய் செய்து கொண்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள், திரும்பிய பக்கமெல்லாம் பணம் பண்ணும் வித்தையைக் கற்றுக்கொண்டாள். நொடிக்கு நொடி மாறும் வாழ்வில் அவள் செய்த ஜாலங்கள் நிறைய.

மின்னல் வேகத்தில் தன் வாழ்நாளில் முன்னேற்றங்களை அமைத்துக்கொண்டதெல்லாம் சென்ற வருடம் இதே மாதம் முப்பத்தொன்றோடு எங்களை விட்டு போகத்தானா மாய வித்தைக்காரியே?

ஆழ்ந்த அஞ்சலிகளோடும், மறவா நினைவுகளோடும்....

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !