Friday, March 15, 2019

விஜி @ வேலுவின் மனைவி

எனக்குத் தெரிந்து விஜி அடி வாங்காமல் எழுந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடையைப்பிடித்து நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளி ஏ, ஏ, ஏய் விஜி, எழுந்திருக்கப்போறியா இல்ல தண்ணிய எடுத்தாந்து ஊத்தட்டா, அங்கங்க அதது எழுந்து சாமான் தேக்கறது, தண்ணி புடிக்கறதுன்னு என்னமா வேலை செய்யுதுங்க,இதுவுமிருக்குதே, ஒரு நாளப்போல போராட்டமா இருக்கு. மறுபடியும் ஒரு நறுக்.







ஆஆஆ.. ஏ..ஏஏய் ஏன் இப்டி கிள்ற... எழுந்துக்கறேன் இல்ல

எழுந்திரு, எழுந்திருடி

விஜியின் அனேக தினப்படிகள் இப்படித்தான் விடியும். அவ்வளவு பாசமாய் எழுப்பும் ஆயா அதை விட பாசமாய் விஜிக்கு ஒரு டம்ளர் டீயும், பொரையும் தலை மாட்டில் வாங்கி வைத்திருக்கும். எழுந்து ஒரு கையால் கோட்டுவாயைத் துடைத்துக்கொண்டு பொரையும், டீயும் உள்ளே இறங்கிய பின்னர்தான் விஜிக்கு உலகமே கண்ணுக்குத் தெரியும். அதற்குப்பிறகுதான் ஏதாவது வேலை செய்வதாய் இருந்தால் வேலை, இல்லையென்றால் ஆட்டம், அப்புறம் பள்ளிக்கூடம்.

விஜிக்கு படிப்பு மீதோ, வீட்டு வேலைகள் மீதோ எப்போதுமே பிடித்தமிருந்ததில்லை. ஏதோ தன் வயதொத்த பிள்ளைகள் அனைத்துமே பள்ளிக்கு போவதால் தானும் போகும். கார்ப்பரேஷன் ஸ்கூலாகவே இருந்தாலும் சில பிள்ளைகள் இன்ஷ்பெக்‌ஷன் அது, இது என்று திடிரென்று சாயங்கால வேளைகளில் அமர்ந்து இன்னொரு நோட்டைப் பார்த்து தன் நோட்டை நிரப்பிக்கொண்டிருக்கும். அந்த சமயம் மட்டும் விஜிக்கு படிப்பு மீது திடீர் கரிசனம் வந்து, ஆயா, எங்க ஸ்கூல்ல நாளை கழிச்சு யாரோ வர்ராங்களாம் ஆயா, எல்லா நோட்டுக்கும் அட்டைப்போட்டு, பாடமெல்லாம் எழுதிட்டு வர சொன்னாங்க ஆயா. அட்டை வாங்கனும் ஆயா, நோட்டு கூட வாங்கனும் ஆயா.

நொறுக்குத்தீனி வாங்கித்தின்ன இப்ப இப்டி ஒரு ஐடியா பண்ணிக்கிட்டு வந்திட்டியா, உங்கப்பன் வருவான் பாட்டு பாடிக்கிட்டு, அவன் வந்தான்னா க்கேளு நோட்டு, அட்டை, அது இதெல்லாம். எங்கிட்ட காசு இல்ல, எனக்கு சம்பாரிச்சு கொட்டுறவங்களும் யாருமில்ல தாயே.

இல்ல ஆயா, நெஜம்மாவே எங்க டீச்சர் சொல்லி அனுப்புனாங்க ஆயா, நீ வேணும்னா ராணி, தேவா, அம்மு எல்லாரையும் கேட்டுப்பாரு.

ம்க்கும், நீப்போம்மா, எங்கிட்ட காசு இல்ல, உங்கப்பன் வந்தான்னா கேளு, என்னக் குடுக்கறானோ அத வாங்கிக்கோ, என்ன ஆள உடு.








இந்த அண்ட சராசரத்தில் விஜி பயப்படும் ஒரே ஒரு ஆள் ஒல்லியான அவளின் அப்பா. மாணிக்கம் என்ற பெயர் கொண்டு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த அவருக்கு விஜியின் மீது எப்போதும் பாசமிருந்ததில்லை. காரணம், ஒரு தமிழ் படத்தில் வருவதைப்போன்று மிகவும் அற்பமானது. நம்பத்தயாராகுங்கள்.

விஜி பிறந்த போது கலர், முக ஜாடை என அப்படியே அவளின் அம்மாவை உரித்து வந்திருந்தாள். பிரசவக்க்கோளாறோ, உடல் நலக்கோளாறோ விஜியின் அம்மா இறந்துவிட, ஆத்தாளாட்டமே இருந்து அவ உயிர வாங்கிருச்சு என்ற ஒற்றை வார்த்தை போதுமானதாய் இருந்தது மாணிக்கத்துக்கு விஜியை புறக்கணிக்க. அது மட்டுமே காரணமாவென்றும் தெரியவில்லை, அதற்குப்பிறகு அவருக்கு இரண்டு மனைவிகள், ஒருவர் கூட அவரோடு ஒரு வருஷம் சேர்ந்தார்ப்போல குடும்பம் நடத்தவில்லை. குடித்துவிட்டு இரவெல்லாம் முதல் மனைவி புராணம் பாடிக்கொண்டிருக்கும் அவரோடு குடும்பம் நடத்த மற்ற இருவருக்கும் மன தைரியமில்லை. கொஞ்சம் விஷய ஞானமுள்ள மூன்றாவது மனைவி மட்டும் இந்த ஆள் ஒரு சைக்கோ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள வாசலில் அனைவருமே மிகவும் ப்ரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம் சம்சாரத்துக்கும் தனக்கும் எந்தவொரு குடுப்பினையுமில்லை என்று தெரிந்து கொண்ட பிறகும் அவர் விஜி மீது அதே மாறாக்கோபத்தோடே இருந்தார்.

எப்போதும் போல தள்ளாடிக்கொண்டே வந்து காக்கி சட்டையைக் கழற்றினார் மாணிக்கம்.

நோட்டு வேணும், நோட்டு வாங்கணும்..ப்பா (இந்த ப்பா என்ற உச்சரிப்பை மட்டும் கொஞ்சம் வால்யூம் குறைத்துக்கேளுங்கள்) ஏனெனில் விஜி தன் அப்பாவை கூப்பிடும்போது ப்பா என்ற வார்த்தையை அனேகமாக முழுங்கிவிடுவாள். உச்சரிப்பே வெளியே கேட்காத தொனி. அந்த நேரத்தில் விஜியின் பரிதாப முகமும், உடைந்த குரலும் பார்க்கும் நமக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டு செய்யும்.

கா விட்டிருந்தாலும் பரவாயில்லை, நம்ம கிட்ட இருக்குற நோட்டுல எதையாவது ஒண்ணை நம்ப அம்மாவுக்குத் தெரியாம கொடுத்துடலாமா என்றே இந்த வீட்டுத் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் என்னை எண்ணச்செய்யும். அனேகமாக விஜியோடு விட்ட காவெல்லாம் பழமாய் போனது அவள் அப்பாவிடம் அடிவாங்கி முடித்தபின்பு முகம் கோணி அழும் நிலை கண்ட பின்னர்தான்.

என்னாதூ, நோட்டா, எங்க இருக்குது, எல்லார்மே போயிட்டாளுங்க என்ன விட்டுட்டு, யாருமே இல்ல இப்ப என் கூட, தோ பாரு இந்த போட்டோல இருக்கர்து யாரு தெரியுதா என்று விஜியின் அம்மா போட்டோவை காண்பித்து ஆயிரத்து ஐந்நூறு சொச்சமாவது முறை மீண்டும் தான் இத்தனை காலம் பேசிய உரையையே மீண்டும் துவங்கியிருப்பார். விஜி பரிதாபமாய் மூலையில் உட்கார்ந்திருக்கும். இப்படி ஆரம்பித்த அவரின் உரை கடைசியில் விஜியின் மீது உதையாய் முடியும். வெளியே அமர்ந்திருக்கும் அவளின் ஆயா, இன்னும் இருக்கும் மற்றவர்கள் போய் மடக்கினாலே ஒழிய விஜி வெளியே வருவது சிரமம்தான்.

அன்று இரவு சாப்பிடாமலே சுருண்டுப் படுத்துக்கொள்ளும். எப்போதும் எரிந்து விழும் ஆயாக்கூட சாப்பிடுடாம்மா என்றபடியே தட்டில் சோற்றை பிசையும்.









ப்போ, உன்னாலதானே நா அடிவாங்குனேன், நீ காசு குடுத்திருந்தா நான் அடிவாங்கியிருப்பனா, ப்போ எனக்கு சோறும் வேணாம், நோட்டும் வேணாம் என்ற படி தேம்பிக்கொண்டிருக்கும்.

அவனுக்கும் எப்பதாம்மா பொறுப்பு வர்ரது. இப்படி நீ ஒன்னும் அவங்கிட்ட கேட்காம இருந்தியானா அவனும் நமக்கின்னா செலவுன்னு எல்லாத்தையும் குடிச்சு அழிக்கிறான். எனக்கு வர்ர பென்ஷன் காசுலயும், சீட்டுக் காசுலயும் நான் எப்டி குடும்பத்த ஓட்டறது சொல்லு, அதாண்டா கேக்க சொன்னேன், நீ சாப்புடுறா எம்மா என்று சோறை உருட்டி வைத்துக்கொண்டு அழும் விஜியை தேற்றிக்கொண்டிருப்பாள் விஜியின் ஆயா எனப்படும் ஆண்டாளம்மாள் என்ற சீட்டுக்காரம்மா.

பாதி சாப்பிட்டும், சாப்பிடாமலும் படுக்கும் விஜிக்கு படிப்பு மீது இருக்கும் பந்தம் அறுந்தது இப்படித்தான். அந்தத்தருணம் பார்க்க பாவமாய் தோன்றினாலும் விஜிக்கென்றே பிரத்தியேகமாய் சில கெட்ட பழக்கங்கள் இருந்தன. அதிலொன்று திருடுவது. இன்னொன்று நம்ப முடியாத ஆனால் நம்ப வைக்கக்கூடிய அளவில் பொய் சொல்வது. வீட்டில் காசு வைத்திருந்தால் திருடுவது, கடைகளுக்குப் போனால் திருடுவது என்பது விஜிக்கு கை வந்த கலை. திருடும் காசு அனேகமாய் நொறுக்குத்தீனிக்கும்,அடுத்தாற்போல அழகு சாதனங்களுக்குமே சரியாய் இருக்கும். விஜி திருடும் கடைகளும் பேன்ஸி ஸ்டோர், எதையெடுத்தாலும் அஞ்சு ரூபா என்று அது போன்ற பொருட்களை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும் கடையில் தான்.

தீபாவளி, பொங்கல் சமயங்களில் நாங்களெல்லாம் ஒன்றாய் வளையல், மணி, நெகப்பாலீஷ் வாங்க கடைக்கு போக நேர்ந்தால் விஜி மட்டும் தன் ஆயா தந்திருந்த காசுக்கும் அதிகமாய்தான் எடுத்திருக்கும்?!. சில சமயம் ஆயா கொடுத்த காசில் மீதி வைத்துக்கொள்வதுமுண்டு. திருடியதாய் விஜி எப்போதும் எங்களிடம் காமித்துக்கொள்ளாது, ஆனால் எங்கள் அனைவருக்குமே தெரியும் அது திருடிய பொருட்கள் தான் என்று.

எல்லாமே நாங்கள் பயன்படுத்தியிராத வினோதமான பொருட்களாய் இருக்கும். ரோஸ் பவுடர், கன்னங்களிலும், கண்களுக்கு மீதும் போடும் ஒரு மாதிரி கலர், அப்புறம் அதுக்கு மேல் போடப்படும் ஜிகினா, லிப்ஸ்டிக், அதுக்கு மேலே போடப்படும் எண்ணெய் மாதிரியான ஒரு திரவம் எல்லாம் சின்ன சின்னப்புட்டியில் கலர் கலராய் பார்க்க அழகாய் இருக்கும். நிச்சயமாய் அது ஒருநாள் கொள்ளையாய் இருக்காது. வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு கடைகள் என வெவ்வேறு அக்காக்களோடு கடைக்குப்போகும் போது அடித்ததாய் இருக்கும்.

அவையனுத்துமே ஒரு நாள் குறிப்பாய் பண்டிகையின் முதல் நாளன்று தான் வெளியே வரும். வெறும் மணியும், வளையலும் மட்டுமே மேட்சிங்காக வாங்கி வைத்துக்கொண்டு கையறு நிலையில் ஒரு மாதிரி அழுகையும் ஆற்றாமையுமாய் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் அனைவரிடமும் காட்டிவிட்டு பார்த்தியா? என்று பெருமிதம் கொள்வதில் விஜிக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது.

ஹேய், எங்கப்பா வாங்குன, எவ்ளப்பா, ஏ, ஏய், விஜி, இது மட்டும் கொஞ்சோண்டு எனக்குத் தரியாப்பா என்றபடி விஜியை நாயகியாய் நிறுத்தி நாங்களெல்லாம் பரிதாபமாய் கையேந்தும் போது, இல்லப்பா எங்க ஆயாக்கு தெரிஞ்சா திட்டும் என்று சொல்லும் விஜியின் மனது எங்களனைவரையும் அந்தக்கணம் ஜெயித்துவிட்டதற்கான திருப்தியை இந்த நிகழ்வின் மூலம் அடைந்திருக்க்கூடும்.








அதது வாங்கியாரத வெளிய எடுத்தாருதுங்களா, நீ மட்டும் வாங்கித் தந்தா வெச்சிக் கடைப்பரப்பி காமிச்சிக்கிட்டு இர்ரு என்று விஜி ஆயாவின் கணீர் குரல் பெரிய வட்டத்தில் சப்பணமிட்டுக்கொண்டு காணாததை கண்டதாய் விழி விரித்துக்கொண்டிருக்கும் எங்களை நோக்கி ஒலிக்கும். ஒருவரையொருவர் கேள்விக்குறிகளுடனும், நமுட்டுச்சிரிப்புடனும் பார்த்துவிட்டு கலைந்து போவோம். விஜியின் ஆயாவால் விஜிக்கு இப்படி வாங்கித் தரமுடியாதென்பதும்,மேலும் நம்மப் போட்டு பிராண்டாம இருந்தா சரி என்று ரகசியமாய் விஜியின் திருட்டுக்கு அவர்கள் ஒன்றும் சொல்லாமல் உடனிருப்பதும் எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் அம்மாக்களுக்கும் தெரியும். அதனாலேயே விஜியோடு அதிகம் அளவளாவக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.அவளோடு அதிகம் ஒட்டுவதோ, குறிப்பாய் அவளோடு ஜோடி போட்டுக்கொண்டு கடைக்குப்போவதென்பது கூடவே கூடாது. மீறினால் முதுகுத்தோல் பழுத்துவிடும் அபாயமிருப்பதால் அனேக நேரங்களில் ரகசிய சமிக்ஞைகள் மூலம் கோவிலுக்கு போகும் சந்திப்புகள் தாம் சாத்தியப்பட்டன.

இயல்பாகவே சிகப்பாகவும் கொஞ்சம் உயரமாகவும் இருக்கும் விஜி ட்ரஸ் செய்யும் அழகே தனி. குறைந்த தலைமுடிதான் என்றாலும் அழுக்கு நிறைந்த சீப்பின் அடர்த்தியான சிறுபற்களால் முன்னால் இருக்கும் சிறுசிறு முடிகளை அப்படியே நீவி இரண்டு பக்கமும் படிய வி ஷேப்பில் செய்து கொள்ளும். இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் உருளையாய் முடியை அழகாய் சுருட்டி விட்டுக்கொள்ளும். ட்ரஸுக்கு மேட்சாய் விதவிதமாய் ஒட்ற பொட்டுக்கள் வைத்துக்கொள்ளும். கண்களின் ரெண்டு பக்கமும் இழுத்து விடப்பட்ட மை, மெல்லிய புருவங்களில் அடர்த்தியாய் தடவ மைப்பென்சில் (அது ஹைப்ரோ பென்சில் என்பது அதற்கும் ரொம்ப நாளைக்குப் பிறகுதான் இந்த லூசுக்கு தெரியவந்தது!) கன்னங்களில் ஜிகினா போட்டுக்கொள்ளும். உதட்டில் சிகப்புச்சாயம், அதற்கு மேல் வழவழப்பு எண்ணெய் என பார்க்கவே வித்தியாசமாய் இருக்கும், ஆனால் அழகாய், மிக அழகாய் தெரியும்.

நல்லா ஆட்டக்காரிச்சி மாதிரி இருக்குப்பாரு என்றே நிறைய அம்மாக்களும் வளர்ந்த அக்காக்களும் முணுமுணுப்பார்கள். எல்லாம் போக விஜிக்கு எங்கேயோ ஒரு கடையில் பார்த்த மேக்கப் செட்டின் மீது அதிக ஆசை வந்திருந்தது. திருட்டினால் மட்டுமே நிறைய பொருட்களை கை கொள்ள முடியாததென்பது தெரிந்தபோது விஜி எட்டாம் வகுப்பு அரைப்பரிட்சை லீவிலேயே அந்தத் தெரு அக்காக்கள் சிலரோடு சேர்ந்து எக்ஸ்போர்ட் ஹெல்ப்பர் வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டது. விஜியின் ஆயாவும் ஏதும் சொல்லவில்லை, சொல்லப்போனால் அவர்கள் எதிர்பார்த்ததும் அதுதான். விஜி கல்யாணத்துக்கு விஜியே சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமிருந்ததும் ஒரு காரணம்.

சம்பளம் ஆயாவிற்கு, ஓவர் டைம் சம்பளம் தனது மேக்கப்பிற்கு என்று அப்போதே வகைப் பிரிக்கத் தெரிந்திருந்தது விஜிக்கு. எல்லாம் போக விஜிக்கு தன்னை எல்லோரும் திரும்பிப் பார்க்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமிருந்தது. நாங்கள் அண்ணன்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களையெல்லாம், விஜி, ஏ, அவன் என்னப் பார்க்கறாண்டி, வேலைக்குப் போகும் போது சைக்கிள்ள பின்னாடியே வர்ராண்டி என்பதாய் கதை சொல்லும்.

லவ்வு, லவ்வு என்று சொல்லிக்கொண்டு அங்கொன்றும், இங்கொன்றுமாய் தெருவில் சில அண்ணாக்களும், அக்காக்களும் ஆளுக்கொருவரை இழுத்துக்கொண்டு ஓடி அரும்பாகி, மொட்டாகி, பூவாகிக்கொண்டிருந்த எங்களுக்கு காதலை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

ஓஹ், அப்ப ’அது’வா இது என்றபடியே நாங்கள் குசுகுசுப்பது விஜிக்கு புளகாங்கிதத்தை தந்தது. அவன், இவன் என்று ஏக வசனத்தில் ஒரு கட்டத்தில் தெருவில் பாதிப்பேர் தன் பின்னாடி சுற்றுவதாய் பாவனை செய்துகொண்டு அளந்து விட்டுக்கொண்டிருந்தது. அந்த வயதில் எங்களுக்கும் ஒரு குறுகுறுப்பு தேவைப்பட்டதால் அப்டியா என்று வாய் பிளந்து கேட்க அந்தக் கதைகள் மிக சுவாரசியமாய் இருந்தது.

ஆனால் விஜி குறிப்பிட்ட அனைவருமே வெவ்வேறு அக்காக்களைத் தான் கல்யாணம் செய்து கொண்டார்கள். அழகாய் இருந்தாலும் விஜிக்கு காதல் தோல்வி என்று ஒன்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று பின்னாளில் தான் எங்களுக்குத் தெரியவந்தது. பாவாடை தாவணி முடிந்து, எங்களுக்கு புடவையை அறிமுகப்படுத்தியது விஜிதான். அதற்குப்பின்னர்தான் விஜி எங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே போனது. நட்பு என்று சொல்லிக்கொண்டிருந்த எங்களின் வட்டம் தாண்டி விஜிக்கு வெளி வட்டம் அதிகமாகத் தொடங்கியது.

தெருவில் நடந்த ஒரு பொங்கல் பண்டிகைக்கொண்டாட்டத்தின் போதுதான் விஜிக்கு வாழ்வின் இன்னொரு பக்கமும் ஆரம்பித்தது. தமிழர் திருநாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாகக்கொண்டாடப் படவேண்டும் என்ற சில இயக்கங்களின் சினிமா பாட்டு கொண்டாட்டத்தில் இணைந்திருந்த விஜி தனது அதிக பட்ச குதூகலத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு சூப்பராய் டேன்ஸ் ஆடியதாய் நிகழ்வுகள் காதுக்கு வந்த வண்ணமிருந்தன. அந்த ஆட்டம் அது வாழ்க்கையே மாற்றும் என்று எங்களுக்கு மட்டுமல்ல விஜிக்கும் தெரியாது.

ஒரு கொண்டாட்டம், ஒரு பாட்டு, ஒரு ஆட்டம், பொதுவில் போட்ட ஆட்டத்திற்குப் பிறகு விஜியின் கன்னம் நோக்கி நீண்ட ஒரு ஆணின் அடி. தெருவில் ஏன் இப்படி ஆடுகிறாய் என்று அடிக்குப்பின்னர் ஒலித்த குரலிலும், அடியிலும் தான் இதுவரை யாரிடம் அனுபவிக்காத அக்கறை இருப்பதாய்ப்பட்டது. அதுவரை ஆயாவிடமும், அப்பாவிடமும் வாங்கிய அடியைத் தவிர்த்து இந்த அடி பரவசம் தந்தது. அடித்த கரமே தன்னை அணைக்கும், காக்கும் என்று நம்பியது. அம்மா(க்கள்) இல்லாத, அப்பாவின் அன்புமற்று, ஆயாவின் அரவணைப்பு மட்டுமே தனக்கு உண்டு என்ற நிலையையே தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் காதலில் ஜெயித்தாள். அடுத்த பொங்கல் பண்டிகை வரும் போது விஜி கல்யாணமாகி குழந்தை பெறுவதற்கும் தயாராகி இருந்தாள்.







ஆனால் தன்னை நோக்கி நீண்ட நேசக்கரங்கள் பின்னாளில் அடிதடி, வெத்து, குட்டுக்களில் உடந்தையாயிருக்கும் என்பதோ அதனைத் தொடர்ந்து அவள் மீண்டும் தன் வாழ்க்கையின் முதல் சுற்றுக்கே போகப்போகிறாள் என்பதோ அப்போது அவளறியாதது.

தன்னை அழகுப்படுத்திக்கொள்ள மெனக்கெட்ட அளவுக்குக்கூட விஜி தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க மெனக்கெடவில்லையோ? என்ன மெனக்கெட்டு என்ன?

புரியாத புதிராய் எந்த நிமிடம் சந்தோஷம், எந்த நிமிடம் துக்கம் என கண்ணெதிரே வரப்போகும் அடுத்த நொடியே நமக்கு தெரியாமல் மறைவாய் இருக்கும் வாழ்க்கை சிலருக்கு வரம், பலருக்கு சாபம். கிடைத்த சாபத்தையும் வரமாய் மாற்றிக்கொண்டவர்கள் சிலர். சாபத்தை தலையெழுத்தாக ஏந்திக்கொண்டு சகித்துக்கொண்டவர்கள் தான் பெரும்பாலும். விஜி பெரும்பாலானவர்களில் ஒருவளாய் உலவுகிறாள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !