Tuesday, January 1, 2019

அதிலென்ன சந்தேகம் ?

உறையூர் கிராமத்தில் பொன்னன் என்றொருவன் வசித்து வந்தான். அவன் மற்றவர்களை ஏமாற்றியே தனது ஜீவனத்தை நடத்தி வந்தான். அந்த கிராமத்தில் அவனது குணம் அறிந்த எவரும் அவனுக்கு  உதவுவதற்கு முன்வரவில்லை. அவனது மூளை குறுக்கு வழியில் சிந்திக்க ஆரம்பித்தது. எந்த கஷ்டமும் இல்லாமல்  பணம் சம்பாதிக்க வழி உண்டா என்று சிந்திக்க ஆரம்பித்தான். அவனது குறுக்கு புத்தி மூளையில் ஒரு யோசனை உதித்தது.

வாரக் கடைசியில் கூடும் சந்தைக்குச் சென்றவன், சந்தையிலிருந்து ஒரு பச்சைக் கிளியை வாங்கி வந்தான். கிளிக்கு "அதிலென்ன சந்தேகம் ? " என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டும் பேசக் கற்றுக் கொடுத்தான். ஒரு சில நாட்களில், கிளியும் அவ்வார்த்தையை நன்கு கற்றுக் கொண்டது. அவன் என்ன கேட்டாலும் கிளி அந்த ஒற்றை வாக்கியத்தை மட்டுமே சொல்லும்.

சந்தை கூடும் ஒரு நாளுக்கு முன்னதாக சந்தை மைதானத்திற்குச் சென்ற பொன்னன், சந்தையின் ஒரு சில இடங்களில், பூமிக்கடியில் சில தங்க நாணயங்களையும், வெள்ளி நாணயங்களையும் புதைத்து வைத்தான். தான் நாணயங்களை புதைத்து வைத்த இடங்களில், அவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் சில குறியீடுகளையும் இட்டு வைத்தான்.

அடுத்த நாள், சந்தை கூடியதும், தனது கிளியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, 

" அதிசயக் கிளி ! அதிசயக் கிளி ! " 

"மண்ணுக்குள் மறைந்திருக்கும் புதையல் பற்றிய விபரங்கள் அறிந்த அற்புதக் கிளி . வாருங்கள் ! வாருங்கள் ! " 

என்று கூவ ஆரம்பித்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் பொன்னனைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது.

"இந்த பச்சைக்  கிளி எப்படியப்பா மண்ணுக்குள் இருக்கும் புதையல் பற்றி சொல்லும் ? " என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க,

"இங்கு எங்கேனும் புதையல் இருக்கிறதா பார்க்கலாம் வாருங்கள் " என்றபடி கூட்டத்தை தன பின் அழைத்துச் சென்றான் பொன்னன்.

தான் ஏற்கனவே நாணயங்கள் புதைத்து வைத்த இடத்திற்குச் சென்றவன் , கிளியைப் பார்த்து, 

"என் அருமை பச்சைக் கிளியே ! இங்கு புதையல் இருக்கிறதா ? " என்றான்.

உடனே கிளியும் சட்டென்று " அதிலென்ன சந்தேகம் ! " என்று தன்  கீச்சுக் குரலில் சொன்னது.

உடனே அவ்விடத்தை தோண்டிப் பார்க்க, அவ்விடத்தில் பொன்னன் ஏற்கனவே புதைத்து வைத்த தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் இருந்தன.

"ஆஹா ! அற்புதக் கிளி ! அதிசயக் கிளி ! " என்று கூட்டம் ஆர்ப்பரித்தது.

" என்ன விலை ? " என்று கூட்டத்தில் ஒருவர் விசாரிக்க,

"ஐயாயிரம் பொன் ! " என்றான் பொன்னன்.

விலையைக் கேட்டதும் கூட்டம் பின்வாங்கியது. அப்போது கூட்டத்தை பிளந்து கொண்டு ஒருவன் வந்தான். அவன் தான் தனவந்தன்  செங்கையன். 

"விலை என்னப்பா சொன்ன ? " என்று கேட்டான் செங்கையன்.

மீண்டும்  "ஐயாயிரம் பொன் ! " என்றான் பொன்னன்.

உடனே, மறு பேச்சு ஏதுமில்லாமல் செங்கையன்  ஐயாயிரம் பொன் கொடுத்து கிளியை வாங்கிக் கொண்டான்.

செங்கையன்  ஓர் பெரும் தனவந்தன். எச்சில் கையால் கூட ஈ  ஓட்டாதவன். எவருக்கும் எவ்வித உதவியும் செய்ய  மாட்டான். கிடைக்கும் பணத்தை எல்லாம் கஜானாவில் பூட்டி வைத்து, அதனை அவனே இராப்பகலென கண்விழித்து காவல் காத்து வந்தான்.மென்மேலும் பணம் சேர்க்க மட்டுமே விரும்பியவன், அவன் கையில் இருந்து ஒரு பைசா செலவழிப்பதைக் கூட விரும்ப மாட்டான்.

கிளியை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் , முதல் வேலையாக தன்  வீட்டின் கதவுகளை அடைத்தான்.கிளியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் ஒரு மூலைக்குச் சென்றான்.

" இங்கே புதையல் இருக்கிறதா ? " என்றான்.

உடனே கிளியும் தனக்குத் தெரிந்த " அதிலென்ன சந்தேகம் ? " என்ற வார்த்தையை சொன்னது.

அவ்விடத்தை தோண்டியவன், அங்கே புதையல் இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்றான். ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு, வேறு இடத்தைக் காண்பித்து அவ்விடத்தில் புதையல் உள்ளதா என்றான்.

கிளி  வழக்கம் போல் "அதிலென்ன சந்தேகம் ? " என்றே சொன்னது. இப்படியே வீட்டின் பல இடங்களை தோண்டிப் பார்த்து ஒன்றும் கிடைக்கவில்லை. வீடே முழுதும் இடிக்கப் பட்டு விட்டது. எங்கும் புதையல் கிடைக்கவில்லை.

அப்போது தான் செங்கையனுக்கு கிளி இவ்விரு வார்த்தைகளை மட்டும் தான் கற்றுக் கொண்டுள்ளதோ என்று சந்தேகம் வந்தது.

ஆத்திரத்துடன் செங்கையன்  கிளியைப் பார்த்து, " கிளியே ! என் வாயில் மண்ணை அள்ளிப் போடவா நீ வந்து சேர்ந்தாய் ? " என்றான்.

உடனே கிளி சற்றும் யோசிக்காமல் " அதிலென்ன சந்தேகம் ? " என்றது.

தலையில் கைவைத்தவாறு  கீழே விழுந்தான் செங்கையன்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !