Tuesday, January 1, 2019

ஆத்திரம் விளைவித்த இழப்பு.

ஒரு கிராமத்தில் தையற்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவரது கடை இருந்த வீதியின் வழியே அன்றாடம் அந்த கிராமத்தின் கோயில் யானை செல்வது வழக்கம். அப்போது, பலரும் யானைக்கு பலவகையான உணவு பண்டங்கள் கொடுப்பது வழக்கம். பண்டங்களை பெற்றுக் கொண்டு மக்களுக்கு யானை ஆசிர்வாதம் வழங்கும்.


தையற்காரர் அன்றாடம் யானைக்கு வாழைப்பழம் வழங்குவார். இது பலகாலமாக தொடர்ந்து வந்த பழக்கம் ஆதலால்,  யானை நாள் தவறாமல் வாழைப்பழம் பெறுவதற்காக தையற்காரரின் கடை முன்  வந்து  நிற்கும்.


ஒருநாள்,  வழக்கம் போல் யானை கடையின் முன் வந்து நின்றது. அது பண்டிகை காலம் ஆதலால், தையற்காரர்  மிகவும் மும்முரமாக தனது வேலையில்  ஈடுபட்டிருந்தார். யானைக்கு பழம் எடுத்து வைக்க மறந்து விட்டிருந்தார். யானையோ அங்கேயே நின்று கொண்டிருந்தது.  " போ ! போ ! " என்று துரத்தினார் தையற்காரர். யானையோ செல்வதாய் தெரியவில்லை. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களோ, யானையைக் கண்டு பயந்தனர்.  கடைக்கு வராது  திரும்பிச் சென்றனர்.


தன் வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு ஆத்திரம் கொண்ட தையற்காரர், தன் கையில் வைத்து தைத்துக் கொண்டிருந்த ஊசியால் , யானையின் தும்பிக்கையில்  குத்தி விட்டார்.  வலி  பொறுக்க முடியாது யானை பிளிறியது. அதன் கண்களில் நீர் வழிந்தோடியது. அமைதியாக அவ்விடத்தை விட்டு சென்று விட்டது.


நேராக கோயில் குளக்கரைக்கு சென்ற யானை, நீரருந்தி தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டது. ஆனாலும், அதற்கு வலியும் ஆத்திரமும் குறையவில்லை. தன்  தும்பிக்கையால், நீரை நன்கு கலக்கி, சேறும் சகதியுமாக  தனது தும்பிக்கையில் நிரப்பிக் கொண்டது. ஆத்திரத்துடன்,  வீதியில் ஓடி வந்தது. யானை ஓடி  வருவதைக் கண்ட மக்கள் நாலாபுறமும் சிதறி  ஓடினர். ஓடி வந்த யானை தையற்காரரின் கடை முன் வந்து, வேகமாய் தனது துதிக்கையில் இருந்த சேற்றுத்  தண்ணீரை, கடையிலிருந்த புத்தம் புது துணிமணிகளின் மீது இறைத்தது.


புது துணிகள் அனைத்தும் பாழாகிப் போனதால், தையற்காரர் மீண்டும் வேறு புது துணிகளை வாங்கி, தைக்க கொடுத்தவர்கட்கு மீண்டும் தைத்துக் கொடுக்க வேண்டியிற்று.

ஆத்திரம், ஒரு மனிதனின் நற்பண்புகளையும், நல்லியல்புகளையும் ஒரு நொடியில் கெடுத்து விடும். 

வினை விதைத்தவன், வினை அறுப்பான்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !