”கணேஷ், நான் கேள்விப்பட்டது உண்மையா?”.. பாரதியின் குரலிலிருந்த கோபத்தை உடனடியாக உணர்ந்தான் கணேஷ். எதைப்பற்றிக் கேட்கிறாள் என்று உள் மனது சொல்ல, வயிற்றிற்கடியில் ஒரு தீப்பந்து உருண்டு தொண்டைவரை வந்ததுபோல் உணர்ந்தான். அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா என்று மனது பயமுறுத்த, அதுதான் என்று முழுதாகத் தெரியும்வரை, தானாக எதுவும் வாய்விடுவதில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் இருந்தான்.
“எதப்பத்தி கேக்ற, பாரதி” … குரலில் வழக்கத்திற்கதிகமான குழைவை ஏற்படுத்திக் கொண்டு கேட்டான் கணேஷ். “நோக்கு நன்னாத் தெரியும் நான் எதப்பத்திக் கேக்குறேன்னு… என்னண்ட உன் ஸ்மார்ட்னஸ காட்டாத” என்றவள் தொடர்ந்து முறைத்துக் கொண்டிருந்தாள். “நோ பாரு (சில சமயங்களில், பாரதியைச் செல்லமாய் அழைக்கும் பெயர்) நேக்குப் புரியல, நீயே சொல்லிடேன்” என்று தனது விடாப்பிடித்தனத்தைத் தொடர்ந்தான்.
“நேத்தி நைட் நீ எங்க போயிருந்த?” தான் சந்தேகப்பட்டது உறுதியானது என்று புரிய ஆரம்பித்தது அவனுக்கு. “ஏன், ஆத்துலதான் இருந்தேன், ஏன் கேக்ற?” தொடர்ந்தது அவனது விடாப்பிடி. இந்த முறை சற்று உறுதி குறைந்திருப்பது குரலில் விளங்கியது.
“லாஸ்ட் சான்ஸ்.. யூ நோ வாட் ஐம் ரெஃபெரிங் டு…. நோக்கு நன்னாத் தெரியும், இதுக்கு மேல நடிக்காத… சீ, அவ்வளவு மோசமானவனா நீ? அவ்வளவு வக்ர ஆசையா இந்த வயசிலேயே?”
பொரிந்து தள்ளிய பாரதியைப் பயமுடன் பார்த்த கணேஷால் அவளது கண்களைச் சந்திக்க இயலவில்லை. இதற்கு மேலும் தெரியாததுபோல் நடிப்பதால் பயனில்லை என்பதை உணர்ந்த அவன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சரணாகதித் தத்துவமே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து விட்டான்.
“பாரு, ஐம் ரியல்லி சாரி.. நீ சொல்றது நேக்குப் புரியர்து. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கம்பெல் பண்ணினா, அவாளண்ட ரொம்ப ரெஃப்யூஸ் பண்ண முடியலை… மத்தபடி…” என்று அவன் சொல்ல வந்ததை முடிக்குமுன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று ஆவேசமாய்க் கத்தத் தொடங்கினாள் பாரதி.
“இல்லை, நான் கேள்விப்பட்டது நிஜமில்லைனு இருக்கணும்னு நான் வேண்டாத தெய்வமெதுவுமில்லை…. கேள்விப்பட்ட மூணு மணி நேரமா என் மனசு கடந்து எப்படி அடிச்சுண்டுது தெரியுமா? என் கணேஷ் அப்படிச் சீப்பானவனா இருக்க மாட்டான்னு நானும் எவ்வளவோ நேக்குள்ளயே சொல்லிண்ட்ருந்தேன்… சீ.. இவ்ளவுதானா? நீயும் மத்தவா போலதானா?.. நேக்கு இந்த பூமியே பாழாப்போட்டும்னு தோண்றது.. ஆம்பளேள் சகவாசமே வேண்டான்னு தோண்றது…” புலம்பலில் கோபம், ஏமாற்றம், அழுகை, விரக்தி எல்லாம் தொனிக்கப் பொறிந்து தள்ளிக் கொண்டிருந்தாள் பாரதி.
நிலைகுலைந்துபோன கணேஷிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.. சற்று அருகில் நெருங்கி, தோளில் கை வைத்துச் சமாதானம் செய்ய முற்பட்டான். வெடுக்கென்று அவனது கையைத் தள்ளிவிட்ட பாரதி, “தொடாத என்ன.. தொட்டனா நான் கொலை பண்ணவும் தயங்க மாட்டேன்”.
பொதுவாக தங்கமான குணங்களைக் கொண்டிருந்த பாரதி கோபப்பட்டு பார்த்ததில்லை. இரண்டு வருடங்களாகக் காதலித்துக் கொண்டிருக்கும் அவர்களிருவரிடம் பெரிதாகச் சண்டை வந்ததில்லை. சிறிது சிறிதான சண்டைகளுக்கும் முக்கிய காரணம் கணேஷாகத்தான் இருப்பான். அந்தச் சண்டைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது பாரதியாகத்தான் இருக்கும். மிகவும் ஆதர்சமான காதலர்கள் என்றே சொல்ல வேண்டும். தினமும் அந்தச் சிவன் கோயிலின் பக்கவாட்டில் அமைந்துள்ள குளக்கரையில், பெரிதான ஆளரவம் இல்லாத ஒரு மூலையில், ஆளவடியில் (ஆலவடி என்று பேச்சுத்தமிழில் மாறிய சொல்) இருவரும் அமர்ந்து உரையாடுவது வழக்கம். கணேஷின் மனதில் அந்தத் தனிமை தரும் சஞ்சலங்கள் எழுத்தில் எழுத முடியாதவை. பாரதி இதனை உணராதவள். தன் காதலன் சராசரி ஆண்மகனல்ல, மனதைக் கட்டுப்படுத்திய ஒரு சரித்திர புருஷன் என்ற நினைப்பிலிருப்பவள். இந்த நினைப்பினாலே, அவ்வளவு ஒதுக்குப்புறத்தில் சந்திப்பதற்கும் அவள் சம்மதித்திருந்தாள்.
இவர்களின் காதல் கணேஷ் வீட்டில் மறைத்தே வைக்கப்பட்டிருந்தது. இவர்கள்
இருவரும் நல்ல நண்பர்கள் என்று மட்டுமே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதையும் தன் தந்தையிடம் மறைக்கக்கூடாது என்ற எண்ணத்திலிருந்த பாரதி, முழுவதும் அவரிடம் சொல்லியிருந்தாள். மிகுந்த முற்போக்குச் சிந்தனை கொண்டிருந்த அவர், “நேக்கு உம்பேர்ல நெறைய நம்பிக்க இருக்கு குழந்த… கணேஷே அத்துமீறினாலும் நீ சமாளிச்சுப்ப, நேக்குத் தெரியும்.” என்று சொல்லுவார். அவரின் நம்பிக்கைக்கு ஒரு துளியும் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறாள்.
பாரதியின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருந்தது. “அந்தக் கண்றாவி எப்படி இருக்கும்னு நான் கேள்விப்பட்ருக்கேன்… அத்தனை பொம்மணாட்டி மோகமா நோக்கு? அதுவும் இருபது வயசுல? அப்ப, நம்ம மாத்திரம் இருக்கறச்ச என்னையும் அதேமாதிரிதானே பாத்திருப்ப.. வெறும் உடம்புக்காகத்தான் என்ன காதலிக்கிறியா?” புலம்பல் பழிபோடும் படலத்திற்கு மாறியிருந்தது.
“கம்மான் பாரதி… அது எவ்வளவு பழமையான கலை தெரியுமா? முழுசா அந்தக் கலையை ரசிக்கலாம்னுதான் போனேன்.. ஆனா… அங்க ரொம்ப வேற மாதிரியா…….. ஏதோ ஒரு சின்ன சபலம்.. மனுஷன ஒரு நிமிஷம் மாத்திடுத்து, அதுக்காக இப்டி எல்லாம் பேசாதம்மா.. நான் உம்மேல வெச்சிருக்கிற லவ் எவ்வளவுனு நேக்கே சொல்லத் தெரியல.. ப்ளீஸ்” அந்த வார்த்தையில் உண்மையிருந்தாலும், அவளது இளமை, உடலழகு இவற்றைப்பற்றி அவன் நினைக்காத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவளுக்கு மட்டும் தெரிந்தால், நெருப்பாக எரித்து விடுவாள் என்று உணர்ந்திருந்தான். நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து செய்த சாதாரணமான இந்தச் செயலுக்கே இவ்வளவு கோபப்படும் இவள், அருகிலிருக்கும்போது அரசல் புரசலாய் உடலழகை ரசித்தது தெரிந்தால் என்ன நடக்கும். நினைக்கையில் சப்தநாடிகளும் ஒடுங்கியவனான் அவன்.
சரி அப்படி என்னதான் செய்தான் அவன்?
அவனது ஊரில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. மாரியம்மன் கோயிலுக்கு என நிகழும் இந்தத் திருவிழா பத்து நாட்கள் மிகவும் விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகள் நடத்துவர். மெல்லிசைக் கச்சேரி, கூத்து, காவடியாட்டம் என்ற நிகழ்ச்சிகளுடன் ‘கரகாட்ட’ நிகழ்ச்சியையும் நடத்துவர். ‘கரகாட்டம்’ என்றவுடன் கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு, அந்தக் கரகம் கீழே விழுந்துவிடாமல் கவனமாய்ப் பல நடன வளைவுகளைக் காட்டும் திறமையான கிராமியக் கலை நினைவுக்கு வருகிறது அல்லவா. ஆனால் இந்தக் கரகாட்டம் அப்படிப் பட்டதல்ல. உண்மையான கரகாட்டம் பெரிதளவில் நலிந்துவர, கலைக்காகவென்றிருந்த பல கலைஞர்கள் ஒதுங்கிவிட, இந்தக் கலையைப் பெயராக வைத்து, உடல் பாகங்களைக் காட்டி, ஆபாச ஆசைகளுக்குத் தீனி போடும் ஒருவித நிகழ்ச்சியாக இது மாறிவிட்டிருந்தது. மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் கோயிலருகே போடப்பட்டிருந்த மேடைகளிலோ, கோயிலுக்கருகே உள்ள பெரிய திடல்களிலோ நடைபெறுகையில், இந்த நிகழ்ச்சி மட்டும் ஊரின் மத்தியில் உள்ள தெரு முனைகளில், முச்சந்திகளில், நான்கு தெருக்கள் கூடும் இடங்களில் என மக்கள் சுற்றி நின்று பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக இவை இரவு பத்து மணிக்கு மேல் நடைபெறும். குழந்தைகளும், பெண்களும் வீடுகளுக்குள் அடங்கிய பின்னர் ஆண்கள் மட்டும் சுற்றி நின்று ரசிக்கும் வண்ணம் அமைக்கப்படும்.
கணேஷின் நண்பர்கள் அவனை அழைத்தபோது, அவனுக்கு இதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. ஏதோ ஒரு கிராமியக் கலையைப் பார்த்து ரசிப்பதற்காகப் போகிறோம் என்று நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அப்பாவியல்ல அவன். ஆனால் அந்தச் சமாதானம் பாரதியின் மனதில் நல்ல விளைவை உண்டுசெய்யும் என்ற நம்பிக்கையில் அவன் சொன்ன சரளமான பொய்யது.
அங்கே நிகழ்த்தப்பட்ட காட்சிகளைப் பார்க்கையில், கணேஷின் உள்மன வக்ரம் அனைத்தும் தலைவிரித்து ஆடத் தொடங்கின. பெரும்பாலும் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் உள்ளூர்ப் பெரிய மனிதர்கள், பணக்காரர்கள். நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து, நிகழ்ச்சி நடத்துபவர்களிடமும் தொடர்பு வைத்துக் கொள்ளுமளவுக்கு வேறுபல திட்டங்களுடன் இருப்பவர்கள். கூடி நின்று ரசிக்கும் கூட்டங்களில் பதினாறு தொடங்கி தொண்ணூறு வரை அனைத்தும் அடக்கம். முதன்முதலில் பார்க்கையில் மட்டும் சற்று வெட்கமாக இருக்கக்கூடும். அதன்பிறகு ஒவ்வொருவரும், ‘விலகு, விலகு, எனக்கும் தெரியணும்ல’ என்று முண்டியடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பர். சிலமுறை, அருகிலிருந்தவர் மறைக்கிறார் என்ற காரணத்தால் தள்ளி விட்டு விட்டு, பின்னரே அவர் தனது பள்ளியாசிரியர் என்றுணர்ந்து ‘நைசா’க நழுவிய இளைஞர்களும் உண்டு. இந்தப் பக்கம் நின்று, பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில், எதிர்முனையில் நம் அண்ணன் நின்று கொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்து, உடனடியாகத் தலைமறைவாகி விட்டவர்களும் உண்டு.
இதுபோல பல நிகழ்வுகளில், பாரதிக்குத் தெரிந்த யாரோ பார்த்து, யாரிடமோ சொல்லி, எப்படியோ அவள் காதுகளுக்கு எட்டியது ஒன்றும் அதிசயமில்லை.
கலையாக எதிர்பார்த்துத்தான் போயிருக்கிறான் என்று கேட்டவுடன் சற்று சமாதானமானாள் பாரதி. மனதில் இன்னும் சற்றுச் சந்தேகம் இருந்தாலும், சற்றுச் சமாதானமானதால், முகம் பார்த்துப் பேச ஆரம்பித்தாள். “ஆனாலும், கலைன்னு எதிர்பார்த்துப் போனாலும், எப்படி இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம், நீ உடனே ஆத்துக்குப் போயிருக்கணும்”, சொல்லிக் கொண்டே, அவனது வலக்கரத்தைப் பாசத்துடன் பிடித்துக் கொண்டாள். சற்றுச் சமாதானமாகிறாள் என்று உணர்ந்தவுடன், சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் கணேஷ். “கரெக்ட் பாரு, நான் போயிருக்கணும்… ஆனா. இந்தப் பாழாப்போற ஆசை.. இதுக்கு முன்னால இந்த மாதிரி எதுவும்… பாத்ததில்ல… ரொம்ப பாதிச்சிடுத்து பாரு….” அந்நியோன்யத்தைப் பயன்படுத்தி, அழுக்கான விஷயங்களை நியாயப்படுத்திக் கொண்டிருந்தான் கணேஷ்…
“கணேஷ்.. நேக்குப் புரியர்து, நான் இருக்குறச்ச இன்னொருத்தி எதுக்கு” என்று கரிசனத்துடன் பேசுவாள் என்று நினைத்த கணேஷிற்கு ஏமாற்றம்தான்.
“கணேஷ்… அங்க என்ன பாத்தன்னு நேக்குத் தெரியாது… தெரியவும் வேண்டாம்… ஆனா கொஞ்சம் இமேஜின் பண்ண முடியரது… ப்ளீஸ் டோண்ட்… நோ…… இதெல்லாம் மறந்துட்டு, படிக்கிற வேலையைப் பாரு… நமக்கு அந்த ஏஜ் வரும்போது.. கல்யாணம் பண்ணிண்டு, எல்லா சுகத்தையும் கண்ட்ரோலா அனுபவிக்கலாம்… உன்னோட ஸ்டேஜ் புரிஞ்சதால நான் ஒரு கண்டிஷன் போடப்போறேன்…” என்று நிறுத்தினாள். என்ன கண்டிஷனோ என்று பயந்தபடியே அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்.
“நம்மோட படிப்பு முடியறவரைக்கும், நாம ரெண்டுபேரும் தனியாப் பாத்துக்க வேண்டாம். பப்ளிக்கா எல்லார் முன்னாலயும், பாத்துக்கறது, பேசிக்கிறது எல்லாம் ஒ.கே. லவ் கண்டின்யூ ஆகுறதும் ஓ.கே… ஆனா, தனிமையில சந்திக்க வேண்டாம்… என்ன, ஓ.கே.வா?”
கேட்டவுடன் தலை சுற்றத் தொடங்கியது கணேஷிற்கு… என்னது, ஒரே ஒரு ராத்திரி, நூறு பேருக்கு முன்னால, முண்டியடிச்சிகிட்டு, அரைகுறையா, தூரத்துல ஆடிண்டிருக்குற ஒரு பொம்மனாட்டிய ‘பாத்ததுக்கே’ இந்த பனிஷ்மெண்ட்டா?..
வாயைத் திறந்து கேட்க முடியவில்லை. சரி, சில நாட்கள் விட்டு மீண்டும் பேசி, கீசி சரி செய்து விடலாம் என்ற முடிவுடன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்.
– வெ. மதுசூதனன்.
No comments:
Post a Comment