Tuesday, December 18, 2018

மகான்கள் – கோபி கிருஷ்ணன்

 நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன்     அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை,     குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம்.     மேலோட்டமாக பார்க்க போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம்     அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப்     பயன்படுத்திக் கொள்கிறான். இதில் உறவு என்பது ஏதும் இல்லை. வன்மம்,ஒடுக்குமுறை என்ற     அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.
    இந்த மிருகங்களும் பூ பறித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது மனிதர்கள் மீதான தங்கள்     எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.இளம் பிராயத்தில் பாட்டி வீட்டில்     புறா வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் புறாக்களுக்குத் தானியம் வைக்கப் போன     என்னைப் புறா ஒன்று டொக் என விரலில் ரத்தம் வருமளவுக்கு கொட்டி விட்டது. இந்த     அனுபவம் அதிபர் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர் சமாதானப் புறாக்களைப் பறக்க     விடமாட்டார். ஒரு தடவை அலுவலக ஷெட்’டில் அமைதியாகப் புகைபிடித்துக் கொண்டிருந்த     என்னை ஒரு காகம் விருட்டென்று செவிட்டில் தனது இறக்கையால் அறைந்துவிட்டுச் சென்றது.     சிகரெட் கீழே விழ, காதை அம்மா என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். நான்கு     நாட்கள் இடது காதில் வலி. நான் என் வாழ்நாளில் எந்த ஒரு காகத்துக்கும் தீங்கு     நினைத்தது கிடையாது.
    விஷயம் தெரியாத சில அம்மாக்கள் தங்கள் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்விக்க     சிபாரிசு செய்யும் போது, ‘மூக்கும் முழியுமாகப் பெண் கிளி மாதிரி இருக்கிறாள்’     என இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே கிளி மாதிரி மூக்கும்     முழியுமாக இருந்தால் பெண் எவ்வளவு கோரமாக இருப்பாள் என்பதை இவர்கள் மறந்து     விடுகிறார்கள். அப்புறம், கிளி மாதிரி இருந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு     அலுத்துப் போகும் போது பறந்து சென்றுவிட்டால்…? திருநிறைச் செல்வ மணாளன் பாடு     திண்டாட்டம்தான். இதையெல்லாம் அம்மாக்கள் யோசிக்க வேண்டும். சும்மா பஞ்சவர்ணக் கிளி,     மயில், கவ்தாரி என்றெல்லாம் சொல்லப்படாது.
    மனித, மிருக துர்குணங்களைப் பற்றி சொன்னது போக நல்லிணக்கங்கள் மீது பார்வையைத்     திருப்புவோம்.
    வேலாயுதம் என் நண்பர். ஃபிட்டராக பணிபுரிகிறார். நிறைய நண்பர்கள் அவருக்கு. தன்     சக்திக்கு மீறி நண்பர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். பழகுவதற்கு தங்கமானவர். மீர்     சாகிப் பேட்டைக்கு போயிருந்த போது வேலாயுதம் வீட்டில் எட்டிப் பார்ப்போம் என்று     போனேன். அறையில் சாப்பிடுக் கொண்டிருந்தவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ” ஒரு     சம்பவத்தைப் பாருங்கள்” என்றார். அவர் காட்டிய கூரையின் மூலையில் குறிப்பாக     ஒன்றுமில்லை. “என்ன” என்றேன். இப்பொழுது பாருங்கள் என்றார் வேலாயுதம். “க்ளுக் க்ளுக்”     என வாயால் சத்தம் எழுப்பினார். அவர் சுட்டிய மூலையிலிருந்து மரநிற பூதாகர     பல்லியொன்று தீர்க்கமாகக் கீழே இறங்கி வந்தது. அதன் நடையில் தயக்கமில்லை,பயமில்லை,ஓர்     உறுதியும் நட்புணர்வும் தெரிந்தது. நேரே வேலாயுதம் அருகே வந்தது. அவர் ஓரிரு     பருக்கைகளைத் தரையில் சிந்தினார். ஒவ்வொரு பருக்கையாக உட்கொண்டது. ஒரு கவள அளவு     உட்கொண்ட பிறகு அது தன் இருப்பிடத்துக்குத் திரும்பியது.
    ” என் ராச் சாப்பட்டுத் தோழன்” என்றார் வேலாயுதன்.
    ” அருவருப்பாக இல்லையா..? ” என்றேன்.
    ” அன்பாயிருங்கள் எப்பொழுதும்” என்றார் வேலாயுதம் கனிவுடன்.
    ஒரு ஞாயிறு இக்பால் வந்தார் வீட்டுக்கு. ஓவிய நண்பர் எட்வர்டைப் பார்க்க போய்க்     கொண்டிருப்பதாகவும் நானும் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அமைதியான இடம்.     ஜிலுஜிலுவென்ற காற்று. இங்கும் அங்கும் நவீன கட்டிடங்கள். எட்வர்டின் அறைக்குச்     சென்றோம். தான் வரைந்த சட்டமிட்ட நவீன ஓவியங்களை எடுத்துக் காட்டினார் எட்வர்ட்.     மலைப்பும் பிரமிப்பும் என்னுள் ஏற்பட்ட பிராதன உணர்வுகள். பிறகு நிறைய நேரம் பேசிக்     கொண்டிருந்தோம்.
    ” டீ சாப்பிடுவோமே” என்றார் எட்வர்ட். கேண்டீனுக்குப் போனோம். கூட்டமே இல்லை. சொறி     பிடித்த நாய் ஒன்று எட்வர்ட் அருகே வாலாட்டிக்கொண்டு வந்தது. அவர் அதை வாஞ்சையுடன்     தடவிக் கொடுத்தார். நான் அவரைப் பார்த்தேன். என் முகபாவம் என் எண்ணத்தை     வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
    ” சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” என்றார் எட்வர்ட்.
    வேலாயுதம் வீட்டில் ஏற்பட்ட தெளிவு இப்பொழுது இரட்டிப்பு துல்லியத்துடன் உட்சென்றது.


https://tamilsirukathaistories.blogspot.com/

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !