Wednesday, December 5, 2018

முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்


Image result for LIGHT HOUSE IN CARTOON IMAGES
கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.

பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.

கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

"தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்" என்று கெஞ்சினார்.

மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் "டக்... டக்". கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். "அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று வெகு இளக்கமாகப் பேசினான்.

காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. "ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்" என்றாள்.
அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.

வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.

மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !