Thursday, December 27, 2018

அரசி...!

வெகு நேரமாய் எதுவும் தோன்றாதவனாய் அமர்ந்திருந்த அந்த காலைப் பொழுதில் காக்கைகள் கரையும் சப்தமும் வீசி அடித்துக் கொண்டிருந்த காற்றின் ஸ்பரிசமும், ஒருவித ஏகாந்த உணர்வினை பரப்பிக்கொண்டிருந்தன. 

முன் வெயிலாய் இருந்ததாலும் கார்கால மாதமாய் இருந்ததால் ஒரு வித கட்டுப்பாட்டுடன் சூட்டினை பரப்பிக் கொண்டிருந்தான் சூரியன். திண்ணையில் ஒரு ஈசி சேரில் சாய்ந்த படி நான்... வலது கையில் பெரிய மாவு கட்டு..ஆமா....அதன் விளைவு நான் கல்லூரி போகாமல் லீவில்...! அது என்ன மாவுகட்டு...? அதை அப்புறம் பாக்கலாம்..முதல்ல உள்ள எங்க வீட்டுக்குள்ள பாருங்க... என்ன நடக்குதுன்னு...... 

அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருக்க, அம்மா தங்கைக்கு தலை பின்னுவதும், பாதி தலை பின்னலோடு சீப்பை அவள் தலையில் வைத்துவிட்டு அடுப்புக்கு ஓடுவதும்... இட்லியை எடுத்து மாற்றி வைப்பதும் மறு ஈடு ஊற்றுவதும்.. . 

தாளித்து சூடான சட்னியை பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு... டீ போடுவதற்காக வேறு சட்டியை ஏற்றி வைத்து தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு மீண்டும் தங்கையின் தலை.... 

இடையே.. "ஏம்மா..என் கால் சட்டை எங்கம்மா..எங்கயாச்சும் தூக்கி போட்டுடுவ.... ஸ்கூல் நேரமாச்சுமா..." என் கடைசி தம்பி உயிர் போகும் படி கத்தினான்...! டேய் அந்த பச்ச பீரோல பாருடா மூணாவது தட்டுல....அம்மா சொல்லி முடிப்பதற்கு முன்னால் பாத்ரூமில் இருந்து அப்பாவின் குரல்..."ஏய்.. சுடுதண்ணி கொண்டுவா....எவ்ளோ நேரத்துக்கு முன்னால் சொன்னேன்... 

சுத்தமாய் மறந்து போயிருந்த அம்மா...."செத்த இருங்க இதோ வந்துட்டேன்.... நாக்கை கடித்தவளாய் மீண்டும் கிச்சனுக்கு ஓடினாள்....! ஒரு அடுப்பில் இட்லி இன்னொரு அடுப்பில் டீ போட வெந்நீர்.. ...டீ பாத்திரத்தை எடுத்து மாற்றி விட்டு....பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது.... 

"ஏம்மா.......ஸ்கூலுக்கு நேரமாச்சுமா....எம்புட்டு நேரம் தலையில் சீப்போட நிக்கிறது..." தங்கையின் இழுவை கலந்த கோபக் குரல்...." இரும்மா இதோ வந்துடுறேன்.....” மறு மொழி சொல்லி விட்டு.. நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து விட்டு....டீ கலந்து ரெடி பண்ணி மூடி வைத்து விட்டு...மீண்டும் தங்கைக்கு தலை பின்ன தொடங்கினாள் அம்மா.... 

" ஆல் இன்டியா ரேடியோ திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்... தமிழ் திரைப்பட பாடல்கள்"னு ரேடியோவில் சொல்லி முடிக்கவும்.... 

அம்மேமே.......மணி 7:30 ஆச்சு......எனக்கு பஸ் வந்துடும் சாப்பாடு கொடு....ன்னு கால்சட்டை போட்ட தம்பி கதற தொடங்கினான்....! அதே நேரத்தில் ஜடை பின்னி முடித்து விட்டிருந்த அம்மா.....தங்கைக்கு ஒரு அதட்டல் போட்டாள் போ....போ...போய் ட்ரஸ் மாட்டிடு சீக்கிரம் வா... சாப்பிட சொல்லி விட்டு அடுக்களையில்....புகும் முன்.... 

"ஏண்டி ஆஃபிஸ் போக வேணாமா நான்...சுடுதண்ணி கேட்டு....எவ்ளோ.....நேரமாச்சு " அதட்டலான குரலில் கோபமும் சேர்ந்து இருந்தது... அது…. அப்பா...! "இதோங்க... கிச்சனில் இருந்து தண்ணீரை சூடாக வேகத்தில் தூக்கி கொண்டு போய் அப்பாவிடம் சேர்த்தவள்..செத்த நேரம் வெயிட் பண்ண மாட்டிங்களா என்று செல்லமாய் ஒரு கோபத்தை வீசிவிட்டு..... 

தம்பி தங்கைகளை காலை உணவு சாப்பிடச் செய்து...மதிய உணவு டப்பாவில் கொடுத்து, குடிக்க டீ கொடுத்து...வாசல் வரை வந்து வழியனுப்பி ..மதியம் மிச்சம் வைக்காம, கீழ கொட்டாம சாப்பிடணும் என்று ஒரு கட்டளை பிறப்பித்து விட்டுவரவும்.... 

அப்பாவின் சட்டை தேடும் , பெல்ட் தேடும் படலத்துக்கு உதவி....அவருக்கு டிஃபன் கொடுத்து, டீக்கு பதிலாக காபி கொடுத்து மாத்திரைகள் எடுத்து கொடுத்து....கையில் டிபன் பாக்ஸ் கொடுத்து.... ஏங்க வரும் போது தக்காளி,வெங்காயம் கொஞ்சம் வாங்கிட்டு வாங்க....என்று முகத்தை துடைத்துக் கொண்டு சொன்னவள்.....மெல்லிய குரலில் கிசு கிசுத்தாள்.... 

"ஏங்க பைக்ல இருந்து கீழே விழுந்தது அவன் குத்தமா....? .ஒரு வார்த்தை நீங்களும் அவன் கிட்ட பேசுறது இல்ல......சிறுசுகளும் பேசுறது இல்ல..! வயசுபுள்ள வீட்டுக்குள்ளயே முடங்கி கிடக்கான்....பாவம்ங்க...சரி சரி...காசு கொடுத்துட்டு போங்க...அவன மதியத்துக்கு மேல் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும்...." கடுப்பாய் காசை கையில் திணித்து விட்டு தின்ணையில் ஒடுங்கி கிடந்த என்னை ஏற இறங்க பார்த்து விட்டு போய்விட்டார். 

அவர் போன கொஞ்ச நேரத்தில் அம்மா கையில் டிபனோடு வந்தாள்...தம்பி சாப்பிடுப்பா....என்று சொல்லியபடி...என் அனுமதியின்றி எனக்கு ஊட்ட ஆரம்பித்தாள். வலது கை கட்டுக்குள் பவ்யமாய் படுத்து இருந்தது....... 

அம்மா….அம்மா....அம்மா...... 

மனம் உள்ளே தேம்ப ஆரம்பித்தது. எவ்வளவு வேலைகள் உனக்கு....? எவ்வளவு பொறுப்புகள் உனக்கு, கருவிலே ஒரு பிள்ளையை சுமக்க ஆரம்பிக்கும் பொழுதில் ஆரம்பிக்கும் உனது கடமைகள் பெரும்பாலும் அடுத்த வயிற்றின் பசியைத்தானே சிந்தித்திருக்கும். 

எப்போதும் தன்னுடைய உள் முனைப்பிலிருந்து பார்க்கும் மனித மனம் பெரும்பாலும் அடுத்தவர் சிரமங்களைப் பற்றி ஆராய்வதை சுகமாய் மறந்து விடுகிறது. அப்படி மறக்கப்படும் ஒரு ஜீவன் தான் அம்மா...! ஒரு இல்லத்தை நடத்தும் அதிகாரி, விட்டுக்கொடுக்கும் கருணாமூர்த்தி, வீட்டில் பிள்ளைகளுக்கோ, கணவருக்கோ ஏதோ பிரச்சினை அல்லது உடல் நலம் குன்றல் என்றால் ராட்சசியாய் போராடும் போராளி. எல்லாம் செய்து விட்டு தான் செய்ததில் ஒன்றுமில்லை என்று ஒதுக்கி விட்டு தன் பாசத்தினை எல்லா செயலிலும் காட்டும் தியாக உரு. 

எத்தனை நாள் ....சாப்பாடு வேண்டாம் என்று தள்ளி விட்டு இருப்பேன்....! என்னா குழம்பு இது…? உப்பு இல்லை உறைப்பு இல்லை என்று வேகமாய் வெளியே போயிருப்பேன்....! உனக்கு என்னாமா தெரியும் என்று என் சப்பை. அல்லக்கை பிரச்சினைகளையும் வெட்டி அனுபவத்தையும் அவள் முன் பந்தாவாக காட்டியிருப்பேன்....! சட்டையில் பட்டன் அறுந்து போய் எவ்ளோ நாளாச்சு ஏம்மா பாக்கவே மாட்டியா....? உனக்கு ஒண்ணுமே தெரியல போ... எனும் அதட்டலுக்கு “...ஏம்பா நீ எடுத்து கொடுத்தா தச்சு தற போறேன்னு” பொறுமையாக சொல்லும் அவளின் பொறுமை… 

மெல்ல மனம் விட்டு வெளியே வந்தேன்...அவள் எனக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்...."அச்சோ...அது என்னா சிகப்பாய் பெரிய கொப்பளம் மாதிரி மணிக்கட்டில ஏம்மா... தீக்காயமா...???????" திடீரென பார்த்தவன்...அதிர்ந்து போய் கத்தினேன்... 

அட ஒண்ணுமில்லப்பா....காலைல அப்பாவுக்கு வெந்நீர் எடுக்கும் போது கைல கொட்டி இருக்கும் நான் கவனிக்கலயே...சரி சரி....மஞ்சள உரசி போட்டா சரியாயிடும்... சாதாரணமாக சொன்னவள்... 

தம்பி மதியம் உன் கை கட்டு டாக்டர் கிட்ட போய் காட்டணும்....." நான் பெத்த மகனே... கையி நல்ல படியா சேந்துக்கணும்னு அந்த....பாகம்பிரியாளுக்கு வேண்டி இருக்கேன்...எல்லாம் நல்ல படியா நடந்தா கை மாதிரி மிதலை பொம்மை வாங்கிப் போடணும்" ஏன் தம்பி அம்மா கூட வருவீல்ல கோயிலுக்கு...இல்ல சாமி, பூதம்னு ஒண்ணுமில்லனு சொல்லி என்கிட்ட வாக்குவாதம் பண்ணுவியா???? அம்மா அப்பாவியாய் கேட்டாள்.... 

இல்லம்மா... நான் உனக்காக வர்றேன்மா...எனக்குள் நெஞ்சு முட்டி கண்ணீர் வெளிவர துடித்துக் கொண்டிருந்தது. பாசத்துக்கு முன்னால் பகுத்தறிவு பஸ்பமாய் போயிருந்தது. ஏம்மா நீ மருந்து போடுமா கையிக்கு.....எப்டி செவந்து போச்சு...அப்புறம் தண்ணி கோத்துகிட்டு கொப்பளமாயிடுமா...தொண்டை அடைத்தது....எனக்கு... 

எவ்வளவு நாளு பொங்கிப் போடுற தாயி நீ.. உன் கிட்ட ஒரு நாலாவது கேட்டு இருப்பேனா...நீ சாப்டியாமான்னு......? .ஒரு நாளாச்சும் சொல்லியிருப்பனா....சாப்படு சூப்பர்மா!!!! எப்டிமா இவ்ளோ சூப்பரா செய்றீங்கண்ணு... ஒரு நாளாச்சும் அம்மா நீங்க நவுருங்க.... நான் பாத்திரம் எல்லாம் கழுவி தரேன்னு.....ம்ம்ம்கூம்.....அம்மாவ சீராட்டத் தெரியாத ஒரு படிப்பும் ஒரு அறிவும், ஞானமும், விவாதமும்....ரொம்ப கேவலமா தெரிந்தது எனக்கு....! 

மெல்ல கேட்டேன்..." அம்மா நீ சாப்பிடலையாமா???????" கேட்டு முடிக்கவும் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வெடித்து வெளியே வந்தது.....அம்மாவை இடது கையால் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து கேவி கேவி அழ ஆரம்பித்தேன்..... 

அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் அந்த அரவணைப்பும், ஆதங்கமும் அவளுக்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஆழ்மனம் அதை தேடித் தேடி கிடைக்காத பட்சத்தில் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்......அவளின் கண்களும் கலங்க....முந்தானையால் என் கண் துடைத்து விட்டு..... 

"ஏய்யா....சாப்பிடுயா....என் பட்டத்து யானை நீ கலங்கலமா? " அம்மா இருக்கேன்ல என்ன பெத்தாரு.....அவள் பேச்சில் மீண்டும் அவள் எங்கேயோ போய்க் கொண்டிருந்தாள்...... 

ஒன்று மட்டும் புரிந்தது.... "அம்மா " எப்போதும் வெல்ல முடியாதவள்...எதற்கும் ஈடு இல்லாதவள்...! 

"அவள் எப்போதுமே வெல்ல முடியாத ஒரு அரசி.....!" 

கொல்லையில் காகங்களின் குரல் அதிகமாகியிருந்தது......... 

"காக்கா பாரு ராஜா.. காக்கா...ஒரு வாய் வாங்கிக்க கண்ணு....செல்லம்ல..." பக்கத்து வீட்டு செல்வி அக்கா 2 வயது மகனுக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தது....! 

ஆழமான சுவாசத்தோடு....ஒன்றிப் போய்....இமைகள் கவிழ..ஏதோ பாடம் கற்ற நிறைவோடு....நான் கண் மூடி ஈசி சேரில் சாய்ந்தேன்......!

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !