Thursday, December 27, 2018

வசீகரா

வீட்டின் வெளியே ஒரே கூட்டமாக இருந்தது. சிலர் வீட்டின் ஜன்னலை திறக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். முடியாது யாராலும் உள்ளே வர முடியாது என்று நினைத்து கொண்டே நான் க்ரிஷ் அருகே அமர்ந்து எங்கள் திருமண ஆல்பம் ஐ பார்த்து கொண்டு இருந்தேன். க்ரிஷ் தாலி கட்டும் போட்டோ வந்ததும் கண்களில் கண்ணீர். அவன் கையை பிடித்து கொண்டே நம்மல யாராலையுமே பிரிக்கமுடியாது க்ரிஷ் என்று சொல்லி கொண்டே அவன் மார்பில் சாய்ந்தேன். க்ரிஷ் கொஞ்சம் கொஞ்சமாக என் கண்களில் இருந்து மறைய தொடங்கினான். 

சிலர் வீட்டின் ஜன்னலை கல்லை வைத்து உடைத்துக்கொண்டு இருந்தனர். நானும் க்ரிஷ்ம் இருக்கும் அறையின் ஜன்னல் கண்ணாடி துண்டுகள் சில என் மீது விழுந்தன. மகா மகா என்று என்னை அழைக்கும் சத்தம் கேட்டது. நான் க்ரிஷின் கைகளுக்குள் கை சேர்த்து மார்பில் தலை சாய்த்திருந்தேன். 

### 

அது தான் நான் பெற்றோரை விட்டு பிரிந்து இருந்த நாட்கள். படிப்பிற்காக வெளியூரில் உள்ள கல்லூரிக்கு சென்றேன் பெண்கள் பள்ளியிலேயே படித்த எனக்கு இரு பாலரும் சேர்ந்து படிக்கும் இடம் சற்று வித்தியாசமாகவும் ஒரு வித தயக்கத்தையும் தந்தது. விடுதியில் நான்கு பேர் உள்ள அறையில் ஐந்தாவது ஆளாக சேர்ந்தேன்.ஒரு சில நாட்களில் நல்ல தோழிகளாயினோம். விடுதியில் அனைவரும் கைபேசி வைத்திருப்பார்கள். 
இரவு நேரங்களில் ஒரு மணி வரையிலும் பேசிக்கொண்டு இருப்பார்கள்.என்னிடமும் கைபேசி இருந்தது ஆனால் அது விளையாடுவதற்கு அம்மா அப்பாவிடம் பேசுவதற்கு மட்டுமே இருந்தது. 

 

இரவில் போர்வைக்குள் இருந்து கொஞ்சல்கள் கிசு கிசுப்பான குரலில் கேட்கும். என் மனதிலும் ஆண் நண்பர்கள் வேண்டும் காதலில் கரைய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றும் அடுத்த நிமிடமே குடும்பத்தின் ஞாபகம் வந்து விடும் நம்ம குடும்பத்திற்கு இதுலாம் சரி வராது என்று அந்த எண்ணத்தை விட்டு விடுவேன். எல்லா ஆசைகளையும் பாசத்தையும் வரப்போகும் கணவனிடம் காட்ட வேண்டும் என்று நினைப்பேன். ஒவ்வொரு ஆசைகளையும் அடிமனதில் சேமிக்க தொடங்கினேன். சிலர் விடுதியின் தெரு வரை அவர்கள் காதலனுடன் வந்து இறங்குவர். சிலர் பேருந்தில் சேர்ந்து அருகருகே அமர்ந்து வருவார்கள். கைபேசியில் முத்தங்களை பரிமாறிக்கொள்வார்கள். கைபேசியில் பேசுகையில் சிலர் வெட்கப்படுவதையும் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் என் மனதில் அவ்வப்போது கிளர்ச்சியை ஏற்படுத்தும் நானும்   ஒன்றாகசேர்ந்து படத்திற்க்கு போக வேண்டும் ஒன்றாக அலைகளோடு விளையாட வேண்டும்.  இது போல் பைக்கில் அணைத்த படி செல்ல வேண்டும். மணிக்கணக்காக அலைபேசியில் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற என் எண்ணங்களை சேமித்து வைத்தேன் என்னவனுக்காக. 

என் டிபார்ட்மென்ட்டில் சிலர் என் கண்களை கவர்ந்தனர் ஆனால் மனதில் யாரும் இடம் பிடிக்க முடியவில்லை.ஒருவழியாக கல்லூரி வாழ்க்கை முடிந்தது . 

இரண்டு மாதங்கள் வீட்டில் இருந்தேன். திருமண பேச்சு அவ்வப்போது வீட்டிற்கு வரும் உறவினர்களால் பேசப்பட்டது. நான் மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டதால் படிக்க வைக்க முடிவு செய்தனர். ஒரு சிலர் பொம்பள பிள்ளையை ஏன் இவ்வளவு படிக்க வைக்கிங்க பேசாம காலகாலத்துல கல்யாணத்த முடிச்சு விடுங்க. பிள்ளைங்களை கைல வச்சுட்டு இருக்கதே பயம் தான் சீக்கிரம் ஒருத்தன் கைல புடுச்சிக்குடுத்துட்டா நாம கடம முடியும் என்றல்லாம் சொல்லி என் பெற்றோர் மனதை கலைத்தனர். 

அவர்களுக்கும் அது சரி என்று படவே அடுத்தும் ரெண்டு பொம்பள பிள்ளைங்க இருக்குது என்று வரன் தேட உறவினர்களிடம் சொல்லி வைத்தனர்.ஒரு சில மாப்பிளை வீட்டார் வந்து போயினர். 

நீங்கள் எடுக்கும் முடிவு தான் என் முடிவு என்று அப்பாவிடம் சொல்லிவிட்டேன். என் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .இந்த காலத்துல புள்ளைங்க எப்படி எப்டியோ இருக்குதுங்க நம்ம பிள்ளைங்க லவ் கிவ் னு ஏதும் பண்ணாம நம்ம மானத்தை காப்பாத்திருச்சுங்க என்று அவர்கள் பேசும் குரல் கேட்டது. 

ஆனால் அவர்களுக்கு அப்போது தெரியவில்லை அவர்களுக்கு விருப்பமில்லாமல் தான் என் திருமணம் நடக்க போகிறது என்று. 

கடைசியாக க்ரிஷ் வீட்டிலிருந்து பெண் பார்க்க வந்தனர்.க்ரிஷ் நல்ல உயரம் தொட்டால் சிவக்கும் சிவப்பு எல்லாம் இல்லை ஆனாலும் அவனது புது நிறம் அவனை அழகாக காட்டியது.இதழில் மாய புன்னகை ஒன்று இருந்தும் இல்லாமலும் இருந்தது.அவன் போட்டிருந்த ஸ்பெக்ஸ் அவனை உள்ளதென்று அன்று தான் கண்டுகொண்டேன்.அவனை என் வீட்டில் அனைவர்க்கும் பிடித்துவிட்டது.அவனது வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர் இன்னும் நாட்களில் நிச்சயம் செய்வதென பேசி முடித்தனர் போய்ட்டு வாறோமா என்று எல்லாரும் சொல்லிவிட்டு கிளம்பினர். க்ரிஷ் சொல்லுவான் என காத்திருந்தேன்.அவன் என்னை திரும்பி பார்க்காமலே சென்றான். காரின் அருகே சென்றவுடன் அவருடன் வந்தவர்களில் யாரோ பொண்ணுட்ட போயிட்டு வரோம்னு சொன்னியாடா என்று குரல் எழுப்பவும் வீட்டின் கதவருகே இருந்து அவனை பார்த்து கொண்டு இருந்த என்னை பார்த்து புன்னகையுடன் தலையசைத்தான் போயிட்டு வரேன் என்றார் போல் நானும் சிரித்து தலையசைத்தேன். 

நிச்சயம் முடியும் வரை நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை. நிச்சய சேலை எடுக்க சென்ற போது கூட அவன் ஒருவார்த்தையும் பேசவில்லை அம்மாவின் அருகிலேயே இருந்து முடிந்ததும் கிளம்பிவிட்டான். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது என் கனவுகளுக்கு இவன் கை கொடுப்பானா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. 

நிச்சய நாளும் வந்தது நான் பச்சை வண்ண பட்டும் அவன் நீல நிற கோட்டும் அணிந்து இருந்தோம். நிச்சயம் முடிந்து அனைவரும் சாப்பிட சென்றனர்.எங்களை போட்டோ எடுக்க அழைத்து சென்றார் போட்டோக்ராபர் அப்படியும் இப்படியுமாக இருவரும் சிரித்து போட்டோ எடுத்துக்கொண்டோம் பின்பு பொண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட கூப்பிட்டாங்க என்று ஒரு சிறுவன் சொல்ல நாங்களும் சாப்பிட கிளம்பினோம். 

மகா என்ற சத்தம் ஆமாம் அது க்ரிஷ்ன் குரல் அவனா கூப்பிட்டான் ஒரு இன்ப அதிர்ச்சியுடன் திரும்பினேன்.இந்த சாரி ல ரொம்ப அழகாக இருக்க என்றான். ஒரு புது வித வெட்கம் என்னை ஆட்கொண்டது.நான் இவனா பேசுகிறான் என்று சிலை போல நின்றுவிட்டேன்.அவன் என்னை கடந்து செல்லயில் ஐ லவ் யு மகா என்று காற்றில் எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிச்சென்றான் மனதிற்குள் பனி மழை பொழிந்து கொண்டு இருந்தது கண்களில்  நட்சத்திரங்கள் மின்னின. 
இவன் பார்த்த்தும் மலர் பூத்திடும்இவன் பேசினால் உடல் வேர்த்திடும்அடி பெண்மையே என்ன ஏக்கமோஅந்த மென்மையின் பெரும் தாக்கமோதினம் காலையில் கண் விழிக்கிறேன்அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன்அவன் பார்வையில் நான் மிதக்கிறேன்அவன் தேடல்களை நான் அணைக்கிறேன்இரவினில் ஒருவனை சந்தித்தேன்தனிமையில் தேவனை சந்தித்தேன்அவனிடம் என்னுயிர் பாத்தேன் நான் 
ஆஹா இவனுக்கும் ரொமான்ஸ் பண்ண தெரியும் போல என்று நினைத்து கொண்டேன்.ஒரு வெட்க சிரிப்பு என் இதழில் ஓடி மறைந்தது. 
அவன் முன் செல்ல நான் அவன் பின் சென்றேன். சாப்பிட அமர்ந்தோம் சாயந்திர நேரமாகையால் வெண்பொங்கல் இட்லி சட்னி வகைகள் எங்கள் இலையை நிரப்பின.அவன் பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிட்டான்.நான் எப்போதும் மெதுவாக சப்பிட்டே பழக்கம்.நான் கேசரியை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தேன்.அவன் தண்ணீர் எடுப்பது போல் சற்று என் பக்கமாய் சாய்ந்து மகா கொஞ்சம் வேகமா சாப்பிடு உனக்காக தான் வெயிட் பண்றேன் என்றான். நான் வேகமாக சாப்பிட்டு விட்டு எழுந்தேன்.இருவரும் கை கழுவ சென்றோம் வரும் வழியில் அவன் நான் சொன்னதுக்கு பதில் எதும் சொல்லலையே நீ என்றான். நான் என்ன சொன்னிங்கனு கேட்டேன். அதான் ஐ லவ் யூ சொன்னேனே என்றான் குறும்பு சிரிப்புடன்.நான் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தேன். என்ன மகா பிடிக்கலையா என்று கேட்டான்.அச்சச்சோ அப்டிலாம் இல்ல உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்னேன். 


அவன் சிரித்து கொண்டே நடக்க தொடங்கினான்.நானும் அவனுடன் சேர்ந்து நடந்தேன் இன்னும் ஒரு மாதம் இருந்தது திருமணத்திற்கு. 

இந்த ஒரு மாதத்தில் நாங்கள் காதலர்களாக இருக்க வேண்டும் காதலர்களாக வெளியில் சுற்ற வேண்டும் ஒரே ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் ஒரு கூல்ட்ரின்க்ஸ் இரண்டு ஸ்ட்ராவுடன் குடிக்க வேண்டும் பைக்கில் ஊர் சுற்றவேண்டும் என்று ஆசையாக இருந்தது.திருமணத்திற்கு பின்பு காதலிக்கலாம் என்று சொல்வார்கள்.ஆனால் அது இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்பது என்னுடைய கருத்து. 

க்ரிஷ்யிடம் இதை பற்றி சொன்னால் என்ன சொல்வானோ என்ன நினைப்பானோ என்று தயக்கமாகவும் இருந்தது.ஆண்கள் காதலை சொல்வதற்கு அநேக வழிகள் இருக்கிறது.ஆனால் பெண் காதலை சொல்வதற்கு என்ன வழி உள்ளது.அப்படியே தெரியப்படுத்தினாலும் அவள் சற்று கீழ்தரமாகவும் நடத்தை பிரள்பவளாகவும் எதிர்காலத்தில் சித்தரிக்கபடுகிறாள். 

என்ன ஆனாலும் சரி க்ரிஷிடம் என் ஆசைகளை சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.நிச்சயம் முடிந்ததில் இருந்து குட் மார்னிங் குட் நைட் குறும்செய்திகளும் அவ்வப்போது தத்துவம் ஜோக்ஸ் என்று வாட்ஸ் ஆப்லே பரிமாறிக்கொண்டு இருந்தோம். ஒரு நாள் அவனிடம் லவ் ஐ பற்றிய குறும்செய்தி வந்தது. நான் லவ் பத்தி என்ன நினைக்கிற கிரிஷ் என்று கேட்டேன் அவனும் மனது ஒருமிப்பது தான் லவ் என்றான். நாம லவ் பண்ணலாமா கிரிஷ் என்று கேட்டேன் .சிறிது நேரம் மெசேஜ் வரவில்லை என்ன நினைத்து இருப்பான் ஒருவேளை தவறாக நினைத்து விட்டானோ என்று என் மனம் அலைபாய்ந்து கொண்டு இருந்தது.சிறிது நேரம் கழித்து ஓ பண்ணலாமே என்ற குறும் செய்தியுடன் என் கைபேசி சிரித்தது.அடுத்து அவனிடம் இருந்து போன் கால் வந்தது என்ன சொல்ல  போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் எடுத்தேன் ஹேலோ மகா என்ற அவன் சத்தம் என் ரத்தத்தில் தேன் கலந்தது சொல்லுங்க க்ரிஷ் என்றேன் லவ் பண்ணனும்னா அதுக்கு முதல்ல லவ் அ சொல்லணும் மகா என்றான் குரும்சிரிப்புடன் நான் அப்போவே சொல்லிட்டேன் நீ தான் இன்னும் சொல்லவே இல்லை என்றான். நானும் ஐ லவ் யு க்ரிஷ் என்றேன் வெட்க சிரிப்புடன். 

எங்கள் பேச்சுக்கள் வளர்ந்து கொண்டே போனது எங்கள் காதலும் கூடிக்கொண்டே போனது.என் எண்ணங்கள் எப்போதும் அவனுடன் ஒத்து போனது இல்லை ஆனால் என்ன செய்ய எதிரெதிர் துருவங்கள் தானே ஈர்க்கப்படுகின்றன. அவனும் அப்படித்தான் என்னை ஈர்த்துவிட்டான் அவனுடன் பேசும் பொழுது நான் சிறுகுழந்தையை போலாகினேன். என் ஆசைகள் விருப்பங்கள் எது நான் சொன்னாலும் பொறுமையாக கேட்டு கொண்டு இருப்பான் சிறிது சிறிதாக என் காதலையும் என் ஆசைகளையும் அவன் புரிந்து ஏற்றுக்கொண்டான் . 
அடுத்து மணிக்கணக்காக பேச ஆரமித்தோம்.அவ்வப்போது ரொமான்ஸ் பேச்சுகளும் இடம்பெற்றன.எங்களுக்கு இரவும் பகலாய் மாறிப்போனது பேசுவதற்கு என்று .ஒரு நாளில் பைக்கில் லாங் டிரைவ் போக வேண்டும் என்று முடிவு எடுத்து வீட்டிற்கு தெரியாமல் சென்றோம் 

 

ஒரே ஐஸ் கிரீம் சுவைத்தோம் இப்படியாக என் ஆசைகளை எல்லாம் அவன் நிறைவேற்றி வைத்தான். எங்கள் காதலும் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டு வந்தது திருமணத்திற்கு பின்னாக நாங்கள் வாழப்போகும் காதல் வாழ்க்கை கனவுகளில் வந்து போனது. 

ஆனால் அது கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் காலம் கண்ணை மறைத்து வைத்து விட்டது. 

அவனுடனான அந்த முதல் பைக் ரைட் என் வாழ்வில் மறக்க முடியாததாக அமைந்தது.அந்த கொளுத்தும் வெயில் கூட எனக்கு கொட்டும் குளிர் மழையாக தெரிந்தது. அவன் கழுத்தில் வழியும் வியர்வை வாசம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. திருமணம் ஆன பின்பும் கூட அவன் ஆடைகளை துவைக்கும் முன்பு முகர்ந்து பார்க்க நான் மறந்ததில்லை வாசனை திரவித்தையும் மீறி வரும் அது தான் அவன் வாசம். 

 

இந்நிலையில் எங்கள் திருமண பத்திரிக்கை அச்சிடப்பட்டு வந்தது. அவன் பெயரும் என் பெயரும் இருந்ததை கண்டு என் கைகள் அந்த பத்திரிகையை மெல்ல வருடின. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருந்தது எங்கள் திருமணத்திற்கு. அப்போது தான் அந்த பேரிடி என் தலையில் இறங்கியது.ஆமாம் மாப்பிளையை எங்களுக்கு அறிமுகம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த எங்கள் உறவினர் ஒருவர் மாப்பிளை வீட்டிலும் பெண் வீட்டிலும் ஒரே மாதிரியாக பேசாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசி பிரச்னையை ஏற்படுத்திவிட்டார்.மாப்பிளை வீட்டாரிடம் கேட்டால் நீங்கள் அப்படி சொன்னீர்களாமே என்று அவர்களும் எதோ சொல்ல. பேச்சுகள் பெரியதாகி திருமணம் நிறுத்திவைக்கும் அளவிற்கு பூதகரமானது. 
நானும் என் வீட்டில் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன். அவர்கள் இந்த குடும்பமே சரியில்லை வேற மாப்பிளையை பாப்போம் .திருமண பத்திரிகைகள் எரிக்கப்பட்டன .நான் க்ரிஷிடம் பேசினேன் அவர்கள் வீட்டிலும் அப்படி தான் இருப்பதாக கூறினான் .நீ என்ன பண்ணப்போற க்ரிஷ் என்றேன். அவன் பிரச்சனைகள் முடியுதான்னு பாப்போம் இல்லனா வேற முடிவு தான் எடுக்கணும் என்றான். நான் க்ரிஷ் நான் உன்ன தான் கல்யாணம் பண்ணுவேன் நீ இல்லாம  என்னால நினச்சு பாக்கவே முடியல என்றேன் அழுகையுடன். என்னாலையும் தான் மகா நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் அவங்க செஞ்சு வச்ச அவங்களுக்கு மரியாதை இல்லனா நாமளே பண்ணிக்கலாம் ரெஜிஸ்டர் ஆபிஸ் ல வெயிட் பண்ணுவோம்நான்  எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கேன் என்றான். 

அவனுடன் பேசிய பிறகு தான் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையே வந்தது.இரண்டு வீட்டிலும் பிரச்சனைகள் வளர்ந்ததே தவிர குறையவில்லை. நாட்கள் சென்றன என் திருமணத்திற்கு குறித்திருந்த நாளுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. 



##### 
வீட்டின் வெளியே நின்று கத்தி கொண்டு இருப்பவர்களின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக சன்னமாக கேட்டது என் இடது கையில் வலி இருப்பது போன்ற உணர்வு என் மீது சில புழுக்கள் ஊர்ந்து ஏறிக்கொண்டு இருந்தன .என் கண்களில் இருந்து க்ரிஷ் முற்றிலும் மறைந்துவிட்டான். மெல்லமெல்ல  இருள் கவ்விக்கொண்டு இருந்தது என் கண்களை நான் க்ரிஷின் தோளில் சாய்ந்திருந்தேன். அறையின் துர்நாற்றத்தை தாண்டியும் அவனது fog scent வாசம் வந்தது எனக்கு. 

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்தன.ஆனால் இரண்டு வீட்டாரும் திருமணம் வேண்டாம் என்று நிறுத்தி விட்டனர்.சில உறவினர்களுக்கு அழைப்பிதழ்கள் கூட கொடுத்தாயிற்று மண்டபம் பார்த்து முன்பணமும் கொடுத்தாயிற்று.ஆனால் என்ன செய்ய திருமணம் தான் நடக்காது என்று ஆகிவிட்டதே.நான் இன்னும் க்ரிஷ்யிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.கைபேசியில் பேசுவதை பார்த்து நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டா மட்டும் கல்யாணம் நடந்துருமா என்ன ஆனாலும் அந்த குடும்பத்துல இருந்து ஒரு பையன நான் உனக்கு கட்டிவைக்கமாட்டேன் தேவ இல்லாம பேசி ஆசைய வளத்துக்காதிங்க என்று திட்டு கொண்டு இருப்பார்கள்.ஆனால் எங்களது திருமணம் குறித்த நாளில் நடைபெறும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. 

காலையில் கிளம்ப வேண்டும் என்று தூங்கும் போது சுடிதார்.போட்டு கொண்டே படுத்துக்கொண்டேன்.வேறு எதையுமே க்ரிஷ் எடுத்து கொண்டு வர கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி இருந்தான் .ஆமாம் நாங்கள் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ள போகிறோம். இரண்டு நாளில் சென்னைக்கு செல்ல போகிறோம்.வீடு வாடகைக்கு அவன் நண்பனிடம் சொல்லி பார்த்து வைத்து சில தேவையான பொருட்களை மட்டும் வாங்கி வைத்து விட்டோம். கடைசியில் நானும் இப்படி ஆவேன் என்று நினைக்கவில்லை. என் பெற்றோர் சம்மதத்துடன் தான்திருமணம் செய்ய வேண்டும் என்று இருந்தோம்.நாங்களாக காதலிக்கவில்லை அவர்கள் பார்த்து நிச்சயம் செய்த பிறகு தான் நாங்கள் பேசி பழக அரமித்தோம். இப்பொது மனது ஒன்றான பின்பு திருமணம் வேண்டாம் என்று சொன்னால் நாங்கள் என்ன செய்வது எங்களால் வேறுஒருவரை நினைத்து பார்க்க முடியவில்லை. அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தோம். 

அடுத்த நாள் எங்களுக்கு திருமணம்.உறவினர் படை சூழ மலர்தூவி நடக்கவேண்டிய திருமணம் யாரும் இல்லாமல் அனைவரின் சாபத்தோடு நடக்க போகிறது நினைத்து நினைத்து எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை. கண்ணீரால் தலையணை கனத்தது காலை நான்கு மணியளவில் எழுந்து நான் ஏற்கனவே அவர்களுக்கு எழுதி வைத்து இருந்த கடிதத்தை கண்ணாடியின் அருகில் வைத்து விட்டு மெதுவாக எழுந்து கதவின் அருகே வந்தேன்.மனது வலித்தது கடைசியாக எல்லோரையும் ஒரு முறை திரும்பி பார்த்து கதவை சாத்திவிட்டு அழுதுகொண்டே நடக்க தொடங்கினேன்.க்ரிஷ் ஐந்து வீடு தள்ளி பைக்கில் நின்றுகொண்டு இருந்தான். நான் சென்று பைக்கில் ஏறிக்கொண்டேன். பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றுகொண்டு இருந்தோம் என் கண்கள் சிவப்பாக மாறி போய் இருந்தன. 

பேருந்து நிலையத்தில் வந்து சென்னை பேருந்தில் அமர்ந்தோம். மணி நான்கு நாற்பது என்று காட்டியது அவன் கைக்கடிகாரத்தில் நான் வாட்ச் கூட போட்டு வரவில்லை காதில் இருந்த தோடு மற்றும் கழுத்தில் எப்போதும் இருக்கும் சிறிய செயின் மட்டும் போட்டு இருந்தேன் பஸ் கிளம்பிவிட்டது. எனக்கு ஏதோ எல்லாத்தையும் விட்டுட்டு தனியாக நிற்பது போல இருந்தது. பஸ் நகர தொடங்கியது எனக்கு உலகமே என்னை தனியே விட்டு விட்டு பின்னோக்கி செல்வது போல தோன்றியது. க்ரிஷ் அவன் நண்பனிடம் கிளம்பிட்டோம்டா என்று சொல்லி கொண்டு இருந்தான் . நான் அழுவதை பார்த்து என் கைகளை பற்றிக்கொண்டான்.நான் அவன் மேல் சாய்ந்து கொண்டேன். அழாத மகா எல்லாம் கொஞ்சநாளிலே சரியாகிரும் என்று சொல்லி கொண்டே வந்தான். 

நெடுநேரம் அழுதுகொண்டே வந்தேன் இரவில் சரியாக தூக்கமும் இல்லை அழுதுகொண்டே எப்படியோ தூங்கி போனேன் அவன்மேலேயே. எழுந்து பார்த்தபோது 8 மணி என பேருந்து கடிகாரம் காட்டியது.இன்னும் அரை மணி நேரத்துல போயிரலாம் மகா என்றான் க்ரிஷ்.உள்ளுக்குள் பயம்ஒருபக்கம் அழுது தலைவலி வேறு எனக்கு அப்போதைக்கு க்ரிஷின் தோள்கள் ஆறுதலான இடமாக இருந்தது.ஒருவழியாக சென்னையில் இறங்கிவிட்டோம்.க்ரிஷின் நண்பன் எங்களை பார்த்ததும் வந்தான் வாடா.வீட்டுக்கு போலாமா என்றான்.என்னிடம் கவலைப்படத்தமா எல்லாம் சரியாகிறும்னு சொன்னான். பைக்கை சாவியை கொடுத்து இந்தாடா இது பாலாவோட பைக் அவன் வண்டிய குடுத்துட்டு பஸ்ல வீட்டுக்கு போயிருக்கான். அவன் தம்பி வண்டிய யூஸ் பண்ணிக்கிறேன் இத க்ரிஷ் கொஞ்ச நாள் யூஸ் பண்ணிக்க சொல்லுன்னு சொல்லிட்டு போனான் என்றான்.க்ரிஷ் பைக்கை ஸ்டார்ட் செய்தான் நானும் ஏறிக்கொண்டேன்.அவன் நண்பன் முன்னே வழிகாட்ட நாங்கள் பின்தொடர்ந்து சென்றோம்.இந்நேரம் வீட்டில் என்ன  நடந்து கொண்டு இருக்கிறதோ தெரியவில்லை அந்த கடிதத்தை படித்திருப்பார்களா எல்லாரும் அழுது கொண்டு இருப்பார்கள் என்று மனதில் எண்ணங்கள் அலையலையாய் அடித்துக்கொண்டே இருந்தது. 

ஒரு அபார்ட்மெண்ட் முன்பு பைக் நின்றது. வா மகா என்றபடி க்ரிஷ் முன் சென்றான் நானும் சென்றேன் .மாடியில் ஒரு வீட்டினை திறந்து உள்ளே சென்றோம் சரிடா ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வந்துருங்க நாங்களும் வந்துருறோம் என்று சொல்லிவிட்டு அவன் நண்பன் சென்றான். இதான் மகா நாம வாழ போற வீடு என்றான் க்ரிஷ். Furniture எப்போ பாத்து வச்ச க்ரிஷ் என்றேன்.அப்பறம் அங்க இருந்து வந்த பிறகா தேடிட்டு இருப்பாங்க என்றான். சரி நீ முதல குளிச்சுட்டு  வா ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு இன்னும் அரைமணி நேரத்துல போனும் பிரெண்ட்ஸ்லாம் வர சொல்லிட்டேன் கையெழுத்து போட அப்பறம் இந்தா இந்த சாரி கட்டிக்கோ என்று ஒரு மெரூன் கலர் பட்டு சேலையை கொடுத்தான். எப்பிடிடா இதுலாம் பண்ணுன ஆமா ப்ளௌஸ் தச்சாச்சா உனக்கு அளவு எப்படி தெரியும் என கேட்டேன் அதான் நிச்சயத்துக்கு தைக்க வேணும்னு அளவு பிலௌஸ் எங்கம்மா வாங்கிட்டு வந்தங்கள அத குடுத்து தச்சுட்டேன் சரி சரி கேள்வி கேட்டுட்டே இருக்காம போய் ரெடியாகு என்றான். அப்போது வரை இருந்த பயம் போய் இப்பொது ஒரு இனம்புரியா மகிழ்ச்சி  இதயத்தை நிரப்பிக்கொண்டு இருந்தது. 

குளியலறையில் ஷவர் தண்ணீர் ஜில்லென்று வந்தது மனது லேசாவதை போன்ற உணர்வு பயம் கவலைகள் எல்லாம் அந்த தண்ணீருடனேயே சேர்ந்து என்னை விட்டு கீழிறங்கி சென்றுகொண்டு இருந்தது. 
நான் குளித்துவிட்டு சுடிதார் போட்டுகொண்டு வந்தேன். க்ரிஷ் நீ போய் குளி என்று சொல்லிவிட்டு பக்கத்து அறையில் சென்று சேலையை கட்டிகொண்டேன். அவனும் குளித்துவிட்டு புது வேட்டிசட்டையில் மாப்பிளையாக ஜொலித்தான். க்ரிஷ் கொஞ்சம் சேலைல கொசுவத்தை சரியாக கீழே எடுத்துவிடேன் என்று சொன்னேன். இப்போவே இந்த வேலையலாம் சொல்ல அரமிச்சுட்டியா என்று கிண்டலடித்து கொண்டே ஒரு கால் வைத்து அமர்ந்து மடிப்பை சரிசெய்துவிட்டான். வேற எதாவது மேடம் என்றான். ஒன்னும் இல்லங்க சார் போலாம் என்றேன். வீட்டை பூட்டி விட்டு கீழே இறங்கினோம். பைக் எங்களை ரெஜிஸ்டர் ஆபிஸ் முன்பு நிறுத்தியது. 
இறங்கு மகா நான் வண்டிய நிப்பாட்டிட்டு வரேன் என்று க்ரிஷ் சென்றான். நான் ரெஜிஸ்டர் ஆபிஸ் வாசலில் நின்று கொண்டு இருந்தேன். இந்நேரம் எங்கள் திருமணம் உறவினர் சூழ மலர் மழை பொழிய நடந்துகொண்டு இருக்க வேண்டியது. யாரும் இல்லாமல் தனியாக இப்படி கண்ணீருடன் நடக்க போகிறது என்று என்னென்னெவோ நினைவுகள் கரையை மோதி அடிக்கும் அலையாய் திரும்ப திரும்ப இதய சுவரை அடுத்து கொண்டு இருந்தன. போலாமா என்ற க்ரிஷின் குரல் எண்ணங்களை தடுத்தது ஹ்ம்ம் என்றபடி அவன் பின் நடந்தேன். வா மச்சான் இன்னும் பத்து நிமிடத்தில் நல்ல நேரம் வந்துரும் அதுக்கு முன்னால பார்மாலிட்டிலாம் முடிச்சிரலாம் என்று அவன் நண்பர்கள் சொல்லி கொண்டே வந்தனர். 

நாங்கள் உள்ளே சென்றோம் ஒரு சில பார்மாலிட்டி முடித்தபின் டேய் க்ரிஷ் நல்ல நேரம் வந்துருச்சு டா தாலியை கட்டு என்று ஒருவன் சொன்னான். ஆஃபீசர் முன்பு இருவரும் போய் நின்றோம் நண்பர்கள் மாலையை  கொடுக்க நாங்கள் மாலையை  மாற்றிக்கொண்டோம். பின்பு க்ரிஷ் மஞ்சள் கயிறில் தங்கமாங்கல்யம் கொண்ட தாலியை சட்டையிலிருந்து எடுத்தான். ஒரு நிமிடம் இருவரும் கண்களோடு பார்த்து கொண்டோம் கட்டுடா என்று நண்பர்கள் மலர் தூவினர். நான் தலையை குனிந்து கொள்ளவும் க்ரிஷ் தாலியை கட்டினான்.சொல்லமுடியாத ஏதேதோ எண்ணங்கள் என் மனதில் எழுந்தது கண்களில் நீர் கசிந்தது அது ஆனந்த கண்ணீரா சோக கண்ணீரா என்று தெரியவில்லை. 

 

சிஸ்டர் வாழ்த்துக்கள் டேய் மச்சான் பாமிலிமென் ஆகிட்ட என்ற சத்தங்கள் கேட்டது.அனைவர்க்கும் நான் நன்றி கூறினேன் பின்பு அனைவரும் ஹோட்டலில் சாப்பிட்டு கிளம்பினோம். எல்லாம் சரியாகிரும் மச்சி என்று சொல்லிவிட்டு அனைவரும் விடை பெற்றனர்.போலாமா மகா என்றான் க்ரிஷ் போலாம் க்ரிஷ் என்று கூறி நடக்க தொடங்கினேன் அவனோடு. 

வரும் வழியிலேயே இருவருக்குமான சில ஆடைகளை வாங்கி கொண்டோம். வீடு வந்து சேர மணி மூன்று ஆகிவிட்டது க்ரிஷ் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமா ஐ பீல் சோ டையர்ட் என்றேன்.எனக்கும் தான் மகா என்றான்.அவன் டி ஷிர்ட்க்கு மாரி சோபாவில் படுத்தான்.நானும் நைட்டிக்குள் நுழைந்தேன். கட்டிலில் படுத்தவள் எப்படி தூங்கினேன் என்றே தெரியவில்லை எழுந்து பார்த்த போது மணி ஏழு ஆகிவிட்டது.உடனே எழுந்து உட்கார்ந்தேன்.எதிரில் க்ரிஷ் சிரித்து கொண்டு அமர்ந்திருந்தான் என்னங்க கொஞ்சம் சீக்கிரம் எழுப்பி விட்ருக்கக்கூடாதா என்று சிறு சிணுக்கத்துடன் கேட்டேன். நீ இப்போ தான் நிம்மதியா தூங்கிட்டு இருக்க காலேல இருந்து அழுதுட்டே இருந்தல அதான்  தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன் .சரி இரு காபி போட்டேன் உனக்கும் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி சென்றான். 

இவன் ஒருவனே போதும் அனைத்து சொந்தங்களின் இடத்தை நிரப்ப என்று என் மனம் சொல்லியது. 

இருவரும் டிவி முன் அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்தோம். நான் அவன் தோளில் சாய்ந்து கொண்டேன் அவனும் என் தோளில் கைவைத்து அணைத்து கொண்டான்.ஐ லவ் யூ க்ரிஷ் என்றேன் ஐ லவ் யு மகா என்று என் நெத்தியில் முத்தமிட்டான். அப்படியே நேரம் நீள கூடாதா என்று தோன்றியது நேரம் ஓடி கொண்டு இருந்தது. அருகில் இருந்த சிறிய கடையில் சாப்பிட்டு விட்டு வந்தோம். வரும் போது அண்ணே அக்காக்கு மல்லிகை பூ வாங்கிக்குடுனே என்றபடி பூக்கூடையுடன் ஒரு சிறுமி வந்தாள் சரி ஒரு முழம் குடுமா என்று வாங்கி கொண்டு வீடு வந்தோம். அப்பறம் மகா வேற ஏதும் என்றான் க்ரிஷ்.வேற என்ன க்ரிஷ் என்றேன் குரும்சிரிப்புடன். இன்னைக்கு ஏதாவது கிடைக்குமா என்று கண்சிமிட்டினான்.நான் வெட்கத்துடன் தலைகுனிந்தேன். அவன் அருகில் நெருங்கினான். இருங்க ரெடியாகிட்டு வந்துருறேன் என்று சொல்லி குளித்துவிட்டு புடவை கட்டினேன் ஏதோ இனம் புரியாத வெட்கம் கலந்த பயம் பற்றிக்கொண்டது. 
அவன் இருந்த அறைக்குள் சென்றேன். அவன் செல்லில் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்தான். என்னை பார்த்ததும் வா மகா என்று செல்லை கீழே வைத்தான். நான் அவன் அருகில் அமர்ந்தேன். ஏதோ முகத்தில் சிகப்பாய் தெரிகிறதே என்ன வெட்கமா என்றான் குறும்புடன் .போங்க என்று அவனை சிறிதாக அடித்தேன். என்னடி இப்போவே அடிக்க அரமிச்சுட்ட இரு இரு உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு என்று என் கைகளை பிடித்து இழுத்து அவன் மீது சாய்த்துக்கொண்டான். உள்ளதால் ஒன்றான நாங்கள் உடலால் ஒன்றானோம். 

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்னகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் 

அதன் பின்பு அவனுடனான என் நாட்கள் தெளி தேனின் இனிமையை மிஞ்சுபவையாக இருந்தன. என் காலை விடிவதும் இரவு முடிவதும் அவன் மார்பினிலே என்றானது.அவன் ஆடைகளை முகர்ந்து பார்க்காமல் நான் துவைத்த நாள் இல்லை அந்த வியர்வை வாசம் அது தான் இப்பொது சென்ட் வாசத்தை விட எனக்கு பிடித்த ஒன்றாக மாறிப்போய் இருந்தது. 

அவனுக்கான எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தேன். என் சமையல் அவனுக்கு பிடித்திருப்பதாக கூறுவான். தோசை சுடும் போது கிட்சன் மேடையிலேயே உட்கார்ந்து சாப்பிடுவான் ஒவ்வொரு தோசையும் எனக்கு முத்தம் கொடுத்தால் மட்டுமே அவனுக்கு கிடைக்கும்.அவன் குளிக்கையில் நானும் வருவேன் என்று அடம்பிடித்தது உண்டு.காதலையும் காமத்தையும் தாண்டிய ஒரு இன்ப நிலையில் நாங்கள் இருந்தோம் இன்றோடு சரியாய் ஒரு வாரம் ஆகிவிட்டது எங்கள் திருமணம் முடிந்து. 

 


#### 

போலீஸ் ஜீப் சைரன் சத்தம் கேட்டது என்ன இன்னும் கதவை திறக்கலயா.கதவை உடைக்க ஏற்ப்பாடு செய்ங்க என்று கத்திக்கொண்டு இருந்தார் போலீஸ். சிறிது நேரத்தில் திடும் திடும் என எதையோ வைத்து உடைத்து கொண்டு இருந்தார்கள். 

அன்று வேலை முடிந்து திரும்பியதும் பீச் செல்லவேண்டும் என்று பைக்கில் கிளப்பினோம். அவன் எப்போதும் போல என்னை கிண்டல் அடித்து கொண்டு வண்டியை ஒட்டிக்கொண்டு இருந்தான். நானும் பொய்  கோபத்துடன் சண்டையிட்டு கொண்டே வந்தேன். அப்போது முன்னே போய்க்கொண்டு இருந்த வேனை ஓவெர்டடக் பண்ண எதிரில் லாரி வந்ததை அவன் பார்த்துவிட்டு சடன் பிரேக் போட்டான். வண்டி அப்படியே நிலை தடுமாறி கீழே விழுந்தோம். நான் ரோட்டின் ஓரத்தில் உருண்டு போய் கொண்டு இருந்தேன்.எதிரில் வந்த லாரி பைக்குடன் அவனை தூக்கி எறிந்தது அவன் ரோட்டின் அந்த பக்கம் போய் விழுந்தான். 

 

க்ரிஷ் என்று கத்த கூட முடியாதவளாய் மயங்கியபடி ரோட்டோரத்தில் கிடந்தேன். கண்களில் கண்ணீர் மட்டும் கசிந்து கொண்டு இருந்தது. 
நான் கண்விழித்து பார்த்த போது அரசு மருத்துவமனையில் இருந்தேன்.அருகில் இருந்தவர்கள் சிஸ்ட்டரை கூப்பிட்டுவந்தார்கள். நான் க்ரிஷ் க்ரிஷ் என்று சத்தமாக சொல்லி கொண்டே கட்டிலிலிருந்து இறங்க முயன்றேன்.அந்த நர்ஸ் என்னை அமரவைத்து செக் பண்ணிக்கொண்டு இருந்தார். க்ரிஷ் எங்க இருக்கான் நான் கிரிஷை பாக்கணும் என்றேன். ஓ அந்த பையன் பேர் க்ரிஸா அவன் ஸ்பாடௌட் மா ஆமா உன் பேரு என்ன அட்ரஸ் சொல்லு சொந்தக்காரவங்க நம்பர் சொல்லு விஷயத்தை சொல்லிவரவைப்போம் என்று இயந்திரமாக சொன்னார். இல்ல  க்ரிஷ் இல்ல க்ரிஷ் என்னவிட்டு போகமாட்டான் க்ரிஷ் க்ரிஷ் என்று கத்தி கொண்டே இறங்கி ஓடினேன். இன்னும் சில நர்ஸ் ஓடிவந்து என்னை பிடித்து உட்கார வைத்தனர் .உன் பேர் என்ன என்று கேட்டனர் மகா என்றேன் அய்யே முழு பேரை சொல்லு என்றனர். மஹாலக்ஷ்மி உன் வீட்டுக்காரர் பெயர் என்ன என்றனர் கிருஷ்ணகுமார் என்றேன் அட்ரஸ் சொல்லு என்றனர் சொன்னேன் காச கட்டிட்டு பாடிய எடுத்துட்டு போங்க என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.போலீஸும் வந்து விசாரித்து அச்சிடேன்ட் என்று பதிவு செய்து சென்றனர். 
என்னுடைய கைப்பையும் க்ரிஷின் உடைந்த கைப்பேசியையும் கொடுத்து விட்டு சென்றார் ஒருவர். நான் என் அம்மாவிற்கு கால் பன்னினேன் என் நம்பரை பார்த்த உடன் கட் செய்து விட்டார்கள். க்ரிஷின் அம்மாவும் எடுக்கவில்லை நான் ரிசப்சன்னில் சென்று என் கணவர் உடலை கொண்டு போக வேண்டும் என்றேன். சில பார்மாலிட்டி முடித்து ஆம்புலன்ஸில் அவன் உடல் ஏற்றப்பட்டது என் கைப்பையில் இருந்த அவனது கார்டை ஸ்வாய்ப் செய்து பணத்தை கொடுத்துவிட்டு ஆம்புலன்சில் ஏறிக்கொண்டேன்.வீட்டின் முன்பு ஆம்புலன்ஸ் நின்றது நான்கு பேர் ஸ்ட்ராக்ட்சரை உள்ளே கொண்டுவந்து வைத்து பாடிய எங்க வைக்கிறதுனு கேட்டாங்க. நான் ஒரு பாயை விரித்து அதில்வைக்க சொன்னேன் கிரிஷை அதில் வைத்துவிட்டு போய் விட்டார்கள். நான் அறைக்கதவு வீட்டின் கதவு ஜன்னல் என எல்லாத்தையும் மூடிவைத்தேன் 

நான் கேட்டது அழகிய நேரங்கள்..யார் தந்தது விழிகளில் ஈரங்கள்..? …நான் கேட்டது வானவில் மாயங்கள் ..யார் தந்தது வழிகளில் காயங்கள்..?…இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானேஅது உயிருடன் எரிகுதடா 

அவன் தலையில் அடிபட்டு கட்டு போடப்பட்டு இருந்தது உடலில் அங்கங்கே சிராய்ப்புகளும் ரத்தம் துடைத்தும் துடைக்காமலும் இருந்தது நான் வெகு நேரம் அவன் கையை பிடித்தபடி அமர்ந்திருந்தேன்.ஏதேதோ எண்ணங்கள் மனதில் தோன்றின.கடைசியாக அவன் இறந்தது யாருக்கும் தெரியாம பார்த்துக்கொண்டு அவனை இங்கயே வைத்துக்கொள்ளவேண்டும் தெரிந்தால் க்ரிஷை என்னை விட்டு பிரித்து விடுவார்கள் என்று முடிவு செய்தேன். அவனால் பேசமுடியாது அசைய முடியாது மத்தபடி அவன் என்னுடன் தானே இருக்கிறான் என்று மனம் சொன்னது. அபார்ட்மெண்ட்டில் செக்யூரிடியோ கேமராவோ கிடையாது இரவு நேரம் என்பதால் யாரும் நாங்கள் வந்ததை கவனிக்கவில்லை. அவன் இறந்ததை மறைக்க முடிவு செய்தேன் வெந்நீர் போட்டு அவன் உடலை முழுவதும் துடைத்துவிட்டேன் காயம் இருந்த இடங்களில் மருந்து போட்டுவிட்டு அவனுக்கு டீ-ஷர்ட் ஷார்ட்ஸ் போட்டுவிட்டேன் மருந்துபோட்டால் மட்டும் குணமாகிவிடுமா என்று மூளை சொன்னது அனால் இதயம் எதையுமே கேட்க மறுத்தது .பின்பு எப்போதும் போல அவன் அருகிலேயே அவனுக்கும் சேர்த்து போர்வை மூடி படுத்துக்கொண்டேன்.நானும் இறந்து போய் இருக்க கூடாதா என்று நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. 


அந்த வியர்வை வாசம் அவனிடம் இல்லை மருந்து டெட்டால் வாசமே வந்தது வெகுநேரம் அவனை பார்த்துக்கொண்ட்டே இருந்து தூங்கி போனேன்.காலையில் எழுந்து எப்போதும் போல காபி போட்டு குடித்தேன்.சமையல் வேலை முடித்து விட்டு கடைக்கு கிளம்பினேன்.உப்பு பாக்கெட் பத்தும் ரூம் ஸ்பிரே மூன்றும் வாங்கிகொண்டுவந்தேன்.க்ரிஷின் முகம் சற்று வீங்கி போய் இருந்தது. உப்பு பாக்கெட்டை உடைத்து அவனை சுற்றி கொட்டி வைத்தேன் அவனுக்கு பிடித்த fogg ஸ்பிரே அவன் மேல் அடித்துவிட்டேன். அவன் அருகில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டே சாப்பிட்டேன். சில ஈக்கள் அவனை சுற்றி வந்தன மஸ்கிடோ பேட்ட்டிற்கு இறையாகின மாலை நேரத்தில் சாம்பிராணி பொருத்தி வைத்தேன். காய்கறிகள் வாங்கிகொண்டுவந்தேன். என்னமா க்ரிஷ் இன்னும் வரலையா என்றார் .பக்கத்து வீட்டு மாமி இல்ல உடம்பு சரி இல்ல வீட்ல தான் இருக்காரு வேளைக்கு போகல என்று கூறி விட்டு உள்ளே வந்து கதவை சாத்தினேன். இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. 

ஏன் தீடீரென இப்படி கேட்டார்கள் எதைவைத்து கேட்டிருப்பார்கள் மீண்டும் வெளியில் போய் பார்த்தேன்.அவன் செருப்பு இல்லையென்று தான் கேட்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். அடுத்த நாளில் அவன் போடும் மாடல்லில் செருப்பு ஒன்றை வாங்கி வாசலில் போட்டேன்.எப்போதும் ரூம்ஸ்ப்ரேயை அடித்து இருப்பேன் வீட்டில் l.நாட்கள் சென்றன அவன் உடலில் இருந்து துர்நாற்றம் ரூம்ஸ்ப்ரே போட்டும் வெகுவாக வந்தது. 

சில நாட்களில் அவன் உடல் சுருங்கி சிதைய தொடங்கியது. புழுக்கள் ஒன்றிரண்டு ஓடின அடித்து கொன்றாலும் திரும்ப திரும்ப அதிகமாய் வந்து கொண்டே இருந்தன.  தரை சுவர் என்று புழுக்கள் ஓடிக்கொண்டு இருந்தன.நான் அவைகளை அகற்றினேன் முடியவில்லை.வீட்டிற்கு வெளியே சென்றுவிடாதபடி கதவுகளை அடைத்து வைத்திருந்தேன். எப்படியோ சில வெளியே சென்று காட்டிக்கொடுத்துவிட்டன. அதனால் தான் வெளியில் இப்பொது போலீஸ் வந்து கதவை உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனாலும் நான் கிரிஷை விடமாட்டேன். கிட்சேன் சென்று கத்தியை எடுத்து  இடது கையை அறுத்துக்கொண்டு வந்து க்ரிஷின் மார்பில் சாய்ந்து கொண்டேன். 
நீங்கள் கேட்கலாம் க்ரிஷ் இறந்தது தெரிந்ததுமே நீயும் தற்கொலை செய்து இருக்கலாம் ஏன் இப்பொது செய்து கொள்கிறாய் என்று. இறந்த பின் வாழ்க்கை இருக்கிறதோ இல்லையோ தெரியாது அதான் நான் முடிந்த வரை அவனோடு இருக்க முடிவு செய்து இருந்தேன் இப்பொது அவன் உடலையும்பிரித்து கொண்டு போக போகிறார்கள் அதற்காக தான் இந்த முடிவு இருவரையும் ஒரே இடத்தில் புதைத்தால் மகிழ்ச்சி. 
ரத்தம் போய்க்கொண்டு இருந்தது கண்களை இருள் கவ்விக்கொண்டது. என் மீதும் புழுக்கள் ஏறிக்கொண்டு இருந்தன.இதோ அவர்கள் கதவை உடைத்து உள்ளே வந்து விட்டனர்.என் உடலையும் அவன் உடலையும் தூக்கி கொண்டு செல்கின்றனர் சிலர் மூக்கை பொத்தி கொண்டு வீடு புல்லா புழுவா ஓடிட்டு இருக்கு என்று சொல்லி கொண்டு இருந்தனர்.நானும் க்ரிஷும் கட்டிலில் அமர்ந்து அங்கே எங்கள் உடலை தூக்கி கொண்டு செல்வதை பார்த்துக்கொண்டு இருந்தோம். 



##முற்றும் ##

1 comment:

Anonymous said...

It's really super

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !