Monday, December 10, 2018

நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறலாம்

Image result for kollan
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் இரும்பு சாமான்கள் செய்து அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் சோதனை காலம் வந்தது. கொல்லப் பட்டறை தொழில் நலிவடைந்தது. இதனால் வருமானம் குறைந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது. இதனால் கொல்லன் மனதில் விரக்தி குடிக்கொண்டது.
ஒருநாள் கொல்லன் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் வலிந்தோடியது. இதைக்கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள். என்னங்க, எதுக்கு இப்படி கண்கலங்குறீங்க. இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை பக்கத்துல இருக்கற கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே. அதை வெச்சு நாம ராஜாவாட்டம் வாழலாமே என்றாள்.
மனைவியின் ஆறுதல் கொல்லனுக்கு புது நம்பிக்கை, புது உற்சாகத்தை கொடுத்தது. அடுத்த நாளே காட்டிற்கு சென்று விறகுகளை வெட்டி விற்று வந்தான். இந்த தொழிலால் அவனுக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது. அன்றிலிருந்து அவனது வீட்டில் தினமும் சோளக்கஞ்சி அத்துடன் மனைவியின் அன்பும் அவனுக்கு ஓரளவு மகிழ்ச்சியை தந்தது. இருந்தாலும் அவனது மனதில் சற்று சோகமும் இருந்தது.
ஒருநாள் மனைவி அவனிடம், என்னங்க, இன்னும் உங்க மனசுல ஏதோ சோகம் இருக்கற மாதிரி தெரியுதே? என்று கேட்டாள். அதற்கு கொல்லன், பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில தினமும் நெல்லுச்சோறும், கறிக் கொழம்புமாய் இருக்கும். ஆனா இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே அதுதான் மனசுக்கு என்னவோ போல இருக்கு என்று கூறி கண்கலங்கினான்.
மனைவி, ஏங்க, நீங்க எதுக்கு கண்கலங்குறீங்க. கவலைப்படாதீங்க என்னோட நகைய வித்தா கொஞ்சம் பணம் கிடைக்கும். அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வைக்கலாம். கடை வெச்சுட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள். இதைக்கேட்டு கொல்லன் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றான். விறகு வெட்டியாக இருந்தவன் விறகுக்கடை முதலாளியானான். இதனால் வருமானம் பெருகியது. அன்றிலிருந்து அவனது வீட்டில் தினமும் கறிச்சோறு தான். மீண்டும் அவனது வாழ்க்கையில் சோதனை ஆரம்பித்தது. திடீரென்று ஒருநாள் அவனது விறகுகடையில் தீப்பிடித்து, அத்தனை மூலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.
இதைக்கண்டு விறகு கடை முதலாளி கதறி அழுதான். நண்பர்கள் பலரும் வந்து அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். மனைவி அவனது கண்ணீரை துடைத்து, இப்போ என்ன நடந்துருச்சுனு அழுதிட்டு இருக்கீங்க. விறகு எரிஞ்சி வீணாவா போயிருக்கு. கரியாத்தானே ஆகியிருக்கு. நாம நாளையிலிருந்து கரி வியாபாரம் பண்ணுவோம் என்றாள். இதைக்கேட்ட பின் அவனுக்கு தனது வாழ்க்கையில் மீண்டும் ஒளி தெரிந்தது.
தத்துவம் :
ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் ஒருவர் நம்முடன் இருந்தால் விண்மீனையும் எட்டி பிடித்து விடலாம். வாழ்க்கையில், நமக்கு ஏற்படும் கஷ்டத்தில் இருந்து மீள ஏதேனும் ஒரு வழி இருக்கும். அதை சரியான தருணத்தில் பயன்படுத்தினால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறலாம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !