Wednesday, December 5, 2018

நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது


Related image
ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.

காஹா தாத்தாவைப் பார்த்து "ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?" என்று கேட்டது."

ஒரு ஆத்மா கூட இல்லை" என்றான் மீனவன்.

"நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்" என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.

அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.

ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.

"அரசனுக்கு காஹா ஏன் தேவை?" மீனவன் தண்டோராவிடம் கேட்டான்."

அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்" என்று கூறிய தண்டோரா. சட்டென்று "உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?" என்று கேட்டான்.

இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. "அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது" என்று உளறினான்.

தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், "காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது" என்று கூறினான்.

அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.

மீனவன் "காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்" என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.

அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.

அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !