Wednesday, December 19, 2018

விளம்பரக்கார உலகமடா

பக்கத்து வீட்டு கிட்டு மாமாவைத்  தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. அடையாறு , மத்ய கைலாஷ், வட பழனி ஏரியாக்களில் ரொம்ப பிரபலம் அவர். ஏதோ அரசியல் பிரமுகரோ , சினிமா பிரபலமோ, எழுத்தாளரோ இல்லை. ஆனாலும். பழக்கடை வியாபாரி முதல், பெட்டிக் கடை முதலாளிகள், தள்ளு வண்டி விற்பனையார்கள் , இப்படி எல்லோருக்கும் அவர் பரிச்சயம்.  அவர் என்ன வேலை செய்கிறார்னு யாருக்கும் தெரியாது. ஒரு நாள் மத்ய கைலாஷ் கோயிலைப் பெருக்கிக் கொண்டு இருப்பார் . இன்னொரு நாள் நடுத் தெருவில் தள்ளு வண்டியில் கடலை விற்பார். மற்றொரு நாள் யாரோடாவது சண்டை போட்டுக் கொண்டிருப்பார். கிட்டு மாமா அப்படித்தான் . மாமாவின் நீண்ட தாடியும், அவரின் காவி உடையும் அவரைக் கடந்து போகிறவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.
‘மாமா என்ன சாமியாரா? மாமி”? என்று ஒரு முறை நான் கூட கேட்டிருக்கேன் எனக்கு அப்பொழுது பத்து வயசு.
“இல்லைடா கண்ணா ” விஜயா மாமி ஒரு சின்ன சிரிப்போடு சமாளிப்பார்.
மாமா என்ன  வேலை பார்ப்பாரோ தெரியாது . ஆனால் எதையும் நிரந்தரமாகப் பார்க்க மாட்டார் . ஒரு முறை ஒரு ஆறு மாசம் வேலை பார்த்தார். எனக்கு தெரிந்து அது தான் அதிக நாள் பார்த்தது. ஆனால் அத்தனை சம்பளத்தையும் அப்படியே கார்கில் நிதிக்குக் குடுத்து விட்டார். அப்பொழுது எனக்கு ரொம்ப கோபம் வந்தது. கொஞ்சமாவது வீட்டிற்கு கொடுத்திருக்கலாம். மாமிக்கு அப்போ உடம்பு சரியில்லாமல் வேலை செய்ய முடியவில்லை ஆனாலும் இவர் பாட்டிற்கு கொஞ்சம் கூட கவலை இல்லாமல் சம்பளத்தைத்  தானம் குடுத்தது எந்த விதத்தில் நியாயம்?
ஆனால் மாமிக்கு மாமா மீது கோபமே வராது. மாமியின் பொறுமையும் சிரிப்பும் மாமாவைப் போலவே மிகப் பிரபலம். அவருடைய கைமணமும், ஊறுகாய்களும், அவர் செய்யும் பலகாரங்களும் அந்தத் தெருக்களில் உள்ள இல்லங்களில் மிகப் பிரசித்தம். அவர் வீடு தேடி வந்து வாங்கி செல்வதோடு, அவரை அழைத்தும் வந்து செய்து தர சொல்வார்கள்.
எங்கள் வீட்டில் நாங்கள் 6 பேர். அப்பா துபாயில் வேலை பார்த்து, அவ்வப்போது வந்து போவதுண்டு. எனக்கு மூணு அக்கா. நான் கடைசி. அம்மாவுக்கு என்னை பார்த்துக்கொள்ள முதலில் பக்கத்து வீட்டு மாமி நிறைய உதவி செய்ததாக அம்மா எப்பவுமே சொல்வார். மாமாவிற்கும், மாமிக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் நான் அவர்களுக்குப் பையன் போல. எனக்கும் அவர்கள் அப்பா அம்மா போலத்தான்.
“மாமாவுக்குப் பைத்தியமா மாமி ?” விவரம் தெரியாத ஒரு வயசில் கேட்ட பொழுது, “ஏண்டா சீனு கண்ணா அப்படி கேட்கற.”
“திடீர்னு மாமாவிற்குக் கோபம் வருது யாரோடையாவது தெருவில சண்டை போடறார். மறுநாளே அவங்களோட உட்கார்ந்து டி குடிக்கிறார். அப்புறம் பார்த்தா கடலை விக்கறார் , தீடிர்னு வேலை பார்க்கறார் , அப்புறம் வீட்டிலேயே இருக்கார்”.
“ஹ்ம்ம்” என்கிற பெருமூச்சும், சிரிப்பும் மட்டுமே வந்தது மாமியிடமிருந்து.
எனக்குப் புரியாத வயது என்று கேள்விகளுக்குப் பதில் சொல்ல மாட்டாரோ என்னவோ?
ஓர் அளவிற்கு விவரம் புரியும் பொழுது, அம்மா சொல்லியதுண்டு. மாமாவிற்கும், மாமிக்கும் கல்யாணம் ஆன புதிசில் யாரோ காசிக்குப் போக சொன்னதாகவும்,  அங்கு மாமாவிற்கு ஏதோ சித்தம் கலங்கியதாகவும் சொல்வதுண்டு. அப்பொழுதிருந்து தாடியும், காவியும் அணியத் துவங்கினார். பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டார் என்றும் சொல்வார்.
நான் வளர வளர ,மாமாவோட பேசத் தொடங்கினேன். நிறைய நேரம் மொட்டை மாடியில் ராத்திரி நேரம் நக்ஷத்திரம் பார்த்துப் பேசியிருக்கேன்.
அப்பொழுதெல்லாம் மாமா மிக அதி புத்திசாலி உலகம் அவரை புரிஞ்சிக்கலையோன்னு தோணும். என்னிக்குமே புத்திசாலிகளை, அவர்கள் வாழுகிற காலகட்டத்தில் புரிஞ்சிக்கறது கஷ்டம் தான்.
மாமாவோட சிந்தனைகள் மிக உன்னதமா இருக்கும் , தெளிவா இருக்கும். எனக்கு என்னவோ அவர் கண் முன்னாடி வலம் வர “என்னோட பாரதியார் “
நாம் “சரி சரி உலகம் மாறிக் கொண்டே இருக்கும் என்று ஒதுங்கிச் செல்ல கூடிய விஷயங்களை, அவரால் ஒதுக்க முடியாது ஒதுங்க முடியாது.
“அவர்  ஒரு மனசாட்சி மாதிரி சீனு. மனம் உள்ளே சொல்றத அவர் வெளில உடைச்சு சொல்றார் அவளோ தான் ” மாமாவைப் பத்தி மாமி இப்படித்தான் சொல்வார்.
“மனம் சொல்றதை முழுக்க எல்லாரும் வெளில சொல்ல ஆரம்பிச்சா எப்படி இருக்கும் ? அவ்வளவுதான் உலகமே பிரளயம் ஆயிடும். ” மாமி சொல்வது சரி போலத்தான் தோன்றியது.
எங்கள் குடும்பத்தில் அக்கா அனைவருக்கும் ஒவ்வொருத்தராகத் திருமணம் நடந்தது . நானும் வளர்ந்தேன். சமூக வலைத்தளங்களே உலகம் போல நினைக்கும் இளைஞன் நான். கல்லூரி படிப்பை முடித்து ஒரு மென் பொருள் வேலை பார்க்கும் எனக்கு இப்பொழுதெல்லாம் நேரம் போதவில்லை. பாதி நேரம் வாட்ஸ் அப்பிலும் மீதி நேரம் பேஸ் புக்கிலும் காலம் தள்ளும் சராசரி 25 வயது இளைஞன்.
மாமாவிற்கும் மாமிக்கும் வயது ஆனது. மாமி முன் போல நிறைய சமைக்கச் செல்வது இல்லை. ஆனாலும் வீட்டிலேயே அவரிடம் நிறைய பேர் வாங்கிச் செல்ல வருகிறார்கள். அதனால் வருமானம் குறைவது இல்லை. மாமாவும் அது போலவே உலகக் கவலையோடே இருக்கிறார்.
அன்று ஒரு ஞாயிறு காலை , நான் கடமையே கண்ணாய் பேஸ் புக்கில் இருக்க, மாமி உள்ளே வந்து  “சீனு நேத்து ராத்திரியிலிருந்து மாமாவைக் காணலை .” நீ கொஞ்சம் போய்த்  தேடிப் பாத்துட்டு வரியா ” என பதட்டமாகக் கேட்டபொழுது, நானும் பதட்டமானேன்.
“ராத்திரி வீட்டிற்கு வரலையா ?எங்க போய் தேடறது ..?”
“தெரியல .. எங்க போனாலும் ராத்திரி திரும்பி வந்துடுவார்.” மாமியின் குரலில் பயம் தெரிந்தது.
“சரி நான் வண்டியை எடுத்து போய் தேடி பாத்துட்டு வரேன். “
அம்மாவுக்கும், மாமிக்கும் ஆறுதலான பார்வை கொடுத்துவிட்டு, கிளம்பித் தெரு தெருவாக தேடத் தொடங்கினேன். மாமா வழக்கமாக இருக்கும் பழக் கடைகள், பெட்டி கடைகள், கோயில் எனத் தேடித் தேடிச் சோர்ந்து போனது மனம்.
எங்குப் பார்த்தாலும் மக்கள் ஜனம் ஆனால் கண்ணில் எப்பொழுதும் தென் படும் அவர் தாடியும் காவியும் காணவில்லை. கோயிலின் வாசலில் சிறிது நேரம் இளைப்பாறிய பொழுது, கண் முன் இரு இளைஞர்கள் செல்ஃபி எடுத்தபடி அதை உடனுக்குடன் சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். மாமாவைத் தேடி அலைந்த சோர்ந்த மனம், பசி எல்லாமாகச் சேர்ந்து எரிச்சலாக வந்தது.
ஒருவர், “கோயிலில் நாம் வணங்குவதைச் சரியாக படம் எடு அதை முகநூலில் போட வேண்டும் ” என்று நண்பரிடம் எடுக்க சொல்லிக் கொண்டிருந்தார்.
கோயிலுக்கு வந்தா கூட அதை விளம்பரமாக அறிவிக்க வேண்டுமோ. அவர்களின் செய்கைகள் கோபம் வரவழைத்தது. ஓங்கி ஒரு அரை விடலாம் போலிருந்தது.
ஒருவேளை மாமா வீட்டிற்குப் போயிருப்பாரோ எனத் திரும்பி வீடு வந்து பார்த்தபொழுது மாமி இப்பொழுது அழவே தொடங்கி இருந்தார்.
“நேத்திக்கு மத்தியானம் சாப்பிட வந்தது. அவர் பாட்டுக்கு ஏதோ பண்ணுவார். நான் ஒரு நாள் கூட சண்டை போட்டது இல்லை. எங்க போனார் தெரியலையே ” விசும்பலோடு புலம்பத் தொடங்க,  மீண்டும் வண்டியை எடுத்து அலையத் தொடங்கினேன்.
தெருத்தெருவாக அலைந்து தேடித் திரிந்தாலும் எங்குமே அவரைக்’ காணவில்லை. மாலை வந்து சூரியன் விடைபெறும் நேரமும் வந்தது, வண்டியில் இருந்த பெட்ரோல் காலியாகி விட, அதை உருட்டியபடியே நடந்தேன். கோயிலுக்கு அருகில் ஒரு சின்ன குறுக்கு சந்தில் நிறைய சாலையோர பிச்சைக்காரர்கள் கையேந்தியபடி அமர்ந்து இருந்தனர். அந்தச் சந்தில் இந்த கோடியில் அவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே வண்டியை நிறுத்தி விட்டு அமர்ந்து கொண்டேன்..
எங்கு தான் போயிருப்பார் மாமா?
மனமும் உடலும் சோர்ந்து போயிருந்த நேரம். பார்வை பிச்சை எடுப்போர்களின் பக்கம் போனது. முழு இருட்டு துவங்கவில்லை ஆனாலும் வெளிச்சம் குறையத் துவங்கியதால் சரியாகத் தெரிந்தும் தெரியாமலும் இருந்த அவர்களுக்கு நடுவில் சோகமாக மாமா.
அவர் தானா என்று கண் சிமிட்டி மீண்டும் சரி பார்த்தபொழுது. நான்கு இரவலர்களுக்கு நடுவில் இவரும் சோகமாக ஏதோ சிந்தித்தபடி அமர்ந்திருந்தார்.
மனம் பதைத்தது.
“மாமா வீட்டிக்கு போலாம் வாங்க. இங்கே என் உட்காந்து இருக்கீங்க?”
“சீனு .” சோகத்துடனே பேசினார் மாமா.
“என்ன? வாங்க போலாம் . மாமி பயந்து அழுந்துண்டே இருக்காங்க . இங்கே ஏன்  உட்காந்து இருக்கீங்க ?”
“சீனு . இவங்கெல்லாம் பாவம்டா “.
“ஆமாம் உலகத்துல பாதி பேர் பாவம் தான் . அதுக்கு என்ன பண்ண முடியும். எழுந்து வாங்க போலாம்”.
“நேத்திக்கு சாயங்காலம் ஒரு கும்பல் வந்து இவங்களுக்கு உதவி செய்யறதா சொல்லிட்டு. இவங்களுக்கு உதவி செய்யற மாதிரி போட்டோ எல்லாம் எடுத்தாங்க . அதை எதிலேயோ போடணும்னு நின்னு பேசிக்கிட்டாங்க .
அப்புறம் அவங்க கொண்டு வந்த எதையும் குடுக்காம அப்படியே எடுத்திட்டு போய்ட்டாங்க . அது தப்பில்லையா .. நான் சண்டை போட்டேன் . அவங்க என்னைப் பைத்தியம்னு கிண்டல் பண்ணினாங்க. வெறும் விளம்பரம் மட்டும் செய்யும் அவங்க பைத்தியமா நான் பைத்தியமா . நான் அவங்க பின்னாடியே போனேன். எங்கே பாத்தாலும் நின்னு நின்னு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கிட்டு அதைப் ஃபோன்ல எதிலையோ போட்டாங்க. நான் பின்னாடியே வரேன்னு என்னை அடிச்சு துரத்தி விட்டாங்க”.
மாமாவிற்கு என்ன பதில் சொல்லி எப்படி புரிய வைப்பது என்று புரியவில்லை. “மாமா இப்போவெல்லாம் சமூக வலைதளத்தில் எல்லாத்தையும் போட்டோ போட்டு விளம்பரப் படுத்துதல் ஒரு பழக்கம்
ஆகிட்டு இருக்கு. நம்ம ஒன்னும் பண்ண முடியாது மாமா. உலகம் வளர்ச்சி அப்படி தான் போகுது. உள்ளுக்குள் “நானே நிறைய முறை இதை போட்டிருக்கிறேனே .” என்ற ஒரு உறுத்தலோடு பதில் உரைத்தேன்.”
“இடது கை தருவது வலது கைக்குத் தெரியக் கூடாது என்ற பழமொழி எல்லாம் காத்தில போச்சோ? ஒன்னும் செய்யாமலே இவங்க விளம்பரம் மட்டும் பண்ணிப்பாங்களா .. எதுவும் தெரியாமலே தெரிஞ்ச மாதிரி பேசுவாங்களா ?”
“அது அப்படி இல்லை மாமா” . இவருக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்த பொழுது, மாமா நான்  பேசுவதைக் கவனிக்கவில்லை என்று புரியவும் அமைதியாக இருந்தேன்.
மாமா சோகமாக வெகு  நேரம் வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். நானும் அமைதியாக அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன்.
திடிரென்று பெரும் குரலோடு,
“விளம்பரக் கால உலகமடா வீணில் திரியும் மாந்தரடா
விண்ணாய் அறிவை வளர்க்காமல் விளம்பரம் மாத்திரம் செய்திடுவார்”
என்று வெடிச் சிரிப்பு சிரித்த படி நடக்க ஆரம்பித்தார் மாமா.
-லக்ஷ்மி சுப்பு

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !