Thursday, December 27, 2018

லட்சத்தில் ஒருவன்

பிங்க் கலர் டிசைனர் சாரியில், தேவதை போல் ஜொலித்தாள் ரம்யா. புது மணப்பெண்ணின் பூரிப்பு, முகத்தில் தெரிந்தது. திருமணம் முடிந்து, இரண்டு நாட்களே ஆகியிருந்தது. இன்று, மாப்பிள்ளை வீட்டாருக்கு விருந்து. விதவிதமான உணவு வகைகள், தடபுடலாய் தயாராகி கொண்டிருந்தது. காற்றில் மிதந்து வந்த, மட்டன் பிரியாணி வாசனை, நாவில் நீர் ஊற வைத்தது. மாப்பிள்ளையின் அம்மா, அப்பா முதலில் வந்து விட்டனர். இன்னும், அரைமணி நேரத்தில், எல்லாரும் வந்து விடுவர். செல்ல மகளின் திருமணம் சீரும், சிறப்புமாக நடந்து முடிந்ததில், ராகவன்- -விசாலம் தம்பதியினர், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தனர். 
அலமாரியில் இருந்த, ராகவனின் மொபைல் போன் சிணுங்கியது. ரம்யா, அதை எடுத்து போய், அப்பாவிடம் கொடுத்தாள். 
''ஹலோ யாரு பேசுறது?'' 
''சார், நாங்க ஜி.எச்.,ல இருந்து பேசுறோம். இங்க ஒரு டெட்பாடி இருக்கு. யாரும் இல்லை; அனாதையாம். போலீஸ், உடனே, டிஸ்போஸ் செய்ய சொல்லிட்டாங்க. உங்களுக்கு தகவல் சொல்ல சொன்னாங்க.'' 
''இப்பவேவா... எங்க வீட்ல ஒரு பங்ஷன். சரி சரி, நான் பிரகாசத்துக்கு போன் செய்து பார்க்கிறேன்.” 
''ஹலோ பிரகாசம்... நான் ராகவன் பேசறேன். எங்க இருக்கீங்க?'' 
''சார், நான் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட, குடும்பத்தோட உடன்குடி வந்திருக்கேன். என்ன விஷயம் சார்?'' 
''வேற ஒண்ணும் இல்ல; சும்மா தான்... எல்லாருக்கும் சேர்த்து, நல்லா வேண்டிகிட்டு வாங்க.'' 
போனை வைத்தவர், சற்றுநேரம் யோசித்தார். பின் அணிந்திருந்த புது பேன்ட், சட்டையை கழற்றி விட்டு, வேட்டி, சட்டையை மாற்றிக் கொண்டார். 
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவுக்கு, முகம் மாறி, விழி ஓரம் கண்ணீர்த் துளி எட்டிப் பார்த்தது. 
''அப்பா... எங்க கிளம்புறீங்க... எங்க அத்தை, மாமா வந்துட்டாங்க. இன்னும், கொஞ்ச நேரத்துல, விருந்துக்கு எல்லாரும் வந்திடுவாங்க. இந்த நேரத்துல, டிரஸ்சை மாத்திகிட்டு எங்க போறீங்க?'' 
அதற்குள், சத்தம் கேட்டு வந்த விசாலம், மெல்ல, அறைக்கதவை சாத்தினாள். 
''அம்மா... அப்பாவை பாருங்கம்மா. என்ன தான் சேவை செய்யறதா இருந்தாலும், பெத்த பொண்ணு கழுத்தில ஏறுன தாலியில, மஞ்சள் ஈரம் கூட காயல. அதுக்குள்ள, அனாதை பொணத்தை அடக்கம் செய்ய கிளம்புகிறார்,'' என்று கூறி, அழுதாள் ரம்யா. 
''வர்றவங்களுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க... எதுக்கும் ஒரு நேரம், காலம் இல்லையா... இதை கேள்விப்பட்டா, என் மாமியார் வீட்ல, என்ன மதிப்பாங்களா... அப்பாவை மட்டம் தட்டி பேசினா, என் மனசு தாங்குமா?''என, சரமாரியாக. கேள்விக்கணைகளை அடுக்கினாள். 
விசாலம், என்றுமே கணவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவள்; ராகவனின் கொள்கைக்கு, உறுதுணையாய் இருந்து, அவரின், எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பவள். இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ராகவன், தன் சொந்த செலவில், அனாதை பிணங்களுக்கு ஈமச்சடங்கு செய்து, முறைப்படி தகனம் செய்து வருகிறார். யாருமே செய்யத் துணியாத இச்செயலை, ராகவன் ஆத்மார்த்தமாகவும், எந்த ஒரு பிரதிபலனை எதிர்பார்க்காமலும் சேவையாய் செய்து வருகிறார். ஊரும், உறவும் மறைமுகமாய், எள்ளி நகையாடினாலும், விசாலம், அதையெல்லாம் பொருட்டாய் நினைக்காமல், ராகவனுக்கு பக்கபலமாய் இருந்து வந்தாள். 
ஆனால், இன்றோ செல்ல மகளின் கண்ணீர், மனதை என்னவோ செய்தது. 
''என்னங்க... வேற யாரும் இல்லையாங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல, எல்லாரும் வந்திடுவாங்க. இந்நேரம் நீங்க இல்லைன்னா, எப்படிங்க?” என்று, கெஞ்சினாள் விசாலம். 
''விசாலம் ஏதாவது சொல்லி சமாளிச்சிக் கோம்மா. சம்பந்தி வீட்டாரை நல்லா கவனிச்சுக்கோ. நான் கூடிய சீக்கிரம் வந்துடறேன்,” என்றார் ராகவன். 
''அப்பா... என்னைவிட, உங்களுக்கு, உங்க சமூக சேவைதான் பெரிசா போச்சா? இன்னிக்கு போறதால உங்களுக்கு கிரீடம் வைச்சா கொண்டாடப் போறாங்க... இப்ப, நீங்க போறது கொஞ்சமும் சரியில்லைப்பா.'' 
''ரம்யா, நீ படிச்சவ; அப்பாவோட உணர்வுகள் புரிஞ்சவ. என்னை தப்பா நினைக்காதே. எனக்கு தகவல் சொன்ன பின்பும், போகாம இருக்க, என் மனசாட்சி இடம் தரலம்மா. ப்ளீஸ்... என்னை தடுக்காதம்மா.'' 
ரம்யா, விசாலத்தின் தோளில் சாய்ந்து அழ, விசாலம். முந்தானையால், மகளின் கண்ணீரை துடைத்தாள். 
ஹாலில் உட்கார்ந்திருந்த ரம்யாவின் மாமனார் சுந்தரம், ரம்யாவின் விசும்பல் சத்தம் கேட்டு, மெல்ல எழுந்து வந்து, ஜன்னல் அருகில் நின்று, நடப்பதை கவனிக்க, அவருக்கு விஷயம் விளங்கி விட்டது. அதே வினாடியில். அவர் நினைவுகள் இருபது ஆண்டுகளுக்கு முன், சென்றது... 
'ஏங்க... பக்கத்து வீட்டு சரோஜா அக்கா பையன் பாபுவுக்கு, உடம்புக்கு முடியலைன்னு, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போய், பத்து நாளாச்சு. பிழைக்க மாட்டான், எயிட்சுன்னு சொல்லி, டாக்டருங்க கைய விரிச்சுட்டாங்களாம்...' 
'என்னது எயிட்ஸா! அப்படின்னா, பிழைக்க வாய்ப்பே இல்லை....' என, சுந்தரம் சொன்னதைக் கேட்டதும், அமுதாவுக்கு பாவமாக இருந்தது. 
'பாவம் சரோஜா... ஒரே பையன் நிலைமை இப்படியாயிடுச்சே... ஆமா... இப்ப ஆஸ்பத்திரிலே துணைக்கு யாரு இருக்காங்களாம்...' என்று கேட்டார் சுந்தரம். 
'யாரும் இல்லை. தனி வார்டில், தனியா தான் போட்டு வச்சிருக் காங்களாம்... எயிட்சுன்னு தெரிஞ்சதும், பயந்துட்டு, யாரும் கிட்டயே போகலை யாம்...' 
'ஆமாம்மா... இப்ப என்னென்னவோ நோயெல்லாம், புதுசு புதுசா வருது. கெட்ட சகவாசத்தினால் வர்ற நோயாம் இது. இதுக்கு இன்னும், மருந்து கண்டுபிடிக்கலயாம். வந்தா போய் சேர வேண்டியதுதான். பாக்க நல்ல பிள்ளையா தான் தெரியுறான். எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ...' 
நடுநிசி. இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு, சரோஜாவின் அழுகுரல் தெருவெங்கும் எதிரொலித்தது. 'பாபு இறந்து விட்டதாகவும், காலையில் தான், பாபுவின் உடல் ஆஸ்பத்திரியிலிருந்து வரும் என்று, தகவல் வந்தது. 
'என்னங்க... அந்த பையன் பாபு இறந்துட்டானாம்... நாம் போய் ஒரு வார்த்தை விசாரிச்சுட்டு வரலாமா...' துாங்கிக் கொண்டிருந்த சுந்தரத்தை, எழுப்பி கேட்டாள் அமுதா. 
'ஏய்... பேசாம வாய மூடிட்டு படு. அவன் எயிட்சு வந்து செத்துருக்கான்; அங்கெல்லாம் போக வேண்டாம். நீ, முதல் வேளையா, விடிஞ்சதும், வினோத்தை கூட்டிட்டு, உங்க அம்மா வீட்டுக்கு போயிடு. ஸ்கூலுக்கு லீவு போட்டுடு...” என, கூறினார் சுந்தரம். 
பொழுது விடிந்தது; சரோஜாவின் அழுகுரல் தவிர, வேறு எந்த அரவமும் இல்லை. மூன்று பேர் மட்டும், ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்தனர். 
மனைவி, மகனை பஸ் ஏற்றி விட்ட சுந்தரம், சந்துமுனையில், சிறு கூட்டமாய் நின்ற தெருவாசிகளிடம், சேர்ந்து கொண்டார். 
'அவன் செஞ்ச பாவத்துக்கு, பலன அனுபவிச்சுட்டான். இப்ப யாரு அவன துாக்கி அடக்கம் செய்வா...' 
'சொந்தக்காரங்க ஒருத்தரை யும் காணோம். எந்த ஏற்பாடும் செய்யற மாதிரியும் தெரியலையே...' 
'பணம் இருந்தும், எதுவும் துணைக்கு வரலையே...' 
ஆளாளுக்கு, தங்கள் கருத்துகளை, அள்ளிவீசிக் கொண்டிருந்தனர். 
தூரத்தில், ஆம்புலன்சின் சைரன் ஒலி கேட்க, கூட்டம், வழி விட்டு, ஒதுங்கி நின்றது. ஆம்புலன்ஸ், சரோஜா வீட்டு வாசலில் நிற்க, ஆம்புலன்சில் இருந்து, மாஸ்க் அணிந்து, கைகளுக்கு கிளவுஸ் அணிந்த ஆஸ்பத்திரி சிப்பந்தி இருவர், பாபுவின் சடலத்தை, வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த மர பெஞ்சில் வைத்தனர். வீட்டில், ஓரிருவரைக் தவிர யாரும் இல்லாதது கண்டு, வெளியே வந்து, அங்கு நின்றிருந்தவர்களிடம் பேச்சு கொடுக்க, 'பாபுவுக்கு எயிட்ஸ்ன்னு தெரிஞ்சதுமே யாரும் வரலை. பாடிய எப்படி அடக்கம் செய்யப் போறாங்களோ... அந்தம்மா பாவம் தனியாளு. பணம் இருந்தும், ஆபத்துக்கு உதவ யாரும் வரல. இப்படியொரு புள்ளய பெத்தா இந்த கதி தான்...' 
ஆம்புலன்சில் வந்த பையன்களில் ஒருவன், 'நான் வேணா ஒருத்தரோட போன் நம்பர் தரேன்; அவரு பேரு ராகவன். அவரு, ஆதரவில்லாம, அனாதையா யாராவது செத்தா, தானே உரிய மரியாதையோட, அடக்கம் செய்திடுவாரு. இதுக்கு, பணம் வாங்காம சேவையா செஞ்சுகிட்டு வர்றாரு. இந்தாங்க அவரோட போன் நம்பர்...' 
ஒரு துண்டு தாளில், ராகவன் போன் நம்பரை எழுதி, கூட்டத்திலிருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு, ஆம்புலன்சில் ஏறிச் சென்று விட்டான். 
வண்டி மறையும் வரை, பார்த்துக் கொண்டிருந்து, 'அந்த ஆளுக்கு போன் செய்தா வருவாரா... எய்ட்ஸ்ன்னு தெரிஞ்சா ஜகா வாங்கிடுவாரா...' என்று, பேசிக்கொண்டிருந்த கூட்டத்தினரிடம் இருந்து, அந்த போன் நம்பரை வாங்கி, தெரு முனையிலிருந்த கடைக்குச் சென்று, போன் செய்தார் சுந்தரம். 
'ஹலோ... ராகவன் சாரா... நாங்க நாப்பாளையத்திலிருந்து பேசறோம். எங்க வீட்டு பக்கத்துல, பாபுன்னு ஒரு பையன் எய்ட்ஸ்ல இறந்துட்டான். சொந்தம், பந்தம் நண்பர்கள் என்று யாரும் கிட்ட வரல. மருத்துவமனை பசங்க, உங்க நம்பர கொடுத்தாங்க...' 
'அப்படியா... நீங்க பக்கத்துல இருக்கற சுடுகாட்டுக்கு மட்டும் சொல்லிடுங்க. மத்ததை, நான் பாத்துக்கறேன். அட்ரஸ் சொல்லுங்க...' என்றார் ராகவன். 
அடுத்த ஒரு மணி நேரத்தில், ஒரு ஆட்டோவில், மூன்று பேர் வந்து இறங்கினர். சிவந்த நிறம், எடுப்பான தோற்றத்தில், முப்பத்தைந்து வயது மதிக்கதக்க இளைஞனாய் ராகவனும், அவன் கூட்டாளிகளும், 'மடமட'வென, வந்த வேலையை பார்க்க ஆரம்பித்தனர். உடன் வந்த ஒருவன், சங்கு ஊதி, சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். மகனை, எய்ட்ஸ் நோய்க்கு தாரைவார்த்து, உதவிக்கு கூட, உறவுகள் எட்டி பார்க்காத நிலையில், ராகவனை கண்ட சரோஜாவுக்கு, துக்கம் பீறிட்டுக் வர, 'ஓ' வென கதறி அழுதாள். ஊரிலுள்ளவர்கள், வெளியே தள்ளி நின்று, வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட அருகில் வரவில்லை. 
புடவை தலைப்பால் மூக்கைச் சிந்தி, ஓங்கி குரலெடுத்து அழுத சரோஜாவை, 'அழாதீங்கம்மா... நானும் உங்க புள்ள மாதிரிதான்; அவருக்கு விதி முடிஞ்சி போச்சு அவ்வளவுதான்...' என்று, சமாதானப்படுத்தினார். 
'ஐயா சாமி, தர்மபிரபு... நீங்க எல்லாம் யாரு பெத்த புள்ளைகளோ, நல்லா இருக்கணும் சாமி. உங்க வம்சம் தழைச்சி ஓங்கணும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும், எந்த குறையும் வரக் கூடாது. நீங்களும். உங்க குடும்பமும், அமோகமாக வாழணும் சாமி...' சரோஜாவின் அழுகை, உள்ளத்தை உருக்குவதாய் இருந்தது. 
சுந்தரத்துக்கு, ராகவனின் ஒவ்வொரு வார்த்தையும், செய்கையும் மனதில் பதிந்து விட்டது; ராகவனின் மனித நேயம், சுந்தரத்தை சிலிர்க்க வைத்தது. 
பிணத்தை எடுத்துச் செல்ல, வண்டி தேடிய போது, உடனடியாக ஒன்றும் கிடைக்க வில்லை. அந்த வீட்டு கொல்லைபுறத்தில், நிறுத்திவைக்கப்பட்ட மீன்பாடி வண்டியிலே, பிரேதத்தை படுக்க வைத்து, பூப்போட்டு, சிவ ஸ்துதி சொல்லி, சங்கு ஊத, ராகவன் கொள்ளிசட்டியை துாக்கி முன்செல்ல, மற்ற இருவரும் வண்டியை தள்ளிவர, பாபு இறுதி பயணத்தை மேற்கொண்டான். சுடுகாட்டிலும், முறைப்படி செய்யும் சடங்கை செய்து, ராகவனே கொள்ளி போட்டான். 
வீடு திரும்பி, ஆறுதல் கூறி கிளம்பிய ராகவனிடம், சரோஜா, 'எனக்கென இருந்த ஒரே பிள்ளையும் போய்ட்டான். இந்த நிலத்தை வைச்சு, நான் என்ன செய்ய போறேன்... நீங்க செய்திட்டிருக்கிற சேவைக்கு, இதையும் எடுத்துங்கப்பா...' என்றாள் சரோஜா. 
'தயவு செய்து, எங்க பணிய கொச்சை படுத்தாதீங்கம்மா... இது, நான் ஆத்மார்த்தமா, என் மனதிருப்திக்காக செய்யறேன். நீங்க, உங்க உடம்ப பத்திரமா பாத்துக்குங்க. நாங்க கௌம்பறோம்...'என்ற ராகவனைப் பார்த்து சுந்தரம், அதிசயப்பட்டான். 'இப்படியும் ஒரு மனிதனா' என்று, சிந்திக்காத நாளே இல்லை. காலச் சக்கரம் உருண்டோடியதில், இருபது ஆண்டுகள் தாண்டிவிட்டது. 
சுந்தரத்தின் ஒரே மகன் வினோத்திற்கு, பெண் தேடிய போது, புரோக்கர் கொண்டு வந்த மூன்று ஜாதகங்களில், ரம்யாவின் ஜாதகம் பொருத்தமாய் இருந்தது. பெண்ணைப் பற்றி விசாரித்த போது, அவள், ராகவனின் மகள் என்று தெரிந்து, சுந்தரம் அடைந்த மகிழ்ச்சிக்கு, அளவே இல்லை. ராகவன் தொடர்ந்து, அந்த பணியை செய்து வருகிறார் என்று அறிந்த போது, அவர் மேல் மதிப்பும், மரியாதையும் பல மடங்கு கூடியது. சுந்தரம், ராகவனைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. கல்யாணம் இனிதே நடந்தேறியது. 
சட்டென, நினைவுகளிலிருந்து விடுபட்ட சுந்தரம், “ரம்யா...” என்று, மென்மையாக அழைத்தார். வேகமாக கண்களை, சேலையில் துடைத்துக் கொண்டாள் ரம்யா. 
“வாங்க சம்பந்தி...” என்றவாறு ராகவனும், விசாலமும் கதவை திறந்தனர். 
“என்னம்மா ரம்யா கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு... அழுதியாம்மா?” 
“இல்ல மாமா தூசி பட்டுடுச்சு.” 
“அப்பா கூட வாக்குவாதம் செய்த மாதிரி கேட்டுதேம்மா...” 
“அது வந்து...” 
“எல்லாம் எனக்கு தெரியும்மா. அப்பா, அவரோட வேலையா வெளிய போகப் போறார். நீ, இப்ப போகக் கூடாதுன்னு தடுக்கற. அப்படித் தானே?” 
“மாமா...” என்றாள், தடுமாற்றத்துடன். 
“அப்பா இன்னிக்கு நேத்தா இந்த சேவையை செய்றாரு... இருபது வருஷத்துக்கு மேல செய்றாரேம்மா. இந்த மனசு யாருக்கு வரும்... லட்சத்தில் ஒருவருக்குகூட வராதும்மா. நாங்க, உன்ன, எங்க வீட்டு மருமகளா ஏத்துக்கிட்டதுக்கு, உன் அழகோ, படிப்போ, அந்தஸ்தோ காரணம் இல்லம்மா... உங்க அப்பாவோட பவித்ரமான மனசு தான் காரணம்.”
“யாரு வேணா எந்த வேலைய வேணா செய்யலாம்; பண உதவி செய்யலாம். ஆனா, அனாதை பிணங்கள முறைப்படி, தகனம் செய்ற மனசு யாருக்கு வரும்? எத்தனை பேரோட ஆத்மார்த்தமான வாழ்த்து கிடைக்கும். இந்த ஆசிர்வாதமெல்லாம் யாருக்கு... உங்களுக்குத் தானேம்மா... இந்தப் பணியை லேசா நினைக்காதேம்மா... இது அஸ்வமேத யாகம் செய்றதுக்கு சமம். அவரைத் தடுக்காதே. விருந்து, உபசரிப்பெல்லாம், உங்க அம்மாவோட சேர்ந்து, நானும், அத்தையும் பார்த்துக்கறோம். இவர், என் சம்மந்தியா கிடைச்சதுக்கு, நான் பூர்வ ஜென்மத்தில புண்ணியம் செய்திருக்கணும்.” 
சுந்தரத்தை நன்றி பெருக்கோடு, தழுவிக் கொண்டார் ராகவன். 
“அப்பா மன்னிச்சிடுங்கப்பா. உங்கள, மாமா புரிஞ்சுக்கிட்ட அளவுகூட, நான் புரிஞ்சுக்கலையேப்பா, சாரிப்பா...” 
ஆதரவாய் தலைகோதி, மகளை உச்சி முகர்ந்தார் ராகவன். 
“விசாலம், எல்லாரையும் நல்லா கவனிச்சுக்கோ. நான் போய்ட்டு சீக்கிரம் வந்திடறேன்.” 
தன் மகளின் வாழ்க்கைப் பயணம், நல்லபடியாக துவங்கிய மனநிறைவில், இறந்தவரின் இறுதிப் பயணத்தை நடத்த விரைந்தார் ராகவன். 

ஆர்.சியாமளா 
டி .வி . ஆர் .நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை ! 1:12:2013 வாரமலரில் வெளியானது

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !