Tuesday, December 18, 2018

வலி - விமலாதித்த மாமல்லன்

சாயங்காலம் ஊருக்குப் போகிறோம் என்று அப்பா சொன்னவுடன் அப்புட்டாவுக்கு நிலைகொள்ளவில்லை. கதவுக்குப் பின்னால் இருந்து துணிக்கம்பை எடுத்தான். இரண்டு சட்டைகளைக் கொடியிலிருந்து எடுத்து ஒரு பக்கமாக மடித்து வைத்தான். கால் சட்டைகளைத் தேடினான். கொடியில் ஒன்று காயாமல் இருந்தது. கொடியின் இன்னொரு கோடியில் இருந்த அம்மாவின் புடவையை விலக்கினான். உள்ளே ஒன்று இருந்தது அதை எடுத்தான். அதற்கு பட்டன்கள் அறுந்து போய்விட்டிருந்தது. கொஞ்சம் தயக்கத்துக்குப் பின்னர் அதையும் சட்டைகளுடன் வைத்துவிட்டு வெளியில் ஓடினான்.
எதிர்வீட்டுக் கதவு மூடியிருந்தது. திண்ணையில் ஏறி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். ஜன்னலின் கீழ்க் கதவுகள் மூடியிருந்தன. ஒரு பெண் கொஞ்சம் சிரமத்துடன் புடவை உடுத்திக் கொண்டிருந்தாள். அவள் முகம் கொஞ்சம் வேர்த்திருந்தது. அந்தப் பெண் நிமிர்ந்து பார்த்தாள். சிரித்தபடி, ’என்னடா அப்புட்டா’ என்றாள்.
சந்துரு இருக்கானாக்கா?
இல்லே வெளிலதான் இருப்பான்
நாங்க ஊருக்குப் போறோமே.
எந்த ஊருக்குடா?
எங்க தாத்தா இருக்காரே அந்த ஊருக்கு.
மெட்ராஸுக்கா?
அப்புட்டா தலையை ஆட்டினான்.
எப்பப் போறே?
இன்னிக்கு.
யார் யார் போறீங்க?
அப்பா, அம்மா, நா.
எப்ப வருவீங்க?
லீவெல்லாம் முடிஞ்சி ஸ்கூல் தெறக்கச்சதான் வருவோம்.
அப்புட்டா ஜன்னல் கம்பிகளில் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தான். அந்தப் பெண் புடவையைக் கொசுவியபடியே ஜன்னலருகில் வந்து நின்றாள்.
எனக்கு என்ன வாங்கிட்டு வருவே?
சாக்லேட்.
அதுதான் இந்த ஊர்லயே கெடைக்குமே. மெட்ராஸுலேர்ந்து என்ன வாங்கிட்டு வருவே?
அப்புட்டா கொஞ்சநேரம் யோசித்தான். அவனுக்குத் தெரிந்த பொருட்களெல்லாம் இந்த ஊரிலேயே கிடைக்கிறதாகத்தான் இருந்தன.
அவன் யோசிப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டவளாக ஜன்னல் கம்பிகளுக்கிடையே பொருந்தி இருந்த அவன் வயிற்றில் முத்தம் கொடுத்தாள். சந்துருவின் மேல் பொறாமையாக இருந்தது. இவ்வளவு நல்ல அக்கா அவனுக்கு மட்டும் கிடைத்திருப்பது பற்றி.
அதோ வரான் பாரு சந்துரு.
அப்புட்டா ஜன்னலை விட்டுத் திண்ணையில் இருந்து இறங்கித் தெருவைப் பார்த்து ஓடினான். சந்துரு கையில் பம்பரத்துடன் நொண்டியடித்தபடி ஓடி வந்து கொண்டிருந்தான்.
நான் ஊருக்குப் போறேனே!
எந்த ஊருக்கு.
எங்க தாத்தா ஊருக்கு.
சந்துருவின் முகத்தில் உற்சாகம் குறைந்து விட்டது.
எப்ப வருவே?
லீவெல்லாம் முடிஞ்சு ஸ்கூல் தெறக்கும்போது தான் வருவேன்.
அப்ப லீவு முழுக்க அங்கதான் இருப்பியா?
ஆமாம். எங்க தாத்தாவோட நான், செத்த காலேஜ், உயிர்க் காலேஜ், பாம்புப் பண்ணை, பீச்சு எல்லாம் போவேனே.
பெரீய்ய செத்த காலேஜ் போடா வவ்வவ்வே - என்று முகத்தை வலித்துக்காட்டி - இந்த லீவுல எனக்கு நெறையக் கத சொல்றேன்னு தாத்தா சொல்லி இருக்காரே - என்றான் பம்பரத்தில் சாட்டையை சுற்றியபடி.
எங்க தாத்தாவும் தான் கத சொல்லுவாரு. பீச்சுக்குக் கூட்டிட்டுப் போயி கத சொல்லுவாரே.
பெரீய்ய பீச்சு. பீத்திக்காதே.
சந்துரு கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே போய் வேகமாகக் கதவை மூடிக்கொண்டான்.
அப்புட்டா வீட்டுக்கு வந்தான். அப்பா தரையில் படுத்திருந்தார். அம்மா இரண்டு பைகளைச் சுவர் ஓரமாக வைத்திருந்தாள். ஊருக்குப் போவது குறித்து எந்த சந்தோஷமும் அப்பாவிடமும் அம்மாவிடமும் காணப்படாதது அப்புட்டாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மூஞ்சலம்பிக்கோ, நாழியாயிடுத்து - என்றாள் அம்மா.
அப்புட்டா முகம் கழுவிக் கொண்டான். டவலைத் தேடினான். கிடைக்கவில்லை. பையில் எடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். அம்மா தன் புடவையால் அவன் முகத்தைத் துடைத்துவிட்டாள்.
அப்பா எழுந்தார். சொம்பில் இருந்த நீரில் சமையல் கட்டில் முகம் கழுவிக் கொண்ட பின்னர் டவலைத் தேடினார். பையில் எடுத்து வைத்து விட்டதை அம்மா தெரிவித்தாள். அப்பா கத்துவார் என்று அப்புட்டா எதிர்பார்த்தான். அவர் கத்தவில்லை. முறைத்துப் பார்த்தார். அப்பாவுக்கு இதுபோல் அடிக்கடி அம்மா மேல் கோபம் வருகிறது. அடிக்கிறார். இருந்தாலும் அப்புட்டாவுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கிறது. அது மட்டும் எப்படி என்றே தெரியவில்லை. அப்பா வேஷ்டியிலேயே முகம் துடைத்துக் கொண்டார்.
அம்மா வீட்டைப் பூட்டி சாவியை அப்பாவிடம் கொடுத்தாள். அப்பா ஒரு பையையும் அம்மா ஒரு பையையும் எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினார்கள். அப்புட்டா அப்பாவின் கையைப் பிடித்தபடி எதிர் வீட்டைப் பார்க்காத மாதிரி பார்த்தான். ஜன்னலில் சந்துரு எட்டிப் பார்ப்பது தெரிந்தது. அப்புட்டாவுக்குப் பெருமையாக இருந்தது.
பஸ்ஸில் ஜன்னல் ஓரமாக அப்புட்டா உட்கார்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்தில் அம்மாவும் அப்புறம் அப்பாவும் உட்கார்ந்திருந்தனர். சீட்டின் மேல் நின்று கொண்டால் தெருவை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். அதற்கு அப்பா நிச்சயம் சம்மதிக்கமாட்டார்.
எப்பம்மா தாத்தா வீட்டுக்குப் போவாம்?
ராத்திரி ஒன்பது மணிக்கு.
இருட்டிய பின்தான் ஊர் போய்ச் சேருவோம் என்பது தெரிந்தும் உற்சாகம் குறைந்து விட்டது. தாத்தாவை வெளிச்சத்தில் பார்க்க முடியாது என்பதில் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
சந்துருவுக்கு ரொம்பத் திமிர், அவனுடைய தாத்தா அவனுடனேயே இருக்கிறார் என்பதில். அவன் தாத்தா மடியில் உட்கார்ந்திருக்கும் போதேல்லாம் அப்புட்டாவை இளக்காரமாகப் பார்ப்பான். அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் ஊரிலிருக்கிற தாத்தாவுடன், தான் எப்படி இருப்போம் என்று அப்புட்டா நினைத்துப் பார்த்துக் கொள்வான்.
அவன் தாத்தாவுடன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருப்பான். தெருவில் பொரிகடலையோ சோன்பப்படியோ போகும். தாத்தா சொல்லிக் கொண்டிருந்த கதையைப் பாதியில் நிறுத்தி விட்டு வாங்கித் தருவார்.
அவனுடைய தாத்தா சந்துருவின் தாத்தாவைப் போல் கருப்பாக இருக்க மாட்டார். செக்கச் செவேலென்று பெரிய மீசையுடன் இருப்பார். காதில் கடுக்கன் போட்டிருப்பார். உயரமாக இருப்பார். அப்புட்டா தாத்தாவை ஒரு சின்ன புகைப்படத்தில் பார்த்திருக்கிறான். அதில் அவர் ஒரு குட்டிப் பாப்பாவுடன் இருக்கிறார். இந்த குட்டிப்பாப்பா நீதான் என்று அம்மா சொன்னபோது அவனால் நம்ப முடியவில்லை. தான் இதுவரை தாத்தாவைப் பார்த்ததாக அவனுக்கு நினைவே இல்லை. அப்புறம் எப்படித் தாத்தா தன்னைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க முடியும்?
அப்புட்டா அம்மா மடியில் தலை வைத்துத் தூங்கிவிட்டான்.
அப்பா எழுப்பினார். தூக்கக் கலக்கத்துடன் பஸ்ஸிலிருந்து இறங்கினான். கொஞ்ச நேரத்தில் தூக்கம் கலைந்து விட்டது. இருட்டாக இருந்த தெருக்கள் வழியே போக வேண்டி இருந்தது. அப்புட்டாவுக்குக் கால் வலித்தது. அப்பாவைத் தூக்கிக் கொள்ளச் சொன்னான். அப்பா கையிலிருந்த பையை அம்மாவிடம் கொடுத்து விட்டு அப்புட்டாவைத் தூக்கிக் கொண்டார். கொஞ்ச நேரத்திலேயே அப்புட்டா திரும்பவும் தூங்கி விட்டான்.
*****************
காலையில் டபக் டபக் என்ற சத்தம் கேட்டு எழுந்தான். ஒரு பெண் பம்ப் அடித்துக் கொண்டிருந்தாள். தண்ணீர் விட்டு விட்டு விழுந்து கொண்டிருந்தது. அந்த மாதிரிக் குழாயை அவன் இதுவரை பார்த்ததே இல்லை. அம்மா வந்து பல்பொடி கொடுத்தாள். குழாய்க்குப் பக்கத்தில் பல் விளக்குமாறு அந்த பெண் சொன்னாள். பல் விளக்கி முடிந்ததும் அந்தப் பெண் வந்து முகம் கழுவி அவளுடைய புடவையிலேயே துடைத்து விட்டாள். அப்புட்டா அவளைக் கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்தான்.
என்னடா யாரோன்னு பாக்கறியே உன் அத்தை தாண்டா நான்.
அறையிலிருந்து தாத்தா வெளியில் வந்தார். அந்தப் பெண் மேற்கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டாள். தாத்தா புகைப்படத்தில் பார்த்ததுபோல் அப்படியே இருந்தார். சந்துரு தாத்தாவைப் போல் இந்த தாத்தாவுக்குத் தொப்பை எல்லாம் இல்லை. அப்புட்டா அவருக்குப் பக்கத்தில் போனான். அவர் குனிந்து பார்ப்பார் என்று நினைத்தான். அவர் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.
தாத்தா
பார்க்கவில்லை.
அவருடைய வேஷ்டியைப் பிடித்தபடி இன்னொருமுறை தாத்தா என்றான்.
பார்க்கவில்லை.
நான்தான் தாத்தா அப்புட்டா
குனிந்து பார்த்தார்.
சிரிப்பார் என எதிர்பார்த்துச் சிரித்தான். அவர் முகத்தில் பிரதிபலிப்பு இல்லாமல் போகவே அப்புட்டாவின் சிரிப்பு பாதியிலேயே உறைந்து விட்டது. வேஷ்டியை விட்டு விட்டான்.
அறைக்குள் போனான். அத்தை இருந்தாள். இவனைப் பார்த்ததும் ‘வா’ என்று தலையசைத்தாள். அருகில் போய் உட்கார்ந்து கொண்டான்.
அத்தை ஏன் தாத்தா என்னோட பேசமாட்டேங்கறார். அவருக்கு என்னைப் பிடிக்கலையா?
அத்தை அவனை அணைத்துக் கொண்டாள்.
இல்லேடா கண்ணு ஏதோ யோசனையில் இருந்திருப்பார். அப்புறமா உன்னோட பேசுவார்.
இந்த பதில் அப்புட்டாவை சமாதானப் படுத்தவில்லை.
தாத்தா மட்டும் என்றில்லை. இந்த வீட்டில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளாமல்தான் வளைய வருகிறார்கள். அப்புட்டாவுக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. தெருவை வேடிக்கை பார்க்கத் திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டான். திண்ணை ரொம்பவும் சின்னதாக இருந்தது. சந்துரு வீட்டுத் திண்ணையைப் போல் அகலமாக இல்லை. தெரு வெயிலாக இருந்தது. அவனளவே இருந்த ஒரு பையன் ஒரு பெரிய கோணியுடன் இந்த வீட்டுக் குப்பைத் தொட்டியில் எக்கிக் குனிந்து எதையோ எடுத்துக் கோணியில் திணித்துக் கொண்டு இந்த வீட்டைக் கடந்து போனான். அப்புட்டாவின் இன்னொரு கால்சட்டையைப் போலவே இந்தப் பையனின் கால் சட்டையிலும் பட்டன்கள் இருக்கவில்லை. அவன் சென்றுவிட்டதும் தெரு அனாதையாகிவிட்டது. யாருமற்ற தெருவையே பார்த்துக் கொண்டு அப்புட்டா வெகுநேரம் உட்கார்ந்திருந்தான்.
உள்ளே இருந்து பெரிய சத்தம் கேட்டது. திண்ணையிலிருந்து குதித்து உள்ளே வந்தவன். கதவுப் பக்கத்தில் நின்றுவிட்டான். தாத்தா அப்பாவைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார்.
நான்தான் எனக்குப் புள்ளையே இல்லேன்னு எப்பவோ தலை முழுகியாச்சே. அப்புறம் ஏண்டா வந்தே?
அப்பா பதில் பேசாமல் தலை குனிந்து இருந்தார்.
போடா வெளிய, பணம் வேணுமாம் பணம்.
போடா  - என்றபடி தாத்தா அருகில் வந்ததும் அப்பா நகர்ந்து சென்று சுவரருகில் இருந்த பையை எடுத்துக் கொண்டார். அப்புட்டா அப்பாவின் அருகில் சென்று இன்னொரு பையை எடுத்தான். கனமாக இருந்தது. அம்மா உடனே பையை வாங்கிக் கொண்டாள்.
அப்பா கதவை நோக்கி நகர்ந்ததும் அப்புட்டா வேகமாக நடந்து தெருவில் போய் நின்று கொண்டான். வெயில் ஏகமாக ஏறிவிட்டிருந்தது. அப்பாவும் அம்மாவும் நடக்கத் தொடங்கியதும், அப்புட்டா ஓரக்கண்ணால் வீட்டைப் பார்த்தான். கதவருகில் அத்தை நிற்பது தெரிந்தது. அத்தைக்கு டாட்டா காட்ட வேண்டும் போல இருந்தது. நிற்க முடியாத அளவுக்குத் தார் ரோடு சூடேறிக் கிடந்தது.
சந்துரு தாத்தாவைப் பற்றி நிச்சயமாகக் கேட்பான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. வெற்றுக் காலுடன் இந்த வெயிலில் நடப்பது கஷ்டமாக இருந்தது. கொஞ்ச நேரத்திலேயே அப்புட்டாவுக்கு கால் வலிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் தூக்கிக் கொள்ளச் சொல்லி அப்பாவைக் கேட்கவில்லை.
ஜூன் 1981– கல்கி 

https://tamilsirukathaistories.blogspot.com/

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !