Saturday, December 1, 2018

சொர்க்கம் போய், திரும்பி வந்த பீர்பால் கதை உங்களுக்குத் தெரியுமா?

       பீர்பால், முகலாய மன்னர் அக்பரின் நம்பிக்கைக்கு உரிய நண்பரும், அக்பர் அவையில் நவரத்திரனங்கள் என அழைக்கப்பட்ட ஒன்பது அமைச்சர்களில் பிரதானமானவராகவும் இருந்த காரணத்தால், பீர்பால் மேல் பொறாமை கொண்டு, அவரிடமிருந்து மன்னரைப் பிரிக்க சில அமைச்சர்கள் எடுத்த முயற்சிகள் யாவும், தோல்வியிலேயே முடிந்தன. 

        பீர்பாலின் புத்திசாலித்தனமும் நகைச்சுவையும் கொண்ட சமயோசித செயல்களின் மூலம் அக்பர் மட்டுமின்றி, அவையில் இருந்த மற்ற அமைச்சர்கள் மற்றும் நாட்டு மக்களிடம் தனிப்பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார் பீர்பால். மனிதனுக்கு அழகைவிட அறிவே முக்கியம்!! பீர்பாலை மன்னர் முன் முட்டாளாக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்டு, அதன்மூலம் அவர்களே முட்டாள்களாகிப்போவது தொடர்கதை. 

        அப்படி ஒருநாள், அக்பரின் அவையில், அமைச்சர்கள், பீர்பால் எல்லாரும் அமர்ந்திருக்க, ஒரு அமைச்சர் பீர்பாலைப் பார்த்து மிகவும் ஏளனமாகச்சிரித்தார். மன்னர்" ஏன் அப்படி சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார். " மன்னா, தங்கத்தால் செய்த உடல்போல நீங்கள் மின்னுகிறீர்கள், நாங்களும் சிவந்த உடல் கொண்டு, இங்கே இருக்க, பீர்பால் மட்டும் கருத்த நிறத்தில், இந்த அவைக்கு பொருத்தமில்லாமல் மாறுபட்டவராக இருக்கிறார்" என்று சிரித்தார். 

       அவர்கள் பீர்பாலை அவமானப்படுத்த இப்படி சிரிக்கிறார்கள் என்று உணர்ந்து " பீர்பால் !! அமைச்சர் சொல்லுவதற்கு பதில்கூறும்!! உம்முடைய பதில் ஆணித்தரமாக இருக்கட்டும்" என்றார். பீர்பாலும் மன்னரை வணங்கி" மன்னா!! இறைவன் எல்லோரையும் சமமாகவே நடத்தி, நம்மைப் படைப்பதற்கு முன்னால் எல்லோரையும் உங்களுக்கு என்னவேண்டும் என்று கேட்கிறான், நீங்களெல்லாம் எனக்கு நல்ல சிவந்தநிறமுடைய தோல் வேண்டும் என்று கேட்டீர்கள்.. உங்களுக்குக் கிடைத்தது..   

        எல்லோரும் இறைவனிடம் சிவந்தநிறமே கேட்டதால், இறைவனிடம் அறிவு நிறையத் தேங்கிவிட்டது. நான் இறைவனிடம் எனக்கு நல்ல அறிவைத்தாருங்கள் என்றுகேட்டு வாங்கிவந்தேன். அதுதான் உங்கள் நிறம் சிவப்பாக இருக்கிறது நான் வேறுவிதமாக இருக்கிறேன்" என்று பதிலளித்தார். புன்முறுவல் பூத்த அக்பர் "பீர்பால்!! நீங்கள் சொன்ன சிவந்தநிறம் பெற்ற கதையில், நானும் இருக்கிறேனா " எனக்கேட்டார். " 

         மன்னா!! நீங்கள்தான் இறைவனிடம், சிவந்த நிறத்துடன் எனக்கு பீர்பாலும் அமைச்சராக வேண்டும் என்றுகேட்டு என்னையும் பெற்றுக்கொண்டீர்களே!" என்று பீர்பால் கூற, அக்பர் அழகைவிட அறிவே முக்கியம் என்று பீர்பால் உணர்த்திய நகைச்சுவையை வெகுவாக இரசித்து மகிழ்ந்தார். சொர்க்கத்தில் தாடி மீசை வளருமா? இப்படித்தான் ஒருமுறை, பீர்பாலின் செல்வாக்கு நாளுக்குநாள் மன்னரிடம் அதிகரிப்பது கண்டு, பீர்பாலை நிரந்தரமாக மன்னரிடம் இருந்து பிரிக்க எண்ணிய சில அமைச்சர்கள், ஒருதிட்டம் போட்டு அதன்படி, மன்னரின் முடித்திருத்துபவனை அழைத்து, பொன்னையும் பொருளையும் அளித்து ஆசை வார்த்தை கூறி,தங்கள் இரகசியதிட்டத்திற்கு அவனை சம்மதிக்கவைத்து,திட்டம் நிறைவேறியபின், மேலும் பொன்னை அளிப்பதாகக்கூறி தங்கள் சதித்திட்டத்தை தயார்செய்தனர். 

        எதிர்பார்த்ததுபோல, ஒருநாள் மன்னரிடமிருந்து முடித்திருத்துபவனுக்கு அழைப்புவர, மன்னரின் முடியை வெட்டிக்கொண்டே அவன் "மன்னா, தங்கள் தந்தை முடிபோல தங்களுக்கும் முடி அழகாக இருக்கிறது, இருந்தாலும் நீங்கள் உங்கள் தந்தையாரின் நலன்மீது அக்கறை செலுத்துவதில்லை, இப்போது தந்தையாரின் தலைமுடி நீண்டு வளர்ந்து, அவருடைய முக அழகை கெடுத்துவிட்டது. அவர் நலனை விசாரியுங்கள்: என்றான். " என்ன உளறுகிறாய்? என்தந்தை காலமாகி நெடுநாட்களாகிவிட்டன. இப்போது எப்படி அவருக்கு முடிவளர்ந்திருக்கும்? இறந்துபோனவரிடம் எப்படி நலம் விசாரிக்கமுடியும்? புத்திபேதலித்துவிட்டதா உனக்கு? மன்னர் கடிந்து கொண்டார். 

          அவன் பவ்யமாக " முடியும் மன்னா! ஒரு மந்திரவாதி இருக்கிறான், அவன் உயிருடன் ஒருவரை சுடுகாட்டுக்கு கொண்டுசென்று விஷேச மந்திரங்களை சொல்லி, அவன் உடலை எரிப்பார். நம் கண்களுக்குத்தான் உடலை நெருப்பு எரிப்பதாகத்தெரியும், மந்திரவாதியின் சக்தியால், அந்த நபரின்உடல் தீயில்வேகாமல் மேலோகம் சென்று நம் முன்னோரை கண்டுவரும். 

        என்ன, ஒரு நம்பிக்கையான ஆள் மட்டும்வேண்டும்." என்று மன்னரிடம் கூறினார். மன்னர் இறந்த தந்தையின் நலம் விசாரிக்க இப்படி ஒருவழி இருப்பது தெரியாமல்போய்விட்டதே எனவருந்தி, யாரை அனுப்பலாம் என யோசித்தார். "யோசனை ஏன் அரசே? தங்கள் அவையில் புத்திசாலியும் தங்களின் நன்மதிப்பையும் கொண்ட ஒரே அமைச்சர் பீர்பால்தான். நீங்கள் சொன்னால் தட்டாமல் அவரே ஒப்புக்கொண்டு தங்கள் தந்தையின் நலம் விசாரித்துவருவார்" என்று சொல்ல, மன்னர் பீர்பாலை அவைக்கு அழைத்தார். அமைச்சரவை கூடியதும், பீர்பாலிடம் மன்னர் விசயத்தைக்கூறி, "இந்த காரியத்தை நல்லமுறையில் செய்து முடிக்க தங்களைவிட சிறந்தவர் யாருமில்லை, தாங்கள் சொர்க்கத்திற்கு சென்று என் தந்தையின் நிலையறிந்து வருக!" எனக்கூறினார், ஒரு வினாடி அதிர்ந்த பீர்பால் இவை பொறாமைக்காரர்களின் சதி என்பதை நொடிப்பொழுதில் உணர்ந்து மன்னரிடம், " மன்னா!! தங்கள் ஆணையை ஏற்று நான் செயல்பட எனக்கு மூன்று மாத அவகாசம் வேண்டும். 

        அந்தசமயம் நான் தங்களை சந்திக்க இயலாது, மேலும் என்குடும்பத்துக்கு நான் ஆற்றவேண்டிய சில கடமைகளை அதற்குள் முடித்தபின், நீங்கள் செல்லப்பணித்த சொர்க்கம் சென்று வருகிறேன்" என்று கூறி, மன்னரின் சம்மதம் பெற்று வெளியில் வந்து, யோசித்தார். மூன்றுமாதம் கழித்து பீர்பால் மன்னரிடம் நான் தயார் என்றுகூற, முடித்திருத்துபவன் கூறிய மந்திரவாதி மூட்டிய சுடுகாட்டுதீயில், பீர்பாலை எரிக்க, அதில் சூழ்ந்த புகைமூட்டத்தில் பீர்பால் யாரும் அறியாவண்ணம், தான் ஏற்கெனவே செய்துவைத்திருந்த சுரங்கப்பாதையின்வழியே அருகிலுள்ள காட்டை அடைந்து அங்கிருந்து தன் வீட்டுக்கு சென்று மறைந்துகொண்டார். 

       கழிந்தது ஆறுமாதம். இதற்குள் சுடுகாட்டு நெருப்பில் ஒழிந்தான் பீர்பால், இனிநாம் அவன் இடையூறின்றி மன்னரிடம் செல்வாக்கு பெறலாம் என அமைச்சர்கள் எல்லாம் மனப்பால் குடித்தனர். ஒருநாள் வயதான சாமியார் அரசவைக்கு வந்தார், மன்னரிடம் சென்று "மன்னா, நான்தான் பீர்பால், தங்கள் தந்தையை சொர்க்கத்தில் சந்தித்துவிட்டு நேராக இங்கே வருகிறேன், இந்த ஓலையை தந்தை தங்களிடம் அளிக்கச்சொன்னார் என்றுகூற, ஓலையில் மகனே!! எனக்கு தாடியும் மீசையும் வளர்ந்து அதை சரிசெய்ய முடிதிருத்துவோர் யாருமில்லை.. நீ நமது அரண்மனை முடிதிருத்துபவனை உடனே அனுப்பிவை.!" என்றிருந்தது. 

      படித்தபின் மன்னர், மாமன்னரான எனது தந்தை வாடுவதா என அரண்மனை முடிதிருத்துவோனை அழைத்து விபரம் கூறி, உடனே சொர்க்கத்திற்கு செல்லக்கூற, அவன் "தொபுக்கடீர்" என மன்னர் காலில் விழுந்தான். "பொருளுக்கு ஆசைப்பட்டு அமைச்சர்கள் சொன்ன சதிச்செயலில் ஈடுபட்டுவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா! எனக்கதறினான். 

      யோசித்த மன்னர் மனிதர்களால் எப்படி இந்த உடம்புடன் சொர்க்கத்திற்கு சென்று திரும்பிவரமுடியும்.. இது பீர்பாலைக் கொல்ல அமைச்சர்கள் செய்தசதிதான் என்று உணர்ந்து, பொறாமைக்கார அமைச்சர்களையும், பேராசை கொண்ட முடி திருத்துபவனையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சதியால் நண்பனை இழக்க இருந்தேனே என்று வருந்தி, பீர்பாலை கட்டித்தழுவினார். 

       கை கொடுக்கும் கை!! ஒருமுறை அவையில் அக்பர் திடீரென ஒரு சந்தேகத்துக்கு எல்லோரிடமும் விளக்கம் கேட்டார். " பொதுவாக தானம் கொடுப்போர் கை உயர்ந்தும், தானம் பெறுபவர்கள் கை தாழ்ந்தும் இருக்கும், இதுவே நாம் எங்கும் கண்டிருக்கிறோம். ஆனால் தானத்தில் கொடுப்பவர்கள் கை தாழ்ந்தும், தானத்தை பெறுபவர்கள் கை உயர்ந்தும் இருக்கும். அது எப்போது? சரியான விளக்கம் கூறுங்கள்" என்று அமைச்சர்களைப் பார்த்து கேட்டார். அமைச்சர்கள் எவ்வளவுயோசித்தும், பதில் தெரியாததால், அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். அப்போதுதான் வந்த பீர்பாலிடமும் இதே கதைக்கூறி விடையைக்கேட்டார். 

            பீர்பால் சிரித்துக்கொண்டே " மன்னா! இந்தக் கேள்விக்கு யார்வேண்டுமானாலும் பதில் சொல்லிவிடுவார்களே... நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். மூக்குப்பொடி போடுபவரிடம், கொஞ்சம் பொடி கேட்டால், அவர் பொடிடப்பாவை தூக்கி நம் முன் நீட்டுவார்.. நாம் நம் கைவிரல்களை பொடிடப்பாவில் விட்டு பொடியை எடுக்கும்போது, நம் கை மேலே இருக்கும். கொடுப்பவர் கை தாழ்ந்திருக்கும்." அட, இந்தச்சின்ன விஷயம்கூட நமக்கு தெரியவில்லையே.. என்று வழக்கம்போல மங்குனிஅமைச்சர்கள் வருந்த, இன்ஸ்டன்ட் பதிலைச் சொன்ன பீர்பாலை அக்பர் பாராட்டினார் என்று சொல்லவும் வேண்டுமோ?! 

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !