Thursday, November 29, 2018

நொண்டிக் குதிரை!

நொண்டிக் குதிரை!


காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன.

எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன.

நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. நண்பர்கள் எல்லாம் அறியாமையின் காரணமாக இப்படிக் கேலி செய்கின்றனர். அதனால் நாம் அவர்களின் மீது கோபப்படுவது நல்லதல்ல... என்று முடிவு செய்தது அந்த நொண்டிக் குதிரை.

ஒருநாள்

சிங்கம் ஒன்று அந்தப் புல்தரையில் பக்கமாக வந்தது. அந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் புற்களை மேய்ந்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.

""ஆஹா, இந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் நிற்கின்றதே... இந்தக் குதிரைகள் எல்லாம் நன்கு கொழுத்து காணப்படுகின்றன. நாம் வந்திருப்பது தெரிந்துவிட்டால், இந்தக் குதிரைகள் எல்லாம் ஒரே ஓட்டமாக எங்காவது ஓடி விடும். அதனால், இந்தக் குதிரைகளுக்குத் தெரியாமல் மறைந்திருந்து நாம் இவைகளைத் தாக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தது சிங்கம்.

புல்தரையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த நொண்டிக் குதிரை, சிங்கத்தை கவனித்து விட்டது. இந்தச் சிங்கம் நம்மையும், நம் நண்பர்களையும் கவனித்து விட்டது. நிச்சயமாக இதனால் நமக்கு ஆபத்து நேரிடும். சிங்கம் அந்த இடத்தை விட்டுச் சென்ற பின்னர், உடனடியாக "இதனைப்பற்றி நம் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்' என்று நினைத்தது அந்தக் குதிரை.

சிறிது நேரத்தில் சிங்கம் அந்த இடத்தை விட்டுச் சென்றது. உடனே அந்த நொண்டிக் குதிரை மற்ற குதிரைகளை நோக்கியது.

""நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கராஜா மறைந்திருந்து நம்மையெல்லாம் கவனித்துச் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரால் நமக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக இந்த புல் வெளியினை விட்டு வேறு இடத்திற்குச் சென்று விட வேண்டும்,'' என்றது.

நொண்டிக் குதிரையின் பேச்சைக்கேட்ட மற்ற குதிரைகள் எல்லாம் சிரித்தன.

""நண்பர்களே, இந்த நொண்டிக் குதிரையின் பேச்சைக் கவனித்தீர்களா? இவன் நம்மையெல்லாம் பயம் காட்டுகின்றான். சிங்கராஜா நம்மைப் பார்த்து விட்டாராம். அதனால் நாம் இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டுமாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது,'' என்று ஒன்றுக்குள் ஒன்று கூறியபடி சிரித்துக் கொண்டன.

"நண்பர்கள் எல்லாம் நம்மை ஏளனம் செய்கின்றார்களே, இவர்களுக்கு நான் நல்லதை சொல்ல நினைத்தேன். ஆனால், இவர்களோ என்னை ஏளனப்படுத்துகின்றனர். இவர்கள் எல்லாம் சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டால், என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. என்ன இருந்தாலும் இவர்கள் எல்லாம் எனது நண்பர்கள்தானே, இவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்வது என்னுடைய கடமையல்லவா? சிங்க ராஜாவின் பிடியில் இருந்து எப்படியாவது நண்பர்களை காப்பாற்ற வேண்டும். வரப்போகிற ஆபத்தை உடனே தடுத்தாக வேண்டும், அதற்கு நாம் என்ன செய்யலாம்' என்று யோசனை செய்தது.

திடீரென அதன் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படி அந்தக் குதிரையானது சிங்கத்தைத் தேடிச் சென்றது. தன் எதிரே தைரியத்துடன் ஒரு குதிரை நொண்டியபடி வருவதை, வியப்போடு பார்த்தது சிங்கம்.

""சிங்க ராஜாவே, வணக்கம். என் வருகை உங்களுக்கு வியப்பினை ஏற்படுத்தலாம். இருந்தாலும் உங்களுக்கு சந்தோஷமான செய்தி சொல்லவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள்,'' என்று பணிவோடு கூறியது குதிரை.

சிங்கமோ கர்....கர்... என்று உறுமியது. அதன் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. இருந்தாலும் நொண்டியபடி நடந்து வந்த குதிரையைப் பார்த்து சற்று பரிதாபப்பட்டது.

சிங்கம் ஓரளவுக்கு தன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறது என்பதை குதிரை உணர்ந்து, தன் எண்ணத்தைத் தெரிவிக்க இதுதான் சரியான சமயம் என்று முடிவு செய்தது.

""சிங்க ராஜாவே, நீங்கள் கருணை மிக்கவர் என்று எனக்குத் தெரிகிறது. உங்கள் முகத்தில் கருணை பொங்குகிறது. கருணையே வடிவான உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று எனக்குத் தோன்றுகிறது,'' என்றது.

""குதிரையே, நீ கூறியது போல் கோபமாக இருக்கும் நேரம் போக அவ்வப்போது எனக்குக் கருணை ஏற்படுவது உண்மைதான். என் கருணை பார்வையை குறிப்பால் உணர்ந்து கொண்ட நீ அறிவு மிக்கவனாகத்தான் தெரிகிறாய். முதலில் நீ எதற்காக என்னை சந்திக்க வந்தாய்? ஏதோ சந்தோஷமான செய்தி என்றாயே, அது என்னவென்று உடனடியாக எனக்குத் தெரியப்படுத்து,'' என்றது சிங்கம்.

""சிங்க ராஜாவே, ஒருநாள் நானும் என் நண்பர்களும் புல்தரையில் நின்ற போது மறைந்திருந்து நீங்கள் எங்களை கவனித்து விட்டீர்கள். தாங்கள் எங்களை உடனடியாகத் தாக்க வராமல் அமைதியுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றீர்கள். தாங்கள் அமைதியுடன் செல்வதை நான் கவனித்தேன். தங்கள் மூலம் என் நண்பர்களுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அதனைத் தடுக்க வேண்டி ஓடோடி வந்தேன்.

""சிங்க ராஜாவே, நான் என் நண்பர்களை, என் உயிரை விட மேலாக மதித்து வருகிறேன். தங்களால் என் நண்பர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, நானே என் உயிரைக் கொடுத்து உங்களுக்கு விருந்தாக வந்துள்ளேன். நீங்கள் என்னைச் சாப்பிடுங்கள். என் நண்பர்களை விட்டு விடுங்கள்,'' என்று கெஞ்சிக் கேட்டது நொண்டிக் குதிரை.

தன் நண்பர்களுக்காக இந்த அளவுக்கு கெஞ்சும் நொண்டிக் குதிரையைக் கண்டு சிங்கத்தின் மனம் மேலும் இளகியது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.

""சிங்கமே, நீ எதற்காக அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது? நான் ஏதாவது உன் மனத்தை புண்படுத்தும் விதத்தில் பேசிவிட்டேனா?'' என்று கேட்டது குதிரை.

""குதிரையே, நீ என் மனம் புண்படும்படியாகப் பேசவில்லை. ஆனால், உன் நண்பர்கள் அனைவருமே உன் மனம் புண்படும்படியாகப் பேசுவதை நான் மறைந்திருந்து கவனித்தேன். ஆனால், நீயோ அதனை எல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ளாமல் உன் நண்பர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறாயே, உன்னைப் பற்றி உன் நண்பர்கள் இதுவரையிலும் புரிந்து கொள்ளாதது துரதிர்ஷ்டம்தான். இதோ இப்போதே உன்னை அழைத்துச் சென்று, உனது உயர்ந்த குணத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன்,'' என்றவாறு குதிரையை அழைத்துக் கொண்டு புறப்பட்டது சிங்கம்.

அந்த நேரத்தில் புல் தரையில் எல்லா குதிரைகளும் கூட்டமாக நின்று புற்களை மேய்த்து கொண்டிருந்தன. நொண்டிக் குதிரை சிங்கத்தோடு வருவதைக் கண்டதும் எல்லாக் குதிரைகளும் திடுக்கிட்டன.

உடனே சிங்கம், ""நீங்கள் யாரும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு உண்மையை எடுத்துரைத்து, உங்கள் அறியாமையைப் போக்கும் பொருட்டே உங்களைத் தேடி வந்துள்ளேன்,'' என்றது சிங்கம்.

சிங்கத்தின் பேச்சைக்கேட்ட மாத்திரத்தில் எல்லா குதிரைகளும் திகைப்படைந்தன.

""சிங்க ராஜாவே, வணக்கம். தங்களின் அன்பான பேச்சைக் கேட்டதும் எங்கள் அச்சம் விலகிவிட்டது. தாங்கள் எங்களுக்கு என்ன நீதி வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொண்டு உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருப்போம்,'' என்றன குதிரைகள்.

""நல்லது குதிரைகளே! இதோ நிற்கின்ற உங்கள் நண்பனான இந்த நொண்டிக் குதிரையை நீங்கள் உங்களில் ஒருவனாக எண்ணாமல் அதன் மனத்தை புண்படுத்தி வந்தீர்கள். ஆனால், உங்கள் நண்பனான இவனோ, என்னால் உங்களுக்கு வரப் போகின்ற ஆபத்தைத் தடுத்து, உங்களுக்காக எனக்கு விருந்தாக உணவளிக்க வந்தது. அதன் தியாகத்தை நான் என்னவென்று சொல்வது. இப்படி ஒரு தியாகமிக்க நண்பனை இத்தனை காலமும் நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருந்து வீட்டீர்கள்,'' என்றது சிங்கம்.

சிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் எல்லா குதிரைகளும் தலை குனிந்தன. அன்போடு அந்த நொண்டிக் குதிரையினை சூழ்ந்து கொண்டன. அதனைக் கண்டு சிங்கமும் மகிழ்ச்சியடைந்தது.

மற்ற குதிரைகளோ நொண்டிக் குதிரையைப் பார்த்தன.

""நண்பா, உனக்கு கால்தான் ஊனம். ஆனால், எங்களுக்கோ மனமே ஊனமாகி விட்டது. அதனால்தான் உன் நட்பின் அருங்குணத்தை தெரியாமல் இருந்து விட்டோம். நீ அமைதியாக இருந்தே சிங்க ராஜாவே போற்றும்படியான அன்பான செயலைச் செய்துவிட்டாய். நாங்கள் எல்லாரும் உன்னை வாழ்த்தி வணங்க கடமைப்பட்டுள்ளோம்,'' என்றன குதிரைகள்.

"நாம் வந்த வேலை இனிதே முடிவடைந்து விட்டது. குதிரைகள் எல்லாம் திருந்திவிட்டன. இனிமேல் அவற்றுக்குள் எந்தவிதமான பேதமும் ஏற்படாது' என்று நினைத்து திரும்பி சென்றது சிங்கம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !