Thursday, November 29, 2018

ஆண் அழகன்!









தேவகோட்டை என்னும் ஊரில், பரத் என்பவன் வசித்து வந்தான். அழகன்; ஆனால், சரியான முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான்.

அவன் முழு முட்டாள் என்று தெரியாமல், அவனது அழகில் மயங்கி, கட்டிக் கொண்டாள் மாலதி. அவனின் முட்டாள்தனத்தால் ஏராளமான தொல்லைகளையும் அனுபவித்தாள்.

'எப்படியாவது அவனை திருத்த வேண்டும்' என்று மனதிற்குள் எண்ணினாள் மாலதி.

அந்த ஊருக்கு, புகழ்பெற்ற கூத்துக் குழு ஒன்று வருவதாகவும், அவர்கள், ராமாயண நாடகம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர். அந்த நாடகத்தை பார்த்தாவது கணவன் திருத்துவான் என நினைத்தாள். அதனால், அவனை நாடகம் பார்க்க அனுப்பி வைத்தாள்.

அவனுக்கு நாடகம் பார்க்க மனமில்லை. அதனால், ஒரு மூலையில் சென்று, நன்றாக தூங்கினான்.

கூடியிருந்த கூட்டத்திற்கு, பணக்காரர் ஒருவர் இனிப்புகளை கொடுத்தார். நன்றாக தூங்கி கொண்டிருந்த பரத்தின் வாயில், இனிப்பை போட்டார். அதை சுவைத்து சாப்பிட்டான் பரத்.

மறுநாள் காலையில், வீட்டிற்கு திரும்பினான் பரத்.

''என்னங்க, நாடகம் எப்படி இருந்தது?'' என்று கேட்டாள் மாலதி.

''நாடகம் ரொம்ப இனிப்பா இருந்தது...'' என்றான் பரத்.

'நாடகம் ரொம்ப பிடித்து விட்டது போலிருக்கிறது. அதனால் தான் இனிப்பாக இருக்கிறது என்று சொல்கிறான் போலும்' என நினைத்தாள் மாலதி.

அன்று இரவும், அவனை நாடகம் பார்க்க அனுப்பிவிட்டாள்.





அன்றும் ஓரிடம் தேடிப்போய் படுத்து தூங்கினான். ஒரு சிறுவன், அவன் மேல் ஏறி அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தான். தூக்கத்தில் இருந்த பரத், அதை அறியவில்லை.

நாடகம் முடிந்ததும் எல்லாரும் புறப்பட்டனர். பரத்திற்கு உடலெல்லாம் வலித்தது. வீட்டிற்கு சென்றான்.

''நாடகம் எப்படி இருந்தது?'' என்று கேட்டாள் மாலதி.

''மிகவும் கனமாக இருந்தது...'' என்றான்.

'ராமன் - சீதைக்கு ஏற்பட்ட துன்பத்தையே கனம் என்று சொல்கிறான் போலும்' என நினைத்தாள் மாலதி.

அன்று இரவும், நாடகம் பார்க்க அனுப்பி வைத்தாள். அன்றும் ஒரு ஓரமாய் படுத்து தூங்கினான் பரத்.

ஒரு நாய் அவன் முகத்திற்கு நேராக சிறுநீர் கழித்தது; திடுக்கிட்டு விழித்தான். கூத்து முடிந்து எல்லாரும் சென்றுவிட்டனர். தன் முகத்தை துடைத்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.

மனைவி ஓடி வந்தாள்.

''என்னங்க... இன்னிக்கு நாடகம் எப்படி இருந்தது?'' என்று கேட்டாள்.

''ஒரே உவர்ப்பாக இருந்தது...'' என்று சொல்லி, 'தூ... தூ...' வென்று துப்பினான்.





அப்போது தான், மாலதிக்கு உறைத்தது. 'இவன் நாடகம் பார்க்கவில்லை; வேறு எதுவோ நடந்திருக்கிறது' என்று நினைத்து அவனை விசாரித்தாள். அவனும் உண்மையை கூறினான்.

'இந்த முட்டாளை எத்தனை ஜென்மம் ஆனாலும் திருத்த முடியாது' என்பதை உணர்ந்து, நொந்து போனாள் மாலதி.

அழகு அழகுன்னு, அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அறிவுக்கு முக்கியத்துவம் கொடுங்க குட்டீஸ்...

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !