புழுதிச் சாலையில் ஒரு வைரம்
அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம். ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார். மாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன. சரி, ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்… நனையாத உடை, ஒரு ஜோடி ஷூ வாங்கி அணிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தார். உள்ளேயிருந்து வந்த ஒரு பெண்மணி, குருவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை தந்தார். அவர் உடை நனைந்திருப்பதைப் பார்த்து, வேறு உடை மாற்றிக் கொள்ளுமாறும், இரவை அங்கேயே கழிக்குமாறும் கேட்டுக் கொண்டார். வீட்டு முகப்பில் ஒரு சிறு கோயில். அங்கு சிறிது நேரம் கண்மூடி நின்ற குருவுக்கு,
பின்னர் உள்ளே இருந்த தனது அம்மா மற்றும் குழந்தைகளை அந்தப் பெண்மணி அறிமுகப்படுத்தினார். ஆனால் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டத்தை அவர் கண்டார். ஏதோ சரியில்லை என்பது புரிந்ததும், “என்ன அம்மா உங்கள் பிரச்சினை?” என்று கேட்டார். “அய்யா… என் கணவர் ஒரு சூதாடி, குடிகாரர்.. எப்போதெல்லாம் சூதாட்டத்தில் ஜெயிக்கிறாரோ, அப்போது இருக்கும் பணத்தையெல்லாம் குடித்துவிடுவார். தோற்கும்போது, வீட்டிலிருப்பதை எடுத்துப்போய் விடுவார். அல்லது கடன் மேல் கடன் வாங்குகிறார். சமயத்தில் குடித்துவிட்டு எங்கேயோ விழுந்துகிடந்து பின் வருகிறார்… என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றார். கவலை வேண்டாம்… நான் உதவுகிறேன்… இதோ என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது. நல்ல ஒயினையும், சாப்பிட உணவும் வாங்கி வாருங்கள். அதன் பிறகு நீங்கள் படுக்கப் போங்கள்… நான் அந்தக் கோயிலில் சற்று நேரம் தியானம் செய்கிறேன்”, என்று அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து அனுப்பினார். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்துவிட்டான். மித மிஞ்சிய போதையில் இருந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை… “ஏய்… இங்க வாடி… நான் வந்துட்டேன்டி… என்ன பண்ற.. சாப்பாடு கொண்டா” என்று சத்தமாகக் கேட்டான். உடனே அவனிடம் வந்த குரு, “இதோ நான் தருகிறேன், நீ கேட்டதை,” என்றார். பின்னர், “மழையில் மாட்டிக் கொண்டேன். உன் மனைவிதான் இங்கு தங்க அன்போடு அனுமதித்தார். அதற்கு பிரதியுபகாரமாக நல்ல ஒயினும் சாப்பிட மீனும் கொண்டு வந்துள்ளேன்,” என்றார் குரு. குடிகார கணவனுக்கு ஒரே சந்தோஷம். மொத்த ஒயினையும் குடித்தான். சாப்பிட்டான். அப்படியே தரையில் சரிந்து விழுந்து தூங்கிவிட்டான். குருவோ, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார். விடிந்தது. கணவன் எழுந்து பார்த்தான். முந்தைய இரவு நடந்தது எதுவும் அவனுக்கு நினைவிலில்லை. குருவைப் பார்த்தான். “யார் நீ.. எங்கிருந்து வருகிறாய்? என் வீட்டில் என்ன வேலை?” என்று கேள்விகளை வீசினான். புன்னகை மாறாத முகத்துடன் அவனது கேள்விகளை எதிர்கொண்ட குரு, “நான் இந்த நாட்டு மன்னனின் குரு. பக்கத்து நகருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்,” என்றார். ராஜகுரு என்றதும், அந்த குடிகார கணவன் திடுக்கிட்டான். தான் நடந்து கொண்டதை நினைத்து வெட்கமடைந்தான். தனது செயல் மற்றும் பேச்சுக்காக மன்னிப்பு கோரினான். குருவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. “வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. வாழ்க்கை குறுகியது. அந்த குறுகிய காலத்தில், குடி, சூதாட்டம் என இருந்தால், உடனிருக்கும் நல்ல உறவுகளை இழந்துவிடுவாய்.. குடும்பமே இல்லாமல் போய்விடும் என்பது தெரியவில்லையா?”, என்றார். ஏதோ ஒரு ஆழ்ந்த கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல திடுக்கிட்டு எழுந்தான் குடிகார கணவன். “ஆம்.. நீங்கள் சொல்வது சரிதான் குருவே…”, என்றவன், ” உங்களின் இந்த அற்புதமான அறிவுரைக்கு நான் என்ன திருப்பித் தரப் போகிறேன்,” என உருகினான். “கொஞ்ச தூரம் உங்களின் பொருள்களைத் தூக்கிக் கொண்டு உடன் வருகிறேன். ஒரு சிறிய சேவகம் செய்த திருப்தியாவது கிடைக்கும்,” என்றான் திருந்திய அந்த குடிகாரன். “சரி… உன் விருப்பம்,” என்றார் குரு. இருவரும் நடக்க ஆரம்பித்தனர். மூன்று மைல்கள் தாண்டியாயிற்று. அவனை திரும்பிப் போகச் சொன்னார் குரு. இன்னும் 5 மைல்கள் உடன் வருவதாய் அவன் தெரிவித்தான். ஐந்து மைல்கள் கடந்தது. ‘சரி.. நீ போகலாம்’ என்றார் குரு. “இன்னும் ஒரு பத்து மைல்கள் வருகிறேனே…” என்று மன்றாடினான். பத்து மைல்கள் கடந்ததும், கொஞ்சம் கண்டிப்பான குரலில், “நீ இப்போது வீட்டுக்குத் திரும்பலாம்,” என்றார் குரு. “குருவே, இனி நான் பழைய பாதைக்கு திரும்புவதாக இல்லை. மிச்சமிருக்கும் நாளெல்லாம் தங்கள் வழியைப் பின்பற்றி நடப்பேன்!,” என்றான் உறுதியான குரலில்…
***************************************
பின்னர் உள்ளே இருந்த தனது அம்மா மற்றும் குழந்தைகளை அந்தப் பெண்மணி அறிமுகப்படுத்தினார்.
ஜென் கதைகள் – வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.
என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.
உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”
“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.
அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!
துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!
ஜென் கதைகள் – மூன்று தலைகள்
மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!
இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.
அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.
ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.
‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.
அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.
“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.
நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.
ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.
புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.
ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.
மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.
மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.
புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.
இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.
மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.
“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.
ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.
விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:
“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.
அமைச்சர் மவுனம் காத்தார்.
“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.
இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.
அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!
ஜென் கதைகள் – குரு சிஷ்யன்
ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர்.
ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’
‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.
‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’
‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!”
குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர்.
‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.
மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர்.
சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.
குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.
எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு!
குழப்பம் குருவே குழப்பம்!
புகழ்பெற்ற துறவி அவர்.
அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர்.
‘என்ன?’
‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’
‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’
‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!”
குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?’
‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?’
‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’
‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?’
‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!”
ஜென் கதைகள் – மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!
இரு நண்பர்கள்…
பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன்.
அறை வாங்கியன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.
விரல்களால் இப்படி எழுதினான்:
“இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!”
மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.
வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள்.
நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள்.
கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. ஆஹா.. புதைகுழியில் சிக்கிக் கொண்டான் அவன்.
நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன்.
உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீதமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி எழுத ஆரம்பித்தான்.
“இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்”
இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்..
“நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏனிப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா?”
நண்பனின் பதில்…
“யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!”
ஜென் கதைகள் – கடவுளுடன் ஒரு பேட்டி

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.
“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.
கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”
“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!
சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.
“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டான்.
கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.
வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…
ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…
நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…
பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.
ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”
-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…
தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!