குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அகநலச் செயற்பாடுகள்
- புறநலச் செயற்பாடுகள்
- உடல் நலம் பற்றிய கருத்து
- முடிவுரை
முன்னுரை
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது ஆன்றோர்களின் வாக்கு.
நோயற்ற வாழ்க்கையே ஏனைய செல்வங்களை விட சிறந்த செல்வம் என குறிப்பிடப்படுகின்றது. நோயற்று இருக்க நாம் எமது உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.
உடல்நலம் என்னும் பொழுது அகநலம், புறநலம் என இருவகையான நலச் செயன்முறைகள் உடல்நலம் காப்பதற்கு மிக உகந்த செயன்முறை என குறிப்பிடப்படுகின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் வலிமை, மனவலிமை தேவை. வலிமை பெற சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல எண்ணங்கள் இவைகளால் பெறலாம்.
இந்த கட்டுரையில் உடல் நலம் பேணுவது பற்றி விரிவாக பார்ப்போம்.
அகநலச் செயற்பாடுகள்
அகநலம் எனப்படுவது உளநலமாகும். அதாவது எமது உள்ளமாகும். எமது உள்ளம் தூய்மையாகவும், அழுத்தம் இல்லாமலும் இருக்கும் பொழுதுதான் அகநலம் தூய்மையாக காணப்படும்.
இல்லாதுவிடின் அகநலத்தின் பாதிப்பு உடல்நலத்தில் வெளித் தெரிவதுடன் பின்னர் நோய்களுக்கான அறிகுறியாகவும் மாறிவிடுகின்றது.
மனஅழுத்தம், சோர்வு மற்றும் ஏனைய வாழ்க்கை முறை நோய்களுக்கு பொதுவான காரணமாகும். ஆழமாக மூச்சு விடுதல் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை விடுவிக்க மிகவும் பயனுள்ள நுட்பங்களில் ஒன்றாகும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நன்றாக தூங்கவும் முடியும். உள ஆரோக்கியம் உடல் நலத்தை போன்ற முக்கியமான ஒன்றாகும். ஓய்வு என்பது மிக முக்கியமானதாகும்.
நாம் நன்றாக உறங்க வேண்டுமாயின் தூங்குவதற்கு முன் எமது தொலைக்காட்சி, தொலைபேசிகளை அணைத்துவிட்டு தூங்க வேண்டும். அவற்றின் ஒளி, கதிர்வீச்சு எமது உள ஆரோக்கியமான தூக்கத்தினை பாதிக்கக்கூடும்.
மிக நெருங்கியவர்கள், உறவினர்களுடன் கலந்துரையாடுவது மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழிமுறையாகும். உறவினர்களையும், நண்பர்களையும் நாம் சந்திக்க நேரமொதுக்க வேண்டும்.
உளநல ஆரோக்கியத்தில் நாம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.
புதிர்களை கண்டுபிடிப்பது, குறுக்கெழுத்து, மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் உளநலத்தில் மூளையை பாதிக்கும் செயற்பாட்டினை கட்டுப்படுத்தி உடல் நலத்தை பேணுவதற்கு உளநலம் பங்களிப்புச் செய்கின்றது.
புறநலச் செயற்பாடுகள்
அகநலம் அல்லது உளநலம் போன்றே புறநலம் அல்லது உடல்நலத்தையும் நாம் சீராக பராமரித்துக் கொள்ள வேண்டும். அகநலம் மாத்திரம் சரியாக இருந்தால் போதாது மாறாக புறநலமும் அல்லது உடல் நலமும் சீராக காணப்படும் பொழுது தான் ஒரு மனிதன் தேகாரோக்கியத்துடன் உடல் நலம் வலிமை பெற்றவனாக இருக்கிறான்.
நாம் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுந்து எமது பணிகளை தொடங்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியுடன் மூச்சுப்பயிற்சிக்காக ஒரு ஐந்து நிமிட நேரம் ஒதுக்க வேண்டும். அத்துடன் உடல் நலம் தொடர்பாக பல வைத்தியர்கள் பின்வரும் அறிவுரைகளை குறிப்பிடுகின்றனர்.
தினமும் 21 முறையாவது குனிந்து நிமிர வேண்டும், தூங்கும்பொழுது வளைந்து நெளிந்து தூங்கக்கூடாது, தினமும் குறைந்தது 23 நிமிடங்களாவது வேகமாக நடக்க வேண்டும்,
தொடர்ச்சியாக ஒருவர் 70 நிமிடங்களுக்கு மேல் உட்காரக்கூடாது, கனமான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்கக் கூடாது,
குறைந்தது ஒரு நாளில் ஆறு மணித்தியாலங்கள் தூங்க வேண்டும் இவ்வாறு உடல் ரீதியில் சரியாக செயல்படும் பொழுது நாம் எமது உடல் நலத்தினை சீராகவும் கட்டுக் கோப்புடன் பேண முடியும்.
உடல் நலம் பற்றிய குறிப்புகள்
எந்தவித நோய் தாக்கத்திலிருந்தும் விடுபட முதலில் செய்ய வேண்டியது கவலையை தூக்கி எறிவது அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சையாகும்.
இளவயதில் தினமும் ஒரு கோப்பை பால் குடிப்பது எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது உடலில் இரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கின்றது.
இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும் ஏனெனில் வெந்நீர் தொண்டையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும்.
முடிவுரை
இறுதியாக எவ்வகைப்பட்ட உடல்நலச் செயல்பாடுகளாக காணப்பட்டாலும் இறுதியாக நாம் உண்ணும் உணவே சிறந்த மருத்துவமாகும். சில சந்தர்ப்பங்களில் உணவும் எமது உடல் நலத்தினை பாதிப்படையச் செய்கின்றது.
இதனால்தான் முன்னோர் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்கின்றனர். உடல்நலம் பற்றி வள்ளுவர் தனது குறட்பாவில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“மிகிதும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று”
அதாவது பசியின் அளவுக்கு மிகுதியாக உண்பதும், உடலுக்கு தேவையான ஓய்வும் உறக்கமும் கொடுக்காமல் இருப்பதும் சித்த மருத்துவ நூல்கள் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாகக் காரணமாகின்றது என குறிப்பிடுகின்றார்.
ஆகவே உடல் நலம் காப்பிற்கு அகநலம், புறநலச் செயற்பாடுகளை பின்பற்றி நாம் எமது உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
No comments:
Post a Comment